வெளியிடப்பட்ட நேரம்: 19:03 (14/04/2017)

கடைசி தொடர்பு:20:07 (17/04/2017)

'மக்களே சாலைப்போக்குவரத்தை பயன்படுத்துங்கள்...' தொடர் ரயில் மறியலுக்கு தயாராகும் விவசாயிகள்!

மிழகத்தில் கடந்த 142 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி தற்போதுஏற்பட்டுள்ளது. மழை முற்றிலும் பொய்த்துப் போனது. காவிரித் தண்ணீரும் கிடைக்காததால், விவசாயிகள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். பருவ மழையை நம்பி, லட்சக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டிருந்த நிலையில், அவை அனைத்தும் கருகிப் போயின. வங்கிகளிலும், கந்து வட்டிக்கும் கடன் வாங்கி பயிரிட்டிருந்த விவசாயிகள் அதிர்ந்து போனார்கள்.

வாழ்வாதாரத்தை இழந்தும், வாங்கிய கடனைக் கட்ட முடியாமலும் நெருக்கடிக்கு உள்ளான விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டனர். பலர் அதிர்ச்சியால் இறந்து போனார்கள். தமிழகத்தில் இந்தாண்டு வறட்சியால் இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை என 300ஐ நெருங்கி வருகிறது. ஆனால் இதில் 17 பேரின் குடும்பத்துக்கு மட்டுமே இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் அமைப்புகளின் தொடர் போராட்டத்துக்கு பின்னரே இந்த இழப்பீடு தொகையை வழங்கியது அரசு.

இந்நிலையில், கடும் நெருக்கடியில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளின் நலன் காக்க வேண்டும் என வலியுறுத்தி, நாட்டின் தலைநகர் டெல்லியும், தமிழகத்திலும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. ஆனால் டெல்லியில் நடக்கும் போராட்டங்களை மத்திய அரசும், தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களை தமிழக அரசு கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

டில்லியில் 30 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பல்வேறு விதங்களில் போராடி வரும் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகளை பிரதமர் சந்திக்கக் கூட இல்லை என்பது தான் உச்சம். அரசின் கவனத்தை ஈர்க்க நிர்வாண போராட்டம் வரை நடத்தி பார்த்து விட்டார்கள் விவசாயிகள். பிச்சை எடுத்தும், எலியை கடித்துக்கொண்டும், ரோட்டில் படுத்தும் அவர்கள் போராட்டம் நடத்துவதை கண்டும் காணாமல் அலட்சியம் செய்து வருகிறது மத்திய, மாநில அரசுகள்.

விவசாயிகளின் தற்கொலை சம்பவங்களைத் தடுக்க வேண்டும். விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். விவசாய விளைபொருள்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பது தான் விவசாயிகளின் பிரதான கோரிக்கை. ஆனால் இதைப்பற்றி அரசுகள் கவலை கொண்டதாகவே தெரியவில்லை.

இந்நிலையில், தமிழகத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர் விவசாயிகள். இது தொடர்பாக  அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது.

"தமிழ்நாட்டில் போராட்டங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசுக்கும் மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டிருப்பது இதற்கு முக்கிய காரணம். அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போராட்டத்துக்கான கோரிக்கை மத்திய அரசால் ஏற்கத்தக்கவை தான். தமிழகம் நான்கு ஆண்டாக வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே கடன் வசூல் கூடாது என்கிறார். ஆனால் அய்யாக்கண்ணுவை அரசு எதிரியாக பார்க்கிறது.

விவசாயிகளின் நிர்வாணப் போராட்டத்துக்கு காரணமே மத்திய அரசின் பாராமுகம் தான். மத்திய அரசு கோரிக்கைகள் ஏற்று பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சர் அலுவலகம் அறிக்கையாவது விட்டிருக்கலாம். ஆனால் அதை கூட செய்யவில்லை. அய்யாக்கண்ணு தன் உடல் நலம் கருதி தொடர் போராட்டத்தை கைவிட வேண்டும்.

உத்திரப் பிரதேச அரசு 37,000 கோடி கடன் தள்ளுபடி செய்கிறது. ஆந்திரா அரசும் கூட விவசாயிகள் பிரச்னையில் கவனம் செலுத்துகிறது. இந்த மாநிலங்களை பின்பற்றி தமிழக அரசு உடனடியாக கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு செயல்படாத அரசாக இருக்கிறது. போராடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்கிறது.

மத்திய அரசுக்கு எதிராக தமிழர்கள்  ஒரே குரலில் போராட முன் வர வேண்டும். நதி நீர் பிரச்சினைகளுக்கு  ஒரே ஆணையம் என்பது கூடாது. இது காவிரி உரிமையை பறிக்கும் செயலாகும். எனவே தமிழகத்தில் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடக்கும். சாலைப்போக்குவரத்தை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். விவசாயிகளின் போராட்டத்தை நசுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு எந்த உரிமையும் இல்லை. கடும் வறட்சியில் தமிழகம் சிக்கித் தவிக்கும் நிலையில், மாநில அரசு இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் , மாணவர், இளைஞர்கள் பங்கேற்க வேண்டும். மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தவே ரயில் மறியல் போராட்டம். தமிழக அரசு அனைத்து கடன்களை தள்ளுபடி செய்து, அதற்கான தொகையை வங்கிகளுக்கு வழங்க வேண்டும். வரும் 18 ஆம் தேதி கவர்னரை சந்தித்து ஒரே ஆணையம் வேண்டாம் என வலியுறுத்தி, கவர்னர் வாயிலாக பிரதமருக்கு கோரிக்கையை அனுப்புவோம்," என்றார்.

போராட்டத்தின் வடிவத்தை விவசாயிகள் மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். ஆளும் அரசுகள் இவர்களை கண்டு கொள்ளாமல் இருப்பது மிகப்பெரிய கொடுமை.

- என்.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்