வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (16/04/2017)

கடைசி தொடர்பு:17:29 (16/04/2017)

காந்தியிடம் சாப்ளின் கேட்ட அந்தக் கேள்வி! #HBDChaplin

சாப்ளின்

ண்ணீரையும் கவலைகளையும் மனதில் தேக்கி வைத்திருக்கும் மக்களை சிரிக்கவைத்து அவர்களின் கவலைகளை மறக்கவைத்த மறக்கமுடியாத கலைஞன் சார்லி சாப்ளின் பிறந்ததினம் இன்று.

லண்டனில் புகழ்பெற்ற அந்த தெருவில் ஒருநாள் கசாப்புக்கடைக்கு வந்திறங்கின பல ஆடுகள். கடைக்காரன் எல்லாவற்றையும் வண்டியிலிருந்து இறக்கி கடைக்குள் அடைத்து விட்டான். ஆனால் இறுதியாக இறங்கிய குட்டிஆடு ஒன்று சாமர்த்தியமாக அவனிடமிருந்து தப்பி ஓடியது. அதைப்பின்தொடர்ந்து அவன் ஓடிய காட்சியை அதே  தெருவில் வசித்துவந்த ஒரு சிறுவன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். ஆடு ஓட அதைத் துரத்தி துரத்தி விழுந்து எழுந்து கடைக்காரன் ஓடினான். இந்தக் காட்சியைக் கண்ட சிறுவன் உட்பட வீதியில் சென்ற அனைவரும் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தனர்.

சார்லி


ஆடு ஒருவழியாக கடைக்காரனிடம் சிக்கியது. பொதுமக்கள் அவரவர் தங்கள் வேலைகளைப் பார்க்க சென்றபின் சிறுவன் மட்டும் கடைக்காரரைப் பின்தொடர்ந்தான். அங்கே அவன் கண்ட காட்சி அவனைக் கதறி அழவைத்தது. ஆம் அத்தனை நேரம் ஒரு வீதியைச் சிரிக்க வைத்த ஆடு, கசாப்புக் கடைக்காரனால் தலை துண்டிக்கப்பட்டு தரையில் துடிதுடித்துக் கிடந்தது. யதார்த்த்த்தை உணர்ந்து சிலையாக உறைந்து நின்றான் சிறுவன். வாழ்வின் யதார்த்த நிலை வேறு, அதன் வெளிப்பாடு என்பது வேறு என்பதைப் புரிந்துகொண்ட அந்த சிறுவன் பின்னாளில் வெற்றியடையக் காரணமானதும் இந்தச் சம்பவம்தான். பிற்காலத்தில் சாப்ளின் என உலக மக்களால் போற்றப்பட்ட சார்லி சாப்ளின்தான் அந்தச் சிறுவன். இன்னும் சிறிது நேரத்தில் வெட்டுண்டு இறக்கப்போகிற யதார்த்த்த்தை உணர்ந்து உயிர்தப்ப ஓடிய ஆட்டுக்குட்டியின் உயிர்ப்போராட்டம் மக்களைச் சிரிக்கவைத்த்துபோல் மனதில் உறைந்துகிடக்கும் வேதனை உணர்ச்சிகளை மறந்து மக்களைச் சிரிக்கவைத்த சாப்ளின் என்ற மேதை  உருவானது அந்தச் சம்பவத்தின் எதிரொலிதான்.
லண்டனில் வால்வொர்த்தில் உள்ள ஈஸ்ட் லேன் என்ற இடத்தில் இதே நாளில் பிறந்த சாப்ளினின், பெற்றோரும் நாடகக் கலைஞர்களே. துரதிர்ஷ்டவசமாக சாப்ளினுக்கு ஒரு வயதாகும்போது இருவரும் பிரிந்துவிட்டனர்.


கூடுதல் சம்பாத்தியத்துக்காக மதுபான விடுதிகளில் சாப்ளினின் தாய் பாடினார். ஒருநாள் மேடையில் பாடிக்கொண்டிருந்த சாப்ளினின் தாய்க்கு குரல் வரவில்லை. அவர் பாட முயற்சித்தபோது எழுந்த முக்கல் முனகல்களைப் பார்வையாளர்கள் கேலியும் கிண்டலுமாக ரசித்துச் சிரித்தனர். அவமானத்தால் தலை குணிந்துநின்ற அவரை உள்ளே அழைத்துக்கொண்ட நாடக மேலாளர், அந்த இடத்தில் சாப்ளினை கொண்டு போய் நிறுத்தி பையா உன்னால் என்ன முடிகிறதோ செய். கூட்டத்தை சமாளி என விட்டுவிட்டு வந்தார்.அம்மாவுடன் மேலாளரைச் சந்தித்த தருணங்களில் அவரை எதையாவது செய்து ஆச்சர்யப்படுத்துவான் சிறுவன் சாப்ளின். அந்த நம்பிக்கையில்தான் மேலாளர் இப்படிச் செய்தார். நிலைமையைப் புரிந்துகொண்ட சாப்ளின், தனக்குத்தெரிந்த ஜாக் ஜோன்ஸ் என்ற பாடலை சத்தம்போட்டுப் பாட ஆரம்பித்தான். அம்மா சரியாக பாடாததால் அம்மாவுக்கு வரவேண்டிய வருமானம் நின்றால் குடும்பம் பட்டினிதான். இதனால் பேசிய ஊதியத்தைப் பெற்றுவிடுவதற்காகவாவது ஓரு மணிநேரம் சமாளிக்கவேண்டும் என்ற எண்ணமே சாப்ளின் மனதில் ஓடிக்கொண்டிருந்த்து. ஆனால் அவ்வளவாக பாடல் எடுபடவில்லை என்றாலும் சிறுவன் என்பதால் மக்கள் உணர்ச்சியற்று பார்த்தபடி பரிதாபமாக அவன் மீது காசுகளை வீசினர். அப்போது திடீரென சாப்ளின் தன் பாட்டை நிறூத்தினான். கூட்டத்தைப் பார்த்து கொஞ்சம் பொறுங்கள், சில்லறைகளைப் பொறுக்கிவிட்டுப் பாடலைத் தொடர்கிறேன் என்றபடி காசுகளைப் பொறுக்க ஆரம்பித்தான். சாப்ளினின் இந்தச் செய்கை லேசாக மக்களை சிரிக்கவைத்தது.  அப்போது சாப்ளினுக்காக காசுகளைப் பொறுக்க மேலாளர் மேடைக்கு வந்தார். பாடலைப் பாடியபடி அவர் காசுகளைப் பொறுக்க, தனக்கு வந்த சில்லறைகளை யாரோ எடுப்பதாகக் கருதி மேலாளரைப் பின்தொடர்ந்து ஓடிப்போய் அவரிமிருந்து காசுகளை வாங்கிக்கொண்டு பாட ஆரம்பித்தான் சாப்ளின். இந்தக் காட்சி பார்வையாளர்களைப் பயங்கரமாகச் சிரிக்கவைத்தது.


சாப்ளின் என்ற கலைஞனின் முதல் மேடை வெற்றிகரமாக அமைந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக சாப்ளினின் தாய்க்கு அதுவே இறுதி மேடையானது. ஆம் சில நாட்களில் சாப்ளினின் தாய் மன நலக்கோளாறால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பள்ளிப்படிப்பு, நாடகங்கள் என தன் இளமைப்பருவத்தைத்  தொட்ட சாப்ளின் நாடக வாழ்க்கையில் புகழடைந்த நேரம், அவருக்குப் படவாய்ப்புகள் வந்தன. கீஸ்டோன் என்ற நகைச்சுவைப்படங்கள் தயாரிக்கும் நிறுவனம் அவரை வைத்து படங்கள் தயாரித்தது. தொடர்ந்து தன் மேதைமையான நகைச்சுவையால் சாப்ளின் சில வருடங்களில் உலகப்புகழ்பெற்ற மனிதரானார்.
சாப்ளினின் மேதைமையை உலகமே பாராட்டிக் கொண்டாடிய வேளையில் சாப்ளின், உலகத்தலைவர்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டார். அந்த வரிசையில் அவர் பார்க்க விரும்பிய இந்தியத் தலைவர் காந்தி. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் லண்டனில் பேச்சுவார்த்தை ஒன்றுக்காக காந்திஜி சென்றிருந்த சமயம் சாப்ளினும் கோடை விடுமுறைக்காக லண்டனில் பொழுதை கழிக்க வந்திருந்தார். அப்போதுவின்ஸ்டன் சர்ச்சிலுடன்  பேசிக்கொண்டிருந்தபோதுதான் காந்தி லண்டனில் இருக்கும் தகவல் சாப்ளினுக்கு தெரியவந்த்து. காந்தியைச் சந்திக்கும் தன் எண்ணத்தை சர்ச்சிலிடம் வெளிப்படுத்தினார் சாப்ளின்.
4 முழ வேட்டியை சரியாக உடுத்தாத இந்த மனிதர் எங்களுக்கு பெருந்தொல்லையாக இருக்கிறார். எதற்கெடுத்தாலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி எங்களை சங்கடப்படுத்துகிறார். சிறைவாசத்தில் அவது மனஉறுதியை குலைக்கவேண்டும்” என சர்ச்சில் சலித்துக்கொள்ள, நீங்கள் காந்தி என்ற மனிதரைத் தவறாக எடைபோட்டுவிட்டீர்கள். காந்தி என்பவர் இந்தியாவைப்பொறுத்தவரையில் ஒரு தனிமனிதர் அல்ல. அவர் இந்திய மக்களின் சுதந்திரவேட்கையின் ஒரு குறியீடு. நீங்கள் ஒரு காந்தியை சிறையிலடைத்தால் இந்தியாவிலிருந்து இன்னொரு காந்தி புறப்பட்டுவருவார். இந்தியர்கள் அவர்கள் கேட்கும் வரை காந்திகள் புறப்பட்டுவந்துகொண்டே இருப்பார்கள்.” என இந்திய மக்களின் மீதான தனது நிலைப்பாட்டை தெளிவாக சாப்ளின் சொன்னார். இந்தியாவைப்பற்றிய கணிப்பை அவர் சர்ச்சிலிடம் வெளிப்படையாகச் சொன்னதுதான் ஆச்சர்யத்திலும் உச்சபட்ச ஆச்சர்யமான விஷயமாகும்.
அன்றைய தினமே காந்தியை, அவர் தங்கியிருந்த ஈஸ்ட் இந்தியா டோக் சாலை என்ற இடத்தில் சாப்ளின் சந்தித்தார்.
காந்தி என்ற இந்தியாவின் அதிமுக்கியத்தவம் வாய்ந்த மனிதரை சந்திப்பதில் சாப்ளின் சற்று உணர்ச்சிவயப்பட்டிருந்தார். காந்தியின் சிறை அனுபவங்கள், இங்கிலாந்துக்காரர்களை எரிச்சலுட்டும் அவரது உண்ணாவிரதம், எந்திரங்களின் மீதான காந்தியின் எதிர்ப்புக்குரல், வெள்ளையர்களுக்கு எதிராக அவர் கையிலெடுத்த அஹிம்சை ஆயுதம் என இவற்றில் எதைப்பற்றி, காந்தியிடம் பேசுவது என்ற குழப்பத்தில் கிடந்தார் சாப்ளின். இதனால் அன்றைய சந்திப்புக்கு சில மணிநேரங்கள் முன்னதாகவே சந்திப்பு நேரம் குறித்த இடத்துக்கு வந்து காத்திருந்தார் சாப்ளின்.

சார்லி


திடீரென எழுந்த கூக்குரல் காந்தி காரில் வந்து இறங்கியதை உறுதிப்படுத்தியது. மக்களோடு மக்களாக சாப்ளின், காந்தி என்ற எளிய மனிதரின் புகழைக் கண்டு பிரமித்து நின்றார். கொஞ்சநேரத்தில் காந்தி சாப்ளினை மேலே வரச்சொல்லி கையசைக்க மக்களின் ஆரவாரத்துக்கிடையே இருவரும் இப்போது தனியறை நோக்கி நடக்கத்துவங்கினர். அறையில் காந்தி சில உதவியாளர்களுடன் அமர்ந்திருக்க காந்தியும் சாப்ளினும் ஒருவருக்கருவர் தங்கள் முகங்களை தரிசித்துக்கொண்டனர்.
இப்போது அந்த இடத்தில் மயான அமைதி நிலவியது. சாப்ளின் உணர்ச்சிவயப்பட்டவராக இருந்தார். இதுவரை செய்தித்தாள்களில் நண்பர்களின் பேச்சில் அறிமுகமாகிப் புரிந்துகொண்டிருந்த காந்தி என்ற மனிதர் தன் முன் நிற்கிறார். தனது படங்களை காந்தி பார்த்திருக்கிறாரா எனக் கேட்டு பேச்சைத் தொடங்கலாமா என ஒரு எண்ணம் சாப்ளினின் மனதில் ஒடியது. ஆனால்அடுத்த நொடி அந்த ஆசையை முறித்துப்போட்டார். உலகின் தலைசிறந்த போராட்டவாதியுடன் சில நொடிகளெ நீடிக்கப்போகிற இந்த அரிய சந்தர்ப்பத்தை அறிவான முறையில் பயன்படுத்திக்கொள்ளவில்லையென்றால் தான் உலகின் மோசமான துரதிரஷ்டசாலி ஆகிவிடுவேன் என மனதில் நினைத்தபடி தொண்டையைச் செருமியபடி இப்படித் தொடங்கினார் சாப்ளின்,“இந்தியாவின் போராட்ட வழிமுறைகளை நன்கறிந்துள்ளேன். அது நியாயமானது என்றும் கருதுகிறென். ஆனால் எந்திரங்களின் மீதான தங்களின் வெறுப்பு எனக்குக் குழப்பத்தை தருகிறது…”


காந்தி சாப்ளின் முகத்தைக் கூர்ந்து கவனித்தார். இந்தப் பார்வை சாப்ளினுக்கு நம்பிக்கை தரவே, தம் பேச்சை தொடர்ந்தார். மனிதன் இன்னொரு மனிதனுக்கு அடிமையாக இருக்கக்கூடாது என்பதுதான் உங்கள் சுதந்திர வேட்கையின் அடிப்படை…ஆனால் நீங்கள் மனிதனுக்கு மாற்றான எந்திரப்பயன்பாட்டை வெறுப்பது முரணாக இல்லையா…எந்திரத்தை பிறர்நலனுக்காக பயன்படுத்தினால் அது மனிதனை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும். மனிதனை விரிவுபடுத்தவும் அவனது கடுமையான வேலை நேரத்திலிருந்து விடுவிக்கவும் உதவும் இல்லையா. இதன்மூலம் அவன் வாழ்க்கையை அவன் முழுமையாக அனுபவிக்கலாம் அல்லவா” தன் மனதில் இருந்தவற்றைக் கொட்டிவிட்டு காந்தியின் பதிலுக்காகக் காத்திருந்தார். சில நொடி அமைதிக்குப்பின் காந்தி சன்னமான குரலில் பேச ஆரம்பித்தார். “ நிங்கள் சொல்வதை நான் புரிந்துகொள்கிறேன் சாப்ளின். ஆனால் இந்தியா அந்த லட்சியத்தை அடைவதற்கு முன் அது முதலாவதாக ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுபடவேண்டும். அந்த சார்பிலிருந்து நாங்கள் தப்பிக்க ஒரே வழி எந்திரங்கள் உற்பத்தி செய்யும் அனைத்துப் பொருட்களையும் புறக்கணிப்பதுதான். அதனால் இந்தியர்கள் ஒவ்வொருவரும் தானே நெய்த ஆடைகளை அணிவதை தேசபக்த ரீதியான கடமையாகக் கருதுகிறோம்.இங்கிலாந்து போன்ற பலம் வாய்ந்த ஒரு நாட்டை எதிர்ப்பதற்கு எங்களின் பாணி இதுதான் அதுமட்டுமில்லாமல் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்குமான பருவநிலை என்பது வேறுவேறு. இந்தியாவின் தேவைகளும் அதன் இயல்பும் வித்தியாசமானவை.இங்கிலாந்தின் குளிரான பருவநிலை கடுமையான தொழிலையும் கலவையான பொருளாதார நிலையையும் தேவையாக்குகிறது.
சாதாரணமாக உணவை உண்பதற்குக்கூட உங்களுக்கு சிறுசிறுகருவிகள் தேவைப்படுகிறது. ஆனால் கையால் உண்பது எங்கள் வழக்கம்.இப்படி சிறியதும் பெரியதுமான நிறைய வித்தியாசங்கள் உள்ளன.” காந்தி தன் பேச்சை நிறுத்திவிட்டு சாப்ளினின் முகத்தை உற்றுநோக்கினார்.


இந்திய சுதந்திரப்போராட்டத்தின் ஆழமான கருத்தாக்கத்தை சாப்ளின் புரிந்துகொண்டதை அவர் முகம் காட்டிற்று. காந்தியின் கருத்துக்கள் மூலம் இந்தியாவின் ராஜதந்திர ரீதியான போராட்டவழிமுறைகளை உணர்ந்து பாராட்டினார். சுதந்திரப்போராட்டத்தில் வெற்றிபெற தன் வாழ்த்துக்களை காந்திக்கு தெரிவித்தார்.
அஹிம்சை பற்றி சாப்ளின் கேட்டபோது, “ அஹிம்சை நிரந்தரமான ஆயுதம். ஹிம்சை அதை பின்பற்றுபவர்களையே சிறுகச்சிறுக அழித்துவிடும் என ஒரேவரியில் சாப்ளினை வியப்பிலாழ்த்தினார்.
சந்திப்பு நேரம் முடிந்தபின் நீங்கள் விரும்பினால் எங்கள் பிரார்த்தனையைக் காணலாம் என்றார் காந்தி. தன் ஆசிரம நிர்வாகிகளுடன் காந்தி வழக்கமான தன் பிரார்த்தனைகளைத் தொடங்கினார். அந்த அகன்ற மாடி வீட்டின் தரையில் காந்தி தன் சிஷ்யர்களுடன் சம்மணமிட்டு  அமர்ந்து தன் பிரார்த்தனையைத் தொடங்கினார். ஒரு தலைவர் அதுவும் ஒடிசலான தேகத்துடன் எளிமையாக நான்கு முழுவேட்டியை சரியாகக் கூட அணியாமல் தன் முன்தன் தேசத்து மக்களின் நலனுக்காக பிரார்த்தனையில் ஈடுபட்ட காட்சியை சாப்ளின் மெய்சிலிர்த்துப்பார்த்தபடி நின்றிருந்தார்.  மேலைநாடுகளின் அத்தனை தலைவர்களையும் சந்தித்திருக்கிறார் சாப்ளின். சந்திப்புகள் பெரும்பாலும் பகலில் அவர்களுடன் விருந்து, இரவில் கேளிக்கை விடுதிகளில் உபசாரம், இத்யாதி சமாச்சாரங்களுடனதான் முடியும். ஆனால் முதன்முறையாக காந்தி யின் எளிமையான தோற்றமும் அவரது அணுகுமுறையும் சாப்ளினுக்கு ஆச்சர்யம் தந்தது.

- எஸ்.கிருபாகரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்