வெளியிடப்பட்ட நேரம்: 06:51 (17/04/2017)

கடைசி தொடர்பு:06:51 (17/04/2017)

2019 பொதுத்தேர்தல், கட்சிகளின் மனக்கணக்குகள்...!

பொதுத்தேர்தல்

ரேந்திரமோடி தலைமையிலான பி.ஜே.பி அரசின் ஆட்சி காலம் முடிவடைவதற்கு மிகச் சரியாக இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்றன. மீண்டும் மோடியை பிரதமர் ஆக்கவேண்டும் என்ற குரல்கள் பி.ஜே.பி-க்குள் ஒலிக்கத் தொடங்கி விட்டது.2019 பொதுத்தேர்தல் கூட்டணிக்கணக்குகள் இப்போதே ஆரம்பித்து விட்டன.

காவிகளின் மனநிலை

மினி இந்தியாவாக கருதப்படும் உத்தரபிரதேச மாநிலத்தின் தேர்தலில் பி.ஜே.பி வெற்றிக்கு மோடியின் இமேஜ்தான் காரணம் என்று கருதுகின்றனர். எனவே, இந்த இமேஜை தக்க வைக்க அவரை மீண்டும் பிரதமர் ஆக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது. ஏறக்குறைய பி.ஜே.பி தலைவர் அமித்ஷா மற்றும் ஆர்.எஸ்.எஸ்  உள்ளிட்ட காவி அமைப்புகளின் மன நிலையும் மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது.

காங்கிரஸ் பின்னடைவு

ராகுல் காந்தி மோடியை எதிர்க்க எதிர்கட்சி வரிசையில் ஆள் இல்லையோ என்ற தோற்றம் இருக்கிறது. உத்தரபிரதேச மாநிலத் தேர்தலை பெரிதும் நம்பிக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பஞ்சாப் தவிர பிற நான்கு மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க முடியாதது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. எனவே, 2019 பொதுத்தேர்தல் களத்தில் ராகுல் காந்தி மோடிக்கு எதிரான பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தப்படுவாரா என்பது சந்தேகமே.
அதே போல பிரதமர் மோடிக்கு எதிரானவராக கருதப்பட்டவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆனால், ஆம் ஆத்மி கட்சிக்கு பஞ்சாப் தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. டெல்லியில் ஆளும் கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மிக்கு நேரம் சரியாக இல்லை. அந்தக் கட்சியின் நிர்வாகிகள் அடுத்தடுத்து லஞ்சப்புகாரில் சிக்கி வருகின்றனர். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலை பிரதமராக ஏற்றுக்கொள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தயாராக இல்லை.

பிரதமர் வேட்பாளர் நிதிஷ்குமார்?

இன்னொருபுறம் பி.ஜே.பி அல்லாத எதிர்கட்சிகள் அனைத்தும் ஒரே நிதிஷ் குமார் குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பீகாரில் எதிரும், புதிருமாக இருந்த நிதிஷ்குமார்-லல்லுபிரசாத் யாதவ் இணைந்து ஒரு கட்டணியை உருவாக்கி வெற்றி கரமாக ஆட்சி செய்து வருகின்றனர். எனவே, 2019 பொதுத்தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையில் எதிர்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும்  என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பிரதமர் மோடிக்கு சரியான போட்டியாக நிதிஷ்குமார் இருப்பார் என்று எதிர்கட்சிகள் கருதுகின்றன.
முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் இருவரும் நிதிஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு ஏற்கெனவே பச்சைக்கொடி காட்டி இருக்கின்றனர். லல்லுவும் பல்வேறு சமயங்களில், "என் இளைய சகோதரர் நிதிஷ்குமார் பிரதமர் ஆனால், எனக்கு மகிழ்ச்சிதான்" என்று சொல்லி இருக்கிறார்.

தி.மு.க-வின் கணக்கு

நிதிஷ்குமார் பீகார் முதல்வராகப் பதவி ஏற்றபோது,தமிழகத்தில் இருந்து தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், "பீகாரைப் போல தமிழகத்திலும் பி.ஜே.பி-க்கு எதிராக கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும்" என்று கூறினார்.


இப்போது தி.மு.க., விவசாயிகள் பிரச்னையைக் காரணம் காட்டி அனைத்து கட்சிகளை கூட்டியிருக்கும் நேரத்தில் ஸ்டாலின் முன்னர் கூறிய கருத்துக்களை நாம் நினைவு கூர்ந்தால் தவறில்லை. தி.மு.க-வைப் போல மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் என மாநில கட்சிகளுக்கு  2019 தேர்தலில் பி.ஜே.பி ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும் என்ற கருத்து வலுவாக இருக்கிறது. எனவே நிதிஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக அறிவித்து எதிர்கட்சிகள் ஒன்றிணைய வாய்ப்புகள் இருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.
2014 தேர்தலில் எதிர்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததால்தான் பி.ஜே.பி வெற்றி பெற முடிந்தது என்றும் மாநில கட்சிகள் கருதுகின்றன. எனவே, இப்போதில் இருந்தே பி.ஜே.பி-க்கு எதிரான கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் என்ற கருத்துக்கள் பரவலாக எழுந்துள்ளது. எதிர்கட்சிகள் இணைந்தால் மோடிக்கு எதிரான வலுவான அணியாக அது இருக்கும் என்று கருதப்படுகிறது. அதே நேரத்தில் இன்னொரு மூன்றாவது அணியாக சிதறிவிடக் கூடாது என்ற கருத்தும் உள்ளது.

-கே.பாலசுப்பிரமணி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்