துணைவேந்தர் கீதாலட்சுமி கைது செய்யப்படுவாரா?

கீதாலட்சுமி

மைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்.பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், நடிகர் சரத்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைகழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, ஏராளமான ஆவணங்கள் மற்றும் கோடிக்கணக்கான பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழக அரசியலில் இச்சோதனை மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், கீதாலட்சுமி ஆகியோரை வருமான வரித்துறை அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

முன்னதாக, வருமான வரித்துறை அனுப்பிய சம்மனை ரத்துசெய்யக் கோரி நீதிமன்றத்தில் கீதாலட்சுமி மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சம்மனை ரத்து செய்ய முடியாது என்று கூறியது. இதனைத் தொடர்ந்து அவருக்கு வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. 'வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகவில்லை என்றால், வழக்குப் பதிவு செய்யப்படும்' என்று எச்சரிக்கை விடப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 12-ம் தேதி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார் கீதாலட்சுமி. அவரிடம் 7 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பான கேள்விகள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
 
துணைவேந்தர் பதவி பறிப்பா?

கீதாலட்சுமியிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக, அரசு அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, "வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களில் சில தகவல்கள் சிக்கியுள்ளன. அவை கீதாலட்சுமிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தும் என்கிறார்கள். விஜயபாஸ்கரின் சட்டமன்ற அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் கீதாலட்சுமியின் நடவடிக்கை தொடர்பான சில தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 17 ஓ.ஏ பணியிடங்களை நிரப்ப, கீதா லட்சுமி பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொடுத்துள்ளார். இந்தத் தகவல்களால் அவருக்கு பிரச்னை ஏற்படும். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநரிடமும் புகார் தெரிவிக்கப்படலாம். அதற்கான வாய்ப்பும் உள்ளது. அப்படி, ஆளுநருக்கு புகார் சென்றால், கீதா லட்சுமியின் துணைவேந்தர் பதவி பறிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது" என்று குறிப்பிட்டார். 

 

கீதாலட்சுமிகைது செய்யப்படுவாரா?
 
அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கீதாலட்சுமியிடம் வருமானவரித்துறை மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. அப்போது, ஆர்.கே.நகர்த் தொகுதியில்  பணப்பட்டுவாடா தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும், தமிழக மருத்துவத் துறையில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்தும் விசாரணை நடைபெறும் என்று வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்த பணத்தில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும் சிக்கியுள்ளன. தவிர, விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அவருக்கு எதிரான விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "வருமான வரித்துறையினர் மேற்கொண்டு வரும் விசாரணை,விரைவில் சி.பி.ஐ மற்றும் மத்திய அமாலாக்கத்துறைக்கு மாற்றுவதற்கான வாய்ப்பு  உள்ளது. இதில் அமைச்சர் மற்றும் துணைவேந்தரின் சொத்து விவரங்கள் குறித்த விசாரணையும் இருக்கலாம். அதன் அடிப்படையில் கீதாலட்சுமியை அமலாக்கப் பிரிவினர் கைது செய்யவும் வாய்ப்புள்ளது" என்றார்.

இதனிடையே, கீதாலட்சுமியால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் ஒன்றுசேர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  

கே . புவனேஸ்வரி

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!