வெளியிடப்பட்ட நேரம்: 10:51 (18/04/2017)

கடைசி தொடர்பு:10:50 (18/04/2017)

முத்தலாக் விவகாரம் : இப்போது குஷ்பு என்ன சொல்கிறார்?

''முத்தலாக் முறையால் முஸ்லிம் பெண்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இனியும் இதனை பொறுத்துக்கொள்ள முடியாது'' என்று மீண்டும் பொங்கியிருக்கிறார் பிரதமர் மோடி. கடந்த முறை, ''பெண்களின் உரிமையைக் காக்கும்விதத்தில், முத்தலாக் முறையில் மாற்றம் கொண்டுவரவேண்டும்'' என்று துணிச்சலாக கருத்து தெரிவித்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் நடிகையுமான குஷ்பு. இந்த நிலையில், தற்போதும் அந்த கருத்தில் அவர் உறுதியாக இருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள பேசினோம்....

குஷ்பூ 1

''முத்தலாக் விவகாரத்தில், முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவதாக மோடி பேசியிருக்கிறாரே...?''

''பெண்களுக்கு முன்னேற்றம் தேவை; அதற்கான மாற்றங்களும் கண்டிப்பாக வரவேண்டும். ஆனால், பெண்களுக்கு ஆதரவாக மோடி பேசுவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. அவர் குஜராத் முதல்வராக இருந்தபோது கோத்ரா சம்பவத்தில், எத்தனையோ பெண்கள் பாதிக்கப்பட்டார்கள். அப்போது பெண்கள் பற்றி அவர் பேசவே இல்லையே? அவர் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு இந்த 3 ஆண்டுகளில் எத்தனையோ பெண்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. அப்போதெல்லாம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதவர் இப்போது திடீர் என சிறுபான்மை இனப் பெண்கள் மீது கவலை கொண்டு அவர்களது முன்னேற்றம் பற்றி அக்கறையோடு பேசுகிறார் என்றால், நிச்சயம் அதற்குப் பின்னால் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது.''

குஷ்பூ 2''பொதுசிவில் சட்டம் என்பது பி.ஜே.பி-யின் நீண்டகால கொள்கை. எனவே, அதுபற்றி பேசுவதில் என்ன உள்நோக்கம் இருந்துவிடப் போகிறது?''

''எல்லாமே தேர்தலை மையப்படுத்திய பேச்சுதான். அவர் முதல்வராக இருந்தபோது நிகழ்ந்த கோத்ரா சம்பவத்தில், முஸ்லிம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்கள், விதவையானார்கள், காஷ்மீரில் இப்போது நடந்துகொண்டிருக்கும் பிரச்னைகளில் எத்தனையோ பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்... இதுபற்றியெல்லாம் வாய் திறக்காத பிரதமர், இப்போது முஸ்லிம் பெண்களுக்காக குரல் கொடுக்கிறார் என்றால் அது உள்நோக்கம்தானே...? வரவிருக்கிற பாராளுமன்றத் தேர்தலுக்காக இப்போதே தயாராகிவருகிறார் என்றுதான் சொல்லவேண்டும். பட்டினி சாவு, வறட்சியால் தற்கொலை என்று தினம் தினம் தமிழக விவசாயிகள் செத்து மடிகிறார்கள். கொளுத்தும் வெயிலில், டெல்லி தார்ச்சாலையில் போராடிக் கிடக்கிறார்கள்.... இந்த விவசாயிகள் பிரச்னை பற்றி இதுவரை ஒரு வார்த்தை பேசியிருப்பாரா மோடி? ஏன் அவர்கள் மீது அக்கறை காட்ட மறுக்கிறார்? விவசாயிகள் நலன் சார்ந்து எதுவுமே பேச மறுக்கிறார்? ஒன்றே ஒன்றுதான்... தமிழகத்தில் ஒருநாளும் பி.ஜே.பி கால் ஊன்ற முடியாது. அதனால், தமிழ்நாட்டுப் பிரச்னைகளில் மட்டும் காதைப் பொத்திக்கொண்டும், கண்களை மூடிக்கொண்டும் உட்கார்ந்திருக்கிறார்.''

''முத்தலாக் விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிரான உங்களது கருத்தில் இப்போதும் உறுதியாக இருக்கிறீர்களா?'

''நான் எப்போதுமே கட்சிக்கு எதிராகப் பேசியதே கிடையாது. 'மாற்றங்கள் வரவேண்டும். அந்த மாற்றங்களும் அந்தந்த மதங்களைச் சார்ந்தவர்களை அழைத்துப் பேசியே கொண்டுவரப்பட வேண்டும்' என்றுதான் நாங்கள் எல்லோருமே சொல்லிவருகிறோம். இந்த விவகாரத்தைப் பொருத்தவரையில் ஏற்கெனவே அம்பேத்கர் தனியாக ஒரு சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார். அதாவது, அவரவர் மத நம்பிக்கைகள் சார்ந்து முடிவு எடுக்கக்கூடிய உரிமைகள் மக்களுக்கு இருக்கிறது. காலங்கள் மாறும்போது, மாற்றங்களும் வரும். அது எந்தவிதமான மாற்றம் என்பதை அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.''

''முத்தலாக் விஷயத்தில் உங்களது தனிப்பட்ட கருத்து என்ன?''

''எனக்கு என்று தனிப்பட்ட கருத்து எதுவும் கிடையாது. மாற்றங்கள் வரவேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் கருத்து; அதுதான் என்னுடைய கருத்தும்.''

''மாற்றங்கள் வரவேண்டும் என்ற உங்களது கருத்துக்கு இஸ்லாமிய தலைவர்களிடையே பலத்த எதிர்ப்பு இருக்கிறதே...?''

''நான் சொல்வது ஒரே விஷயம்தான். பெண்களுக்கு எதிரான வன்முறைகள், கொடுமைகளைக் களைய கட்டாயம் மாற்றங்கள் வரவேண்டும். நான் முஸ்லிம் சமுதாயத்தை மட்டும் குறிவைத்துப் பேசவில்லை. எல்லா சமூகத்திலும் இன்றைக்கு பிரச்னைகள் இருக்கத்தான் செய்கிறது. 'கோயிலுக்குள் பெண்கள் போகமுடியாது' என்று இந்து சமூகத்திலும் சண்டைப் போட்டுக்கொண்டுதானே இருக்கிறோம். அதற்கு எதிராகவும் குரல் கொடுத்துக்கொண்டுதானே இருக்கிறோம்? ஆக, அந்தந்த மதப் பெரியவர்களை அழைத்துப் பேசித்தான் மாற்றங்களைக் கொண்டுவர முடியும். ஏனெனில், அதற்கென தனிச் சட்டம், உச்ச நீதிமன்றம் என எல்லாம் இருக்கிறது. மாறாக, பிரதமர் மோடி நினைத்த மாற்றங்களை எல்லாம் கொண்டுவர முடியாது என்பதுதான் நிஜம்.''

-த.கதிரவன்


டிரெண்டிங் @ விகடன்