வெளியிடப்பட்ட நேரம்: 08:07 (18/04/2017)

கடைசி தொடர்பு:08:07 (18/04/2017)

சசிகலாவை நலம் விசாரித்த முன்னாள் பிரதமர் : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 37

சசிகலா, ஜெயலலிதா

“அரசியலில் இருந்து ஒய்வு பெறுகிறேன்; என் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று முதல் நாள் பேட்டி கொடுத்த ஜெயலலிதா, சசிகலாவை நேரில் பார்த்ததும் தன் முடிவை மாற்றிக்கொண்டார். அவருடைய இரண்டாவது ராஜினாமா நாடகம் 24 மணிநேரம்கூட தாக்குப்பிடிக்கவில்லை. கூத்தாநல்லூர் சென்றிருந்த நடராசனும் சசிகலாவும் மீண்டும் போயஸ் கார்டனுக்குள் வலம்வந்தனர். ஜெயலலிதா-சசிகலா-நடராசன் கூட்டணி பழனி பாராளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல், பாண்டிச்சேரி சட்டமன்றத் தேர்தல் வேலைகளில் பரபரப்பானது.

சீரணி அரங்கம் - நடராசனின் ரசிகர் பட்டாளம்!

1989 நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி, நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்துக்கு ராஜீவ் காந்தி, ஜெயலலிதாபிரம்மாண்ட ஏற்பாடுகளைச் செய்தது. 1990 ஜனவரி 24-ம் தேதி சென்னை மெரீனா கடற்கரையில் இருந்த சீரணி அரங்கத்தில் அந்தக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள சென்னை வந்த ராஜீவ் காந்திக்கு விமான நிலையத்திலேயே பலத்த வரவேற்பு. அங்கேயே கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டிருந்தது. ராஜீவ் காந்தியை வரவேற்கப்போய் இருந்த ம.பொ.சி, “அய்யோ என்னை விட்டுவிடுங்கள்... நான் வெளியில் போகிறேன்...” என்று கூப்பாடு போடும் அளவுக்கு கூட்டநெரிசல் இருந்தது. அப்படியானால் மாலை மெரீனாவில் திரண்ட கூட்டம் பற்றிச் சொல்லவா வேண்டும்! சீரணி அரங்கத்தில் ராஜீவ் காந்தி பேசும் மேடை வழக்கத்துக்கு மாறாக சாதரண மேடையாக அமைக்கப்பட்டு இருந்தது. அதற்கு முன்பு அவர் தமிழகத்தில் கலந்துகொண்டு பேசிய பொதுக்கூட்டங்களில் எல்லாம் ‘குண்டு துளைக்காத மேடை’ தான் அமைக்கப்பட்டன. ஆனால், சீரணி அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு குண்டு துளைக்காத மேடை அமைக்கப்படவில்லை.

ராஜீவ் வாழ்க்கையை முடிக்கப்போகும் ரத்தக்களறிக்கான ஒத்திகை இப்படிப்பட்ட சின்னச் சின்ன அஜாக்கிரதைகளில்தான் ஆரம்பித்தது. சீரணி அரங்க மேடையில் ஜெயலலிதா உற்சாகமாக அமர்ந்திருந்தார். கூட்டம் தொடங்குவதற்கு முன் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைக் கச்சேரி நடைபெற்றது. மேடைக்கு எதிரில்  பத்திரிகையாளர்கள் அமர்ந்திருந்தனர். தோளில் கம்பளி சால்வையைப் போட்டுக் கொண்டு பத்திரிகையாளர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்து நடராசன் அமர்ந்தார். பத்திரிகையாளர்களோடு கேஷூவலாக பேசிக் கொண்டிருந்தவர், “பார்த்தீர்களா! எவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டியிருக்கிறோம் என்று... ‘டைம்’ போதவில்லை. இன்னும் கொஞ்சம் கூடுதலா ‘டைம்’ கிடைச்சிருந்தா, இதைவிட பெரிய கூட்டத்தை கூட்டியிருப்போம்...” என்று காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டார். இடையிடையே அ.தி.மு.க தொண்டர்கள் நடராசனிடம், ரூபாய் நோட்டுக்களிலும், கைகளில் கிடைத்த காகிதங்களிலும் ‘ஆட்டோகிராஃப்’ வாங்கிக் கொண்டிருந்தனர். நடராசனைச் சுற்றி கூடியிருந்த கூட்டம் தனியாகத் தெரிந்தது. அன்றைக்கு அது ஆச்சரியம். இன்றைக்கு அது வரலாறு.

எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா, இந்திரா காந்தி-ராஜீவ் காந்தி!

சீரணி அரங்கப் பொதுக்கூட்டத்தில் ராஜீவ் காந்தி ஆங்கிலத்தில் பேசினார். அதை ப.சிதம்பரம் தமிழில் மொழிபெயர்த்தார். ராஜீவ் தனது நடராசன்பேச்சில், “இந்திரா-எம்.ஜி.ஆர் நட்புடன் இருந்து தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டனர். அதுபோல், நானும் ஜெயலலிதாவும் இணைந்து செயல்பட்டு தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடுவோம்” எனக் குறிப்பிட்டார். ஜெயலலிதா, “என்னைப் பார்க்க தமிழகம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் வர முயன்றனர். அவர்களைத் தடுக்கப் பார்த்தார் முதியவர் கருணாநிதி. அவர் எண்ணம் ஈடேறவில்லை. அதனால்தான் எனக்குப் பின்னால் வங்கக்கடல் இருப்பதுபோல்... இன்று எனக்கு முன்னே மக்கள் கடல் இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தமிழக மக்கள் முகத்தில் விழிக்கமாட்டேன் என்று சொன்ன திருவாரூர் தந்த திருவாளர் தேசியம்பிள்ளை கருணாநிதி, டெல்லிக்கு காவடி தூக்கிக் கொண்டிருக்கிறார். இங்கே மக்களால் நிராகரிக்கப்பட்ட கருணாநிதி, தேசியப் பிரச்னைகளைத் தீர்க்கப்போகிறேன் என்று சொல்வது ‘கூரை ஏறிக் கோழிபிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போகப்போகிறேன்’ எனச் சொல்வதுபோல் இருக்கிறது” எனச்சொல்லி கருணாநிதியை தன் அனல் கக்கும் பேச்சில் வறுத்தெடுத்தார்.

சீரணி அரங்கப் பொதுக்கூட்டம் ஏகமொத்தமாக பல விஷயங்களை தமிழகத்துக்கு உணர்த்தியது. ஜெயலலிதா-ராஜீவ்காந்தி கூட்டணி எதிர்காலத்தில் தி.மு.க-வின் தூக்கத்தைக் கெடுக்கப்போகிறது என்பதை அது தெளிவுபடுத்தியது. மத்திய அரசில் சிறிய அதிர்வு ஏற்பட்டாலும், அது மாநில அரசை உலுக்கி எடுத்துவிடும் என்பதை கருணாநிதிக்கு வெளிப்படையாக உணர்த்தியது. அ.தி.மு.க-வுக்குள் நடராசனுக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருப்பதை அம்பலப்படுத்தியது. 

jayalalithaa

நள்ளிரவில் நடுரோட்டில் பிறந்தநாள் வாழ்த்து!

1990 பிப்ரவரி 23-ம் தேதி, நடு இரவு. பாண்டிச்சேரி தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சசிகலாவும் ஜெயலலிதாவும் காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். காரின் முன் இருக்கையில் சசிகலா அமர்ந்திருந்தார். பின் இருக்கையில் தனியாக ஜெயலலிதா அமர்ந்திருந்தார். அப்போது ஜெயலலிதாவின் டிரைவராக இருந்த அண்ணாதுரை என்பவர் காரை ஓட்டினார். இரவில் மிதமான வேகத்தில் வந்து கொண்டிருந்த அந்தக் காரை, பாண்டிச்சேரி எல்லையில் சுலோச்சனா சம்பத் கை காட்டி நிறுத்தினார். சுலோச்சனா சம்பத் அந்த இரவில் கைகாட்டி நிறுத்துவதைப் பார்த்ததும் காருக்குள் இருந்த ஜெயலலிதா பதறிப்போய் காரைவிட்டு கீழே இறங்கினார். ஜெயலலிதா கீழே இறங்கியதும், சுலோச்சனா சம்பத் சில்க் சால்வை ஒன்றை ஜெயலலிதாவுக்குப் போர்த்தி, ‘ஹேப்பி பார்த்டே’ என்றார். அதில் நெகிழ்ந்துபோன ஜெயலலிதா, “இந்த நேரத்தில்... இந்த இடத்தில் வைத்து எனக்கு நீங்கள் பிறந்த நாள் வாழ்த்து சொல்வது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்தப் பிறந்தநாளில் எனக்கு முதல் வாழ்த்துச் சொன்னவர் நீங்கள்தான். என்னை நீங்கள் ஆசிர்வாதம் செய்ய வேண்டும்” என்று கேட்டு சுலோச்சனா சம்பத்திடம் ஆசிர்வாதமும் வாங்கினார். அந்த சந்தோஷத்தோடு காரில் ஏறிய ஜெயலலிதாவும் சசிகலாவும் பழைய பாடல்களைக் கேட்டுக் கொண்டே பயணத்தைத் தொடர்ந்தனர்.

விபத்தில் சிக்கிய சசிகலா-ஜெயலலிதா!

ஜெயலலிதா, ராஜீவ் காந்தி, முத்துச்சாமி

சென்னை மீனம்பாக்கம் பழைய விமானநிலையத்தை ஜெயலலிதாவின் கார் நெருங்கியது. அப்போது, முன் சீட்டில் உட்கார்ந்திருந்த சசிகலாவிடம், கேஸட்டை மாற்றி வேறு கேஸட் போடச் சொன்னார் ஜெயலலிதா. சசிகலா வேறொரு கேசட்டைப் போட்டுவிட்டு தூங்காமல் முழித்திருந்தார். பின் சீட்டில் இருந்த ஜெயலலிதாவும் தூங்கவில்லை. ஆனால், அவர் படுத்துக்கொண்டே பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் இவர்களுடைய காருக்கு இணையாக வந்த லாரி ஒன்று, தீடிரென காரை இடித்துத் தள்ளியது. அதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. சசிகலா-ஜெயலலிதா இருவருக்கும் தலையிலும் கண்களிலும் பலத்த அடி. டிரைவர் அண்ணாதுரை லேசான காயத்துடன் தப்பினார். சசிகலாவும், ஜெயலலிதாவும் தேவகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவல் தெரிந்து அ.தி.மு.க வி.ஐ.பி-க்கள், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தேவகி மருத்துவமனைக்குப் படையெடுத்தனர். ராஜீவ் காந்திக்கும் தகவல் சொல்லப்பட்டது. 

சசிகலாவை தனியாக நலம்விசாரித்த முன்னாள் பிரதமர்

ராஜீவ் காந்தி, சசிகலா

சசிகலாவிடம் நலம் விசாரிக்கும் ராஜீவ் காந்தி

தேவகி மருத்துவமனையின் முதல் மாடியில் இருந்த 104-ம் எண் கொண்ட அறையில் சசிகலா தங்கி இருந்தார். இரண்டாவது மாடியில் இருந்த 216-ம் எண் அறையில் ஜெயலலிதா தங்கி இருந்தார். நடராஜன் 106-ம் எண் கொண்ட அறையில் தங்கி இருந்து இருவரையும் கவனித்துக் கொண்டார். மருத்துவமனைக்கு வந்த ராஜீவ் காந்தி ஜெயலலிதாவை நலம் விசாரித்தார். அதன்பிறகு, சசிகலாவையும் நேரில்பார்த்துத் தனியாக நலம் விசாரித்தார். அ.தி.மு.க எம்.எல்.ஏ முத்துச்சாமியும், தலைமை நிலையச் செலலாளர் துரையரசனும் 215-ம் எண் அறையில் தங்கி, அங்கு ‘மினி’ அ.தி.மு.க அலுவலகத்தையே நடத்திக் கொண்டிருந்தனர். சில நாட்கள் போனபிறகு, ஜெயலலிதாவால், சசிகலாவைப் பிரிந்து இருக்க முடியவில்லை. அதனால், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையிலேயே எக்ஸ்ட்ரா பெட் போடப்பட்டு சசிகலாவும் ஜெயலலிதாவின் அறைக்கு மாற்றப்பட்டார்.

மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா மிகவும் பயந்துபோய் இருந்தார். “என்னைக் கொன்னுடுவாங்க போல... அதற்காக திட்டம் தீட்டிச் செயல்படுகின்றனர்” என்று அவரைப் பார்க்க வந்த காங்கிரஸ் கட்சி எம்.பி ஒருவரிடம் தெரிவித்தார். சசிகலா தைரியமாக இருந்தார். அந்த விபத்துகுறித்துப் பேசிய ஜெயலலிதாவின் கார் டிரைவர் அண்ணாதுரை, “மேடம் காரில் பின் சீட்டில் படுத்துக்கொண்டே வந்தார். அதனால் காரை நான் மிகவும் மெதுவாகவே ஓட்டினேன். அப்போது அந்த லாரி எங்கிருந்து வந்ததென்றே தெரியவில்லை. அகலமான ரோட்டில் நிறைய இடம் இருந்தும், அந்த லாரி எங்கள் காரை குறிவைத்து வந்து மோதியதுபோல் தெரிந்தது” எனத் தெரிவித்தார். அந்த விபத்துக்குறித்து வழக்குப் பதிவு செய்த மீனம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சிவாக்குமார் அனைத்து விசாரணைகளையும் முடித்துவிட்டு, ஜெயலலிதா-சசிகலாவிடம் ‘ஸ்டேட்மென்ட்’ வாங்க காத்திருந்தார். மார்ச் 2-ம் தேதிதான் அவருக்கு  அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தார் ஜெயலலிதா. ஸ்டேட்மென்ட் வாங்க வந்த இன்ஸ்பெக்டரை ஜெயலலிதா கேள்விகளால் துளைத்தெடுத்துவிட்டார். சசிகலாவும் அந்த இன்ஸ்பெக்டரிடம் “எந்த செக்ஷனில் வழக்குப் பதிவு செய்துள்ளீர்கள்... கொலை முயற்சி வழக்குத்தான் போடவேண்டும். விபத்து நடந்த ரோடு அகலமானது. எனக்கு நல்லா நியாபகம் இருக்கு... அந்த லாரி எங்களுக்கு எதிர்புறமாக வரவில்லை. அகலமான சாலையில் எங்களுக்கு பின்னால் வந்தது. அதன்பிறகு எங்கள் காருக்கு இணையாக வந்தது. ஆனால், சிறிது நேரத்தில் எங்கள் காரை குறிவைத்து வேகமாக வந்து இடித்துத் தள்ளியது. அது திட்டமிட்ட கொலை முயற்சி” என்றார்.

கதை தொடரும்...

இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

ஜோ.ஸ்டாலின்.
படங்கள் : சு.குமரேசன்.


டிரெண்டிங் @ விகடன்