வெளியிடப்பட்ட நேரம்: 18:14 (18/04/2017)

கடைசி தொடர்பு:18:13 (18/04/2017)

வெப்பம் அதிகரிக்க என்ன காரணம்? வானிலை மைய இயக்குநர் பேட்டி

வெப்பம்

மே மாத கடும் கோடைக்கு முன்பே, ஏப்ரல் மாதமே அனல் காற்று வீசத் தொடங்கி விட்டது. சென்னை உட்பட 18 மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரனிடம் பேசினோம்.

"அனல் காற்று வீசுகிறது என்பது எப்படி கணிக்கப்படுகிறது?"

"அனல் காற்று வீசுவதை இடத்துக்குத் தகுந்தாற்போல வரையறுப்போம். மலைப்பகுதியில் 30 டிகிரி செல்சியஸ் வரை பதிவானால், அனல் காற்றுடன் கூடிய வெப்பம் என்று கூறுவோம். கடல் பகுதிகளில் 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானால் அது அனல் காற்றுடன் கூடிய வெப்பம் என்கிறோம். உட்புறப்பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் பதிவானால் அதை அனல் காற்றுடன் கூடிய வெப்பம் என்று சொல்கிறோம். அதாவது வழக்கமான வெயில் அளவை விட  4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்தால் அதை அனல் காற்று என்று சொல்வோம். இதுவே 6 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக இருந்தால் கடுமையான அனல் காற்று என்று சொல்வோம்."

"வெப்பத்தின் தாக்கம் திடீரென அதிகரிப்பதற்கு காரணம் என்ன?"

"கடந்த 16 மற்றும் 17-ம் தேதி இரண்டு நாட்களும் வடமேற்கு, மேற்கு திசையில் இருந்து  ஆந்திராவில் இருந்து வறண்ட காற்று, அதே நேரத்தில் வெப்பமான காற்று அடித்ததால் கடல் பகுதியில் 37 முதல்  40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பம் பதிவானது. இது வழக்கத்தை விட 5 டிகிரிசெல்சியஸ் அதிகமாகப் பதிவானதால் அனல் காற்று என்று சொன்னோம்."

பாலசந்திரன்

"மே மாதம்தான் அனல் காற்று வீசும். இந்த முறை ஏப்ரல் மாதமே அனல் காற்று வீசுவதற்கு காரணம் என்ன?"

"வழக்கமாக மே மாதம்தான் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இப்போது வங்க கடலில் புயல் சின்னம் உருவானது. இதனால் காற்றின் போக்கில் மாறுபாடு ஏற்பட்டது. புயலின் தாக்கம் இருந்த பகுதியில் மேல் எழும்பிய காற்று, கீழ் பகுதியில் நமது மாநிலத்தின் பக்கம் வீசியதால், வெப்பமாக இருக்கிறது. ஆந்திரா மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. எனவே, அங்கிருந்து காற்று வீசியதாலும் நமக்கு வெப்பமாக இருக்கிறது."

"வெப்பத்தின் தாக்கம் எப்போது குறையும்?"

"நாளை ஒரு நாள் மட்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதன்பின்னர் படிப்படியாக வெப்பத்தின் தாக்கம் குறையும். எனினும் இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பத்தின் தாக்கம் இருக்கும். அதிக குளிர்ச்சியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. கடல் காற்று வீசினால் சென்னையில் வெப்பத்தின் தாக்கம் குறையும். எனினும் உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும். காற்றின் போக்கு திசைமாறி கிழக்கு பக்கமாக காற்று வீசும் போது வெப்பத்தின் தாக்கம் குறையும். அடுத்த 4 நாட்களுக்குப் பின் இந்த நிலை மாறும் என்று எதிர்பார்கிகறோம்."

"எல் நினோ பாதிப்பு காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கிறதா?"

"எல் நினோ காரணமாக இந்த பாதிப்பு இல்லை. வானிலை மையத்தின் ஆய்வுகள் படி எல் நினோவின் தாக்கம் இல்லை."

"கோடை மழை பெய்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா?"

"கோடை மழைக்கு இப்போது வாய்ப்பு இல்லை. ஒரு வேளை மே மாதம் கோடைமழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கிறோம்."

"அக்னி நட்சத்திரம்"
"வழக்கமாக அக்னி நட்சத்திரத்தின் போதுதான் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் மே மாதம் 4-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை இருக்கும். அப்போது வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும்."

-கே.பாலசுப்பிரமணி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்