வெளியிடப்பட்ட நேரம்: 17:52 (19/04/2017)

கடைசி தொடர்பு:19:02 (19/04/2017)

கழட்டிவிடப்படுகிறாரா ஓ.பன்னீர்செல்வம்? - எடப்பாடி பழனிசாமி முகாம் பரபர

பன்னீர்செல்வம்

.தி.மு.கழகத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது. 122 எம்.எல்.ஏ-க்கள், 37 எம்.பி-க்கள், சுமார் 50 மாவட்டச் செயலாளர்கள்...என முதல்வர் எடப்பாடி கோஷ்டி பிரமாண்டமாய் நிற்கிறது. இன்னொரு பக்கம்...12 எம்.எல்.ஏ-கள் (ஒ. பன்னீர்செல்வத்தையும் சேர்த்து), 12 எம்.பி-கள், 2 மாவட்டச் செயலாளர்கள்...என ஒ. பன்னீர்செல்வம் கோஷ்டி நிற்கிறது. இந்த இரு கோஷ்டியினரும் கைகோத்தால்தான் தேர்தல் கமிஷனின் தரப்பில் இரட்டை இலைச் சின்னமும், பொதுச்செயலாளர் பதவியும் கிடைக்கும். இந்த நிலையில், 

கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது, '' ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னால் சசிகலாவின் குடும்பத்துக்குள் அதிமுக சென்றுவிட்டதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் எங்களுடைய தர்மயுத்தம் அறப்போராட்டம் தொடங்கப்பட்டது. இந்த தர்மயுத்தத்தின் முதல் வெற்றியாக சசிகலா குடும்பத்தை விலக்கி வைப்பதென்று  எடப்பாடியார் தரப்பில் முடிவெடுத்திருக்கிறார்கள். இதுவே எங்கள் முதல் வெற்றி"  என்று தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருக்கும் டி.டி.வி. தினகரன் தற்போது கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக அறிவித்துவிட்டார். அவருடன் இருந்த ஒன்பது எம்.எல்.ஏ-க்கள், சில மாவட்டச் செயலாளர்கள்... எடப்பாடி கோஷ்டியினருடன் ஐக்கியமாகிவிட்டனர்.  

தினகரன் மீடியாக்களிடம் பேசும்போது, " இன்று (19.4.17) ராயப்பேட்டையில் நடக்கவிருந்த எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. கட்சிப் பணிகளிலிருந்து நான் நேற்றே ஒதுங்கிவிட்டேன். எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். சில நாள்களிலேயே அமைச்சர்கள் என்னை திடீரென நீக்க எதோ ஒரு பயம்தான் காரணமாக உள்ளது. அது என்ன எனத் தெரியவில்லை. யாரோ சிலருக்கு உள்ள பயத்தால் என்னை ஒதுக்கியதற்காக நான் வருத்தப்படவில்லை. என்னை நீக்குவதால் கட்சிக்கும், ஆட்சிக்கும் நன்மை என்றால் நான் விலகி இருக்கவே தயார். போட்டிக் கூட்டம் நடத்தி அவர்களுக்கு சரிக்கு சரியாக பலம் காட்ட நான் விரும்பவில்லை. நேற்று நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு விடுத்திருந்தால் கண்டிப்பாக நானும் கலந்துகொண்டிருப்பேன். அவசரகதியில் அமைச்சர்கள் முடிவெடுத்துள்ளனர். ஆனால் பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை, அது பொதுச்செயலாளர் சசிகலா எனக்குத் தந்தது. எனவே அவரிடம் ஆலோசனை நடத்தியபிறகு ராஜினாமா பற்றி கூறுவேன். இரு அணியினரும் இணைந்து செயல்படுவது குறித்து எந்த பிரச்னையுமில்லை"  என்று ஜகா வாங்கிவிட்டார். இதை எடப்பாடி கோஷ்டியினர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆக, தினகரன் போட்டியில் இருந்து விலகியது எடப்பாடி கோஷ்டியினருக்குத்தான் லாபம். 

பழனிசாமி

தற்போது தனிப்பெரும் கோஷ்டியாக உருவெடுத்துள்ள எடப்பாடியார் கோஷ்டியினர் மெஜாரிட்டி எம்.எல்.ஏ-க்கள் கையில் வைத்திருப்பதால், யாருடைய உதவியும் இல்லாமல், தாங்களாகவே ஆட்சியை நடத்திச் செல்லலாம் என்கிற நிலை உருவாகிவிட்டது." இனி, ஒ. பன்னீர்செல்வம் எதற்கு? எக்காரணம் கொண்டும் அம்மா ஆட்சியை அவர் கவிழ்க்கமாட்டார். சத்தியத்துக்கு கட்டுப்பட்டவர். எப்படியும் ஒ.பன்னீர்செவ்வம் கோஷ்டி எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் இனி அங்கே பவர் வராது என்பது புரிந்துகொண்டு நம் பக்கம் தாவிவிடுவார்கள். அதுவரை பொறுப்போம். பிறகு பார்க்கலாம்" என்று எடப்பாடி கோஷ்டிப் பிரமுகர் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கிறார். 

அவரே தொடர்ந்து பேசும்போது, " ஒ.பன்னீர்செல்வம் இன்றைக்கு செல்வாக்கு உள்ள தலைவர். அவருக்கு மீண்டும் நிதி அமைச்சர் பதவி தரத்தயார். அவரிடம் இருக்கும் மாஃபா பாண்டியராஜனுக்கு மீண்டும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவி தருவோம். மற்றபடி, முதல்வர் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியெல்லாம் எதிர்பார்த்தால்... நடக்காது" என்கிறார். 

இந்த மாதிரி பேச்சு ஒ. பன்னீர்செல்வம் கோஷ்டியினரை டென்ஷன் ஆக்கியுள்ளது. ' நாங்கள் நினைத்தால், இரட்டை இலையை முடக்கி விடுவோம். பொதுச்செயலாளர் பதவி அவசியம் வேண்டும்'  என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இந்தப் பதவிக்கு சசிகலாவின் நெருங்கிய உறவினரும், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்தை தேர்வு செய்து வைத்திருக்கிறார் எடப்பாடியார். 

தமிழக அரசியல் நிலவரங்களை கவனித்து வரும் பாஜக பிரமுகர் பேசுகையில் , "மெஜாரிட்டி எம்.எல்.ஏக்கள் தங்கள் வசம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தெரிவித்து வந்தனர். அதன் பேரிலேயே, அவர்களுக்குத் தேவையான உதவிகளை, கட்சி மேலிடம் செய்தது. ஆனால், அது பொய் என பிறகு தெரிய வந்தது. அடுத்து, சசிகலா முதல்வராக ஏதுவாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாங்கள் சொன்னதை அவர் கேட்கவில்லை. இதையெல்லாம் வைத்து, இதற்கு மேலும் ஓ.பன்னீர்செல்வத்தை நம்பி, நாங்கள் எங்கள் எதிர்கால திட்டத்தை செயல்படுத்த எண்ணுவது, என்பது முட்டாள்தனம். எனவே, இப்போதைக்கு பாஜகவின் சாய்ஸ் எடப்பாடி பழனிசாமி தான். பல விவகாரங்களில் அவர் அனுசரணையாக நடந்து கொண்டு வருகிறார். ஆகையால், ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டியில் இருக்கும் பாஜக அனுதாபி பிரமுகர்கள் விரைவில் எடப்பாடி அணிக்குச் செல்வார்கள்" என்றார்.

தினகரன் போட்டியிலிருந்து விலகியதால், இப்போது எடப்பாடியாருக்கும் ஒ. பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான பனிப்போர் உச்சத்தில் இருக்கிறது.

- பாலகிஷன்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்