வெளியிடப்பட்ட நேரம்: 19:39 (20/04/2017)

கடைசி தொடர்பு:19:39 (20/04/2017)

சி.பி.எஸ்.இ பள்ளிகளில் இந்தி கட்டாயம்! ஏன்...எதற்கு?

இந்தி

சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை இந்தி கட்டாயப் பாடம் ஆக்கும் உத்தரவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டுள்ளார். எனவே, இந்த உத்தரவை நாடு முழுவதும் அமல்படுத்தும் பணிகளில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில்  இப்போது 6 முதல் 8 வரை மும்மொழி கொள்கையின் கீழ் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன.

மூன்று மொழிகள்

தமிழகத்தில் தமிழ் மொழியை கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும் என்ற கொள்கையின்படி  கடந்த 2012-ம் ஆண்டு 'தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளில் தமிழ் கட்டாயம் கற்றுத்தர வேண்டும்' என்று 2012-ம் ஆண்டு தமிழக அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. ஆனால், இந்தச் சட்டத்தில் கேந்திர வித்யாலயா, சைனிக் பள்ளிகள், நவோதையா பள்ளிகள் ஆகிய சிறப்பு பள்ளிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா, சைனிக் பள்ளிகள், நவோதையா பள்ளிகளில் முதல் மொழி ஆங்கிலமாகவும், இரண்டாவது மொழி இந்தி, மூன்றாவது மொழி சமஸ்கிருதம் ஆகவும் இருக்கின்றன.  தனியார் சி.பி.எஸ்.இ பள்ளிகளைப் பொறுத்தவரை முதல் மொழி ஆங்கிலம், இரண்டாவது மொழி இந்தி அல்லது தமிழ், மூன்றாவது மொழி சமஸ்கிருதம் அல்லது பிரெஞ்ச், ஜெர்மன் போன்ற வெளிநாட்டு மொழிகள் என்ற அடிப்படையில் கற்றுத் தருகின்றன.

இந்தி கட்டாயம்

இந்த சூழலில் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் மும்மொழி கொள்கையை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து  வருவதாக கடந்த ஜனவரி மாதம்  தகவல் வெளியானது.  இந்த நிலையில் கடந்த மார்ச் 31-ம் தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அளித்துள்ள உத்தரவில், "சி.பி.எஸ்.இ பள்ளிகள், கேந்திர வித்யாலயா பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயப்பாடம் ஆக்க வேண்டும். மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 18546 சி.பி.எஸ்.இ பள்ளிகள், வெளிநாடுகளில் உள்ள 210 பள்ளிகளிலும் இந்தி கட்டாயப்பாடம் ஆக்கப்பட உள்ளது. ஆனால், இந்தி பேசாத மாநிலங்களில் இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தி திணிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கேரளாவில் 10-ம் வகுப்பு வரை மலையாள மொழி கட்டாயபாடமாக இருக்கும் என்று கடந்த 11-ம் தேதி உத்தரவு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தித் திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். ஆனால், அரசு தரப்பில் இருந்து மாநிலத்தின் நிலை குறித்து இன்னும் கருத்துத் தெரிவிக்கவில்லை.

ஆங்கில வழி உயர்கல்வி

பிரின்ஸ் கஜேந்திரபாபு கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம். "தாய் மொழி கல்விதான், மாணவர்களுக்குப் புரிதல் திறனையும், சுயமாக சிந்திக்கும் அறிவையும் கொடுக்கும் என்றும் கோத்தாரி கமிஷன் 1966-ம் ஆண்டு பரிந்துரை செய்தது. இது 1968-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்போது இருக்கும் பி.ஜே.பி அரசுக்கு நாடு முழுக்கவும் தாய்மொழி வழி கல்வியைக் கட்டாயப்படுத்துவதற்குத் தயாராக இல்லை. தாய் மொழிக்குப் பதில் ஆங்கில வழியில்தான் உயர் கல்வி படிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர். ஆங்கிலம் வழியில் உயர் கல்வி பயில்வது என்பது, அனைத்து இந்திய மொழிகளையும் அழிக்கும் முயற்சிதான். இந்திய மொழிகள் அனைத்தையும் அழித்து விட்டு, இந்தி என்ற ஒரு மொழியை மட்டும் இந்திய மொழியாக அடையாளப்படுத்துவதுதான் மோடி  அரசின் திட்டமாக இருக்கிறது.

இந்தி பலன் தராது

நமது அரசியல் சாசனத்தில் 8-வது அட்டவணையில் 22 இந்திய மொழிகள் கூறப்பட்டுள்ளது. அந்த மொழிகளை, கற்றுக்கொள்ள  வாய்ப்பை ஏற்படுத்தவேண்டும். அப்போது, எந்த மொழி வேண்டுமோ அதை மக்கள் கற்றுக் கொள்ளுவார்கள். பயிற்று மொழிஎன்பது தாய் மொழியாக இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தலாம். எந்த மாநிலத்தில் வசிக்கிறார்களோ அந்த மாநிலத்தின் மொழியை அலுவல் மொழியாகத் தெரிந்து கொள்ளலாம். மூன்றாவது மொழியாக இந்தியை கற்றுக்கொள்ளலாம். அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம். ஆனால், இந்தி படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. இன்றியமையாதது எது, எதைக் கட்டாயப்படுத்த வேண்டும், எதைக்  கட்டாயப்படுத்தக்கூடாது என்பதற்கு வரைமுறை இருக்கிறது.இந்த இந்தித் திணிப்பு என்பது எந்த வகையிலும் மாணவர்களுக்கு பலன் தரப்போவதில்லை.

ஜெயலலிதாவுக்கு எதிராக

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்யும் போது, "மோடியா, லேடியா" என்று வாக்காளர்களுக்கு கேள்வி எழுப்பினார். தமிழக மக்கள் அ.தி.மு.க வுக்கு ஆதரவு அளித்தனர். இப்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பி.ஜே.பி அமைச்சரவையில் பங்கேற்பதை நிபந்தனையாக வைத்திருக்கிறார். ஜெயலலிதாவின் கொள்கைக்கு, அவரது விருப்பத்துக்கு மாறாக, நேர்எதிராகத்தான் இவர்கள் செயல்படுகின்றனர். ஜெயலலிதா உடல் நிலை குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் இருந்தபோது, மாநில அரசு கொஞ்சம், கொஞ்சமாக பாதை மாற  ஆரம்பித்துவிட்டது. நேரடியாக ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்ய அ.தி.மு.க துணித்துவிட்டது. எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாகத்தான் தமிழக அரசு செயல்படும் என்ற சந்தேகம் எழுகிறது. மும்மொழி கொள்கையின் படி தமிழை மூன்றாவது மொழியாக சி.பி.எஸ்.இ பள்ளிகளில் கற்றுக்கொடுக்கலாம். ஆனால், தமிழை கட்டாயம்  கற்றுத்தருவார்களா என்பது இது அமலுக்கு வரும் போதுதான் தெரியும்"என்றார்.

-கே.பாலசுப்பிரமணி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்