“ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி இணைவது சிரமம்!" - கணிக்கிறார் தனியரசு

மிழ் ஊடகத்தின் மொத்தப் பார்வையும் அ.தி.மு.க மீதே படிந்திருக்கிறது. நிமிடத்துக்கு நிமிடம் 'பிரேக்கிங் நியூஸ்'களால் அதிரி புதிரி கிளப்பிவரும் சூழலில், யார் யாரோடு இருக்கிறார்கள்? என்ற கேள்விக்கு பதில் காண்பதே பெரிய சவால். இந்த நிலையில், 'தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை'யின் நிறுவனத் தலைவர் உ.தனியரசுவிடம் பேசினோம்...

தனியரசு

''டி.டி.வி தினகரனை நீங்கள் ஆதரிப்பதன்  பின்னணி என்ன?''

''தினகரன் மீது தனிப்பட்ட அன்பு உண்டு. அதைத்தாண்டி, எங்கள் தோழமைக் கட்சியினுடைய உச்ச அதிகாரமான துணை பொதுச்செயலாளராகவும் அவர் இருக்கிறார். இப்படி இருக்கக்கூடிய ஒருவர் மீது மத்திய அரசு தொடர்ந்து திட்டமிட்ட பொய்வழக்குகளைப் போடுகிறது. கட்சியையும் சின்னத்தையும் முடக்குகிறது. அவருக்காக தேர்தல் பணியாற்றிய அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வருமான வரித்துறையை ஏவி சோதனை நடத்துகிறது. இதன் தொடர்ச்சியாக இடைத்தேர்தலை ரத்து செய்கிறார்கள். அடுத்தகட்டமாக குற்றப்பின்னணி உள்ள ஒரு நபர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், வலிந்து ஒரு புகாரைப் பதிவு செய்து வழக்கு தொடுத்து அதன் மூலமும் தினகரனுக்கு அழுத்தம் தரப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சம்பந்தப்பட்ட வழக்கும் இப்போது விரைவுபடுத்தப்படுகிறது. இப்படி எல்லா பக்கமிருந்தும் ஒருசேர திட்டமிட்ட நெருக்கடியை மிரட்டலான ஆபத்தை மத்திய அரசு தருகிறது. இப்படிப்பட்ட சூழலில், ஒரு மனிதாபிமான அடிப்படையிலான ஆதரவைத்தான் நாங்கள் தருகிறோம்... அவ்வளவுதான்.''

''அ.தி.மு.க-வினரால் ஒதுக்கி வைக்கப்பட்ட தினகரனுக்கு நீங்கள் ஆதரவு கொடுப்பது கட்சியின் நோக்கத்துக்கு எதிரானதல்லவா?'' 

''எந்த நோக்கத்துக்காக மிரட்டல், சோதனை, வழக்கு என்று மத்திய அரசு தொடர்ந்து கட்சிக்கும் ஆட்சிக்கும் நெருக்கடிகளைத் தந்துகொண்டிருக்கிறது என்பதை நான் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன். 'நீங்கள் விலகியிருந்தால், மத்திய அரசின் அச்சுறுத்தல்கள் இருக்காது' என்று நம்பித்தான் எடப்பாடி அணியினரும் தினகரனை விலக்கி வைத்திருக்கிறார்கள். ஆக, தினகரனை ஆதரிப்பவர்களுக்கும்,  அவரை விலக்கி வைத்திருப்பவர்களுக்கும் உண்மை நன்றாகத் தெரிந்திருக்கிறது. இரண்டும் ஒன்றுதான்...!'
ஆனால், எந்த நோக்கத்துக்காக, மத்திய அரசு தினகரனுக்கு நெருக்கடிகளைத் தருகிறதோ.... அதன்மூலம் என்ன நடக்க வேண்டும் என்று  எதிர்பார்க்கிறார்களோ... அதுதான் இப்போது நடந்தேறிவருகிறது. ஆனால், எந்தப் பிரச்னையையும் சட்டரீதியாக சந்திக்க தினகரன் தயாராகவே இருக்கிறார்.''

தினகரன்

''டி.டி.வி தினகரனை ஒதுக்கிவிட்டு, தனி அணி அமைத்த எடப்பாடி அணியினர் மத்திய அரசின் நெருக்கடிகளுக்கு  துணைபோய்விட்டார்கள் என்கிறீர்களா? அல்லது துரோகிகள் என்கிறீர்களா?’’

''அவர்கள் எதற்காக அப்படி ஒரு முடிவை எடுத்தார்கள் என்று நான் சொல்லமுடியாது. ஏனெனில், என்னிடம் அவர்கள் யாரும் கலந்தாலோசிக்கவில்லை. தோழமை கட்சியின் உச்சப் பொறுப்பில் உள்ள ஒரு தலைவருக்கு, வேண்டுமென்றே மத்திய பி.ஜே.பி அரசு திட்டமிட்ட நெருக்கடிகளை கொடுத்துவரும் சோதனையான காலகட்டம் இது. நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில், எனது மனிதாபிமான ஆதரவை நான் டி.டி.வி தினகரனுக்கு கொடுக்கிறேன். ஆனால், தனி அணி அமைத்தவர்கள் துரோகிகள் என்றோ துணை போய்விட்டார்கள் என்றோ சொல்லமுடியாது. ஆனால், காலத்தின் போக்கில் கட்டாயம் இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும். அப்போது நான் தெளிவாகவே பதில் கொடுப்பேன்.’’

''ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் தலைமையிலான இரு அணிகளும் ஒன்றிணைந்து அ.தி.மு.க-வை மீட்டுவிட்டால், அவர்களோடு உங்கள் கூட்டணி தொடருமா?''

''இரண்டு அணிகளும் ஒன்று சேர்வதற்கான சூழல் குறைவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஒருவேளை அப்படி இரு அணிகளும் இணைந்துவிட்டால் மகிழ்ச்சிதான். எல்லோருடனும் நட்பைத் தொடர்வதுதான் எங்களது இயல்பு.''

தினகரன் 1

''தினகரனை ஆதரித்துவரும் உங்களை அவர்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா?''

''எல்லா கட்சியினரோடும் அன்பாக இயல்பாக நட்பைத் தொடர்வதுதான் எங்கள் இயல்பு. ஏற்கெனவே சொன்னதுபோல், நாங்கள் தினகரனை ஆதரிக்கவில்லை... எங்கள் கூட்டணிக் கட்சித் தலைவரைத்தான் ஆதரிக்கிறோம்... அவ்வளவுதான். அவர் ஒன்றும் யாரோ எவரோ அல்ல... அவர்கள் புது அணி அமைத்து தங்கள் தலைவரைத் தேடுகிறார்கள். நாங்கள் எங்கள் கூட்டணிக் கட்சித் தலைவரிடம் தொடர்பில் இருக்கிறோம். 

நேற்றுகூட தினகரன் என்ன சொல்லியிருக்கிறார்... 'கட்சியின் நலனுக்காக என்னை ஒதுங்கியிருக்கச் சொல்லியிருக்கிறார்கள். அதனால் ஒதுங்கி நிற்கிறேன். ஆனால், கட்சிப் பதவியில் இருந்து விலகுவீர்களா என்று கேட்டால், நான் விலகவில்லை. ஏனெனில், இந்தப் பதவியில் என்னை நியமித்தது கட்சியின் பொதுச்செயலாளர்தான். எனவே அவரோடு கலந்தாலோசித்துவிட்டுத்தான் நான் முடிவெடுக்கமுடியும் என்றுதான் சொல்லியிருக்கிறார். 

அதனால், ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிச்சாமி, தினகரன் என்று மூன்று அணியுமே ஒன்றுதான். மூவருமே கட்சியைப் பலப்படுத்தத்தான் நினைக்கிறார்கள். கட்சி உறுதியாக இருக்கவேண்டும் என்பதுதான் அம்மாவின் நோக்கமும். இதற்கு மாறாக கட்சிக்கு யாரேனும் களங்கம் விளைவித்தால் நாங்கள் எப்படி வருத்தப்படுவோமோ... அதேபோல், கட்சி செழுமையாக வேண்டும், ஒன்றுபட்டு வலிமையாக வேண்டும் என்பதில் எங்களுக்கும் விருப்பம் உண்டு. அதனால், மூவரும் இணைந்தால் எங்களுக்கும் மகிழ்ச்சிதான்.''

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!