வெளியிடப்பட்ட நேரம்: 18:27 (22/04/2017)

கடைசி தொடர்பு:18:26 (22/04/2017)

''களத்தில்தான் போட்டி! இங்கே நாங்கள் நண்பர்கள்'' - 'விகடன்' மேடையில் ஊடகவியலாளர்கள் உற்சாகம்! #AnandaVikatanNambikkaiAwards

                               விகடன்

 

ரவு, பகல் பாராமல் செய்திகளை மக்களுக்கு உடனுக்குடன் அளித்துவரும் அரும்பணி 'பத்திரிகை ஊடகப்பணி'. பல சமூக மாற்றங்களுக்குப் பத்திரிகையாளர்களின் பங்களிப்பே பிரதான காரணங்களாக இருந்துள்ளன.பல மேடைகளில் பல மேதைகளை, தலைவர்களை அடையாளப்படுத்தியதும் பத்திரிகை, ஊடகங்களே. மேடைக்கு எதிரே நின்று சரியானவற்றை அடையாளப்படுத்துதல், பிரச்னைகளைச் சுட்டிக்காட்டுதல், தீர்வுகளை முன்வைத்தல் என தம் பணிகளைத் திறம்பட ஆற்றிவரும் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் என்றும் தமக்கான மேடைகளை எதிர்பார்ப்பதில்லை. அவற்றை எதிர்பார்க்காததால் அவர்களை அங்கீகரிக்காமல் இருந்துவிட இயலுமா? அங்கீகரித்தல் என்பது அவர்கள் ஆற்றும் பணியை துரிதப்படுத்த கொடுக்கும் ஊட்டச்சத்து. அப்படியோர் ஊட்டச்சத்தை ஊடகவியலாளர் கார்த்திகைச்செல்வனுக்கு அளித்து கௌரவப்படுத்தியுள்ளது 'விகடன்.' 

நக்கீரன் கோபால் கார்த்திகைச்செல்வன்'விகடன்-2016 நம்பிக்கை விருது' விழாவில் 'சிறந்த நெறியாளருக்கான' விருதை நக்கீரன் கோபாலிடம் பெற்றார் கார்த்திகைச்செல்வன். அது, தாயிடமிருந்தே மகன் பெறும் விருதாகக் காட்சி தந்தது. ஆம், 'நக்கீரன்', கார்த்திகைச்செல்வனுக்கு தாய்வீடு. அங்கிருந்தே தமது பத்திரிகை பயணத்தைத் தொடங்கியவர், பல்வேறு சாதனைகளைப் புரிந்து இன்று, 'புதிய தலைமுறை'யில் நெறியாளராக நிமிர்ந்து நிற்கிறார்.''தாம் பிறந்த இடம் 'நக்கீரன்' என்றாலும், நான் விரும்பிய வீடு 'விகடன்' '' என்றார் புன்னகைத்தபடியே. பின் உரையை தொடர்ந்த கார்த்திகைச்செல்வன், ''எனக்கு 'விகட'னில் சேர வேண்டும் என்ற கனவு இருந்தது. அந்தச் சூழலில் அது நிறைவேறவில்லை. ஆனால், இன்று 'விகட'னில் விருது பெறுகிறேன். மகிழ்ச்சியாக உள்ளது. இன்று, நான் ஊடகப் பணியில் இருந்தாலும், மக்கள் பிரச்னையை வெளியே கொண்டுவருவது, கிடைக்கிற இடங்களில் மக்கள் பிரச்னைகளைப் பேசக் கற்றுத் தந்தது 'விகடன்'தான். மற்ற இடங்களில் விருது பெறுவதற்கு, நாம் நம்முடைய படைப்புகளை அவர்களுக்கு அனுப்பவேண்டும். அதிலிருந்து அவர்கள் சிறந்த ஒருவரைத் தேர்வு செய்வார்கள். ஆனால், 'விகடன்' அவர்களாகவே ஆய்வு செய்து, பரிசீலித்து இறுதியில் என்னைத் தேர்வு செய்துள்ளனர். அப்படிப்பட்ட 'விகடன்' விருதை நான் பெறுவது எனக்குப் பெருமைக்குரியதாகும். இது, எனக்கு கூடுதல் பொறுப்பைக் கொடுத்துள்ளது. அது மட்டுமல்லாமல், 'அன்பின் நெறியாளர்' என்று விருதுக்கு அடைமொழி கொடுத்துள்ளனர். இனி விவாதங்களின்போது சட்டென கோபம் வந்தாலும், இந்த அடைமொழி அங்கீகாரம் என்னைப் பொறுமையாக இருக்கவைக்கும்'' என்றார் உற்சாகமாக.

தொடர்ந்து, ''இந்த விருது பெறும் மேடையில் 'விகடன்' எம்.டி சீனிவாசன், 'ஆனந்த விகடன்' ஆசிரியர் கண்ணன், 'ஜூனியர் விகடன்' கார்த்திகைச்செல்வன் ஆசிரியர் திருமாவேலன், ஊடகவியலாளர் குணசேகரன், கவிதா முரளிதரன் ஆகியோர் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்'' என்றார். அனைவரும் மேடையேறினர். அந்தக் காட்சி, 'களத்தில் மட்டுமே எங்களுக்கிடையில் போட்டி, தனிப்பட்ட அளவில் நாங்கள் தோழமை போற்றும் சொந்தங்கள்' என்பதை உணர்த்துவதாக இருந்தது. விழாவில் 'விகடன்' எம்.டி.சீனிவாசன் பேசியபோது, '' 'ஏன் எப்போதும் கொலை, கொள்ளை என்றே செய்திகளைப் போடுகிறார்கள்? நல்ல செய்தியே போடமாட்டார்களா' என, என் அன்பின் பிரியமானவர்கள் கேட்பார்கள். அவர்களுக்குச் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். 'ஆனந்த விகடன்' படியுங்கள். அங்கு நம்பிக்கை தரக்கூடிய மனிதர்களை மட்டுமே பதிவுசெய்து வருகிறோம்'' என்றபோது அரங்கம் அதிர கரவொலி. தொடர்ந்தவர், ''கடந்த ஆண்டுவரை புத்தகத்தில் மட்டும் பதிவுசெய்தோம். இம்முறை இந்த மேடை அமைத்திருக்கிறோம்'' என்றார் மகிழ்வோடு. 'ஆனந்த விகடன்' ஆசிரியர் கண்ணன் பேசியபோது, ''நல்ல கனவுகள் நனவாகும் என்பேன் எப்போதும். இந்தத் தருணத்தை அப்படித்தான் பார்க்கிறேன்'' என முடித்துக்கொண்டார் ஹைக்கூ கவிதைபோல. 

மைக் பிடித்த நக்கீரன் கோபால், ''நக்கீரனைப் பொறுத்தவரை இது நன்றி செலுத்துகிற விழா. இவர் (சீனிவாசன்) நண்பர். இவர் அப்பா, எனக்கு ஆதர்ச புருஷர். எப்ப சந்திச்சாலும், 'யங்மேன்' என்று தட்டிக்கொடுப்பார். 'நல்லா பண்ணுங்க' என்பார். அவர் போட்ட பாதையில்தான் நாங்க நடக்கிறோம். கார்த்திகைச்செல்வன் எங்கள் குடும்பத்தில் இருந்து வந்தவர் மட்டுமல்ல, சரியான ஆளுக்குச் சரியான விருதை, 'விகடன்' வழங்கியுள்ளது. எங்கள் மீது நடந்த அடக்குமுறைகள் உள்ளிட்ட பல பிரச்னைகளின்போது எங்களோடுகூட நின்றது 'விகடன்'. அதற்கு நன்றி சொல்லும் ஒன்றாக இந்த விழாவை பார்க்கிறேன்'' என்றார். இந்த நிலையில், கடந்தாண்டு மட்டும் 78 பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் சர்வதேச அளவில் கொல்லப்பட்டுள்ளனர். இந்தாண்டு, மூன்றரை மாதங்களில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 'இது ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்' என்ற அமைப்பு வெளியிட்ட ஆதாரபூர்வமான புள்ளிவிவரம். உலகமெங்கும் எழுத்துரிமை, கருத்துரிமை குரல் நெறிக்கப்படும் அபாயகரமான சூழலில்... பத்திரிகை, ஊடகவியலாளர்கள் ஒன்றுசேர்தலும், ஒருங்கிணைந்திருத்தலும் பத்திரிகை, ஊடகத்தளத்தை முன்னோக்கி நகர்த்தும் ஆக்கப்பூர்வமான செயலாகும். 'விகடன்' விழா இதை உணர்த்துவதாகவே இருந்தது, 'விகடன்' தாத்தா போலவே தனி அழகு.

 (ஆனந்தவிகடன் நம்பிக்கை விருதுகள் நிகழ்வு நாளை மதியம் 2.30-க்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது)

சே.த .இளங்கோவன்.


டிரெண்டிங் @ விகடன்