வெளியிடப்பட்ட நேரம்: 13:18 (22/04/2017)

கடைசி தொடர்பு:13:17 (22/04/2017)

ஜெயலலிதாவை வீட்டுச் சிறையில் வைத்தாரா நடராசன்? : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 38

சசிகலா, ஜெயலலிதா

ஜெயலலிதாவை சிறைவைத்தாரா நடராசன்?

ஜெயலலிதாஜெயலலிதாவின் கார் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த ஜெயலலிதாவும், சசிகலாவும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். அன்று போயஸ் தோட்டத்து வீட்டுக்குள் போன ஜெயலலிதா, அதன்பிறகு 5 மாதங்களுக்கு வெளியில் வரவே இல்லை. பொது நிகழ்ச்சிகள், கட்சிப் பொதுக்கூட்டங்கள், அ.தி.மு.க அலுவலகம், சட்டமன்றம் என எங்கும் அவர் செல்லவில்லை. அவரைச் சந்திப்பதற்காக போயஸ் தோட்ட வீட்டுக்கு தேடிச்சென்றவர்களையும் சந்திக்கவில்லை. முற்றிலுமாக வெளியுலகைத் துண்டித்து, தன்னைத்தானே வீட்டுச் சிறையில் அடைத்துக் கொண்டார் ஜெயலலிதா! அவருடைய இந்த நடவடிக்கைக்குக் காரணம் என்ன? என்பது யாருக்கும் தெரியவில்லை. ஒருகட்டத்தில் ஜெயலலிதா இருக்கிறாரா... இல்லையா... என்பதே சந்தேகத்துக்கு உரியதாக இருந்தது. மாற்றுக் கட்சிக்காரர்களைச் சந்திக்கத் தேவையில்லை... சொந்தக் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களைச் சந்திக்கவேண்டிய கட்டாயம் இல்லை... ஆனால், கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளில் ஒருவரையாவது சந்திக்கலாமே... அதுவும் தேவையில்லை என்றால், “ஏன் சந்திப்பதில்லை” என்பதை விளக்கி ஒரு அறிக்கையாவது கொடுக்கலாமே! எதையும் செய்யாமல், ஒன்றும் சொல்லாமல் 5 மாதங்களாக ஒருவரைக் காணவில்லை என்றால் என்ன நினைப்பது... இவரை நம்பி எப்படி அரசியல் செய்வது... அடுத்தகட்டமாக செய்ய வேண்டிய வேலைகள் பற்றி யாரிடம் கலந்து பேசுவது... என்ற குழப்பத்திலேயே அ.தி.மு.க கூடாராம் இருந்தது. பலவிதங்களில் வதந்திகள் பரவின. “நடராசன்தான் ஜெயலலிதாவை வீட்டுச் சிறையில் வைத்துள்ளார்” என்று ஜெயலலிதா ரகசியத்துக்குச் சிலர் சுவாரசியத்தைக் கூட்டினர்.

நாவலரிடம் தெளிவுபடுத்திய நடராசன்!

நடராசன்நடராசன் ஜெயலலிதாவை வீட்டுச் சிறையில் வைத்துள்ளார் என்ற தகவல் பரவிக் கொண்டிருந்த நேரத்தில், நடராசன் திடீரென நாவலர் நெடுஞ்செழியனை நேரில்போய் சந்தித்தார். நாவலர் வீட்டில் நடந்த அந்தச் சந்திப்பின்போது நடராசன் “கட்சிக்கு நீங்கள்தான் தலைமை தாங்க வேண்டும் என அம்மா விரும்புகிறார்; அதனால், உடனே கட்சிக்குத் திரும்புங்கள்” என அழைப்பு விடுத்தார். நாவலர் நெடுஞ்செழியன் குழம்பிப்போனார். “நான் கொஞ்சம் யோசித்துத்தான் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க முடியும்” என்று நடராசனுக்குப் பதில் சொன்ன நாவலர், “அதற்குமுன் எனக்குச் சில விஷயங்களைத் தெளிவுபடுத்துங்கள்... ஜெயலலிதாவுக்கு என்ன ஆனது? அவர் எங்கே இருக்கிறார். வெளியில் ஏதேதோ செய்திகள் வருகிறதே!” என்று கேட்டார். சிரித்துக்கொண்டே நாவலரின் கேள்விக்குக் ‘கூலா’க பதில் சொன்ன நடராசன், “இதை எல்லாம் நீங்களும் நம்புகிறீர்களா? என்னால் அந்த அம்மாவை வீட்டுச்சிறையில் அடைத்து வைக்க முடியுமா? அவருக்கு உடல்நிலை கொஞ்சம் சரியில்லை. அதனால், ஓய்வில் இருக்கிறார். அதை வெளியில் சொல்வதற்கு அவர் ‘இமேஜ்’ தடுக்கிறது. வேகமாக குணமடைந்து வருகிறார். எல்லோரும் பிரமிக்கும்படி விரைவில் வெளியில் வருவார். இன்று தவறான தகவலைப் பரப்புபவர்கள், அப்போது உண்மையைப் புரிந்து கொள்வார்கள்” என்றார்.

ஆற்காடு வீராச்சாமியை காவு வாங்கிய நடராசன்!

க.அன்பழகன், கருணாநிதி, ஆற்காடு வீராச்சாமி

ஜெயலலிதா போயஸ் கார்டன் சிறைக்குள் இருந்தாலும், நடராசன் காரியம் ஆற்றிக் கொண்டே இருந்தார். அவர் தொட்ட விவகாரங்கள் அனைத்திலும் அவருக்கு வெற்றியே கிட்டியது. “ஜெயலலிதா வீட்டுக்குள் முடங்கி இருக்கும் நேரத்தில், பரபரப்பாக எதையாவது செய்ய வேண்டும். அது தி.மு.க-வுக்கு அதிர்ச்சியாக இருக்கவேண்டும். அப்போதுதான், அ.தி.மு.க-வை உயிரோட்டமாக வைத்திருக்க முடியும்” என்று நினைத்த நடராசன், ‘பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சி’ வைத்து நடத்திக் கொண்டிருந்த குலோத்துங்கச் சோழனைத் தொடர்பு கொண்டார். தனது விருப்பத்தை அவரிடம் சொல்லி, “தி.மு.க அமைச்சர்கள் செய்யும் முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்களை எடுத்துத்தர முடியுமா?” எனக் கேட்டார். நடராசன் கொடுத்த வேலையை ஒத்துக்கொண்ட குலோத்துங்க சோழன், “ஜெயலலிதாவை நேரில் பார்த்துப் பேச வேண்டும்; அதன்பிறகுதான் என்னுடைய வேலைகளை ஆரம்பிப்பேன்” என்று நிபந்தனை விதித்தார். அதற்கு ஒத்துக்கொண்ட நடராசன், குலோத்துங்க சோழனை ஜெயலலிதாவிடம் நேரில் அறிமுகப்படுத்தி வைத்தார். வேலைக்கான கட்டணங்கள் பேசப்பட்டன. அதன்பிறகு தி.மு.க அமைச்சர்கள் பற்றிய விபரங்களைத் திரட்டி ஜெயலலிதாவிடம் கொடுத்தார் குலோத்துங்கச் சோழன். அதில் வசமாகச் சிக்கியது ஆற்காடு வீராச்சாமிதான். அவர் பொறுப்பில் இருந்த உணவுத்துறையில் நடந்த சில முறைகேடுகள் பற்றிய ஆவணங்கள் வசமாக ஜெயலலிதாவிடம் சிக்கிக் கொண்டன. அந்த விபரங்களை சில பத்திரிகைகளுக்கு கொடுத்தார் நடராசன். ஆற்காடு வீராச்சாமிக்கு வில்லங்கம் ஆரம்பமானது. பத்திரிகைகளில் செய்திகள் வெளியானதும், எதிர்கட்சிகள் அறிக்கைகளால் ஆளும்கட்சியை வறுத்தெடுத்தன. கருணாநிதிக்கு தலைவலி அதிகமானது. ஏதாவது ஒரு நடவடிக்கையை எடுத்தே தீரவேண்டிய கட்டாயத்துக்கு அவர் ஆளானர். தலைமைச் செயலகத்தில் தன்னை வந்து பார்க்கும்படி ஆற்காடு வீராச்சாமிக்கு உத்தரவிட்டார். கருணாநிதி அழைத்த தகவல் கிடைத்ததும் கோட்டைக்குச் சென்றார் ஆற்காடு வீராச்சாமி. அவர் கருணாநிதி அறைக்குள் நுழைந்தபோது, கருணாநிதியோடு பேராசிரியர் அன்பழகனும், தலைமைச் செயலாளரும் அமர்ந்து இருந்தனர். கருணாநிதியின் கையில் சில பைல்கள் இருந்தன. அவற்றை வைத்துக்கொண்டு ஆற்காடு வீராச்சாமியிடம் சில விளக்கங்களைக் கேட்டார் கருணாநிதி. ஆற்காடு வீராச்சாமி அதற்கு சில விளக்கங்களைக் கொடுத்தார். அவை கருணாநிதிக்கு திருப்தியாக இல்லை. உடனே கறாராகப் பேசிய கருணாநிதி, “அந்த பல ஆதாரங்களைக் கையில் வைத்திருக்கிறது; அவற்றைப் பத்திரிகைகளுக்கு கொடுத்து நம் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகிறது; உங்களை ராஜினாமா செய்யச் சொல்கிறது; நீங்கள் என்ன சொல்கிறீர்கள்” என்றார். ஆற்காடு வீராச்சாமி அமைதியாக இருந்தார். அதில் கடுப்பான கருணாநிதி, “வேண்டுமானால் நான் ராஜினாமா செய்யட்டுமா?” என்று கேட்டு ஆற்காட்டாருக்கு அதிர்ச்சி கொடுத்தார். உடனே, “இல்லை தலைவரே... நானே ராஜினாமா செய்கிறேன்” என்று அந்த இடத்திலேயே தனது ராஜினாமா கடிதத்தை எழுதிக் கொடுத்தார் ஆற்காடு வீராச்சாமி. இந்தச் சம்பவம் அன்றைக்கு தி.மு.க-வுக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது; நடராசனுக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது; சசிகலாவுக்கு பெருமிதமாக இருந்தது; ஜெயலலிதாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 

ராஜீவ் காந்தியை சந்திக்க மறுத்த ஜெயலலிதா!

ராஜீவ் காந்தி1990 ஜூன் மாதம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி காஞ்சிபுரம் வந்தார். அங்கு பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் கலந்துகொள்ள கிளம்பிய அவர், ஜெயலலிதாவையும் சந்திக்க விரும்பினார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி உத்தரவிட்டு இருந்தார். ராஜீவ் காந்தி அலுவலகத்தில் இருந்து டெல்லியில் இருந்த சேடப்பட்டி முத்தையாவைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னார்கள். அதைக் கேட்ட சேடப்பட்டி முத்தையாவுக்கு இரட்டை மகிழ்ச்சி! ஒன்று... முன்னாள் பிரதமர் அலுவலத்தில் இருந்து நம்மைத் தொடர்பு கொண்டு பேசுகிறார்களே என்பது. மற்றொன்று... ராஜீவ் காந்தி பெயரைச் சொன்னால், போயஸ் கார்டன் கதவுகள் நிச்சயம் திறக்கும். 5 மாதங்களாக வெளியில் தலைகாட்டாத ஜெயலலிதா எப்படி இருக்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ளலாம் என்பது. ஆனால், அவருக்கு நடராசனைப் பற்றியும் தெரியும். அதனால், தனியாகப்போகாமல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியையும் அழைத்துக்கொண்டு போனார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. இருவராலும் ஜெயலலிதாவைச் சந்திக்கவே முடியவில்லை. சசிகலாவை மட்டும்தான் பார்க்க முடிந்தது. அவர், “அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை; வீல்சேரைப் பயன்படுத்தித்தான் உலவுகிறார்; அதனால், இந்தமுறை ராஜீவ்காந்தியைச் சந்திக்க முடியாது; தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்று சொல்லி அனுப்பிவிட்டார். அதன்பிறகும் ஜெயலலிதா பற்றி தெளிவான விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஜெயலலிதா சார்பில் அனைத்தையும், சசிகலா, நடராசன்தான் ‘டீல்’ செய்தனர்.

கதை தொடரும்...

இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்...

ஜோ.ஸ்டாலின். 
படங்கள் - சு.குமரேசன்.


டிரெண்டிங் @ விகடன்