வெளியிடப்பட்ட நேரம்: 10:24 (22/04/2017)

கடைசி தொடர்பு:10:23 (22/04/2017)

“என்ன நடந்தாலும் சசிகலாதான் பொதுச் செயலாளர்!” தங்க தமிழ்செல்வன்

தங்க தமிழ்ச்செல்வன்

தேனி மாவட்டத்தில் ஒ.பன்னீர்செல்வம் வட துருவம் என்றால் தங்க தமிழ்ச்செல்வன் தென் துருவம். ஜெயலலிதா இருந்தபோது இந்த இரு கோஷ்டிகளின் மோதல் உச்சக்கட்டத்தை எட்டிய நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன. ஒ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவிக்கு வந்தபோது அவரை பதவியில் இருந்து இறக்க காய் நகர்த்தியவர் தங்க தமிழ் செல்வன் என்றும் சொல்வார்கள். சசிகலா தலைமையை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாகப் பிரிந்தபிறகு தங்க தமிழ்செல்வன் சசிகலா அணியுடன் இருந்தார்.
தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியினரும் ஒ.பன்னீர்செல்வம் அணியினரும் இணையவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனாலும் டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாகவே தொடர்ந்து பேசி வரும் தங்க தமிழ் செல்வனிடம் பேசினோம்...

''முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் தினகரனுக்கு எதிராக குரலை உயர்த்தி வருகிறார்கள். இந்த நிலையில் நீங்கள்  மட்டும் ஆதரவு தெரிவித்து பேசி வருகிறீர்களே?'' 

"எங்களுடைய கட்சியின் துணைப்பொதுச் செயலாளருக்கு நான் மட்டும் ஆதரவு தெரிவிக்கவில்லை.அனைவருமே அவருக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டு வருகிறார்கள்".

தினகரனை ஒதுங்கிக் கொள்ளுமாறு அமைச்சர்கள் சொன்னதும், அ.தி.மு.கவில் இருந்து ஏற்கெனவே விலகி விட்டேன் என்று தினகரன் சொன்னதும் உண்மையில்லையா? 

"விலகி இருந்தால் கட்சியும், ஆட்சியும் நன்றாக இருக்கும் என்று சில அமைச்சர்கள் சொன்னார்கள். அதனை ஏற்று அவர் விலகியிருக்கிறார். அவரைப் பற்றி பேசுவதற்கு எங்களுடைய கட்சியில்  இருப்பவர்கள் யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. பிரிந்துபோனவர்கள் யாரோ... அவர்கள்தான் எந்தவித நிபந்தனையும் இன்றி அவர்களாகவே வந்து சேர வேண்டும். இருதரப்பும் ஒன்றாக இணைந்து இரட்டை இலைச் சின்னத்தை மீட்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம்."

சசிகலா

''அ.தி.மு.க பிளவுபட்டதே சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களால்தான் என்று ஒரு தரப்பினர் சொல்கிறார்கள். மற்றொரு தரப்பினரோ குற்றப்பின்னணி உள்ள சசிகலா, தினகரன் போன்றோர்கள் கட்சியில் இருப்பதால் தான் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டு விட்டது என்று சொல்கின்றனர்?''

''முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது இருந்தே அந்நியச் செலாவணி மோசடி வழக்கு  நடைபெற்று வருகிறது. தற்போது இரட்டை இலைச் சின்ன வழக்கு என்று டெல்லி போலீஸார் புதியதாக தெரிவித்து வருகின்றனர். அதில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை கைதுசெய்துள்ளனர். பலமோசடிகளைச் செய்தவர். அவரைப்பற்றி ஊருக்கே தெரியும். அப்படி இருக்கும்போது தினகரனுக்கும், சுகேஷ் சந்திர சேகருக்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும்? இவையெல்லாம் தெரியாமல் போலீஸார் விசாரணைக்கு வந்ததே தவறு!"

''முதல்வர், அமைச்சர்கள் என அனைத்து தரப்பினரும் தினகரனை ஒதுக்கி வைக்கச் சொல்கிறார்கள். நீங்கள் மட்டும் அவரைத் தூக்கிப் பிடிப்பதால், உங்களையும் ஒதுக்க மாட்டார்களா?'' 


"கட்சியின் நன்மைக்காக அவரை ஒதுங்கி இருக்குமாறு சில அமைச்சர்கள் சொன்னதை அடுத்து அவரும் விலகியுள்ளார். மேலும், எங்களை அழைத்துப் பேசிய தினகரன், 'எனக்காக யாரும் எதுவும் செய்ய வேண்டாம். கட்சியின் நன்மைக்காக எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள்' என்றும் கூறினார். அவருடைய அந்த வார்த்தையைக்கேட்டு நாங்கள் அமைதியாக இருக்கிறோம்."   

''தினகரன் கட்சியில்தான் இருக்கிறார் என்கிறீர்களா?''


"கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா, துணைப் பொதுச் செயலாளர் தினகரன் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இருவருமே கட்சியில் தான் இருக்கிறார்கள்."


''பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செல்லாது - என்ற புகார் தேர்தல் ஆணையத்தில் உள்ளது. அப்படி இருக்கும்போது  தினகரனின் அங்கீகாரமும் இங்கே கேள்விக்குறியானதுதானே?'' 

"பன்னீர்செல்வம், மதுசூதனன் போன்றவர்கள் இணைந்துதான் சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்தனர். காலில் விழுந்து இந்த கட்சியை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்றும் பொதுச் செயலாளராக பதவி ஏற்குமாறும் கூறினார்கள். பின்னர், 'நீங்கள்தான் முதலமைச்சராகவும் வரவேண்டும்' என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்கள். வழக்கில் வந்த தீர்ப்பின் காரணமாக சின்னம்மா சிறைக்குச் சென்று விட்டார். துணைப்பொதுச் செயலாளராக வந்தவரை துணை முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால், பெருந்தன்மையாக அவற்றை தினகரன் நிராகரித்து விட்டார். தற்போது என்ன காரணம் என்று தெரியவில்லை... 'ஒதுங்க வேண்டும்' என்று கூறுகிறார்கள். அதனையும் மிகவும் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டு விலகியுள்ளார். யாரும் செய்யாததை தினகரன் செய்துள்ளார் என்பதை எண்ணிப் பெருமை கொள்ள வேண்டும்."

சசிகலா, தினகரன்

''எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணையுமா?''

''பிரிந்து சென்றவர்கள்தான் வந்து இணைய வேண்டும். அவர்கள் நிபந்தனைப்படி தினகரன் விலகிவிட்டார். 10 எம்.எல்.ஏ-க்களை வைத்துள்ள பன்னீர்செல்வம் அணியினர்தான் வந்து இணையவேண்டும்.எந்த நிபந்தனையும் இன்றி இரு அணியும் இரட்டை இலையை மீட்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். அதைவிட்டு விட்டு நான் அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்று நிபந்தனைகள் விதிப்பதை ஏற்க முடியாது."

''சசிகலாவின் குடும்பத்தை ஒதுக்கி வைத்தால் தான் இரு அணியும் இணையும் என்று ஓ.பன்னீர்செல்வம் சொல்லியிருக்கிறாரே?''

"அதைச் சொல்வதற்கு பன்னீர்செல்வத்துக்கு எந்த உரிமையும் இல்லை. தினகரனை தமிழகமே கொண்டாடிக் கொண்டிருக்கிறது.கட்சியின் நன்மைக்காக விலகுகிறேன் என்று அவர் கூறிய வார்த்தைகளைக் கேட்டு அ.தி.மு.க தொண்டர்கள் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய மதிப்பு எங்கேயோ போய்விட்டது. எனவே, கட்சியில் உள்ள யாரையும் விலகச் சொல்ல யாருக்கும் உரிமையில்லை" என்றார்.

- கே.புவனேஸ்வரி 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்