”கலைஞர்களை வளர்க்கும் விதை இந்த விழா!” - ரெட் கார்ப்பெட்டில் பாலகுமாரன் நெகிழ்ச்சி! #AnandaVikatanNambikkaiAwards

ஒவ்வொரு ஆண்டும் ஆனந்த விகடன் சார்பில் நம்பிக்கை மனிதர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கும், தொடர்ந்து இயங்கி வரும் ஆளுமைகளுக்கும், படைப்புகளுக்கும் ‘நம்பிக்கை விருதுகள்’ வழங்கப்பட்டு வருகிறது. பிரபலங்கள் மட்டுமின்றி, எந்தப் பிரபல வெளிச்சமும் இன்றி சமூக நோக்கில் இயங்குபவர்கள என அனைத்து தரப்பினரும் விகடனால் அடையாளம் காணப்படுகின்றனர்.

இந்த வருடம், விருது நிகழ்வுகளை பிரமாண்ட விழாவாக முன்னெடுத்தது விகடன். மார்ச் 30 அன்று சென்னையில் நடைபெற்ற அந்த விழா,  தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு பெஞ்ச் மார்க் விழாவாக அமைந்தது. பல நெகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்த அவ்விழாத் தொகுப்பு, நாளை (23.04.2017) மாலை 2.30 மணிக்கு சன் டி.வியில் ஒளிபரப்பாக உள்ளது.

விழா அரங்குக்கு பிரபலங்கள் செல்லும் முன்... ரெட் கார்ப்பெட்டில் நடந்த மிகச்சில தருணங்கள் இங்கே..

நம்பிக்கை விருதுகள்

 ஆனந்தத்தில் புயல் வேகத்தில் சென்றுகொண்டிருந்தவர்களிடம் விகடனின் விருது வழங்கும் நிகழ்ச்சியைப் பற்றியும், விகடனுக்கும் அவர்களுக்கும் உள்ள இணக்கத்தைப் பற்றியும் பகிர்ந்துகொள்ளுமாறு ரெட் கார்பெட்டில் கேட்டோம்.

அந்த வரிசையில் முதலில் நம்மிடம் தாமாகவே முன்வந்து பகிர்ந்துகொண்டவர் நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன்."நான் ரொம்ப பாக்கியசாலிங்க.. விகடன் விருது என்னுடைய முதல் படத்துக்கே கிடைச்சிடுச்சு. "புதிய பாதை" படத்துக்கு  ஆனந்தவிகடன் தந்த நல்ல விமர்சனமும் மார்க்கும் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத விருது. கண்டிப்பா அடுத்த வருஷம் நான் விருது வாங்குற லிஸ்ட்ல இருப்பேன் பாருங்க.." என்றார் தனக்கே உரிய பாணியில்.

ஜாக்குலின்

சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் விருது பெற்ற ஜாக்குலின் : " இதே ரெட் கார்பெட்ல ,விருது வாங்கப்போறவங்கக் கிட்ட, எப்படி ஃபீல் பண்ணுறீங்கன்னு கேட்டிருக்கிறேன். இன்னைக்கு, சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் விருது வாங்கப்போறீங்க எப்படி ஃபீல் பண்ணுறீங்க ஜாக்குலின்னு கேக்குறீங்க பாருங்க, இது வேற ஃபீல்.." என்று தொடர்ந்து பேச முடியாமல் நெகிழ்ந்தார்.

ரேடியோ சிட்டி குழு:  ஒவ்வொரு வருஷமும் எங்க ஃப்.ம்-ல இருந்து எந்த ஆர்.ஜேயாவது விருது வாங்கிருக்காங்களான்னு ஆனந்த விகடன் புத்தகத்தை அடிச்சு புடிச்சு பார்ப்போம். கடைசியில அந்த விருது வேற ஒரு ஆர்.ஜேக்கு கிடைச்சிருக்கும். பொறாமையெல்லாம் இல்ல.. லைட்டா பொறாமை தான்.  இந்த வருஷம் பத்திரிக்கையில "சிறந்த ஃப்.ம் ரேடியொ சிட்டி"ன்னு படிச்சதும் எங்களுக்கே பேசவரல..

துரைமுருகன்: “இன்றைய அரசியல் சூழலில், எனக்கு எத்தனையோ, பணிகளும், கடமைகளும்  இருக்க, ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் வழங்கும் விருதுக்கு வந்திருக்கின்றேன் என்றால எத்தகைய மதிப்பை விகடன் மீது நான் வைத்திருக்க வேண்டும்?” என்று ஒரே வரியில் நெத்தியடி அடித்தார் துரைமுருகன்.

மனுஷ்யபுத்திரன்

ரெட் கார்பெட்டிற்கு வந்த மனுஷ்ய புத்திரனின் கண்களில் அத்தனை ஆனந்தம், “சார்  இப்போதே ஒரு கவிதை சொல்லுங்கள் என்று கேட்ட நம்மிடம். அது எப்படிங்க உடனே முடியும் என்று கிண்டலடித்தார்.நியாயம் தான் விருது வாங்கும் உற்சாகத்தில் இருப்பவரிடம் இப்படிக் கேட்டால்....

எஸ்.ராமகிருஷ்ணன் தன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மனைவியுடன் விழாவுக்கு வந்திருந்தார். என் கணவர் என்னைப் பற்றி உயர்வாகப் பேசும் ஒவ்வொரு தருணமும் எனக்கு விருது வழங்கும் விழா தான்.  இன்று அவர் விருது வழங்கப்போகும் அந்தத் தருணத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார் வெட்கத்துடன்.

எஸ்.ரா

கலைஞர்களை ஊக்குவிக்கும் இந்த விருது வழங்கும் விழா, பல கலைஞர்களை வளர்க்கப்போகும் ஒரு விதையாக நான் காண்கிறேன் என்று நம்பிக்கை நீரைத் தெளித்தார் எழுத்தாளர் பாலகுமாரன்.

பாலகுமாரன்

சின்னத்திரை நடிகர் நடிகைகளை அங்கீகரிக்கும் விதமாகக் கொடுக்கப்படும் இவ்விருது, எங்கள் திறமைகளை மேற்கொண்டு வளர்க்க வேண்டும் என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது என்றனர் தெய்வமகள் தொடரின் நடிகர் நடிகைகள். இந்த விழாவிற்கு எங்களை அழைத்ததே எங்களுக்குக் கிடைத்த  கௌரவமாகக் கருதுகின்றோம் என்று பிரியமானவள் தொடர் குழுவினர் தெரிவித்தனர்.

காற்று வெளியிடையில் சிறப்பாக நடித்த ருக்மணி ரெட் கார்பெட்டில் வந்ததும், விசில் பறந்தது. எத்தனையோ மேடைகளில் நான் நடனம் ஆடிருந்தாலும், தொன்னூறு வருடப் பாரம்பரியமான ஆனந்த விகடன் பத்திரிக்கை நடத்தும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஆடப்போகிறேன் என்பது ஒரு கனவு போல உள்ளது என்றார்.

"இந்த வருஷம் ரொம்ப நல்ல வருஷம்.. ஆனந்த விகடன் சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சியில் அசத்தலாக நடனமாடி கைதட்டல் வாங்கினேன். இப்போது இந்த மேடையில்  2016- ஆம் ஆண்டின் நம்பிக்கை விருதையும் வாங்கப்போகிறேன்" என்று மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

சகாயம், நல்லகண்ணு,  கவிஞர் விக்ரமாதித்யன், செந்தமிழன், வெற்றிமாறன், சாரு நிவேதிதா, பிரபஞ்சன், ஜேம்ஸ் வசந்தன்,பூஜா தேவரையா என்று பல பிரபலங்களும் இந்த விழாவை தங்கள் விழா போல எண்ணி வந்து கலந்து கொண்டு வாழ்த்திச்சென்றனர். 

மறந்துடாதீங்க... நாளை மதியம் 2.30 . சன்.டிவி!   

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!