வெளியிடப்பட்ட நேரம்: 07:56 (23/04/2017)

கடைசி தொடர்பு:10:51 (24/04/2017)

"விருது விழாக்களில் இதான் பெஸ்ட்னு பிரகாஷ்ராஜ் சொன்னது உண்மை!” - நட்சத்திரா #AnandaVikatanNambikkaiAwards

பிரமாண்ட மேடையும், கிராமிய கலைகளின் வரவேற்பும், கலைநிகழ்ச்சிகளும், தமிழர்களின் பண்பாட்டு மனநிலையுமாக திருவிழா போல் நடந்து முடிந்திருக்கிறது விகடன் நம்பிக்கை விருதுகள் விழா. இலக்கியவாதிகளும், சினிமா பிரபலங்களும் ஒரே இடத்தில் சந்தித்த அற்புத தருணம். இவ்விழாவை தமிழச்சி தங்கபாண்டியன், நட்சத்ரா மற்றும் ராஜ்மோகன் மூவரும் இணைந்து தொகுத்து வழங்கினார்கள். இந்நிகழ்ச்சி இன்று மதியம் 2.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருப்பதால், நிகழ்ச்சியின் அனுபவங்களை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர்களே சொன்னால்தான் அதன் அற்புதம் புரியும் என்பதால், விகடன் நம்பிக்கை விருதுகள் பற்றி மூவரிடமும் பேசினோம். 

விகடன் நம்பிக்கை விருதுகள்

நட்சத்ரா:  

எத்தனையோ விருது விழாக்களை தொகுத்து வழங்கியிருக்கேன். ஆனா விகடன் விருது விழா எனக்கு ரொம்ப ஸ்பெஷல். பொதுவா  சினிமாக்காரர்களுக்கு மட்டும்தான் விருதுவிழா நடத்துவாங்க. நிஜ ஹீரோக்களை அங்கீகரிப்பது மிகப்பெரிய விஷயம். மாரியப்பன் மாதிரி பல சாதனை மனிதர்களை நாம பாராட்டுவோம். ஆனா மறந்துடுவோம். ஆனா சாதனையாளர்களை மறக்காம நினைவுப்படுத்திய நிகழ்ச்சி தான் விகடன் நம்பிக்கை விருதுகள். ‘இதுவரை போன விருதுவழங்கும் விழாவிலேயே இது தான் பெஸ்ட்’னு பிரகாஷ்ராஜ் சாரில் தொடங்கி பலரும் சொல்ல கேட்டேன். அது அக்மார்க் நிஜம்! அந்தமாதிரியான  வரலாற்று நிகழ்வில் நானும் இருந்திருக்கேன்னு நினைக்கவே ஃபீல் ஹாப்பி. நிகழ்ச்சி தொகுத்து வழங்குறதையே மறந்துட்டு வந்திருந்த விருந்தாளிகளையே பார்த்திட்டு இருந்தேன். சந்தோஷத்துல மனசு நிறைவா இருந்தது.  

விகடன் விருது

ராஜ்மோகன்: 

விருது நிகழ்ச்சி மாதிரியே எனக்கு ஃபீல் ஆகலை. குடும்ப விழாவுக்கு வந்த மாதிரி தான் தோணுச்சு. மேடைக்கு வந்ததுமே ஐயனாருக்கு கும்பிடு போட்டுட்டு, மரத்துக்கும் மனிதனுக்கும் வணக்கம் சொல்லி தான் தொடங்குனேன். இந்த நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கினாலும் எனக்குப் பின்னாடி  அந்த நேரத்தில் 20 பேர் ஓடியாடி உழைச்சிட்டு இருந்தாங்க. அவங்களோட ஒற்றுமையும் டீம் வோர்க்கையும் பார்த்து உள்ளுக்குள்ள நெகிழ்ந்துக்கிட்டே இருந்தேன். மாரியப்பனின் அம்மா மேடை ஏறி பேசியது மிகப்பெரிய மனநிறைவு. மாற்றுத்திறனாளினு சொல்லாதீங்க. அவர் வரலாற்றை மாற்றிய திறனாளினு சொன்ன இடம் ஹைலைட்ஸ். சக்தி பறை இசைக்குழுவோட நிகழ்ச்சியைப் பார்க்கும் போது, நானும் ஆடணும்னு அவ்வளவு ஆசையா இருந்தேன். தொகுப்பாளர்ங்கிற பொறுப்பு இருந்ததுனால கட்டுப்படுத்திக்கிட்டேன். ஆனா பக்கத்துல தமிழச்சி நின்ன இடத்திலேயே ஆடிக்கிட்டு இருந்தாங்க. அவ்வளவு நெகிழ்ச்சியும், அன்பும், பாசமும் அரங்கு முழுவதும் நிறைஞ்சிருந்தது. அருவா மீசையோடு நக்கீரன் கோபால் சாரோட தனித்து தெரிஞ்சது, மனுஷ்யபுத்திரனோட பேச்சுனு நிறைய விஷயங்கள் மகிழ்ச்சியூட்டுச்சு. விகடன் நம்பிக்கை விருது விழாவை தொகுத்து வழங்குனது மூலமா எனக்கு நிறைய நம்பிக்கை கிடைச்சிருக்கு. 

விகடன் நம்பிக்கை விருதுகள்

தமிழச்சி தங்கபாண்டியன் : 

படைப்பாளிகளுக்கு பெரிய வெளிச்சமோ, வெகுஜன மக்கள் கொண்டாடுவதற்கான வாய்ப்போ பெரிதாக இருந்தது கிடையாது. பத்திரிகைகளில் செய்தியாகவே மட்டும் இருந்திருந்த சமூகத்தின் முக்கியமானவர்களை கொண்டாடிய விழா விகடன் நம்பிக்கை விருது.  எனக்கு பிடித்தமான இலக்கிய துறையினரைப் பற்றி நானே மேடையில் பேசுறதுக்கான வாய்ப்பு கிடைச்சதே ரொம்ப சுவாரஸ்யமான விஷயம். ஒரே அரங்கில் ஒட்டுமொத்த படைப்பாளிகளையும் மொத்தமா பார்க்குற விஷயம் ரொம்ப அருமையா இருந்தது. எங்க பார்த்தாலும் சிரித்த முகங்கள், கணக்கற்ற செல்ஃபிக்கள். மாரியப்பன் தாயார் மேடைக்கு வந்த நிமிடமும் கண்ணில் தண்ணீர் நிறைஞ்சிடுச்சு. அற்புதம்மாளுடன் நீண்ட நேர பேச்சு, விக்ரமன் ஐயாவோட பேசினதுனு எல்லாமே மகிழ்ச்சி தருணங்கள் தான். விருது கொடுக்குறதும், வாங்குறதும் இரண்டு நிமிடம் தான். ஆனா அதுக்கு பின்னாடி பல வருட உழைப்பும், கஷ்டமும் இருக்குனு நிச்சயம் பார்க்குறவங்க உணரமுடியும்.  பெண்கள் பறை வாசிச்சது எழுச்சியான விஷயமா இருந்துச்சு. அடிச்சா திருப்பி அடிக்கிறது தான் பறைன்னு எந்தவித தயாரிப்பும் இல்லாம மேடையில் பேசினேன். இதுமாதிரி தான் பலரும் மனசுல இருந்தத மட்டும் தான் பேசினாங்க. போலி இல்லாம எல்லோருமே உண்மையா தான் இருந்தாங்க. விகடன் நம்பிக்கை விருதுகள் பார்க்கும் போது நமக்குள்ளும் ஓர் உத்வேகமும், எழுச்சியும், சந்தோஷமும், கொண்டாட்ட மனநிலையும் நிச்சயம் வரும். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்