வெளியிடப்பட்ட நேரம்: 08:46 (23/04/2017)

கடைசி தொடர்பு:08:44 (23/04/2017)

டெல்லியில் எடப்பாடி பழனிசாமி: விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுமா?

எடப்பாடி பழனிசாமி

மிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை இன்று சந்தித்தார். முதல்வரின் சந்திப்புக்குப் பிறகாவது, விவசாயிகள் பிரச்னைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்குமா என பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வங்கிக்கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மொட்டையடித்து போராட்டம், வாயில் கறுப்புத் துணி கட்டி போராட்டம், குட்டிக்கரணம் அடித்தல் என... ஒரு மாதத்திற்கும் மேலாக, விவசாயிகளின் போராட்டம் டெல்லியில் நீடித்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்காதது ஏன் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் விமர்சனங்கள் எழுந்த போதிலும் அவர் இதுவரை விவசாயிகளைச் சந்திக்கவில்லை. மத்திய அமைச்சர்கள் சிலரே விவசாயிகளைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இந்நிலையில் 41-வது நாளான இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜந்தர்மந்தரில் விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்கள் அருகில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

 

edappadi palanisamy
 

விவசாயிகள் சார்பில் முதல்வரிடம் பேசிய அய்யாக்கண்ணு, ”தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். அண்மையில் உத்தரபிரதேசத்தில் கூட விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தனர்”, என்றார்

விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர், “நதிகளை இணைக்க வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை முன்வைத்தார் அய்யாக்கண்ணு. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். நிலத்தின் மூலம் ஓய்வூதியம் கிடைக்க வழிவகுக்கப்படும். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்துவேன். விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற எங்களால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்வோம்”, என்றார்.

முதல்வர் வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி எங்கள் கோரிக்கையை ஏற்றால் போராட்டத்தை கைவிடத் தயார் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் அய்யாக்கண்ணு. எனவே போராட்டம் மீண்டும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது!

மத்திய கொள்கைக் குழுவான 'நிதி ஆயோக்' கூட்டம் டெல்லியில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் உள்பட அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொள்கிறார்கள். சில மாநிலங்களின் நிதியமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டு, அவரவர் மாநிலங்களுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து பேச திட்டமிட்டுள்ளனர்.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சனிக்கிழமை இரவே டெல்லி சென்றடைந்துள்ளார்.

அ.தி.மு.க-வை விட்டு, டி.டி.வி தினகரன் ஒதுங்கியுள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியும், எடப்பாடி தலைமையில் செயல்படும் அணியும் ஒன்றிணைந்து தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெறுவதற்கான முயற்சியில் தீவிரமாக இரு தரப்பினரும் மும்முரமாக உள்ளனர். தினகரனுக்கு விசுவாசமாக சில எம்.எல்.ஏக்கள் உள்ளதால், ஆட்சிக்கு போதிய ஆதரவு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள பிளவைப் பயன்படுத்தி, மத்தியில் ஆட்சியில் உள்ள பி.ஜே.பி. தமிழக அரசியலில் காய் நகர்த்தப்பார்க்கிறது என்று பல்வேறு தரப்பிலும் இருந்து குற்றச்சாட்டுகள் கூறப்படும் நிலையில், பிரதமர் மோடியுடனான தமிழக முதல்வரின் சந்திப்பு குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது. டெல்லியில் நடைபெறும் சந்திப்பின்போது, தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு பற்றியே முதல்வர் கலந்தாலோசிப்பார் என்ற போதிலும், அது அரசுமுறையிலானதாக இருக்கும். இது தவிர்த்து, தமிழகத்தில்  நீடித்துவரும் அரசியல் குழப்பங்கள் குறித்து முதல்வரிடம் பிரதமர் கேட்கலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விவசாயிகள் பிரச்னை குறித்து பிரதமர் மோடியிடம் நேரில் பேசுவதற்கான வாய்ப்பு, எடப்பாடி பழனிசாமிக்கு தானாகவே கனிந்து வந்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்ற முடியா விட்டாலும், கடன் தள்ளுபடி உள்ளிட்ட சாத்தியமாகக் கூடிய கோரிக்கைகளையாவது, நிறைவேற்ற எடப்பாடியார் முயற்சி மேற்கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களிடமும் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்தை மையமாக வைத்து தமிழக ஓவியர் ஒருவர் டெல்லியில் ஓவியக் கண்காட்சியை நடத்தி வருகிறார்.

ஜல்லிக்கட்டு-க்கு ஓ.பி.எஸ். தீர்வு கண்டதைப் போல், விவசாயிகள் போராட்டத்திற்கு எடப்பாடி முற்றுப்புள்ளி வைப்பாரா? என எதிர்பார்த்துக் காத்திருக்கிறது தமிழகம். எப்படியும் விவசாயிகளுக்கு நல்லது நடந்தால் சரியே!

-சி.வெங்கட சேது

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்