வெளியிடப்பட்ட நேரம்: 16:49 (24/04/2017)

கடைசி தொடர்பு:16:49 (24/04/2017)

வி.ஐ.பி. வாகனம், காவலாளியின் நடிப்பு..! கொடநாட்டில் என்ன நடந்தது?

கொடநாடு


ஜெயலலிதா இருந்தவரை யாரும் எளிதில் நுழைய முடியாத கோட்டையாக இருந்த கொடநாட்டில் முதல்முறையாக கொள்ளை முயற்சி ஒன்று நடந்திருக்கிறது. காவலாளியை கொன்று, கொடநாட்டு பங்களாவின் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்திருக்கிறார்கள் கொள்ளையர்கள். கொள்ளை முயற்சி தான் என முதல்கட்ட விசாரணையில் சொல்லப்பட்டாலும், கொள்ளை போகவில்லை என்பதை உறுதியிட்டு யாராலும் சொல்லமுடியவில்லை. தற்போதைய பரபரப்பான அரசியல் சூழலில் இந்த கொலையும், கொள்ளை முயற்சியும் பெரும் சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது.

நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில், நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டுக்குள் நுழைந்தது இரு வாகனங்கள். இரு வாகனங்களும் பொலிரோ வாகனம் என சொல்லப்படுகிறது. அரசு வாகனங்களை போல காட்சியளிக்கும் இந்த வாகனங்கள் மிக வேகமாக எஸ்டேட்டினுள் நுழைந்ததாக சொல்லப்படுகிறது.

கொடநாடு

கொடநாட்டு பங்களாவுக்குள் நுழையும் பிரதான கேட்களான 9வது கேட் மற்றும் 10வது கேட் வழியாக இந்த கார்கள் நுழைந்தன.10வது கேட்டை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த காரில் 10க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். 10வது கேட்டில் இருந்த காவலாளி ஓம் பகதூர்  என்பவர் இவர்களை தடுக்க முயல... அவரை அடித்து தலைகீழாக தொங்க விட்டுச் சென்றது அந்த கும்பல். இதேபோன்று 9வது கேட்டில் இருந்த கிருஷ்ணபகதூர் என்பவரையும் அடித்து அங்குள்ள லாரியில் தூக்கிப் போட்டு விட்டு சென்றனர். தொடர்ந்து பங்களாவினுள் நுழைந்த அந்த கும்பல், பங்களா கண்ணாடியை உடைந்து உள்ளே நுழைந்துள்ளது. சில நிமிடங்களுக்கு பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பினர்.

இன்று அதிகாலை காவலாளி தலைகீழாய் தொங்கிக்கொண்டிருப்பதை கண்ட தொழிலாளிகள், ஓம்பகதூரை சடலமாகவே மீட்டனர். லாரியில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ண பகதூருக்கு உயிர் இருக்க, அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தொழிலாளர்கள். கிருஷ்ணபகதூர் படுகாயங்களுடன் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நள்ளிரவில் காவலாளிகளை கொல்லும் நோக்கத்துடனே அவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் காவலாளி கிருஷ்ணபகதூர் இறந்தது போல் நடித்ததால் அவரை அங்கிருந்த லாரி ஒன்றில் போட்டு விட்டு கொள்ளையர்கள் சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொடநாடு

முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில், கொள்ளையர்கள் வந்த பொலிரோ ஜீப் அரசு வாகனத்தை போல இருந்தது என்றும், அதில் வி.ஐ.பி. என குறிப்பிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. 10க்கும் அதிகமானோர் ஒரே நேரத்தில் இரு கேட்களில் நுழைந்து பங்களாவின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் மட்டுமல்லாது, அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவம் நடந்த கொடநாடு பங்களா அரசால் பறிமுதல் செய்யப்பட வேண்டிய சொத்து என்பது குறிப்பிடத்தக்கது.. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்டதால் ஊழல் செய்து சேர்க்கப்பட்ட சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்திருந்தார். அதன்படி, சொத்துக்குவிப்பு வழக்கில் உள்ள முக்கிய சொத்து கொடநாடு எஸ்டேட் தான்.

தற்போதைய சூழலில் இந்த சொத்து சசிகலா குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. கொடநாடு மேலாளர் நடராஜன் என்பவர் மூலம் சசிகலா குடும்பத்தினர் தான் இந்த சொத்தை கவனித்து வருகிறார்கள். விரைவில் அரசால் பறிமுதல் செய்யப்படக்கூடும் என சொல்லப்படும் இந்த பங்களாவில் நடந்த இந்த கொலையும், கொள்ளையும் அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கொடநாடு

ஜெயலலிதாவின் சொத்து சார்ந்த ஆவணங்கள் உள்ளிட்டவை கொடநாட்டில் தான் பாதுகாக்கப்பட்டு வைக்கப்படுவதாக சொல்லப்படுவது உண்டு. யாரும் நுழைய முடியாத கோட்டை என்பது அதற்கு காரணமாகவும் சொல்லப்பட்டது. இப்போது அந்த கோட்டையில்  கொலையும், கொள்ளையும் நடந்திருக்கிறது. என்ன கொள்ளையடிக்கப்பட்டது என்பது தான் இப்போதைய மிகப்பெரிய கேள்வி.

கொள்ளை எதுவும் போகவில்லை. இது ஒரு கொள்ளை முயற்சி என சொல்லப்படுகிறது. ஆனால் எஸ்டேட்டுக்கு 3 கி.மீ.க்கு முன்பே மீடியாக்களை நிறுத்தி வைத்துள்ளது காவல்துறை. இது குறித்து தெளிவுபடுத்தாத காவல்துறை, சம்பவம் தொடர்பாக விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மட்டும் சொல்லியிருக்கிறது.

சிறையில் சசிகலா, அடுத்தடுத்த வழக்குகளால் திணறும் தினகரன், கட்சியை விட்டு ஒதுக்கப்படும் சசிகலாவின் குடும்பம் என சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நிலையில், அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கொடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை முயற்சி மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றிருக்கிறது.

- ச.ஜெ.ரவி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்