வெளியிடப்பட்ட நேரம்: 16:57 (24/04/2017)

கடைசி தொடர்பு:23:14 (24/04/2017)

'சாதி அழித்தொழிப்பு தலித் கட்சிகளின் செயல்திட்டத்திலேயே இல்லை!’ - ஜிக்னேஷ் மேவானி

ஜிக்னேஷ் மேவானி : தலித் எழுச்சி

ஜிக்னேஷ் மேவானி. இது சாத்தியமேயில்லை... நடக்கவே நடக்காது என்று அவநம்பிக்கை இருள் எங்கும் கவ்வியிருந்தபோது, பிரதமரின் சொந்த மாநிலத்திலேயே ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நிகழ்த்திக் காட்டியவர். 'மாட்டின் வாலை நீங்கள் வைத்துக்கொண்டு 5 ஏக்கர் நிலத்தை எங்களுக்குக் கொடுங்கள்' என்று ஆட்சியாளர்களின் அதிகாரத்தை எதிர்த்து உரக்க கேள்வி எழுப்பியவர். ஒரு நிகழ்வுக்காகச் சென்னை வந்திருந்தவருடன் பலர் உரையாடினோம். அந்த உரையாடலைக் கேள்வி பதில் வடிவத்தில் இங்கே பகிர்கிறேன். 

 "இந்தியாவில் சாதிய ஒடுக்குமுறைகள், தலித் அரசியல் எந்த நிலையில் இருக்கிறது?''

''ஒரு காலத்தில் இந்தியாவில் ரயில்வே துறை வளர்ச்சி ஏற்பட ஏற்பட சாதி முற்றும் முழுவதுமாக ஒழிந்துவிடும் என்று நம்பப்பட்டது; எழுதப்பட்டது. ஆனால், அது நிகழ்ந்ததா என்ன...? இங்கு ரயில்வே துறை அபரிவிதமாக வளர்ந்துவிட்டது. ஆனால், அதைவிட வேகமாகச் சாதிய ஒடுக்குமுறைகள் வளர்ந்து நிற்கின்றன. எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறதென்றால், நாம் இங்கிருந்து பிழைக்கச் சென்ற இடங்களுக்கெல்லாம் சாதியையும் அழைத்துச்  சென்றிருக்கிறோம். இங்கிலாந்தில் சாதிக்கு எதிராக 2009-ல் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றும் அளவுக்குத் தேவையை உண்டாக்கி இருக்கிறோம். தீண்டாமை வேறு வடிவத்தில் மாறி எந்தப் பக்கம் திரும்பினாலும், சாதிய பூதம் நம்மை வழிமறிக்கும் அளவுக்குத்தான், சமூகத்தின் நிலை இப்போது இருக்கிறது. 

இன்னொரு பக்கம், தலித் அரசியலும் ஒரு மந்தநிலையில்தான் இருக்கிறது. காந்தி அதைச் சொன்னார், சாவித்ரி பூலே இதைச் சொன்னார், அம்பேத்கர் முன்வைத்தது இதுதான் என்று வெறுமனே பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். இப்போது உண்மையான தேவை அவர்கள் முன்வைத்த கருத்தியலை உள்வாங்கி, அதன் சாரத்தைக் காலத்துக்கேற்ற மெருகேற்றிச் சாதியை அழித்தொழிக்கச் செயல்திட்டத்தைத் தீட்ட வேண்டும்.''

 "தலித்கள் அரசியல் அதிகாரம் பெற்றால், இந்த வன்கொடுமைகளுக்கு ஒரு தீர்வு ஏற்படும்தானே...?''

''உண்மையில் இதுகுறித்த கனவு எல்லோருக்கும் இருக்கிறது. கான்சிராமைப் பின்பற்றி அதிகாரத்தைக் கைப்பற்ற கனவு காண்கிறார்கள். அதற்கானச் செயல்திட்டத்தை வகுக்கிறார்கள். ஆனால், அதற்குப் பின், என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினால், அனைவரிடமும் ஒரு பேரமைதிதான் நிலவுகிறது. உண்மையில், தலித் இயக்கங்களில் செயல்திட்டத்திலேயே சாதி ஒழித்தொழிப்பு என்பது இல்லை. நீங்கள் இந்தியாவில் பி.எஸ்.பி தொடங்கி ஒடுக்கப்பட்டவர்களுக்கான எந்தக் கட்சியை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்... அவர்களின் செயல்திட்டத்தில் சாதிய அழித்தொழிப்பு இருக்கிறதா என்று பாருங்கள். யாருடையதுலேயுமே இல்லை.'' 

 "ஹூம்... நீங்கள் முன்னெடுத்த ஊனா போராட்டத்தைப் பற்றிப் பேசுவோம்... அதில், நீங்கள் வெற்றிபெற்றுவிட்டதாகக் கருதுகிறீர்களா...?''

''அதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். என்னளவில் அது நிச்சயம் தோல்வி போராட்டம்தான். ஆம், அந்தப் போராட்டத்தை முன்னெடுத்தபோது... என்னுடைய இலக்காக நிலமற்ற தலித்களுக்கு நிலம் என்பதுதான் எங்கள் கோஷமாக இருந்தது. ஆனால், எல்லோருக்கும் நிலம் கிடைத்துவிட்டதா என்ன...?  இடதுசாரிகள் மற்றும் அம்பேத்கரியர்களிடம் ஓர் உரையாடலை நிகழ்த்தி, அவர்களை இணைக்கவேண்டும் என்று நினைத்தேன். ஊனா போராட்டச் சமயத்தில் அவர்கள் இணையவும் செய்தார்கள். ஆனால், அந்த இணைப்பைத் தக்கவைக்க முடியாமல் போன அளவில் அதை ஒரு தோல்வி போராட்டமாகவே பார்க்கிறேன்.''

"இந்தத் தோழமை சாத்தியமில்லாமல் ஏன் போனது... போகிறது?''

''நம்முடைய குறுகிய பார்வைதான் காரணம். அம்பேத்கரிய இயக்கங்கள் வர்க்கப் போராட்டத்தை எதிர்நிலையில் வைத்துப் பார்க்கின்றன. நாம் குஜராத்தில் துப்புரவுப் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு போராட்டத்தை முன்னெடுத்தபோது... அதில், இணையக்கூட அம்பேத்கரிய இயக்கங்கள் மறுத்துவிட்டன. அந்த இயக்கங்களின் வர்க்கப் பார்வை இன்னும் விரிவடைய வேண்டும். பொருளாதார உரிமைகளுக்கான போராட்டத்துக்கும், சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்துக்கும் உள்ள ஒற்றுமையை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் இன்னும் வலிமையடைய முடியும். இதற்கு ஒரு தொடர் உரையாடலை இடதுசாரிகளும், அம்பேத்கரியவாதிகளும் நிகழ்த்த வேண்டும். அம்பேத்கர் முதலாளித்துவத்தையும் கடுமையாக எதிர்த்தார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.''

ஜிக்னேஷ் மேவானி : தலித் எழுச்சி  "இடதுசாரிகள், அம்பேத்கரியர்கள் இணைப்புப் பற்றிப் பேசுகிறீர்கள். ஆனால், ஒடுக்கப்பட்டவர்களுக்கு இடதுசாரி இயக்கங்களில் உரிய பிரநிதித்துவம் இல்லை என்கிறகுற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே... அதை எப்படிப் பார்க்கிறீர்கள். அதில், உண்மையும் இருக்கிறதுதானே...?''

''உண்மைதான். ஆனால், இன்னொன்றையும் நீங்கள் கவனிக்க வேண்டும். நாளையே நான் ஓர் இடதுசாரி இயக்கத்தைத் தொடங்கினால், அனைவரும் ஒன்று இணைந்துவிடுவார்களா என்ன...? நிச்சயம் மாட்டார்கள். நான் பல  கூட்டங்களுக்குச் செல்லும்போது, அம்பேத்கர் இயக்கங்களின் பிரதிநிதிகள் என்னைச் சந்திக்கவே மறுக்கிறார்கள். இரண்டு அமைப்புகளும் தங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். குறிப்பாக, இடதுசாரி இயக்கங்கள் தங்களது பொலிட் பீரோவில் ஒடுக்கப்பட்டவர்கள், பழங்குடிகளைச் சேர்க்க வேண்டும். தங்களது செயல்திட்டத்தில் சாதி அழித்தொழிப்பைக் கொண்டு வரவேண்டும். சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக இன்னும் தீவிரமாகச் செயலாற்ற வேண்டும்.''

 " 'நிலமற்ற தலித்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் வேண்டும்' என்பது உங்களது முக்கியக் கோஷம். ஆனால், இப்போது நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் இந்தியாவில் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கருதுகிறீர்களா...?''

''இல்லை... மகிழ்ச்சியாக இல்லை. அதுவும் குறிப்பாக நாங்கள் நிலத்துக்கான கோஷத்தை முன்வைத்த குஜராத்தில் விவசாயிகளின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. விவசாய மின்சாரத்துக்காக 20 ஆண்டுகளாகக் காத்திருக்கும் விவசாயிகள் இருக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் கடந்து நிலம் வேண்டும் என்று நாங்கள் வைக்கும் கோஷம் தலித்களின் உரிமைக்கான கோஷம்.'' 

 "அம்பேத்கர் பாராளுமன்ற ஜனநாயகத்தை முன்வைத்தார். உங்கள் மாற்றத்துகான அரசியல், எந்தப் பாதையில் பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்... எதனை முன்மொழிகிறீர்கள்?''

''அம்பேத்கர் உருவாக்கிவிட்டுச் சென்ற பாராளுமன்ற அரசியலைக் காப்பதே இப்போது பெரும் போராட்டமாக இருக்கிறது. அண்மையில், பி.ஜே.பி அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை ஒரு விளம்பரமாக வெளியிட்டு இருந்தார்கள். அந்த விளம்பரத்தில், ’நிகரமை, மதச்சார்பின்மை’ (Socialism and Secularism) ஆகிய இரண்டு வார்த்தைகளும் இல்லை. அவர்கள் எதனை எதிர்க்க விரும்புகிறார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது. ஆக, இந்த நெருக்கடியானச் சூழலில், இருக்கிற அரசியல் சட்டத்தை பாதுகாப்பதுதான் நமது முக்கியமான சவால். அதைக் கடந்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தெல்லாம் தொடர்ந்து உரையாடுவோம்.'' 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்