வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (25/04/2017)

கடைசி தொடர்பு:15:19 (25/04/2017)

குடிநீருக்காக 36 ஆண்டுகள் உழைத்த குடிமகன்... தெர்மாகோல் அமைச்சர் கவனத்துக்கு!

தெர்மாகோல் அமைச்சர் கவனத்துக்கு! மலை மனிதன் மாஞ்சியின் செயல்

பீகாரின் கயா நகரின் அருகே அமைந்துள்ளது கெஹ்லர் கிராமம். இந்த கிராமத்திற்கும், நகரத்திற்கும் இடையே ஒரு பெரிய மலை இருந்தது. நகரிலிருந்து அந்த மலையை முழுவதுமாக சுற்றி கிராமத்திற்கு செல்ல 55 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய நிலை. சிறு மருத்துவ உதவிகளுக்கும் இவ்வளவுதூரம் பயணித்து தான் ஆகவேண்டும். அந்த கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மாஞ்சி. இவர் மனைவி ஃபல்குனிதேவிக்கு ஒருநாள் மருத்துவ உதவி தேவைப்பட்டது. ஆனால் நீண்ட தொலைவில் மருத்துவமனை இருந்ததால் உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் மனைவி இறந்து விடுகிறார். இதனால் மிகவும் மனமுடைந்துபோகும் அவர், மீண்டும் இந்த நிலை தனது கிராமத்துக்கு வரக்கூடாது என நினைக்கிறார். சரியாக மனைவி இறந்து ஒரு வருடம் கழித்து ஒற்றை மனிதனாக மலையை குடையும் வேலையை செய்கிறார். மாஞ்சி ஒற்றை ஆளாக இந்த செயலில் இறங்கியதைக் கண்ட மக்கள் கேலி செய்து, ஒரு பைத்தியக்காரனைப் போலப் பார்த்தனர். ஆனால், மாஞ்சி அதற்கெல்லாம் சளைத்து விடவில்லை. அவர் மலையை குடைய தொடங்கியபோது ஏளனமாக பார்த்த மக்கள், பாதி மலையை குடைந்த பின்னர், மாஞ்சியை மெல்ல திரும்பிப் பார்க்க ஆரம்பித்தனர். மலையை குடையும்போது மாஞ்சி சந்தித்த துன்பம் ஏராளமானது. உணவு இல்லாமல் இலை, தழைகளை உண்டு, தண்ணீரின்றி வாடி பல துன்பங்களை அனுபவித்தார். மெல்ல, மெல்ல மக்களின் உதவி மாஞ்சிக்கு கிடைக்க ஆரம்பிக்கிறது. முடிவில் முழு மலையையும் தனிஒருவனாக தகர்த்தெரிந்தார், மாஞ்சி. 55 கிமீ தூரம் என்பது வெறும் 15 கிமீ தூரமாக குறைந்து போகிறது. மக்களின் உச்சகட்ட புகழ்ச்சிக்கு ஆளாகிறார் மாஞ்சி, அதற்கு இந்திய அரசும் மாஞ்சிக்கு விருது வழங்கி கவுரவித்தது.

மலையை குடைந்து தண்ணீரை கொண்டு வரும்  தபா

     இதேபோல 1959-ம் ஆண்டில், சீனாவில் கியூஷோ மாகாணத்தை சேர்ந்த கவாங்பா கிராமத்தில் ஒரு சிக்கல் இருந்தது. ஊரைச் சுற்றிலும் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் வற்றிவிட்டன. ஒரே ஒரு கிணற்றில் மட்டுமே தண்ணீர் இருப்பு இருந்தது. மொத்த கிராமமும் அந்த கிணற்று நீரை சூறையாடுகிறது. சில நாட்களில் அந்த கிணறும் வலுவிழந்து வறண்டு விடுகிறது. அதனால் சுற்றியிருந்த விவசாய நிலங்கள் அனைத்தும் வறண்டு விட்டன. அந்த ஊரின் முக்கிய உணவுப்பொருளான அரிசியும், நெல் விளைச்சல் இல்லாததால் கிராமத்தினருக்கு கிடைக்காமல் போகிறது. இதற்கெல்லாம் ஒரே தீர்வாக ஹுவாங் தபா என்பவர், 10 கிமீ தூரம் கால்வாய் தோண்டி தனது கிராமத்திற்கு நீரை கொண்டு வரவேண்டும் என முயற்சி செய்கிறார்கள். அதனை ஆரம்பித்த அவருக்கு முதன்முறையாக எடுத்த முயற்சி தோல்வியையே கொடுத்தது. தொடர்ந்து 36 வருடங்களாக அவர் மேற்கொண்ட முயற்சி இன்று அவரது கிராமத்துக்கும், சுற்றியுள்ள கிராமங்களுக்கும் போதுமான தண்ணீரை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவரது செயல்பாடு 36 ஆண்டுகளாக மலைகளை குடைவதிலேயே போய்விட்டது. இந்த செயலுக்காக  தபாவை சீன மக்களின் தலைவன் யூ-காங்குடன் ஒப்பிடுகிறார்கள், அந்நகர மக்கள். மலையை குடையும்போது அவருக்கு 23 வயதுதான். தபா அப்போது கிராம மக்களின் உதவியை நாடினார், ஆனால் கிடைக்காமல் போகவே தானாக கால்வாய் வெட்ட ஆரம்பித்தார். அதன்பின்னர் வறட்சியின் தாக்கம் பெருகவே, மக்கள் அனைவரும் ஒன்றினைந்தனர். இந்த செயலை செய்ய நூற்றுக்கணக்கான மீட்டர் தூரம் மலையில் பயணிக்க வேண்டும். இதில் பலமுறை ஹுவாங் தபா மரங்களில் கயிறுகளை கட்டி மலையேறும்போதும், பாறைகளில் ஏறும்போதும் வழுக்கி சட்டை, சதைகள் கிழிந்து பல துன்பங்களுக்கு ஆட்பட்டு கால்வாய் வெட்டும் பணியை மேற்கொண்டார். அதன்பின்னர் வந்த மக்களும், தபாவின் ஆலோசனைப்படி மலைகளில் உள்ள குகைகளில் தங்கி இரவு, பகலாக கால்வாயை வெட்டினர். தான் படித்த பொறியாளர் படிப்பை தள்ளிவைத்துவிட்டு தெளிவான திட்டமிடலை மேற்கொண்டார்.

தெர்மாகோல் விடும் அமைச்சர்கள்

 அவர் மலைகளில் தங்கி தனது திட்டத்தை மேற்கொண்டு, இறுதியாக 1995-ம் ஆண்டு மூன்று மலையைக் குடைந்து கால்வாய்ப்பணிகள் முற்றிலுமாக முடிவடைந்தது. அந்த கவ்வாங் கால்வாயில் தண்ணீர் ஓட ஆரம்பித்தது. இதேபோல தபா, கிராமத்திற்கு சாலையையும், மின்சாரத்தையும் கொண்டு வந்தார். இப்போது தபாவிற்கு வயது 82 வயதாகிறது. தற்போது தடையில்லாத தண்ணீர், மின்சாரம் ஆகியவை அந்த கிராமத்துக்கு கிடைக்கிறது. தற்போது அந்த கிராமத்தை சேர்ந்த 1,200 மக்கள் தங்களின் தேவைக்கும். 4 லட்சம் கிலோ அரிசியும் விளைவிக்கிறார்கள். இவர்களைப் போல விஞ்ஞானத்தின் வளர்ச்சி இல்லாத காலத்தில் மூளையை உபயோகித்து வறட்சிக்கும், தண்ணீருக்கும் தீர்வு கண்டவர்கள் பலர். இன்றைய விஞ்ஞானத்தின் உச்சகட்ட வளர்ச்சியில் நீர் ஆவியாவதை தடுக்க நிச்சயமாக தீர்வுகாண முடியும். அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் வைகை அணையில் தெர்மாகோலை வீசியிருக்கின்றனர். காற்றில் பறக்கும் தன்மையுடைய தெர்மாகோலை எறிந்துவிட்டு படகு கரை திரும்புவதற்கு முன் தெர்மாகோல் திரும்பி விட்டது. ஒர் அமைச்சர் வறட்சிக்குரிய காரணங்களை பற்றி அதிகாரிகளுடன் முறையாக ஆலோசிக்கவில்லை. அதிகாரிகளும் அணைக்கு தண்ணீர் வராததற்கு காரணம், தண்ணீர் குறைவதற்கு காரணம் என எதையும் முழுமையாக விளக்கி இருக்க வேண்டும். இதற்கு அவர் சொல்லும் பதில், "திட்டம் தோல்வியடைந்து விட்டது". தெர்மாகோல் மீது பிளாஸ்டிக் டேப் ஒட்டி அணையில் வீசலாம் என அதிகாரிகள் சொன்னால் அமைச்சராவது சற்று யோசித்திருக்க வேண்டாமா?.. அதுசரி, கடலில் எண்ணெய் கொட்டியபோது, அதனை அகற்றுவதற்கான தொழில்நுட்பங்கள் இருந்தும், அதை வாளியால் அகற்றிய அரசாங்கம் இப்படித்தான் சிந்திக்கும்!

   


டிரெண்டிங் @ விகடன்