வெளியிடப்பட்ட நேரம்: 19:58 (25/04/2017)

கடைசி தொடர்பு:19:57 (25/04/2017)

கடைசியாக எப்போது விதி மீறி ஒரு வேலையை செய்தீர்கள்? #StartUpBasics - அத்தியாயம் 5

ஸ்டார்ட்அப் வேலை டோனி

அத்தியாயம் -1                  அத்தியாயம் -2                அத்தியாயம் -3           அத்தியாயம் -4

ஒரு பணி நேர்காணலுக்கு செல்பவர் அந்தத் துறைசார்ந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டால் இங்கே வேலை கிடைத்துவிடும். அது தானே மிகக் கடினமான பகுதி. ஆனால் நீங்கள் Zappos போன்ற நிறுவனத்திற்கு வேலை சென்றால் நீங்கள் IIT இல் படித்திருந்தாலும், உங்கள் துறையில் நீங்கள் மேதையாகவே இருந்தாலும் போதாது. கீழ்காணும் சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா என்று பாருங்கள்.

  • நீங்கள் முன்பு செய்த வேலையில் எல்லைத் தாண்டிய சிந்தனை (out of box) எதாவது செய்தீர்களா. அதில் வெற்றி என்று எதை சொல்வீர்கள்?
  • நீங்கள் செய்த மிகச் சிறப்பான தவறு என்ன? அது ஏன் சிறந்த தவறு என்று சொல்கிறீர்கள்?
  • நீங்கள் செய்யும் பணியை தவிர்த்து, சம்பந்தமில்லாத துறையில் செய்த வேலை என்ன? அதை எப்படி சிறப்பாக செய்தீர்கள்?
  • நீங்கள் செய்த வேலையில் எடுத்த ரிஸ்க் என்ன? அதில் என்ன கிடைத்தது?
  • கடைசியாக எப்போது நீங்கள் Rulesஐ உடைத்து ஒரு வேலையை செய்தீர்கள்?

இந்தக் கேள்விகளுக்கு உங்கள் பதில் என்னவென்று உங்களிடமே இருக்கட்டும். Zappos-ன் எதிர்பார்ப்பு என்னவென்று தெரியுமா? உங்கள் பணியில் எல்லைத் தாண்டி யோசிக்கவேண்டும். முயற்சிக்க வேண்டும். அதில் தவறாக சென்றாலும் பரவாயில்லை. உங்களுக்கு தொடர்பில்லாத துறையாக இருந்தாலும் முயற்சிக்க வேண்டும், ரிஸ்க் எடுக்க வேண்டும். அதில் சில சமயம் விதிகளை மீற வேண்டியிருந்தாலும் பரவாயில்லை. வேலையின் நோக்கம் சரியாக இருந்தால் போதும்.

உடைக்கவும், உடைபடவும் தயாராக இருக்கவேண்டும். இது தான் Zappos நிறுவனர் டோனி ஷெய் (Tony Hsieh)இன் தாரக மந்திரம். சிறுவயதில் இருந்தே அவருக்கு தொழில் செய்வதில் ஆர்வம் இருந்தது. அவர் பெற்றோர் செய்த மண்புழு உரம் தயாரிப்பு தான் அவரது முதல் தொழில். பிறகு ஒரு நல்ல ஆகஸ்ட் மாதத்தில் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை தயாரித்து விற்கிறார். ஆகஸ்ட் மாதத்தில் கிறிஸ்துமஸ்க்கு என்ன அவசரம்? தோல்வி. பிறகு விளம்பர பத்திரிகையில் இலவச விளம்பரம் செய்ய வாய்ப்பு கிடைக்க பட்டனில் புகைப்படம் வைக்கும் ஐடியா கிடைக்கிறது. அதை செயல்படுத்துகிறார். மாதம் 200$ (அன்றைய மதிப்பில் 8000 ரூபாய்) எளிதாக சம்பாதிக்கிறார். அப்போது அவருக்கு வயது 13 மட்டுமே. அது போரடிக்க, அதை அவரது முதல் தம்பிக்கு கொடுத்துவிடுகிறார். அவன் இரண்டு வருஷம் செய்துவிட்டு அவனுக்கு அடுத்த தம்பியிடம் கொடுத்து விடுகிறான். பள்ளியில் படிக்கும் போது The Gobbler என்று பத்திரிக்கை ஆரம்பித்து இரண்டொரு பதிப்பில் நிறுத்தி விடுகிறார்.

கல்லூரிக்கு செல்கிறார். நண்பருடன் இணைந்து அங்கு ஒரு பீட்சா கடையும், இரவு கேளிக்கைவிடுதியும் ஆரம்பிக்கிறார். அது சிறப்பாக செல்லவே மாதம் எளிதாக 2500$ சம்பாதிக்க முடிகிறது. இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர் ஏதேனும் ஒரு தொழில்முயற்சியை செய்து கொண்டே தான் இருக்கிறார்.

பள்ளியிலும், கல்லூரியிலும் படிப்பில் அவர் பெரிய ஆர்வம் காட்டவில்லை. அதேசமயம் அதில் சோடைபோகவும் இல்லை. தேவைக்கு தக்க மட்டும் படிப்பாராம். மற்ற நேரங்களில் எல்லாம் புதுப்புது விசயங்களை கற்க, புதுப்புது நண்பர்களுடன் பழக, புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்ள என்றுதான் இருந்திருக்கிறார். தவறுகள் செய்ய அவர் தயங்கியதே இல்லை (குற்றம் வேறு தவறு வேறு என்பதை ஞாபகம் கொள்க) தோல்விகளை பற்றிய பயமும் இல்லை. என் கடன் முயற்சி செய்து பார்ப்பதே என்று தான் முயற்சிக்கிறார்.

கல்லூரி முடிகிறது. கேம்பஸ் இன்டெர்வியுவில் எல்லோரும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு முயற்சி செய்ய இவரது பீட்சா பார்ட்னர் நண்பரும் இவரும் மட்டும் புதிதாக வளர்ந்துவரும் ஐடி கம்பெனியான Oracleஇல் சேர்கிறார்கள். நல்ல சம்பளம், மிக எளிய வேலை. தினமும் காலை இரண்டு மணி நேரம், மாலை இரண்டு மணி நேரம் தான் வேலைக்கு செல்வாராம். என்ன வாழ்க்கை என்று போரடித்துவிட்டதாம். வேலையை விடலாமா என்று யோசிக்கிறார். அவரது பீட்சா பார்ட்னரும் இந்தியருமான சஞ்சய்யிடம் கேட்கிறார். அவருக்கும் போரடிக்கிறது. இருவரும் வெளியில் வர முடிவெடுக்கிறார்கள். வேலைக்கு சேர்ந்து வெறும் ஐந்தே மாதங்கள் தான் ஆகியிருந்தன.

(இங்கே என்னையும், இந்தியச் சூழலையும் நினைத்துப்பார்த்தேன். எனக்கு வேலை போரடித்தபோது வேலையை மட்டும் தான் மாற்றிஇருக்கிறேன். முற்றிலுமாக வேலையை விட்டு ஸ்டார்ட்அப் தான் வாழ்க்கை என்று வர பத்து வருடங்கள் ஆகியிருக்கிறது.)

ஸ்டார்ட்அப்பிறகு நண்பர் சஞ்சயுடன் சேர்ந்து இணையதளம் வடிவமைத்துக் கொடுக்கும் வேலையை செய்கிறார். இவர் மார்கெட்டிங் பார்த்துக் கொள்வார். அவர் டிசைன் செய்து கொடுப்பார். ஆனால் அது அவர்கள் எதிர்பார்த்த வருமானத்தை கொடுக்கவில்லை. ஆனால் இன்னொரு ஐடியாவை கொடுத்தது. இணையதள விளம்பரம் கொடுக்க எளிமையான ஒரு தளத்தை உருவாக்கினார். அது தான் LinkExchange. இதனால் யாரும் எளிதாக அவர்கள் இணையதளத்தை விளம்பரம் கொடுக்க முடியும். விளம்பரம் பெறவும் முடியும். கூகிள் Adsenseஇன் முன்னோடி ஐடியா அது. நிறைய புது நிறுவனங்கள் இந்த இலவச சேவையை பயன்படுத்த ஆரம்பித்தன. நிறுவனம் வளர்ந்தது. அப்போது இருவருக்கும் வயது 23க்கும் குறைவே. நிறுவனத்தின் வளர்ச்சி கண்டு முதலீட்டாளர்களும், பெரிய நிறுவனங்களும் வாங்கத்  துடித்தார்கள். அதில் Yahooவும் ஒன்று. பெரிய விலை வந்தும் விற்கவில்லை. மாறாக பொறுத்திருந்தார். Seuqua Capital என்ற வென்சர் கேப்பிட்டல் நிறுவனத்தின் முதலீட்டுடன் நிறுவனத்தை வளர்த்தெடுத்தார்கள். நிறுவனம் அசுர வேகத்தில் வளர்ந்தது. அதன் வளர்ச்சிகண்டு Microsoft நிறுவனம் LinkExchangeஐ வாங்க முயற்சித்தார்கள்

நிறுவனம் வளர்ந்தாலும் கார்பொரேட்டின்  ஏற்றத்தாழ்வு கொண்ட முரண்பட்ட கலாச்சாரமும், கடமைக்கு பணியாற்றுவதும் தான் பெருகியது. புதிய யுத்திகள் எதுவும் பிறக்கவில்லை. இதற்கு மேலும் இதை இழுத்துக்கொண்டு செல்வது முறையல்ல என்று விற்றுவிட சம்மதம் தெரிவிக்க 200 மில்லியன் டாலர்களுக்கு LinkExchange கைமாறியது. அதில் ஒரு ஷரத்தாக டோனி ஒருவருடம் வேலை பார்க்க வேண்டும். அப்போது தான் இவரது முழு பங்கும் கிடைக்கும். இல்லையென்றால் இவரது பங்கில் இருந்து 20% சதவீதம் இழக்கவேண்டி வரும். ஒரு ஆறுமாதம் வேலை செய்கிறார். இவருக்கு அங்கு வேலை செய்வது சுத்தமாக பிடிக்கவில்லை. 20% போனாலும் பரவாயில்லை, பிடிக்காத வேலையை செய்வதாக இல்லை என்று வெளியேறுகிறார். இதோடு கதை முடியவில்லை. இங்கிருந்து தான் இதைவிட ஆறுமடங்கு வெற்றியை கொண்ட Zappos பிறந்த கதை தொடங்குகிறது. 

 

ஸ்டார்ட்அப் பாடங்கள்

வேலையோ தொழிலோ உங்களுக்கு ஒருகட்டத்தில் போரடிக்கவேண்டும். இல்லையென்றால் நீங்களும் வளர முடியாது அல்லது அந்த தொழிலும் வளரமுடியாது. மாற்றமும், வளர்ச்சியும் அங்கு தான் பிறக்கிறது. பல வெற்றி பெற்ற மனிதர்களின் கதையில் இதுதான் திருப்புமுனையாக இருந்திருக்கிறது.

அதேபோல ஸ்டார்ட்அப்பில் இருந்து லாபத்துடன் எந்த இடத்தில் வெளியில் வரவேண்டும் என்பதிலும் தெளிவு இருக்கவேண்டும். அதற்கு அந்த தொழிலின் சந்தைநிலவரம், எதிர்காலம் எல்லாவற்றையும் பற்றிய புரிதல் வேண்டும். LinkExchangeஐ வாங்கிய Microsoft இரண்டுவருடத்தில் அதை மூடிவிட்டது. ஆனால் அந்த ஐடியாவை Google Adsense பிரமாதமாக கொண்டுசென்றார்கள்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்