Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிவாஜி வேடத்தில் நடிக்க மறுத்த எம்.ஜி.ஆர்!- நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்! (தொடர் நிறைவுப் பகுதி)

எம் ஜி ஆர்

சென்னை ஒற்றைவாடைத் தியேட்டரில் நாடகத்தில் நடிக்க வந்ததன்மூலம் எம்.ஜி.ஆருக்கு அறிமுகமாகி பின்னாளில் திரையுலகில் எம்.ஜி.ஆருக்கு இணையாக புகழ்பெற்ற கணேசன், சிவாஜி கணேசன் எனப் புகழ்பெற்றதில் எம்.ஜி.ஆருக்கும் சிறு பங்கு உண்டு.  தனது 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' நாடகத்தில் சிவாஜியாக நடிக்க ஒரு திறமையான நடிகரை அண்ணா தேடிக்கொண்டிருந்த சமயம் அது. திராவிட இயக்க நடிகர்களில் ஒருவரான “நடிகமணி“ என அழைக்கப்பட்ட நடிகர் டி.வி. நாராயணயசாமி (நடிகர் எஸ் எஸ்.ராஜேந்திரனின் தங்கையின் கணவர்), எம்.ஜி.ஆரை அந்தக் கதாபாத்திரத்திற்காக பரிந்துரைத்தார். அதற்காக காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணாவின் வீட்டுக்கு ஒருநாள் பிற்பகலில் எம்.ஜி.ஆரை அழைத்துவந்தார் நாராயணசாமி. அதுதான் தன் அரசியல் ஆசான் அண்ணாவுடன் எம்.ஜி.ஆரின் முதல்சந்திப்பு. அந்த முதல் சந்திப்பிலேயே அண்ணாவின் திறமையான பேச்சாலும் பண்பான நடத்தையாலும் கவரப்பட்டார் எம்.ஜி.ஆர். 

அண்ணாவின் பேச்சுக்களையும் எழுத்துக்களும் அவருக்கு அறிமுகமாகின. அண்ணாவின் அறிவுத்திறமை எம்.ஜி.ஆருக்கு பிரமிப்பை தந்தது. சிவாஜி கண்ட இந்துசாம்ராஜ்ஜியத்தின் பாடங்களை படிக்க ஆரம்பித்து ஒத்திகைக்காக தயாராகியிருந்த நேரம், என்ன காரணத்தினாலோ தொடர்ந்து அதில் நடிக்கமுடியாத சூழல் உருவானது. அப்போது அந்த கதாபாத்திரத்திற்கு அப்போது தனது இல்லத்தில் தங்கியிருந்த கணேசனை நடிக்க வைக்க முடிவுசெய்தார் அண்ணா. நாடகம் பெருவெற்றிபெற்றது. நாடகத்திற்கு ஒருநாள் வந்த பெரியார், கணேசனின் நடிப்பைக் கண்டு வியந்து, “நாடகம் நடந்த இரண்டரை மணிநேரமும் நான் கணேசனை காணவில்லை. சிவாஜியையே கண்டேன்” என நெகிழ்ந்தார். அந்த மேடையில்தான் கணேசன், 'சிவாஜி' கணேசன் ஆனார். 

எம் ஜி ஆர்

இதே காலகட்டத்தில் ராஜமுக்தி என்ற படத்தில் தியாகராஜபாகவதருடன் ஜோடியாக நடித்த ஜானகியுடன் துணைநடிகராக அறிமுகமானார் எம்.ஜி.ஆர். சில வருடங்களிலேயே 'மோகினி' என்ற படத்தில் அவருடன் கதாநாயகனாக நடித்தார். பின்னாளில் கணவன் மனைவியானார்கள் இருவரும்.

இப்படி, நாற்பதுகளின் பிற்பகுதியில் தன்னுடைய சினிமா, அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை என எதிர்காலத்தில் தன்னுடன் பயணிக்கப்போகிறவர்களுடன் அறிமுகமானார் எம்.ஜி.ஆர். அண்ணாவின் அறிவாற்றலில் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர் அவரது படைப்புகளைத் தேடிப்பிடித்து படிக்க ஆரம்பித்தார். பணத்தோட்டம் நாவலை படித்தபோது அவரது தீவிர ரசிகனானார். 'அபிமன்யு' படத்தின் படப்பிடிப்பிற்காக கோவையில் தங்கியிருந்த கருணாநிதியுடனான நட்பும் திராவிடக்கொள்கையின் மீது அவருக்கு ஒருவித ஈர்ப்பை உருவாக்கிக்கொண்டிருந்தது. கதர்ச்சட்டை போட்டுக்கொண்டு  கருணாநிதியுடன் அவர் புரிந்து வாதங்கள் எடுபடவில்லை.

சுயமரியாதைக் கொள்கைகளை, திராவிட கலாசாரத்தைப்பற்றி மணிக்கணக்கில் கருணாநிதி பேசுவார். இதன் விளைவாக கதர்ச்சட்டையை கழற்றிவிட்டு கருப்புச் சட்டை மேல் காதல் கொள்ள ஆரம்பித்தார் எம்.ஜி.ஆர். பெரியாருடன் முரண்பட்டு அண்ணா, திமுகவைத்துவங்கிய பின்னர் தொடர்ந்து அண்ணாவின் கூட்டங்களுக்கு செல்ல ஆரம்பித்தார். 

எம்

1952 ம் ஆண்டு சென்னையில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் டி.வி. நாராயணசாமி, 'எம்.ஜி.ஆர் எத்தனை நாட்களுக்கு இப்படி கட்சிக்கூட்டங்களுக்கு வந்துபோய்க்கொண்டிருப்பார். அவரை கட்சியில் உறுப்பினராகச் சொல்லி அண்ணா கேட்டால் அவர் பேச்சை தட்டுவாரா என்ன?' என  நகைச்சுவையாக மேடையிலேயே சொல்ல, எம்.ஜி.ஆரைப் பார்த்து அண்ணா புன்முறுவல் செய்தார். எம்.ஜி.ஆர் தன் புன்னகையால் அதை ஆமோதித்தார். அண்ணாவிடமிருந்து உறுப்பினர் அட்டை எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்டது. அன்று முதல் திமுக உறுப்பினரானார் எம்.ஜி.ஆர். தான் இறக்கும்போது தன் மீது திமுக கொடிதான் போர்த்தப்படவேண்டும் என வெறிகொண்டு பேசும் அளவுக்கு எம்.ஜி.ஆர் பிற்காலத்தில் அண்ணாவையும் திமுகவையும் அளவுகடந்துநேசித்தார்.

எம் ஜி ஆர்

திமுக என்ற இயக்கத்தை மக்களிடையே கொண்டுசெல்ல தன் திரைப்படங்களையும் தனிப்பட்ட தன் புகழையும் எந்த பிரதிபலனுமின்றி பயன்படுத்தினார் அவர். ஆனால் தான் உயிராக நேசித்த கட்சியிலிருந்து ஒருநாள் இரக்கமின்றி துாக்கியெறியப்பட்டபோது அதே கட்சியை எதிர்த்து புதிய கட்சியை துவக்கவேண்டிய கட்டாயத்திற்குள்ளானார் அவர். பின்னாளில் அந்தக் கட்சியை எதிர்ப்பதும், அதை தடுப்பதும்தான் அவரது எஞ்சிய காலமாக கழிந்தது.

எம் ஜி ஆர்

தன்னம்பிக்கையாலும் தளராத முயற்சிகளாலும் வெற்றிகரமான மனிதராக உயர்ந்து அரைநுாற்றாண்டு காலம் தமிழர்களின் வாழ்வில் தவிர்க்கமுடியாதவராக விளங்கிய எம்.ஜி.ஆரது வாழ்வின் முதற்பகுதி இத்துடன் நிறைவுபெறுகிறது. அவரது சினிமா வெற்றிகள், அரசியல் வாழ்க்கை இவைகளை அடுத்த ஓர் சந்தர்ப்பத்தில் காண்போம். நன்றி!

முற்றும்

- எஸ்.கிருபாகரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ

Advertisement