வெளியிடப்பட்ட நேரம்: 19:14 (25/04/2017)

கடைசி தொடர்பு:16:30 (25/04/2017)

'வெறிச்சோடிய தமிழகம்...எச்சரிக்கும் அய்யாக்கண்ணு'!

அய்யாக்கண்ணு போராட்டம்

வ்வொரு விதையும் ஒரு உயிர். உயிர் காக்கும் தாய்-விவசாயிகள். உலக இயக்கத்துக்கு உயிரூட்டும்  தாயும், சேயும் இன்று இயற்கையாலும், ஆளும் அரசாங்கத்தாலும் காய்ந்து வாட, அவர்களுக்காக குடைபிடித்து ஆதரவு தெரிவித்துள்ளனர் தமிழ்நாட்டு மக்கள். ஏப்ரல்-25 ம் தேதி தமிழ்நாட்டில் நடக்கும் வேலை நிறுத்தப் போராட்டக்  காட்சிகள், இதையே வெளிப்படுத்துகிறது . 'வறட்சி நிவாரணத்தை உயர்த்தவேண்டும்; பயிர்க்கடன் உள்ளிட்ட விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; நதிகளை இணைக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,'தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க'த் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் கடந்த 40 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வந்தன. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டிய தி.மு.க, ஏப்ரல் 25-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்புவிடுத்தது. இதற்கு வணிகர்கள் சங்கத்தினர், திரைத்துறையினர்,போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு  தொழிற்சங்கத்தினர்  என  பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வெறிச்சோடிய தமிழ்நாடு :

ஏப்ரல் 25-ம் தேதியான இன்றைய தினம் தமிழகம் முழுக்க அனைத்துக்கட்சிப் போராட்டம் சிறப்புற நடைபெற்று வருகிறது. ஊசி நுழைய கூட சிரமப்படுமளவுக்கு போக்குவரத்து நெரிசலோடு இருக்கும்  சென்னை மாநகர சாலைகளில்  அங்கொன்றும், இங்கொன்றுமாக மட்டுமே வாகனங்கள் தென்பட்டன. கோயம்பேடு காய்கறி சந்தையில் சுமார் 10 ஆயிரம் கடைகள் மூடப்பட, வர்த்தக பகுதியான தியாகராய நகரில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு காட்சி தந்தன. சிப்காட்டான  ஓசூரில், சிறு,பெரு நிறுவனங்கள் சுமார் ஆயிரம் உள்ளன. அதில் பெரும்பாலானவை மூடப்பட்டு காட்சி தந்தன. ஓசூரில் இயங்கும் பல பெரு நிறுவனங்கள் , வேலை நிறுத்தத்தையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமையை  வேலை நாளாக மாற்றிக்கொண்டதால், இன்று பல நிறுவனங்கள் இயங்கவில்லை. தூங்காநகரம் என பெயர்பெற்ற மதுரையிலும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு  காட்சி தந்தன. தென்னிந்திய மான்செஸ்டரான கோவையில் பல ஆலைகள் மூடப்பட்டிருந்தன. திருப்பூரில் சுமார் 4 லட்சம் பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. சேலத்தில்  பல மில்கள், நெசவு , சிறு குறு தொழில்கள் இயங்கவில்லை. மாநிலம் முழுக்க பெரும்பாலான இடங்களில் ஆட்டோகள் இயங்கவில்லை.

தலைவர்கள் முழக்கம் :

சென்னை சைதாப்பேட்டையில், தி.மு.க  எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் தலைமையில் தொண்டர்கள் திரண்டனர். கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இரா.முத்தரசன், ஜி.ராமகிருஷ்னன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். பேரணியாக மாறிய போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகக் கடுமையான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. திரண்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்த முழக்கங்களை வழிமொழிந்தனர். எழும்பூரில், காங்கிரஸ் கட்சித் தலைவர்  திருநாவுக்கரசு, குமரி ஆனந்தன், தி.மு.க-வைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இங்கு பேசிய  தி.க ஆசிரியர் கி.வீரமணி, ''இது முடிவல்ல தொடக்கம். இது ஒரு சரித்திரப் போராட்டம். ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். அப்போது விவசாயக் கடன்களை புதிய ஆட்சி தள்ளுபடி செய்யும். அந்தக் காட்சிகளை விரைவில் நீங்கள்  பார்ப்பீர்கள்'' என்றார். ''இந்த வேலை நிறுத்தத்தைப் பற்றிப் பேச மத்திய-மாநில அரசுகளுக்கு அருகதை இல்லை'' என்றார் மார்க்சிஸ்ட் மாநிலக்குழு செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். ''வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடந்துவருகிறது. மத்திய-மாநில அரசுகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்'' என்றார் திருமாவளவன். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா, ''எதிர்காலத்தில் வறட்சி ஏற்படாத வகையில், நீர் நிலைகளைத் தூர்வாரும் பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கவேண்டும்'' என்றார் கோரிக்கையாக. திருநாவுக்கரசு பேசியபோது, ''தமிழ்நாடு அரசு கோமாவில் உள்ளது. இனி விவசாயிகள் உள்ளிட்ட அனைவருக்கும் மாற்றத்தை நாங்கள் தருவோம்'' என்றார். 

ஸ்டாலின் கைது

வெங்கய்ய நாயுடுவுக்கு மு.க ஸ்டாலின் பதிலடி :

திருவாரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டார். அவருடன் டி.ஆர் பாலுவும் உடனிருக்க, அப்போது பேசிய மு.க ஸ்டாலின், ''தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய வேலைநிறுத்தமாக இன்றைய தினம் அடையாளப்படுத்தப் பட்டுள்ளது. மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, 'தேசிய வங்கிகளின் விவசாயக் கடனை மத்திய அரசு தருவது  வழக்கமல்ல' என்று கருத்து தெரிவித்துள்ளார். எனக்கு இது வேடிக்கையாக உள்ளது. ஏனெனில் வி.பி சிங் பிரதமராக இருந்தபோது தேசிய வங்கிகளில் இருந்த சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தார். முந்தைய மன்மோகன் சிங் ஆட்சியின்போது '60 ஆயிரம் கோடி' ரூபாய் கடன் ரத்து செய்யப்பட்டது. இது ஏன் வெங்கய்ய நாயுடுவுக்குத் தெரியவில்லை?'' என்று கேள்வி எழுப்பியவர் மாநில அரசையும் கருத்துகளால் தாக்கினார். ''விவசாய பிரச்னைகள் மட்டுமல்ல, குடிநீர் பிரச்னைகளையும் சரியாக அணுகித் தீர்க்கவில்லை. 'குடி'(டாஸ்மாக்) பற்றி மட்டுமே யோசிக்கிறது. நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை நீக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக, நெடுஞ்சாலைகளை மாநகராட்சி சாலையாக மற்ற ஏற்பாடு செய்து வருகிறது'' என்றார்.

போராட்டத்தை பேரணியாக மாற்றிய காவல்துறை :

பல இடங்களில் கைது செய்யப்பட்ட தலைவர்களை நடக்க வைத்து மண்டபத்துக்கு கூட்டிச் சென்றது காவல்துறை. திருவாரூரில் மு.க ஸ்டாலினை  கைது செய்து, 4 கி.மீ தூரம் நடக்க வைத்து மண்டபத்துக்கு கூட்டி சென்றனர். இதையொட்டி மு.க ஸ்டாலின்  ''எங்கள் போராட்டத்தை பேரணியாக மாற்றியது போலீஸ்'' என்றார் வேடிக்கையாக. ''குறைவான அளவே கூட்டம் கூடும் என்று கருதி பெரியளவில் வாகனங்கள் எடுத்து வரவில்லை. ஆனால், இங்கே போராட்டங்களில் ஆயிரக்கணக்கில் திரண்டதால்  தவிர்க்க முடியாமல், நடக்க வைத்து மண்டபத்துக்கு கூட்டிச் சென்றோம்'' என்கின்றனர் காவல்துறையினர்.

வேலை நிறுத்தம் போராட்டம்

'மீண்டும் டில்லியில் போராடுவோம்' - எச்சரிக்கும் அய்யாக்கண்ணு :

சென்ட்ரலில் இருந்து பேரணியாக எக்மோர் வந்த அய்யாக்கண்ணு கைது செய்யப்பட்டார். அப்போது பேசிய அவர், ''பசுமை பாதுகாப்பு என்று பிரதமர் மோடி நாடகமாடினார். அவரின் நாடகத்தை எம் விவசாய பெருங்குடி மக்களின் போராட்டம் அம்பலப்படுத்தியது. பூனைக்கு யார் மணி கட்டுவது என்றபோது அந்த மணியை தமிழ்நாட்டு விவசாயிகள் கட்டினர். இதையே எங்களை சந்திக்க வந்த பல மாநில விவசாயிகளும் தெரிவித்தனர். தற்போது எங்கள் கோரிக்கைகள் என்னவென்றால், 'விவசாயிகளுக்கு லாபகரமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம்  வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை என்றால், மீண்டும் மே  25 முதல் டில்லியில்  போராட்டம் நடத்துவோம்'' என்றார் எச்சரிக்கையாக.

வெறிச்சோடிய தமிழகம்

விவசாய அழிவுக்கு காரணம் அரசாங்கமா?

'இயற்கை மட்டுமல்ல மோசமான அரசாங்க கொள்கை செயல்பாடுகளாலும் விவசாயம் அழிவை நோக்கி செல்கிறது' என்கின்றனர் போராட்டத்தில் பங்கேற்ற மூத்த இடதுசாரிகள்.  ''வேளாண் நிலங்கள் வீட்டு மனை பிளாட்டுகளாக மாறி வருவது, வேளாண் நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அரசாங்கங்கள் தாரை வார்ப்பது, பன்னாட்டு பி.டி விதைகளால் அழிந்துபோகும் பாரம்பர்ய விவசாயம், உரம்-பூச்சிக்கொல்லிகளால் மலடாகும் நிலங்கள்... போன்ற காரணங்கள் விவசாய அழிவில் முதன்மை பாத்திரங்கள் வகிக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் இந்தியத் தொழில் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள '2025-ல் தமிழகம்' என்ற அறிக்கையில், 'தமிழ்நாட்டில் 75 சதவிகித அளவில் நகர்ப்புற மக்கள் இருக்க வேண்டும். இதற்கு  விவசாயத்தை சார்ந்திருக்கும் கிராமப்புற மக்கள் தொகையை 25 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும்.'  என்று அறிக்கை வெளியிட்டது. அபரிமிதமான அளவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் கடை பரப்பவே, நகரமயமாக்கல் உருவாக்கப்படுகிறது. கிராமங்களில் நுழையும் கார்ப்பரேட் நிறுவனங்களும் விவசாய அழிவுக்கு முக்கியக் காரணமாக உள்ளன. அதிர்ச்சி தரும் இதன்  நுண்ணிய பாத்திரத்தை நாம் உணர வேண்டும்.   இதற்கெதிரான பார்வையினையும் கவனத்தில் எடுத்துக்கொள்வதே விவசாய வர்க்கத்தை காப்பாற்ற வழிவகை செய்யும்'' என்றனர்.

 1995-லிருந்து 2010 வரையில் சுமார் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். சமீபமாக தமிழ்நாட்டில் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அழிவின் விளிம்பில் இருக்கும் விவசாயத்தை, காத்து மீட்க வேண்டும் என்பதை உணர்த்தும்விதமாக இருந்தது ஏப்ரல் 25 வேலைநிறுத்தம்!

-சே.த இளங்கோவன்


டிரெண்டிங் @ விகடன்