போயஸ் கார்டனில் மாதவன் செய்த ரகளை : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 39

சசிகலா, ஜெயலலிதா

.தி.மு.கவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ‘அஞ்ஞாதவாசம்’ போனவரைப்போல, யார் கண்ணிலும்படாமல் தலைமறைவாக இருந்தார். ஒரு நாள் அல்ல... இருநாள் அல்ல... ஏறத்தாழ 5 மாதங்களாக அவரைக் காணவில்லை. ஜெயலலிதாவை நிழலாகப் பின் தொடரும் சசிகலாவும், நடராசனும்தான் அவரை வீட்டுச் சிறையில் வைத்திருப்பதாக பேச்சுகள் உலவின. ஆனால், உண்மையில் அந்தக் காலகட்டத்தில் நடராசனுக்கே ஜெயலலிதாவோடு லேசான மனஸ்தாபம் ஏற்பட்டு இருந்தது. அவரே அன்றாடம் போயஸ் கார்டன் வீட்டுக்குப் போவதை குறைத்துக் கொண்டிருந்தார். சசிகலா மட்டும் தினமும் சென்று வந்து கொண்டிருந்தார். அதுபோல, நடராசன் கட்டுப்பாட்டில் இருந்த போயஸ் கார்டன் தொலைபேசிக்கு புதிதாக ஆள் போடப்பட்டது. மோகன் என்ற அந்த நபர்தான், அந்த நேரத்தில் போயஸ் கார்டனுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார். நடராசனுக்கு அந்த அளவுக்குச் சிக்கல் ஏற்பட முக்கியக்காரணம் மாதவன். 

யார் அந்த மாதவன்?

மாதவன்மாதவன் தி.மு.க-வில் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர். அதன்பிறகு அ.தி.மு.க-வுக்கு வந்தார். எம்.ஜி.ஆர் இறந்தபிறகு ஜா.அணியில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக வலம் வந்தார். ஜானகி கட்சியை மொத்தமாக ஜெயலலிதாவிடம் ஒப்படைத்த பிறகு, மாதவனும் ஜெயலலிதாவின் தலைமையை சத்தமில்லாமல் ஏற்றுக் கொண்டார். கட்சியின் பொருளாளர் பதவி, ராஜ்ய சபா எம்.பி. பதவியை ஜெயலலிதாவின் தயவால் பெற்றார். எதிர்கட்சியில் இருந்துவிட்டு... அதன்பிறகு எதிரணியில் இருந்துவிட்டு... ஜெயலலிதாவிடம் வந்தவர், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி வரிசையாகப் பதவிகளையும் பெற்றார். மாதவனின் அரசியல் சாணக்கியத்தனத்துக்கு இதைவிட உதாரணம் வேறு என்ன இருக்க முடியும். அப்படிப்பட்ட மாதவனால் இடையில் கொஞ்சகாலம் நடராசனுக்குச் சிக்கல் வந்தது.

ஒருநாள் மாதவன், காரைக்குடி அருகில் உள்ள கல்லலில் நடைபெற்ற அ.தி.மு.க தொண்டர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார். அப்போது அவரைச் சூழ்ந்து கொண்ட, அ.தி.மு.க தொண்டர்கள், “கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பதே எங்களுக்குப் புரியவில்லை. இந்த அம்மாவை நம்பி எப்படி அரசியல் நடத்துவது? நடராசன் என்பவர்தான் கட்சியில் அனைத்தையும் தீர்மானிக்கிறார் என்கிறார்கள். யார் அந்த நடராசன்? அவர் கட்சியில் என்ன பொறுப்பில் இருக்கிறார்? அவருக்கு கட்சியில் அவ்வளவு முக்கியத்துவம் எப்படி வந்தது? எங்களைப்போன்ற சாதரணத் தொண்டர்களை அந்த அம்மா சந்திக்கத் தேவையில்லை. ஆனால், உங்களைப் போன்றவர்களைக்கூட சந்திக்கவில்லை என்றால், நாங்கள் எந்த நம்பிக்கையில் கட்சியில் இருப்பது... அரசியல் செய்வது...” எனக்கேட்டு மாதவனை சூடேற்றிவிட்டனர்.

மாதவனுக்கும் நடராசன் மீது ஏற்கனவே கடுமையான எரிச்சலும் அதிருப்தியும் இருந்தது. அந்தநேரத்தில் இந்தப் புலம்பல்களையும் சேர்த்துக் கேட்ட மாதவன் ஒரு முடிவோடு சென்னை திரும்பினார். மறுநாள் காலை, போயஸ் கார்டனுக்குப் போனார். அவர் அங்கு போனபோது, நடராசன், சசிகலா அங்கு இல்லை. ஆனாலும் மாதவனுக்கு ஜெயலலிதாவைச் சந்திக்க ‘அப்பாயின்ட்மென்ட்’ மறுக்கப்பட்டது. ஆனால், மாதவன் சோர்ந்துவிடவில்லை. சசிகலா, நடராசன் இல்லை என்பதை அறிந்துகொண்ட அவர், “நான் அந்த அம்மாவை நேரில் சந்திக்க வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லையென்றால், தொலைபேசி, இன்டர்காம் என எதிலாவது அவருடன் பேசியேதீர வேண்டும். அதுவரை இந்த இடத்தைவிட்டு நகரமாட்டேன்” என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டார்.

அதன்பிறகு, மாதவனின் பிடிவாதம் ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கப்பட்டது. “பைஃவ் மினிட்ஸ் மாதவனை வெயிட் பண்ணச் சொல்லுங்க. நான் அவர மீட் பண்றேன்” என்று பதில் சொன்ன ஜெயலலிதா, சரியாக 5 நிமிடங்கள் கழித்து மாடியில் இருந்து இறங்கி வந்தார். மாதவனிடம் எல்லா விஷயங்களையும் கேட்டுக் கொண்ட அவர், “நான் விரைவில் திரும்பி வந்துவிடுவேன்; யாரும் சோர்வு அடையத் தேவையில்லை; நான் இப்போது நடராசனுக்கு கட்சி வேலைகள் எதையும் கொடுப்பதில்லை; அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கட்சி விவகாரங்கள் தொடர்பாக நடராசனும் எதையும் கலந்து கொள்ளத் தேவையில்லை; நீங்களும் இதை நம் கட்சிக்காரர்களிடம் தெரியப்படுத்துங்கள்” என்று நம்பிக்கை கொடுத்தார். மாதவன் இந்த விஷயத்தை கட்சியில் அனைத்துமட்டங்களிலும் மகிழ்ச்சியோடு தெரிவித்தார். ஆனால், அப்போதே நடராசன் மாதவனுக்கு கட்டம் கட்டும் வேலைகளைத் தொடங்கிவிட்டார். 

மீண்டும் டிஸ்மிஸ்... மீண்டும் போட்டி அணி...

குழந்தைவேலு,கே.கே.எஸ்.எஸ்.ஆர்,ராமராஜன், திருநாவுக்கரசு12 ஜூலை 1990-ல் ‘நமது எம்.ஜி.ஆர்’ பத்திரிகையில் ஒரு அறிவிப்பு வந்தது. அதில், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், குழந்தைவேலு, நடிகர் ராமராஜன் ஆகியோரை நீக்கம் செய்து ஜெயலலிதா அறிவித்து இருந்தார். ஜெயலலிதா வீட்டைவிட்டு வெளியில் வரவில்லை என்றாலும், இதுபோன்ற கட்சியின் அதிரடி வேலைகள் கச்சிதமாக நடந்துகொண்டே இருந்தன. எல்லாம் நடராசன் வேலைகள். அதோடு, அந்தப் பத்திரிகையில், கட்சியின் உயர்மட்டக் குழுவில் புதிதாக 49 பேரை இணைத்திருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதையடுத்து மீண்டும் திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், குழந்தைவேலு, பண்ரூட்டி ராமச்சந்திரன் ஆகியோர் தனியாகக் கூடிப் பேசினார்கள். நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க என்றனர். அ.தி.மு.க அலுவலகத்தை கைப்பற்றும் முயற்சியில் இறங்கினர். ஆனால், எதற்கும் அசையவில்லை ஜெயலலிதா. 

ஜெயலலிதா பராக்... பராக்...

ஜெயலலிதா, ஆர்.எம்.வீரப்பன்1990 ஆகஸ்ட் 3-ம் தேதி ஜெயலலிதா தரிசனம் தந்தார். ஏறத்தாழ 5 மாதங்கள் அஞ்ஞாதவாசம் போய் இருந்த அவர், ஆகஸ்ட் மாதம் வெளியில் வந்தார். அன்று ஆடிப்பெருக்கு வேறு. பல மாதங்களுக்குப் பிறகு, வெளியில் வரும் தங்கள் தலைவிக்கு அ.தி.மு.க-வினர் அமோக வரவேற்பு கொடுத்தனர். ஜெயலலிதாவை நடராசன் சிறை வைத்துள்ளார் என்ற வதந்திகள் எல்லாம் மறைந்தன. போயஸ் கார்டன் வீட்டில் இருந்து அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க அலுவலகம் வரை பேனர்கள், அ.தி.மு.க கொடிகள் என்று திருவிழா போல இருந்தது. ஜெயலலிதாவைக் காணக்கூடிய பொதுமக்கள் கூட்டம், கட்சித் தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. சரியாக காலை பத்தரை மணிக்கு அவ்வை சண்முகம் சாலை பட்டாசுகளால் அதிர்ந்தது. காரில் வந்து இறங்கிய ஜெயலலிதா, நேராக மாடிக்குப்போய் கூட்டத்தைப் பார்த்து கை அசைத்தார். ‘நானே தலைவி... நான் ஒருவரே தலைவி!’ என்பதுபோல் ஜெயலலிதா அந்தக்கூட்டத்தில் உயர்ந்து நின்றார். அதன்பிறகு கூடிய, கட்சியின் உயர்மட்டக்குழுவில், “கே.கே.எஸ்.எஸ்.ஆர், திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை கட்சியில் இருந்து நீக்கியது சரிதான்... அந்த நடவடிக்கையை நான் எடுத்ததைப் பாராட்டி வெளியூர்களில் இருந்து வரும் பாராட்டுக் கடிதங்கள், தொலைபேசி அழைப்புகளே அது சரியான நடவடிக்கை என்பதற்கு சாட்சி. இனிமேல் அஞ்ஞாதவாசம் என்பது எல்லாம் இருக்காது. நேரடி அரசியலில் தீவிரமாக ஈடுபடுவேன்” என்று கட்சிக்காரர்ளுக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு கிளம்பினார்.

அந்தக் கூட்டத்தில் பொருளாளர் மாதவன் ஜெயலலிதாவை புகழ்ந்து இரண்டு நிமிடங்கள் பேசினார். ஆனால், அதேநாளில் சென்னை நகரம் முழுவதும், ‘மாதவனை கட்சியைவிட்டு வெளியேற்றுங்கள்’ என்ற போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தன. தர்மலிங்கம் என்பவர் பெயரில் அந்தப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. ஆனால், “நான் இந்தப் போஸ்டர்களை அச்சடிக்கவே இல்லை; நான் இதை ஒட்டவும் இல்லை” என்று தர்மலிங்கம் பத்திரிகையாளர்களிடம் சத்தியம் செய்து புலம்பிக் கொண்டிருந்தார். அது யாருடைய வேலையாக இருக்கும் என்பதை கணிப்பது பெரிய வேலை அல்ல. 

ஜெயலலிதாவின் இரண்டு நாள் உண்ணாவிரதம்...

தலைமைக் கழகத்தில் ஜெயலலிதாஅ.தி.மு.க கட்சி அலுவலகத்துக்காக திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் அணி ஜெயலலிதாவோடு மீண்டும் சண்டை பிடித்தது. உட்லண்ட்ஸ் ஹோட்டலில் திருநாவுக்கரசு தலைமையில் ஒரு பொதுக்குழு கூடியது. அந்தப் பொதுக்குழு திருநாவுக்கரசை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தது. அதன்பிறகு கட்சி அலுவலகம் தங்களுக்குத்தான் சொந்தம் என்று தீர்மானம் நிறைவேற்றியது. அதனால், இரண்டு அணிகளுக்கும் மீண்டும் பிரச்னை எழுந்தது. கட்சி அலுவலகத்தைக் கைப்பற்ற ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். 1990 ஆகஸ்ட் 12-ம் தேதி உண்ணாவிரதத்தை, போயஸ் கார்டன் வீட்டில் தொடங்கினார். அது இரண்டு நாட்கள் நீடித்தது. அவர் உடல்நிலை மோசமானது. கட்சிக்காரர்கள் சிலர் டெல்லியைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். “கட்சி அலுவலகத்துக்கும், இரட்டை இலைச் சின்னத்துக்கும் எந்தப் பாதிப்பும் வராது” என்று ராஜீவ் காந்தியிடம் இருந்து நம்பிக்கையான பதில் வந்தது. வழப்பாடி ராமமூர்த்தி ஜெயலலிதாவிடம் வந்து பேசினார். நெடுஞ்செழியன் பழச்சாறு கொடுத்து ஜெயலலிதாவின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். 

கதை தொடரும்...

இந்தத் தொடரின் முந்தைய பகுதியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!