வெளியிடப்பட்ட நேரம்: 11:04 (26/04/2017)

கடைசி தொடர்பு:11:08 (26/04/2017)

வீட்டுத் தண்ணீர் தொட்டியில் இருந்தும் மின்சாரம் எடுக்கலாம். எப்படி?

கொளுத்தும் வெயிலில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இருக்கும் நீரையாவது காப்பாற்றியாகவேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்த குழுவொன்று வைகை அணையில் தெர்மாகோலை விரித்து பல்பு வாங்கியது. ஆனால், தண்ணீர் ஆவியாகும் நடைமுறை மூலம் ஒரு மோட்டாரையே இயக்க முடியும் என்கின்றனர் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

 

 

 தண்ணீரின் வேகத்தைக் கொண்டு ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் எடுக்கமுடிகிறது. அதே போல, தண்ணீர் ஆவியாகும் நடைமுறையில் கூட ஆற்றலை கண்டடைந்து மோட்டாரை இயக்கி சாதித்திருக்கிறார்கள். 

எப்படி இயங்குகிறது? 

கொலும்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசியர் ஒஜூர் சஹின் (Ozgur Sahin) Hydras எனப்படும் புது மெட்டீரியலை கண்டுபிடித்திருக்கிறார். மெல்லிய பிளாஸ்டிக் பேண்ட் போல இருக்கும் இந்த ஹைட்ராவில் ஒரு வகையான பாக்டீரியாக்கள் உதவியுடன் ஈரப்பதம் இருக்கும் போது விரியவும், ஈரப்பதம் குறையும் போது சுருங்கவும் செய்கிறது. இந்த நடைமுறையின் மூலம் கிடைக்கும் ஆற்றலை பயன்படுத்திக் கொள்ள நினைத்த ஆராய்ச்சிக் குழு பல சோதனைகளில் ஈடுப்பட்டிருக்கிறது. ஆராய்ச்சியின் பலனாக சுருங்கி விரியும் நடைமுறையின் போது இயங்க சிறிய எலக்ட்ரோ மேக்னடிக் ஜென்ரேட்டரை வைத்து, ஷட்டரை திறந்து மூடும் படி செய்திருக்கிறார்கள் தண்ணீர் ஆவியாகி முடியும் வரை இந்த நடைமுறை தொடர்கிறது. சிறிய அளவிலான இந்த  மோட்டார் மூலமாக ஒரு எல் இ டி எரியுமளவிற்கான ஆற்றலை பெற முடிந்திருக்கிறது. ஆராய்சிகள் இன்னும் தொடர்கிறது.

இன்னும் இதனை மேம்படுத்துவதன் மூலம்   நம் வீட்டிலுள்ள தண்ணீர் தொட்டியிலிருந்து கூட மின்சாரம் எடுக்க முடியும். இப்படி யோசிக்காமல், தெர்மாகோல் விடுவதா என நம் அரசை நாமே கிண்டல் செய்யலாம். ஆனால், இதே போல பல வித்தியாசமான முறைகள் மூலம் நீர் ஆவியாவதை தடுக்க உலக நாடுகள் ஏராளமான முயற்சிகளை செய்து வந்திருக்கின்றன. அவற்றுள் சில

1.ப்ளோட்டிங் டிஸ்க் : வட்டவடிவிலான டிஸ்க் ஒவ்வொன்றும் மூன்று கிலோ வரை இருக்கிறது. அக்வா கேப் என்று அழைக்கப்படும் இது பாலிப்ரோபைலீன் கொண்டு செய்யப்பட்டிருக்கிறது.130kph வரையிலான காற்றுக்கு இவை ஈடு கொடுக்குமாம்.

2. தெற்கு ஆஸ்திரேலியாவில் மறுசுழற்சி செய்யபட்ட டயர்களை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

3.அக்வாடைன் என்று சொல்லப்படும் சிலிகான் பேஸ்டு லிக்விட் பயன்படுத்துகிறார்கள். தண்ணீரின் மேலே தெளிக்கப்படும் இந்த வகை லிக்விடால் தண்ணீர் ஆவியாவது 50 சதவீதம் தடுக்கப்படுகிறது.

4.ஹெக்சா டூம் என்று சொல்லப்படுகிறது மறு சுழற்சி செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பயன்படுத்துகிறார்கள். 90 சதவீத தண்ணீர் ஆவியாவதை தடுக்கும் இவை 25 ஆண்டுகள் வரை கியாரண்டியாம்.

5.ரேஃப்டெக்ஸ் என்கிற ப்ராடெக்ட் ஒவ்வொன்றும் 16 கிலோ எடையில் இருக்கிறது. அணை முழுவதும் போடப்படும் போது இரண்டுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில் மழை நீரை சேமிக்க முடிகிறது.

6.பாமாயிலுடன் ஹைட்ரேட்டட் லைம் சேர்த்த ஒரு கலவை பவுடரை மோனோ லேயர் என்று தூவுகிறார்கள்.

மின்சாரம்

7.அணைகளில் ஷேட் க்ளாத் பயன்படுத்துகிறார்கள். இவை தண்ணீர் செல்லும் திசையின் வேகத்தை குறைக்குமாம். அதோடு நேரடியாக சூரியக் கதிர்கள் விழுவதில்லை என்பதால் தண்ணீர் ஆவியாவதை குறைக்கலாம் என்கிறார்கள்.

8.தண்ணீரை ஸ்ப்ரேயிங் மூலம் காற்றில் கலக்கச் செய்கிறார்கள்.காற்றில் அதிக ஈரப்பதம் இருப்பதால் அணைகளில் தேங்கி வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் ஆவியாவதை தடுக்கலாம்.அதோடு இத்திட்டம் மழை பொழிவிற்கும் வழி வகுக்கும்.

9. ப்ளேங்கெட். அதாவது அணை நீரை பெரிய நீளமான பெட்ஷீட்டை கொண்டு மூட வேண்டுமாம். இவை 30 சதவீதம் வரை தண்ணீர் ஆவியாவதை தடுக்கும் என்கிறார்கள். இதிலேயே அல்ட்ரா தின் லேயர், பயோ டிகிரேடபிள், இன்விஸிபில் என்று பல வெரைட்டிகள் வருகிறது.

10.இயற்கையாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு நீரை மூடுதல். இலை, மரக்கட்டைகள், மரத்தின் கிளைகள், காகிதங்கள் போன்றவற்றின் மூலம் தண்ணிரை மூடுவதன் மூலம் தண்ணீர் ஆவியாவதை தடுக்கலாம் அதோடு அவை தண்ணீரில் வாழும் உயிரினங்களுக்கு உணவாகவும் இருக்கும்.


டிரெண்டிங் @ விகடன்