Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

கட்சிப் பதவி முதல் கைது வரை... டி.டி.வி. தினகரனின் அப்டேட்!

தினகரன்

மிழக அரசியலில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் அதிரடி நிகழ்வுகளில், மேலும் ஒரு முக்கியத் திருப்பமாக அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனைக் கைது செய்தது ஏன்? என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்ததைத் தொடர்ந்தே, தமிழக அரசியல் களம் பரபரப்பாக சூடுபிடித்தது.

ஜெ. மறைவுக்குப் பின் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றது, அ.தி.மு.க-வின் தற்காலிகப் பொதுச்செயலாளராக வி..கே சசிகலா தேர்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டது, முதல்வராக சசிகலா பதவியேற்க ஏதுவாக அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவராக அவரைத் தேர்ந்தெடுத்தது, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்பட 3 பேருக்கும் சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து, அவர் பெங்களுரு சிறையில் அடைக்கப்பட்டது என அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகளால் தமிழகம் களேபாரமானது.

இதற்கிடையே தன்னை கட்டாயப்படுத்தி சசிகலா குடும்பத்தினர் ராஜினாமா பெற்றதாகவும், தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் கூறி, ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாகப் பிரிந்தார், அ.தி.மு.க பிளவு பட்டது,

சசிகலா சிறை செல்லும் முன்பாக தனது ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியேற்க வழிவகுத்ததுடன், கட்சியை வழிநடத்த தனது அக்கா மகன் டி.டி.வி தினகரனை துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார்.

சசிகலா மீது தமிழக மக்களும், அ.தி.மு.க-வில் ஒருதரப்பினரும் கொண்டிருந்த வெறுப்பு, தினகரனின் திடீர் நியமனத்தால் மேலும் அதிகரித்தது. இந்தச் சூழ்நிலையில்தான், ஜெயலலிதா இரண்டுமுறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது. தினகரன் வேட்பாளராக போட்டியிட்டார். அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்ததால், அ.தி.மு.க அம்மா அணி என்று தினகரன் அணிக்கும், அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியாக ஓ.பன்னீர்செல்வம் அணியும் செயல்பட்டு வருகிறது.

இரு அணிகளுமே இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கோரிய நிலையில், தேர்தல் ஆணையமோ அந்தச் சின்னத்தை முடக்கி வைத்தது. இரு அணிகளுக்கும் ஆர்.கே.நகர் தேர்தலின்போது சுயேச்சைகளுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன், ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு தினகரன் அணி சார்பில் பெருமளவு பணம் வழங்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது,, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அமைச்சர்களுக்கு ஆர்.கே.நகர் தேர்தலுக்காக சுமார் 89 கோடி ரூபாய் அளிக்கப்பட்டதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டது.

இதுபோன்ற நிலையில், தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை, அ.தி.மு.க அம்மா அணிக்குப் பெறுவதற்காக 50 கோடி ரூபாய் லஞ்சப் பணம் பேசியதாகவும், இதற்கு முன்பணமாக 10 கோடி ரூபாய் சுகேஷ் சந்திர சேகருக்கு ஹவாலா மூலம் வழங்கப்பட்டதாகவும் தினகரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. டெல்லி காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். டெல்லியில் விடுதியில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை காவல்துறையினர் கைது செய்த பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தினகரனுக்கு சம்மன் வழங்கப்பட்டது.

டெல்லி காவல்துறையின் முன்னியில் கடந்த 22-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு தினகரனுக்கு சம்மன் வழங்கப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் பல மணி நேரம் டி.டி.வி தினகரனிடம் டெல்லி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். 4 நாட்களாக மொத்தம் 37 மணி நேரம் விசாரணைக்குப் பின்னர், சுகேஷ் சந்திரசேகருடன் தினகரன் தொலைபேசியில் பேசிய உரையாடலின் அடிப்படையில் அவரைக் கைது செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க பேரம் பேசியதாக டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கிலேயே டி.டி.வி.தினகரன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த சில நாட்களாகவே தினகரன் கைதாகலாம் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.

தினகரன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்தியுள்ளோம். அவரிடம் 100-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டிருந்தோம். ஆங்கிலத்திலும், தமிழிலும் கேட்கப்பட்டிருந்த அந்தக் கேள்விகளுக்கு தினகரன் ஆம், இல்லை என்பது போன்று பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதே கேள்விகளை சுகேஷிடமும் காவல்துறையினர் கொடுத்து பதில் வாங்கியுள்ளனர். அதன் அடிப்படையிலேயே தினகரன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினகரன் லஞ்சபேரம் பேசியதற்கான ஆதாரங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனாவையும் டெல்லி காவல்துறையினர் இந்த வழக்கில் கைது செய்துள்ளனர். அவர் மூலமாகவே சுகேஷ் சந்திராவுக்கு பணம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஆளும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக உள்ள டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டிருப்பது, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

-சி.வெங்கட சேது 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement