வெளியிடப்பட்ட நேரம்: 11:52 (26/04/2017)

கடைசி தொடர்பு:13:32 (26/04/2017)

“பேசும் பூமி... நடமாடும் சாம்பல்...!” - செர்னோபில்லும்... இந்திய அரசமைப்பும்! #Chernobyl

செர்னோபில் அணு உலை விபத்து

ங்களுக்கொரு காதல் இருக்கிறது. ஆதிக்காட்டிலிருந்து ஊற்றெடுத்து அதன் போக்கில் ஓடுமே ஒரு நதி, அதுபோலான காதல்; அந்தக் காட்டின் இலைகள் போர்த்திய நிலம், ஓர் ஈரப்பதத்துடன் இருக்குமே, அப்படியோர் ஈரமான காதல்; புறவுலகின் எந்த அழுக்குகளும் தீண்டாத காதல். ஆனால், விடிந்தும் விடியாத ஒரு நாளில் அந்த ஈரத்தின் மீது, அந்த நதியின் மீது ஒரு கதிர்வீச்சு தாக்குதல் தொடுக்கப்படுகிறது. இப்போது என்ன செய்வீர்கள்...? அந்த நதியை, அந்த ஈரத்தை... அந்தக் காதலைவிட்டு விலகுவீர்களா...? உங்களைத்தான் கேட்கிறேன்... அந்தக் கதிர்வீச்சால் எல்லாம் சிதைந்து, அது உங்களையும் சிதைக்குமென்றானபின் நீங்கள் என்ன செய்வீர்கள்...? உங்களால் உங்கள் காதலனை அல்லது காதலியைவிட்டு விலக முடியுமா..? 

நாம் என்ன செய்வோமென்று தெரியவில்லை. ஆனால், லூட்மில்லா தன் காதலன் வாஸ்யாவைவிட்டு விலகவில்லை... அவன் ஓர் அணு உலையாக மாறி, தன் அருகில் வருபவர்கள் மீது கதிர்வீச்சைப் பீய்ச்சி அடிக்கிறான் என்று தெரிந்தபின்னும், லூட்மில்லாவால் அவனைவிட்டு விலகமுடியவில்லை. மருத்துவர் லூட்மில்லாவிடம், “இந்த நிலையில் அவர் ஒரு மனிதர் இல்லை. அவர் ஓர் அணு உலை. அவரிடம் 1,600 ரோன்ட்ஜன் கதிர்வீச்சு இருக்கிறது. 400 என்பதே அதிகம். நீ ஓர் அணு உலையை இறுக அணைக்க விரும்புகிறாய். நீயும் அவருடன் இணைந்து எரிந்து சாவாய்...” என்று எச்சரித்தபின்னும், அவளால் வாஸ்யாவைவிட்டு விலகமுடியவில்லை.  

இன்னும் ஊடுருவிப் பார்த்தால், அவள் மட்டும் அல்ல... செர்னோபில்லில் அப்போது யாரும், யாரையும் விட்டு விலக விரும்பவில்லை. செல்ல பூனைக்குட்டிகள், உருளைக்கிழங்கு தோட்டம், வளர்ந்த வீடு என அனைத்தும் அந்த விபத்துக்குப் பின் கதிர்வீச்சை உமிழும் அணு உலையாக மாறிய பின்னும், எவரும் அங்கிருந்து விலக விரும்பவில்லை. அந்த மக்கள் சொல்கிறார்கள், “கதிர்வீச்சால் விஷம் நிறைந்த பிரதேசமாக மாறினாலும் இது என் வீடு. பறவைகள்கூடக் கூட்டைத்தானே விரும்பும்...? இது எங்கள் கூடு.” 

அணு உலையாக மாறினார்கள்!

செர்னோபில் அணு உலை விபத்து

“எப்படி அங்கு எல்லோரும் அணு உலையாக மாறினார்கள்...?” உலகமே அதிர்ந்து திரும்பிப் பார்த்து... என்ன தீர்வு என்று தெரியாமல் திக்கற்று நின்ற அந்த அணு உலை விபத்துக்குப் பின்தான். ஆம், டிராகுலாவின் கதைகள் கேட்டிருக்கிறார்களா...? அது நம் கழுத்தில் கடித்தால், நாமும்  டிராகுலாவாக மாறுவோம்தானே. அதுபோலத்தான் செர்னோபில்லில் அந்த விபத்து நடந்தபின், அந்தக் கதிர்வீச்சால் மாண்டு மிச்சமிருப்பவர்கள் எல்லோரும் ஓர் அணு உலையாக மாறிப்போனார்கள். அவர்களின், ஆன்மாகூடக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டிருந்தது.  

அந்த விபத்துக்குப் பின் அவர்களுக்கு வேறு எந்த அடையாளமும் இல்லாமல் போய்விட்டது. மருத்துவர்கள், பொறியாளர்கள், வணிகர்கள், ராணுவ வீரர்கள் ஏன் உக்ரேனியர் என அவர்களுக்கு எந்த அடையாளமும் இல்லாமல் போனது. அவர்கள் செர்னோபில்காரர்கள்; ஆம். அவர்கள் செர்னோபில்காரர்கள் மட்டும்தான். 

“ஏன் அச்சப்படுத்துகிறீர்கள்...?”

“சரி...  வாஸ்யா, பறவைகளின் கூடு, டிராகுல்லாவின் கதைகள் இப்போது ஏன்...? அந்த விபத்து நடந்து மூன்று தசாப்தங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அறிவியல் எவ்வளவோ உச்சங்களைத் தொட்டுவிட்டது. பின்.. மீண்டும் மீண்டும் ஏன் ஒரு தோல்வியின் கதைகளையே பேசிப் பயமுறுத்துகிறீர்கள்... என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. 

நிச்சயம். உங்களை அச்சப்படுத்துவதற்காக, ஒரு பீதியை உண்டாக்குவதற்காக அல்ல இந்தக் கதைகள். தோல்விகளிலிருந்து பாடம் கற்பதற்காகத்தான். ஆம், அணுசக்தி ஒழுங்காற்று வாரிய முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் தனது கட்டுரைகளில் தொடர்ந்து கூடங்குளம் அணு உலையில் இருக்கும் சிக்கலைப் பட்டியலிடுகிறார். இவர் சொல்கிறார், “கூடங்குளம் கேபிள் அமைப்புப் பணிகள் முடிந்துவிட்டன. ஆனால், அவை அதனை அமைப்பதற்கான விதிகளோடு பொருந்திப்போகவில்லை. கேபிள் தேர்வுத்தரம், மின்காந்த இடையீட்டில் இருந்து பாதுகாப்பு அல்லது அதன் இருத்தல் அமைப்பு போன்றவை, ரஷ்ய.. இந்திய அல்லது வேறெந்த தர நிர்ணயங்களோடும் பொருந்திப்போகவில்லை. அதனால், மின்காந்த இடையீடு பிரச்னை இன்னும் நீடிக்கிறது” என்கிறார். இவர் வெறும்  போராட்டக்காரர் அல்ல... அறிவியலாளர். ஆனால், இதைச் சரி செய்யாமல், இவர்களின் நியாயமான கவலைகளுக்குச் செவிமடுக்காமல் நாம் முன்னேறிச் சென்றுக்கொண்டிருக்கிறோம். அணு உலை 3-வது, 4-வது அலகு என விரிவாக்கும் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். 

வளர்ச்சி வேண்டும்தான்... மின்சாரம் வேண்டும்தான்... அறிவியல், விஞ்ஞானம் வேண்டும்தான். ஆனால், அதைவிட முக்கியம், அச்சம் தவிர்த்த வாழ்வு. அதை அந்தப் பகுதி மக்களுக்கு அளிக்காமல் நாம் என்ன செய்யப் போகிறோம்? 

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 48-வது பிரிவு, “சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் மற்றும் நாட்டின் காடுகளையும் வன உயிரினங்களைப் பாதுகாக்கவும் முனைதல் வேண்டும்” என்கிறது. ஆனால், நாம் நம் வளர்ச்சித் திட்டங்களின்போது, இதைக் கணக்கில்கொள்ளாமல் முன்னேறிச் செல்கிறோம். 

“வாழ விரும்புகிறேன்... விரும்புகிறோம்!”

செர்னோபில் அணு உலை விபத்து

 

செர்னோபில்காரர் ஒருவர் இப்படிச் சொல்வாராம், “பூமியில்தான் நாம் வசிக்கிறோம்... பூமியில் உள்ளதைத்தான் நாம் உண்கிறோம். அதனால் நாம் அனைவரும் பேசும் பூமி” என்பாராம். அந்த அணு உலை விபத்துக்குப் பின்  விலங்குகளை ‘நடமாடும் சாம்பல்’ என விளித்திருக்கிறார். ஆம், உண்மைத்தானே! நாம் அந்தப் பூமியை நாசப்படுத்தி, நம்மைநாமே நாசப்படுத்திக்கொள்கிறோம். சமூக விலங்காகிய நாம்... நடமாடும் சாம்பலாகத் திரிகிறோம்.

செர்னோபில்லில் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட விலங்குகளை வேட்டையாட வேட்டைக்காரர் ஒருவர், இவ்வாறாகச் சொல்கிறார், “உயிர் வாழக்கூடிய உயிரினங்கள் அனைத்துக்கும், பூச்சிகள் உட்பட, ஆன்மா என்பது இருக்கிறது. காயம்பட்ட மான், இதோ இங்கே விழுந்துக் கிடக்கிறது. நீங்கள் அதைக் கொல்வதற்கு முன் அதற்காக நீங்கள் வருந்த வேண்டும் என்று விரும்புகிறது. இறுதி தருணத்தில்  அதனிடம் ஒரு மனிதத்தன்மை காணப்பட்டது. அது, உங்களை வெறுத்திருக்கும் அல்லது உங்களைப் பார்த்து, ‘என்னை வாழவிடுங்கள்’ என வேண்டியிருக்கும்; ‘நான் வாழ விரும்புகிறேன்’ என்றிருக்கும். ஆம், அவை வாழ விரும்புகின்றன. நாம் வாழ விரும்புகிறோம். 

மனிதகுலத்தின் முந்தைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கவனமாகப் பயணிப்போம்!

(செர்னோபில் அணு உலை விபத்து 1986-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் நாள் நடந்தது. இன்று செர்னோபில் நினைவு நாள்)

பின் குறிப்பு:

செர்னோபில் விபத்தின் முழுப் பரிமாணத்தையும் அறிய செர்னோபிலின் குரல்கள் புத்தகத்தைப் படிக்கலாம்.
 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்