வெளியிடப்பட்ட நேரம்: 16:23 (26/04/2017)

கடைசி தொடர்பு:12:50 (27/04/2017)

சனி கிரகத்துக்கும் வளையத்துக்கும் இடையே "டெத் டைவ்" அடிக்கும் நாசா சாட்டிலைட்! #CassiniSaturn

மற்ற படங்களை பார்க்க 

சூரிய குடும்பத்தின் மிக அழகான கோள் என வர்ணிக்கப்படுவது சனி கோள் தான். அதன் வளையங்கள் தான் அதன் அழகே.  கெசினி விண்கலம் 1997ம் ஆண்டு சனிக்கோளில் ஆராய்ச்சி நடத்துவதற்காக விண்ணில் ஏவப்பட்டது. அதன் தொடர் ஆராய்ச்சிகள் மூலம் சனிக்கோள் மற்றும் அதன் துணைக்கோள்கள் பற்றி நிறைய தகவல்களை தொடர்ந்து நாசா வெளியிட்டு வந்தது.

இன்று கெசினி செய்துள்ள சாதனை என்பது மிகப்பெரிய விஷயமாகும். முதல் முறையாக ''டெத் டைவ்'' என்ற பாய்ச்சலை மேற்கொண்டுள்ளது. அதாவது சனிக்கோளுக்கும் , அதன் வளையத்துக்கும் நடுவே பயணிப்பது தான்.  ஏப்ரல் 26ம் தேதியான இன்று  முதல் முறையாக வளையத்துக்கும், கோளுக்கும் நடுவே பயணிக்க துவங்கியுள்ளது, இந்தப் பாதையில் நுழைவதற்கு பல்வேறு ஆயத்த பணிகளோடு களமிறங்கியுள்ளது கெசினி.

புகை தவிர பெரிய பொருட்கள் இடர்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தனது முதல் டைவ் முயற்சியை துவங்கியுள்ளது. இந்த டைவின் போது பூமியுடனான இணைப்பை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் பயணிக்கும் முதல் செயற்கைக்கோள் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

சனி

மற்ற படங்களை பார்க்க 

20 வருடங்களாக பயணித்து இந்த நிலையை கெசினி எட்டியுள்ளது. அக்டோபர் 15,1997ம் ஆண்டு புறப்பட்ட கெசினி , 2004ம் ஆண்டு 7 ஆண்டு பயணத்துக்கு பின்பு ஜூன் 30,2004 சனிக்கோளின் சுற்றுவட்ட பாதையை அடைந்தது. மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் உலகிலிருந்து மிக அதிக தொலைவில் தரையிறக்கப்படுவது 2005ம் ஆண்டு ஜனவரி 14ல் நடந்தது. 

கடந்த 10 வருடங்களில் பல அழகான புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது கெசினி. 2009ம் ஆண்டு சனிக்கோளின் துணைக்கோள்களில் திரவ பொருட்கள் இருப்பதை உறுதி செய்தது. 2015ம் ஆண்டில் உயிர்வாழ தேவையான ஆதாரங்கள் இருப்பதை உறுதி செய்தது. தற்போது துவங்கியுள்ள பயணம் மிகவும் முக்கியமான மற்றும் ஆபத்து நிறைந்த பயணம் என்று நாசா தெரிவித்துள்ளது. கிராண்ட் பைனல் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் பயணம் இன்று துவங்கியுள்ளது. சனி கோளுக்கும் வளையத்துக்கும் நடுவே 22 டைவ்களை செய்ய உள்ளது. இது சனிக்கோளுக்கு அருகே இதுவரை யாரும் காணாத விஷயங்களைக் காண உதவும். 

கெசினியின் இந்த டெத் டைவ் வெற்றியடைந்தால் சூரிய குடும்பத்தின் அழகான கோளை மேலும் அழகாக காணலாம். அதன் புகைப்படங்களையும், கெசினியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோவையும் வெளியிட்டுள்ளது நாசா. இந்த டெத் டைவில் புதிய மைல்கல்லை நாசாவும், விண்வெளி ஆராய்ச்சியும் தொடும் என்பது மறுக்க முடியாத விஷயமாகியுள்ளது. 
 


டிரெண்டிங் @ விகடன்