பீட்டா விரும்பும் அசைவம் இல்லா உலகம் எப்படி இருக்கும்? | Peta aims to Make the whole world go Vegan

வெளியிடப்பட்ட நேரம்: 10:53 (27/04/2017)

கடைசி தொடர்பு:16:09 (27/04/2017)

பீட்டா விரும்பும் அசைவம் இல்லா உலகம் எப்படி இருக்கும்?

அந்த சிறு விதை மண்ணில் விழுகிறது. காற்று அடிக்க, அடிக்க... மண் அதை மூடுகிறது. மழை வர இன்னும் சில காலங்கள் இருக்கின்றன. துளி நீர் தன் மேல் படும் நொடிக்காக உயிர் பிழைத்துக் காத்திருக்கிறது. பல இடர்ப்பாடுகளைக் கடந்து... அந்த மழை நீர் அதை நனைக்கும் நாள் வரை பிழைத்திருந்தது. நீர்த்துளிகள் பட, பட... அத்தனை மகிழ்ச்சி அந்த விதைக்கு. கொஞ்சம், கொஞ்சமாக துளிர்விடத் தொடங்குகிறது. புயல், மழை, வெயில் என எல்லாவற்றையும் கடந்து செடியாக உருவெடுக்கிறது. அந்த செடியில் பூக்கள் பூக்கின்றன... அது அத்தனை அழகு. சில நாட்களில் அந்தப் பூ, காயாக காய்க்கிறது. சில நாட்களிலேயே அந்தக் காய் கனியாக கனிகிறது.... அது அத்தனை சுவை. மனிதனின் அரக்கக் கைகள் அந்தச் செடியைப் பிடுங்குகின்றன. அது எத்தனையோ முயற்சித்தும், அதற்கு உதவிட பக்கத்திலிருக்கும் செடிகள் உதவிக்கு வந்தும் கூட தடுக்க முடியவில்லை. அந்தக் கொடூர கைகள் அதைப் பிடுங்கி விடுகின்றன. செத்த... சாகடிக்கப்பட்ட அந்தச் செடி இவன் ருசிக்க தட்டில் உணவாய், இறந்துக் கிடக்கிறது. செடி கொன்று தின்ற அவன் ஆரோக்கியமாக வாழ்ந்து இறந்தான். 

சைவ இந்தியாவை உருவாக்குவோம் - பீட்டா

இந்த வர்ணனையில் செடியின் வலி தெரிகிறதா? ... செடிகளுக்கும், கொடிகளுக்கும் உயிர் இருக்கிறது என்பது புரிகிறதா?, அதை மனிதன் கொடூரமாக கொன்று தின்கிறான் என்பது விளங்குகிறதா?... இதுவும் ஒரு கொலை என்பதை ஒப்புக் கொள்ள முடிகிறதா ?... இதையெல்லாம் பாவம் என்று ஒப்புக் கொள்ள முடியாவிட்டால்... ஆடு, மாடு, கோழிகளைக் கொன்று அசைவம் சாப்பிடுவதையும் பாவம் என்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. முன்னது இயற்கையின் விதி என்றால்... பின்னதும் இயற்கையின் நியதி தான். 

“இனி அரசு ஏற்பாடும் செய்யும் நிகழ்ச்சிகளில் அசைவ உணவுகள் பரிமாறக் கூடாது. ஏற்கனவே, ஜெர்மானிய அரசு இந்த ஆகச் சிறந்த முடிவை எடுத்துள்ளது. கருணையுள்ளம் கொண்ட, சூழலியல் அக்கறை கொண்ட, ஆரோக்கிய வாழ்வின் மீது நம்பிக்கைக் கொண்ட சைவ உணவுப் பழக்கம் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த முடிவை சாத்தியப்படுத்தி உலக நாடுகளுக்கெல்லாம் முன்னோடியாக இருக்க வேண்டும்..." என்று ஒரு கடிதத்தை "பீட்டா" சமீபத்தில் அனுப்பியதிலிருந்து தொடங்குகிறது இந்தக் கதையும், கதைக்கான காரணிகளும். 

சைவ இந்தியாவை உருவாக்குவோம் - பீட்டா

இந்தக் கடிதத்தோடு பீட்டா குறிப்பிட்டிருக்கும் சில தகவல்கள், இனி கறி கடைகளை நோக்கிப் போனால், நீங்கள் குற்றவாளி என்ற முத்திரையை முகத்தில் சுமக்க நேரலாம் என்ற அளவிற்கு உள்ளது. இந்திய தேசத்தில் நிலவும் கடுமையான பஞ்சத்துக்கு, பூமி வெப்பமயமாதலுக்கு, வானிலை மாற்றங்களுக்கு,  இயற்கைப் பேரிடர்களுக்கு என எல்லாவற்றிருக்கும் முக்கியக் காரணி மாமிசம் உண்பது என்ற கருத்தை முன்வைக்கிறது பீட்டா. 

- பீட்டாவின் கணக்குப்படி இந்தியாவில் 20 கோடி பேர் வரை ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், உலகின் 60% தானிய  உற்பத்தி கால்நடைகளுக்காகப் போடப்படுகின்றன. 

- ஒரு கிலோ மாட்டுக்கறியை உற்பத்தி செய்யும் செலவுக்கு, 10 கிலோ தானியங்களை உற்பத்தி செய்யலாம். 

- உலகில் வெளியிடப்படும் " பசுமை இல்ல வாயுக்களில்" 14.5% அளவிற்கான வாயுக்களுக்கு கால்நடை வளர்ப்பு காரணியாக இருக்கிறது. 

- எல்லாவற்றிருக்கும் மேலாக " இயற்கைச் சூழலுக்கான மாற்றத்தை நம் தட்டுகளில் இருந்து தொடங்க வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார்கள். அதாவது, சிகப்பு ரத்தத்தை நீக்கி, பச்சை ரத்தத்தை அதில் நிரப்பினால், பூமி செழிக்கும் என்பது பீட்டா முன்வைக்கும் கருத்து. 

புள்ளிவிவரங்களைப் படிக்கும்போதே புல்லரிக்கிறதா?. இங்குதான் சற்று கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. "வெள்ளையா இருக்கவன் பொய் சொல்லமாட்டான்" என்ற நம்பிக்கையில் இருப்பவர்கள், திருவள்ளுவரின் "எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்" குறளை மனதில் நிறுத்திக் கொண்டு மற்ற தகவல்களைப் படியுங்கள். 

சைவ இந்தியாவை உருவாக்குவோம் - பீட்டா

உதாரணத்துக்கு பீட்டாவின் கனவு நிறைவேறியே விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ( பீட்டாவின் கனவை அவர்களே நிறைவேற விடமாட்டார்கள் என்பது தனிக் கதை, தனி அரசியல்). என்ன மாதிரியான அடிப்படை பிரச்னைகள் வரும்?... உணவு சுழற்சியில் பெரும் குழப்பம் ஏற்படும், பொருளாதார வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை, உணவுப் பஞ்சம், நில மதிப்பு வீழ்ச்சி... எனத் தொடங்கி இறுதியில் மனித இனத்தின் வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும்.

உலகளவில் 130 கோடிக்கும் அதிகமானோர் கால்நடை வளர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளனர். இதில் 100 கோடி பேர் ஏழை, சிறு மற்றும் குறு விவசாய மக்கள். உலகமே சைவமாக மாற வேண்டுமென்ற பீட்டாவின் கனவு நிறைவேறும் என்றால், 100 கோடி மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிக்கப்படும். ஐநாவின் அறிக்கைப்படி உலக  ஜிடிபியில் 1.4% கால்நடை வளர்ப்புத் துறை பங்களிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், கால்நடை வளர்ப்பை அழிப்பதன் மூலம், உலகில் மிகப் பெரிய அளவிற்கு காலியிடங்கள் கிடைக்கும். அதை மனிதர்களுக்குப் பயன்படுத்திக்கலாம். உலகில் பிளாட்பாரவாசிகளே இருக்கமாட்டார்கள் என்ற ஆகப் பெரும் கருத்தை தெரிவித்துள்ளது பீட்டா. அடிப்படையான கேள்வி... நிலம் கிடைக்கும் சரி. மாமிசம் சாப்பிட்டவர்களுக்கு மாற்று உணவைக் கொடுக்க இங்கு தானிய உற்பத்தி இருக்கிறதா?, அப்படியே அதை செய்ய வேண்டுமென்றால், அதற்கான விவசாய நிலங்கள் இங்கிருக்கா? என்பதற்கான பதில் அவர்களிடம் இல்லை. 

பீட்டாவில் இங்கு கிரண்பேடிக்கள் தான் இருக்கிறார்கள். அவர்களிடம் இதற்கு மேல் பெரிதாக எதையும் எதிர்பார்த்திட முடியாது. பீட்டா முன்வைக்கும் விஷயங்கள் குறித்து சூழலியலாளர் நக்கீரன் அவர்களிடம் கேட்டோம்...

"கால்நடை வளர்ப்பு என்பது பசுமைக்குடில் வளி உற்பத்தியில் ஏறத்தாழ இருபது விழுக்காடு பங்கை அளிப்பதாக உணவு வேளாண் கழகம் (FAO) தெரிவிப்பது உண்மைதான். இதைக் காரணம் காட்டித்தான் இந்தத் திடீர் இந்துத்துவா சூழலியாளர்கள் இங்குக் குதிக்கிறார்கள். இங்கு ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கணக்கு மேற்கத்திய பாணியின் பண்ணைமுறை கால்நடை வளர்ப்புக்குதான் பொருந்தும். இதை இந்திய நாட்டின் பாரம்பரிய கால்நடை வளர்ப்பு முறையோடு பொருத்துவது அபத்தம். இதை ஓர் எடுத்துக்காட்டோடு காணலாம். 

பீட்டாவுக்கு எதிராக குரல் கொடுக்கும் நக்கீரன்ஓர் ஐக்கிய அமெரிக்கர் ஆண்டொன்றுக்கு 1000 கிலோ தானியத்தை உண்ணுகிறார் என வைத்துக் கொள்வோம். அதேவேளை ஓர் இந்திய நாட்டவர் உண்ணும் உணவு ஆண்டொன்றுக்கு 190 கிலோதான். மனித வயிறுகளின் கொள்ளளவு ஒன்றுதானே? பின் எப்படி இது சாத்தியம் எனத் தோன்றலாம். ஐக்கிய அமெரிக்க நாட்டவர் நேரடியாக நுகர்வது வெறும் எழுபது கிலோ மட்டுமே. எஞ்சிய 930 கிலோ தானியத்தை ஆடு மாடு கோழி இவைகளுக்கு அளித்து அவற்றிலிருந்து கிடைக்கும் 120 – 150 கிலோ இறைச்சி, பால் முட்டை ஆகியவற்றை அவர் உணவாக உண்கிறார்.

ஆனால் 190 கிலோ தானியத்தை நேரடியாக உண்ணும் இந்திய நாட்டைச் சேர்ந்தவர் தன் நுகர்வுக்குப் பின் எஞ்சிய தானியங்களின் பகுதியையும், பிற பயிர்களின் பகுதியையும்தான் தம் கால்நடைகளுக்கு அளிக்கிறார். வைக்கோல், தவிடு, குருணை, புண்ணாக்கு, பருத்திக்கொட்டை என இவை அளிக்கப்படுகிறது. இதுதவிர மனிதருக்கு உணவாகப் பயன்படாத தாவரங்களும் இலைதழைகளும்தான் அவற்றின் முதன்மையான உணவு. வீட்டுக்கு நாலு மாடுகள் வைத்திருக்கும் எளிய மக்கள் பெரும்பாலும் மேய்ச்சலை நம்பியே வளர்ப்பவர்கள். மேலும் இவர்களுடைய மாடுகள் தானியங்களை உண்ணுவதில்லை. இவ்வகையில் பசுமைக்குடில் வளி வெளியீடு எங்கு நடக்கிறது என்பதை விளக்க வேண்டும். 

கால்நடைகள் பசுமைக்குடில் வளியை வெளியிட்டு புவிவெப்பமயமாதலுக்குக் காரணமாக இருக்கிறது என்றால் அதில் கோமாதாக்களும் அடக்கம்தானே? .எந்தப் பசுவின் பின்புறத்தை இந்துத்துவா ஆட்கள் புனிதமாகக் கருதி கும்பிடுகிறார்களோ அது வெளியிடும் குசுதான் மீத்தேனின் உற்பத்தி இடம். ஒரு பசு ஆண்டொன்றுக்கு 70 - 120 கிலோ மீத்தேனை இவ்வாறு வெளியிடுகிறது. இரு பசுக்கள் இணைந்து ஓராண்டுக்கு இவ்வாறு வெளியிடும் மீத்தேனின் அளவு, ஆண்டொன்றுக்கு ஒரு கார் வெளியிடும் கரிக்காற்றுக்கு (CO2) சமம். கரிக்காற்றைவிட மீத்தேன் 23 மடங்கு ஆபத்தானது. இதற்காகப் புவிவெப்பத்தைத் தணிக்கும் பொருட்டு மீத்தேனை வெளியிடும் அனைத்து பசுக்களையும் கொன்று விடுவோம் எனும் அசட்டுக் கோரிக்கை வைக்கப் பீட்டாவால் முடியுமா?

பசுவை மூலதனமாக வைத்து பதஞ்சலி நெய் வணிகம் செய்யும் பாபா ராம்தேவிடம் ஏன் பீட்டா இக்கோரிக்கையை வைக்கவில்லை? அவருடைய பண்ணையிலிருக்கும் பசுக்களிடம் இருந்து எவ்வளவு மீத்தேன் உற்பத்தியாகும்? பீட்டாவின் அடிப்படைக் கொள்கையான பால் என்பது புலால் உணவு என்பதை இந்திய பீட்டா ஏன் இந்துத்துவ அமைப்புகளிடம் வலியுறுத்துவதில்லை? இவர்கள் முதலில் ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பாலோ அல்லது பால் பொருட்களோ பயன்படுத்தக் கூடாது என்ற கோரிக்கையை முதலில் வைக்கட்டும். ஏன் முதலில் மோடி அரசிடமாவது வைக்குமா? வைக்காது. ஏனெனில் எல்லோருக்கும் தெரிந்த அதே பதில்தான். அதனால்தான் இந்துத்துவ பீட்டா புலால் உணவை மட்டுமே குறி வைக்கிறது." என்று கோபமாக சொல்லி முடிக்கிறார். 

பீட்டா சொல்வதை  கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டிய அவசியமில்லை.  உலகம் முழுக்கவே பல மட்டத்திலிருந்தும் பீட்டாவின் முரண்பட்ட கருத்துக்களுக்கு கண்டனங்கள் வலுத்து வரவே செய்கின்றன. உலகிலேயே வீகன் உணவுப் பழக்கம் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் முன்னணியில் இருப்பது இஸ்ரேல். யூதர்கள் நிறைந்த நாடு. ஜெர்மனியிலும் அதிகளவிலான மக்கள் இருக்கிறார்கள்.

சரி... இதற்கெல்லாம் தீர்வு தான் என்ன.?

சைவ இந்தியாவை உருவாக்குவோம் - பீட்டா

"வீகன் டயட்டைக் கொண்டுவருவது வலதுசாரிகளின் கொடூரக் கனவு என்றால், அதிகப்படியான மாமிசத்தைப் புசைப்பது எங்கள் உரிமை என்று இடதுசாரிகள் பிடிவாதமாக இருப்பதும் நிறைவேறாத கனவாகத் தான் இருக்கும். இரண்டிற்கும் மத்தியில் பயணிக்கப் பழக வேண்டும். இந்தப் பிரச்னையைக் களையத் தொடங்க வேண்டிய இடம் ஏழைகளின் தட்டு அல்ல... கால்நடை வளர்ப்பை பெரும் வியாபாரமாக்கி பணம் பார்க்கும் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் இருந்து தான்" என்பது நடுநிலையாளர்களின் வாதமாக இருக்கிறது. 

சைவ இந்தியாவை உருவாக்குவோம் - பீட்டா

"சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்களுக்கு வீகன் டயட் சார்ட் பார்த்து சாப்பிட நேரமும் இல்லை, அதற்கான பொருளாதார வசதியும் இல்லை. அவர்களுக்கான புரோட்டினும், நியூட்ரிஷனும் இன்னபிற ஊட்டச்சத்துக்களும் கிடைப்பது மாமிசத்தில் தான். காய்கறிகளிலேயே கிடைக்கும் என்றால், பூச்சி மருந்துகள் அடிக்கப்படாத காய்கறிகளை வாங்கும் வசதி சாமானியர்களுக்கு இல்லை. அசைவ உணவு உண்பதைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தால், அசைவத்தின் விலையை உயர்த்துங்கள் பரவாயில்லை. அதேசமயம், ஆரோக்கியமான காய்கறிகளை எளியவர்களும் வாங்கும் விலைக்கு கொண்டு வாருங்கள். பின்பு, உங்கள் மேல்வர்க்க புத்தியிலிருந்து வெளிப்படும் இயற்கைக் காதலை வெளிப்படுத்தலாம்" என்று சொல்லியிருக்கிறார் மார்கோ ஸ்ப்ரிங்க்மேன் என்கிற உணவு ஆராய்ச்சியாளர். 

"மாமிசம் உண்ணாமல் இருப்பது என்பது மனிதனின் முடிவாக இருக்கலாம், ஆனால், மாமிசம் உண்பது மனித இனத்தின் இயல்பு என்பதை மறந்திடக் கூடாது." 

பீட்டாவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்... மின்னஞ்சல் மூலம் அவர்கள் அளித்த பதில்கள்...

1. மிருகவதையைத் தடுக்க வேண்டுமென்றால் நீங்கள் எதிர்க்க வேண்டியது கார்ப்பரேட்களைத் தானே. எளிய மக்களின் தட்டிலிருக்கும் உணவை ஏன் எதிர்க்கிறீர்கள்?

" எல்லாவற்றிற்கும் சும்மா கார்ப்பரேட் மீது குற்றச்சாட்டுகளை வைப்பது சரியாக இருக்காது. மாற்றங்கள் தனி மனிதர்களிடமிருந்து வரவேண்டும். இங்கு இறைச்சியின் தேவை அதிகமாக இருப்பதால் தான், கார்ப்பரேட் கம்பெனிகள் அந்த வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். மக்கள் இறைச்சி சாப்பிடுவதைக் குறைத்தால், பெரு நிறுவனங்கள் தானாக அதைக் குறைத்துக் கொள்ளும். கேஎஃப்சி, சுகுணா சிக்கன் போன்ற நிறுவனங்களிடம் இறைச்சி தயாரிப்பில் கடுமையான சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்துள்ளோம்."

2. வீகன் உணவு முறையை முன்வைக்கும் நீங்கள், பால் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் பாபா ராம் தேவின் "பதஞ்சலி" நிறுவனத்தை எதிர்த்து ஏதாவது செய்திருக்கிறீகளா ?
"நாயின் பால் நாய்க்குட்டிகளுக்குத் தான். அது போல பசுவின் பால் கன்றுகளுக்குத் தான். பசும்பால் குடிப்பதால் மனிதர்களுக்கு பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுகின்றன." ( கடைசி வரை பதஞ்சலி குறித்த கேள்விக்கு எந்த நேரடியான பதிலும் கிடைக்கவில்லை )

3. ஏழைகளுக்கு ஊட்டச்சத்து கிடைப்பது கறியிலிருந்து தான். ஆர்கானிக் காய்கறிகளின் விலை சாமானியர்களுக்கு ஏற்றதாக இல்லை. இதை எப்படி சமன் செய்வீர்கள் ?

" உலக சுகாதார நிறுவனம் 50% அளவிற்கான ஊட்டச்சத்து குறைபாட்டிற்கான காரணம் குடலில் ஏற்படும் புழுக்கள், தொடர் சீத பேதி, திறந்தவெளியில் மலம் கழிப்பது, அசுத்தமான தண்ணீரைக் குடிப்பது போன்ற காரணங்கள் தான் என்று சொல்லியிருக்கிறது. ஏழை மக்களுக்கு அசைவ உணவுகளிலிருந்து தான் ஊட்டச்சத்து கிடைக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, அவர்களின் ஊட்டச்சத்து பிரச்னை அவர்கள் உணவில் இல்லை. அசுத்தமான சூழலில், சுற்றத்தில் இருப்பதால். அதை அவர்கள் சுத்தமாக வைத்துக் கொண்டாலே போதுமானதாக இருக்கும்." 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்