வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (27/04/2017)

கடைசி தொடர்பு:18:29 (27/04/2017)

'ஒற்றை தலைமை'யை இழக்கும் அ.தி.மு.க... எதிர்காலம் என்ன?

எம்.ஜி.ஆர். கருணாநிதி

தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட காலம் அது. புதிய கட்சியைத் துவக்க எம்.ஜி.ஆர் திட்டமிட்டார். அப்போது கருணாநிதியையும், எம்.ஜி.ஆரையும் தனியாக சந்தித்துப் பேச வைத்தால் பிரச்னை தீர்ந்து விடும் என நினைத்து அதற்கு தூதுவர்களாக சிலர் இயங்கினர். ஆனால் அதை இரு தரப்பினரும் ஏற்கவில்லை. கட்சி உடைந்தது. அ.தி.மு.க. என்ற புதிய கட்சியை எம்.ஜி.ஆர். துவக்கினார்.

அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். துவக்கிய சில ஆண்டுகளுக்குப் பின்னர், அ.தி.மு.க. - தி.மு.க.வை இணைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டது. கட்சி பொறுப்பை கருணாநிதியும், ஆட்சிப் பொறுப்பை எம்.ஜி.ஆரும் கவனித்துக்கொள்ளும் ஏற்பாடு அது. ஆனால் இதையும் இருவரும் ஏற்கவில்லை. இருவரும் இணையாமல் எதிர் அரசியலையே செய்தனர். ஆளுங்கட்சியாக அ.தி.மு.க.வும், எதிர்கட்சியாக தி.மு.க.வும் செயல்பட்டது.

கருணாநிதி

வெறுப்பு அரசியலுக்கிடையே இருந்த புரிதல்

இரு கட்சிகளிடம் இருந்த பெருவாரியான வாக்கு வங்கி, வேறு கட்சியையோ, தலைவரையோ வளர விடாமல் பார்த்துக்கொண்டது. தமிழகத்தை தொடர்ச்சியாக சிலமுறை ஆண்ட காங்கிரஸ் கரைந்து போனதும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வளர்ச்சியை கண்ட பி.ஜே.பி. தமிழகத்தில் கால் பதிக்க முடியாமல் போனதும் இதனால் தான்.  எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் பேசிக்கொண்டே இந்த முடிவை எடுத்திருப்பதாக கூட அப்போது கிசுகிசுக்கப்பட்டது.

இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக்கொண்டனர். எம்.ஜி.ஆர் காலத்துக்குப் பின்னர், கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ஜெயலலிதாவும், கருணாநிதியும் நேருக்கு நேர் சந்திப்பதை அறவே தவிர்த்தனர். அந்தளவு வெறுப்பு அரசியலை கடைபிடித்தனர். ஆனால் இரு கட்சிகளுக்குமிடையே ஒரு புரிதல் இருந்ததை உணர முடிந்தது. அது தான் வேறு கட்சிகளை தமிழகத்தில் கால் பதிக்க முடியாமல் பார்த்துக்கொண்டது.

மிகக் கடுமையான நெருக்கடி கால கட்டங்களில்கூட தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் மாற்று ஏற்பட்டதில்லை. தமிழகத்தில் மூன்றாவது அணி எதுவும் வலுப்பெற்றதே இல்லை. மூன்றாவது பெரிய கட்சியாக உருவான தே.மு.தி.க. அ.தி.மு.க.வுடன் அணி சேர்ந்து தேர்தலை சந்தித்து பிரதான எதிர்கட்சியானது. ஆனால் அதன் பின்னர் அந்த கட்சி தேய்ந்து போனது. வேறு கட்சிகள் கால்பதிக்க முடியாத அளவுக்கு தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்கள் வியூகங்களை அமைத்திருந்தன என்று தான் சொல்ல வேண்டும்.

மோடி ஜெயலலிதா

'ஒற்றை தலைமை' தான் அ.தி.மு.க.வின் பலம்

அ.தி.மு.க.வின் மிகப்பெரிய பலம் ஒற்றைத் தலைமை. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என கட்சிக்கு இருந்த ஒற்றைத்தலைமை வேறு கட்சிகள் ஆதிக்கம் செய்யாமல் பார்த்துக்கொண்டன. சொத்துக்குவிப்பு வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தபோது, நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பி.ஜே.பி. கூட்டணி அமைக்க விரும்பியது. ஆனால் அதை ஜெயலலிதா அனுமதிக்கவில்லை. அதன்பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்து வீட்டிலேயே இருந்தார் ஜெயலலிதா. அப்போது ஜெயலலிதாவை தேடிவந்து மத்திய அமைச்சர்கள் சந்தித்தார்கள். வழக்கின் மேல்முறையீட்டில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்ட பின்னர் பிரதமர் மோடியே ஜெயலலிதாவை வீடு தேடி வந்து சந்தித்தார்.

'2016 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. உடன் கூட்டணி சேர விரும்பியது பி.ஜே.பி. அதைத்தான் பிரதமரும், மத்திய அமைச்சர்களும் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசி வருகிறார்கள்' என அப்போது சொல்லப்பட்டது. ஆனால் 2016 தேர்தலிலும் பி.ஜே.பி.க்கு கூட்டணி வாய்ப்பு கிடைக்கவில்லை. கொள்கை ரீதியாக பி.ஜே.பி.யுடன் தி.மு.க. விலகி நிற்கும் சூழலில், ஒத்த கருத்துடைய கட்சியாக இருந்த போதும், தமிழகத்தில் பி.ஜே.பி. காலூன்றுவதை அ.தி.மு.க. விரும்பவில்லை என்பதைத்தான் ஜெயலலிதாவின் நடவடிக்கை உணர்த்தியது. ஜெயலலிதாவை மீறி பி.ஜே.பி.யால் தமிழகத்தில் கால் பதிக்க முடியவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் எப்படியேனும் தமிழக சட்டமன்றத்தில் தங்கள் கணக்கை துவங்கி விட வேண்டும் என எதிர்பார்த்த பி.ஜே.பி.க்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.

ஜெயலலிதா

ஜெயலலிதா வழியில் சசிகலா...

அ.தி.மு.க.வில் நிலவும் ஒற்றை தலைமை தான் தமிழகத்தில் பி.ஜே.பி. கால் பதிக்க இருந்த மிகப்பெரிய சிக்கல் என சொல்லப்பட்டதும் உண்டு. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் சசிகலா கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துவார் எனும்போது மீண்டும் ஒரு ஒற்றை தலைமை அ.தி.மு.க.வில் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே நிழல் அதிகாரமாக இருந்தவர், நிஜத்தில் அதிகாரம் செலுத்தியது அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கோ, அமைச்சர்களுக்கோ புதியது இல்லை. சசிகலாவுக்கு மக்கள் ஆதரவு என்பது இல்லாத போதும், கட்சியில் அமைப்பு ரீதியாக மிகப்பெரிய ஆதரவு இருந்ததை ஏற்கத்தான் வேண்டும். சசிகலா எனும் ஒற்றைத் தலைமையில் கட்சி இயங்கத்துவங்கியது.

கட்சி வரலாற்றில் அ.தி.மு.க. கடுமையான நெருக்கடிகளை சந்தித்திருக்கிறது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர், அ.தி.மு.க.வில் பெரும் பிளவு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட அதிகாரப்போட்டியால் சின்னம் முடக்கப்பட்டது. ஆனால் அது தற்காலிகமானதாகவே இருந்தது. இது தவிர மேலும் சிறிய பிளவுகள் ஏற்பட்டன. ஆனால் அவை கட்சியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

சசிகலா

30 ஆண்டுக்கு பின்னர் மீண்டும் நெருக்கடி !

இந்நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பின்னால் கட்சி மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்திருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க.வை வழிநடத்தப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றாலும், கட்சியையும், ஆட்சியையும் சசிகலாவே வழிநடத்தினார். ஒரு கட்டத்தில் சசிகலாவே முதல்வர் பதவியேற்பார் என அறிவிக்க, சசிகலாவுக்காக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் ஓ.பன்னீர்செல்வம். அதுவரை சசிகலாவின் கண்ணசைவில் இருந்து வந்தவர், திடீரென சசிகலாவுக்கு எதிராக திரும்பினார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் இடமாறினர்.

ஆனாலும், கட்சியில் மிகப்பெரிய பிளவு ஏற்படவில்லை. பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் என 95 சதவீதம் பேர் சசிகலாவுக்கு ஆதரவாகவே இருந்தனர். சசிகலா முதல்வர் பொறுப்பேற்பார் என சொல்லப்பட... திடீரென ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்தது. இதில் குற்றவாளி என சசிகலா உள்ளிட்டோர் சிறைக்குச் செல்ல... சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன் துணைப்பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு, கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தத் துவங்கினார். இந்நிலையில் இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தமிழக அமைச்சர்கள்

ஒற்றை தலைமையை இழக்கும் அ.தி.மு.க.?

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மட்டுமல்ல... சசிகலா, தினகரனும் கூட அ.தி.மு.க.வின் ஒற்றை தலைமையாகத்தான் இருந்தார்கள். ஒற்றை தலைமையாக கட்சியை வழிநடத்தும் ஆற்றலை பெற்றிருந்தார்கள். பெரும்பான்மை கட்சி நிர்வாகிகளை தங்கள் கண்ணசைவில் இயங்க வைத்தனர். இந்நிலையில் தற்போது அப்படிப்பட்ட ஒரு சூழல் மறைந்திருக்கிறது.

இப்போது கட்சியில் யார் தலைமை ஏற்கப் போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. சசிகலா தரப்பு, பன்னீர்செல்வம் தரப்பு என பிரிந்து நின்ற அணிகள் ஓரணியில் சேரத் துடிக்கின்றன. சசிகலா அணி, தினகரன் அணியாகி... இப்போது யார் தலைவர் என தெரியாத அணியாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். தம்பிதுரை பேசுகிறார். ஜெயக்குமார் பேசுகிறார். செங்கோட்டையன் பேசுகிறார். ஆனால் இவர்களில் யார் தலைவர் என்பது மட்டும் தெரியவில்லை.

நிதியமைச்சராக உள்ள ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வம் வந்தால் நிதியமைச்சர் பதவியை தர தயாராக இருக்கிறோம் என்கிறார். சசிகலாவின் படங்களை அகற்ற வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பு நிபந்தனை விதித்தால் அதையெல்லாம் நாங்கள் செய்ய வேண்டியதில்லை என மூத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொன்ன மறுநாளே சசிகலாவின் படங்கள் அகற்றப்படுகின்றன. யார் சொல்லி இது நடக்கிறது என்பது தெரியவில்லை. யார் சொன்னால் நடக்கும் என்பதும் தெரியவில்லை.

தமிழக அமைச்சர்கள்

12 பேரிடம் 122 பேர் கெஞ்ச இது தான் காரணம்...!

எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், தம்பிதுரை, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார் என பலர் கட்சியை வழிநடத்துகிறார்கள். சசிகலாவுக்கு ஆதரவாக பேசுகிறார் ஒருவர். கட்சி நலன் தான் முக்கியம் சசிகலா அவசியமில்லை என்கிறார் இன்னொருவர். அ.தி.மு.க.வின் பலமான ஒற்றைத் தலைமையை இழந்து பல்வேறு தலைமைகளுடன் பலவீனமாக காட்சியளிக்கிறது அ.தி.மு.க. 122 எம்.எல்.ஏ.க்களையும் 95 சதவீத பொதுக்குழு உறுப்பினர்களையும் தங்கள் பக்கம் கொண்ட தரப்பு, 12 எம்.எல்.ஏ.க்களையும், 5 சதவீத பொதுக்குழு உறுப்பினர்களையும் கொண்ட தரப்பிடம் கெஞ்ச நேர்ந்ததற்கு காரணம் இது தான்.

அ.தி.மு.க. இதுவரை பல சிக்கல்களை சந்தித்துள்ளது. இரு அணியாக பிரிந்து இரு ஆண்டுகள் சின்னத்தை பறிகொடுத்ததும் உண்டு. போட்டி பொதுக்குழுவை நடத்தி நெருக்கடி கொடுத்ததும் உண்டு. ஆனால் அப்போதெல்லாம் கட்சியைக் காப்பாற்றியது கட்சியின் ஒற்றை தலைமை தான். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும், கருணாநிதியும் தமிழகத்தில் மற்ற கட்சிகளுக்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொண்டார்கள். அதற்கு காரணமும் ஒற்றைத் தலைமை தான். இப்போது அதை இழந்து அ.தி.மு.க. பரிதாபமாக காட்சியளிக்கிறது.

அ.தி.மு.க.வுக்கு இது மிகப்பெரிய வீழ்ச்சி. இது தற்காலிகமானதா, நிரந்தரமானதா என்பதைக் காலம் தான் தீர்மானிக்கும். ஒருவேளை அ.தி.மு.க. வீழ்ந்தால், அது தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். அதைத்தான் சில கட்சிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. இதில் முதலிடம் பி.ஜே.பி.க்கு.

- ச.ஜெ.ரவி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்