வெளியிடப்பட்ட நேரம்: 11:33 (28/04/2017)

கடைசி தொடர்பு:11:46 (28/04/2017)

பா.ம.க டார்கெட் - 3...தைலாபுரம் திட்டம்!

பா.ம.க

தினகரன் கைது, சசிகலா பேனர் நீக்கம், ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணி பேச்சுவார்த்தை என்று ஆளும் கட்சியில், பரபரப்பு பட்டையைக் கிளப்பிவர, மறுபக்கம் அனைத்துக் கட்சி கூட்டு இயக்கம், விவசாயிகளுக்கான வேலை நிறுத்தம் என்று தன் இயல்புக்கு, ஜரூராகப் பயணித்துக்கொண்டிருக்கிறது தி.மு.க. இவையிரண்டும் ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் இயங்க, நாளைய முதல்வர் கனவில் இருக்கும் பா.ம.க-வுக்குள் என்ன நடக்கிறது?

'' 'பா.ம.க டார்கெட் - 3' என்ற இலக்கோடு, வேகத்தோடு செயல்படத் தொடங்கியுள்ளோம்'' என்கின்றனர் வட மாவட்டங்களில் நம் கண்ணில்பட்ட அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள். அதுகுறித்து தொடர்ந்து விரிவாக நம்மிடம் பேசினர்.

ராமதாஸ் திட்டம் :

''எங்க டாக்டரய்யா, தைலாபுரத்தில் ஓய்வெடுக்குறதா நினைக்கிறாங்க. ஆனா, அவர் தொடர்ந்து அரசியல்ரீதியாச் செயல்பட்டுக்கிட்டே இருக்கார். பா.ம.க-வின் அரசியல் போக்குகளை 24 பேர் கொண்ட நிர்வாகக் குழு தீர்மானிக்கும். அதுல, கோ.க.மணி உள்ளிட்ட தலைவர்கள் இருப்பாங்க. அவங்ககிட்ட தொடர்ந்து அய்யா அடிக்கடி ஆலோசனை செஞ்சபடி இருக்கார். தமிழ்நாட்டுல நடக்கும் அனைத்து அரசியல் அசைவுகளையும் கூர்மையா கவனித்து வர்றார் என்பதோடு இல்லாம, அதற்கெல்லாம் ரியாக்ட் பண்றார் என்பதைத் தினமும் வெளிவரும் அவரது அறிக்கைகளைப் பார்த்தாலே புரியும். துணைவேந்தர் நியமனங்கள்ல ஊழல், அரசு ஊழியர்கள் பிரச்னை, மதுக்கடை மூடுதல், தினகரன் கைது என எதையும் விடுறதில்லை. மக்களோட பிரச்னைகளைப் பேசுறது மூலம், அவங்களோட நினைவுகள்ல தொடர்ந்து பா.ம.க-வை நிலைநிறுத்தி வர்றார். 

தினகரன் ஆடாத ஆட்டமா?:

அரசியல் கட்சிகளோட செயல்பாடுகளையும் கவனித்து அவ்வப்போது கமென்ட் பண்ணவும் தயங்குறதில்லை. ஆளும் கட்சிக்குள்ளே நடக்கும் கூத்துகளைப் பார்த்துக்கிட்டிருந்தவர், தினகரன் கைதின்போது, 'ஆர்.கே.நகரையே விலைக்கு வாங்கிடலாம்னு நினைச்சாரோ, அவர் போடாத ஆட்டமா... சசிகலா சிறைக்குப்போன சுவடு மறையுறதுக்குள்ள தினகரன் ஆட்சியமைக்கணும்னு துடிச்சா எப்படி... இதெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மாவா இருக்க முடியும்' என்று நிர்வாகிகள் குழுகிட்ட கிண்டலடிச்சுள்ளார். 

ராமதாஸ்

நோ பி.ஜே.பி.!

சசிகலா அணியை அய்யா கடுமையாகச் சாடினாலும், ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் கொண்டு ஒரு பொம்மை ஆட்சியை, பி.ஜே.பி நிறுவிக்கிட்டிருப்பதை நன்கு உணர்ந்தேயுள்ளார். தைலாபுரத்துல மூத்த தலைவர்கள்கிட்ட பேசியபோது, 'ஜெயலலிதா மரணம், செயல்படாத கருணாநிதி என தற்போதைய தமிழ்நாட்டு வெற்றிடத்தை பி.ஜே.பி நிரப்பணும்னு பாக்குறாங்க. அதுக்கு நாம வாய்ப்புக் கொடுத்திடக் கூடாது. இப்போதைக்குத் தேர்தல் வருவதை பி.ஜே.பி விரும்பலை. அதனால்தான் ரெய்டு, கைது என்று பல நெருக்கடிகளைக் கொடுத்து, அ.தி.மு.க-வைத் தமது கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டுவருது. அவங்க திட்டமெல்லாம், 2019 நாடாளுமன்றத் தேர்தல்தான். அ.தி.மு.க-வுடன் இணைந்து வலுவா தமிழ்நாட்டுல கால் ஊணுவதுதான். அதுக்கு நாம இடம் கொடுத்துடக் கூடாது' என்று எச்சரிக்கை செஞ்சிருக்கார். 

பா.ம.க-வினரை வளைக்கும் பி.ஜே.பி.:

2014 நாடாளுமன்றத் தேர்தல்ல பி.ஜே.பி கூட்டணியில அங்கம் வகிச்சது, திராவிடக் கட்சி எதிர்ப்பு போன்ற காரணங்களைவெச்சு, பா.ம.க-வினரை வளைச்சுப்போட பி.ஜே.பி முயற்சி செஞ்சது.  திருக்கழுக்குன்றத்தில ஆர்.எஸ்.எஸ் பிரமுகரான ஆர்.பி.வி.எஸ்.மணியன் 'ஷத்திரிய சாம்ராஜ்ஜியம்'னு ஒரு கூட்டம் நடத்தினார். அதுல, 'வன்னியர் சமூகத்தினர் இடஒதுக்கீட்டுக்காகக் கையேந்துவதுக்குப் பதில், வேலூர் பஜாருல நிறையக் கடைகளை முஸ்லிம்ங்க வெச்சிருக்காங்க. அவங்ககிட்ட, வன்னியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கடைகளைக் கொடுங்க' எனப் பலவற்றைப் பேசியுள்ளார். மேலும், பல மாவட்டங்கள்ல வன்னியர்கள், பா.ம.க-வினரை உள்ளிழுத்து, ஷத்திரிய சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்த முயற்சிக்கிறாங்க. இதை அய்யா அறிந்து, 'நாம எல்லா மத மக்களிடமும் நல்லிணக்கத்தோடு இருக்குறோம். அதைப் பிரிக்கத் திட்டமிடுறாங்களானா கேட்டார். மேலும் 'இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசுற, இதுபோன்ற அமைப்புகள் கூட்டத்துல யாரும் பங்கேற்கக்கூடாது'னு சொன்னதுடன், அதுல பங்கேத்த பா.ம.க-வினரை அழைச்சிக் கடுமையா டோஸ்விட்டார். 'வேறு எந்த மாவட்டமும் கலந்துக்கக்கூடாது'னு , அனைத்து மாவட்ட பா.ம.க நிர்வாகிகள்கிட்ட வலியுறுத்தியுள்ளார். 

அன்புமணி

அப்பா போல ஸ்டாலின் இல்லை:

சில பொதுப் பிரச்னைகள்ல பிற அமைப்பு, கட்சிகளுடன் இணைந்து செயல்பட அய்யா விருப்பமாத்தான் இருக்கார். ஆனா, விவசாயிங்க பிரச்னைக்காக அனைத்துத் கட்சிக் கூட்டத்தை தி.மு.க கூட்டியதில், மு.க.ஸ்டாலின் செயல்பாடு மீது அதிருப்தி அடைஞ்சார். 'அழைப்பிதழை துரைமுருகன் போன்ற சீனியர்கிட்ட கொடுத்துனுப்புவதுதான் சரியான மரபா இருக்கும். அவங்கப்பா நினைவோடு இருந்திருந்தா இதுபோலச் செஞ்சிருக்க மாட்டார். மரபு தெரிஞ்சவர் அவர்' என்று வருத்தப்பட்டார் அய்யா. ஸ்டாலின் செயல் தலைமையால தி.மு.க-வுடனான இடைவெளியும் அதிகமாகிடிச்சி. 

'அய்யா இலக்கு - 3':

திராவிட ஆட்சியை ஒழிக்க வேணும்னு, அங்கே ஆரிய ஆட்சியைக் கொண்டுவந்து நிறுத்துவது அல்ல, தமிழர் ஆட்சியைக் கொண்டு வரணும் என்பதே. அதுக்கு அய்யா மூணு இலக்குகளை நிர்ணயிச்சிருக்கார். அதை 'அய்யா இலக்கு - 3' எனக் கட்சியினர் வர்ணிக்கிறாங்க. 'உடனடியா வரப்போகும் உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், 2019-ல வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல்...' இதுதான் அந்த மூணு இலக்குகள். இந்த மூணையும் ஒட்டி, தெளிவானத் திட்டமிடல்களை வகுத்து, அதற்கான வழிகாட்டல்களை வழங்கிவர்றார். இதுல, 2019-ல் அ.தி.மு.க - தி.மு.க - பி.ஜே.பி-க்கு மாற்றாக நாம இருக்கணும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலுல அன்புமணி ஜெயிச்சார். அதேபோல வர்ற நாடாளுமன்றத் தேர்தலுல தனித்த சக்தியா மிளிர்வது, தேசிய அளவுல கவனத்தை ஈர்க்கும். மாநில அரசியலிலும் அதிகாரத்தைக் கைப்பத்த உதவும் என்பதே அய்யாவின் முதன்மையான பார்வை. 

கிராம மக்களுடன் அன்புமணி

தைலாபுரம் திட்டம் !

மாவட்டவாரியா புதிய இளைஞர்களைப் பொறுப்புகளுக்கு நியமிச்சுள்ளார் அய்யா. அவங்களைத் தைலாபுரம் அழைச்சி ஆலோசனை, பயிற்சிகள் வழங்குறார். அப்போ, 'நடந்துமுடிஞ்ச 2016 பொதுத்தேர்தலுல ஓர் இடம்கூட வெல்லாதவங்கத்தான் ஆட்சியமைக்கத் திட்டமிடுறாங்களா' எனப் பேச்சுகள் நம்மைநோக்கி வெளிப்படுகின்றன. 2011 சட்டமன்றத் தேர்தலுல தி.மு.க கூட்டணியில இருந்து நாம பெற்ற வாக்குகள் 5.23 சதவிகிதம். 2016-ல நாம தனிச்சுநின்னே 5.36 சதவிகித வாக்குகளைப் வாங்குனோம் என்பதை மனதில்கொள்ள வேண்டும். தி.மு.க நூலிழையில ஆட்சியில அமர முடியாம போனதுக்கு நம்முடைய வாக்குகள்தான் பிரதான காரணம் என்பதை மறந்துட வேணாம். நாம தமிழ்நாட்டு அரசியலுல பிரதான சக்தியாகவே இருக்குறோம். நம்முடைய நோக்கம் தேர்தலா இருந்தாலும், சுவர் இருந்தாதான் சித்திரம் வரைய முடியும். அதுக்குக் கட்சியோட கட்டுமானம் சிறப்பா இருக்கணும். ஒவ்வொரு மாவட்டமும், ஒன்றிய அளவிலே இருந்து கீழ்மட்ட கிளைவரை கட்சி அமைப்பை விரிவுபடுத்தணும். உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்துங்க.

அம்பதுஅம்பது பேரா இணைச்சி, அவங்ககிட்ட நம்ம ஒருவர் நமது கட்சிக் கொள்கை, திட்டம்னு அனைத்தையும் விளக்குங்க. பயிற்சி வகுப்பு நடத்துங்க. அஞ்சு பேரு வந்தாலும் பரவாயில்லை. கூட்டத்தைப்பத்திக் கவலைப்படாம நிறையத் தெருமுனைக் கூட்டங்களை நடத்தணும். அதுக்கு முதல்ல கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்குங்க. வட்டாரப் பிரச்னைகள்ல அதிகம் கவனம் செலுத்துங்க. அப்பிரச்னைகளுக்கு அ.தி.மு.க., தி.மு.க-தான் காரணம்னு விளக்குங்க. அதேநேரம் மத்திய பி.ஜே.பி, தமிழர்களுக்கு எதிரா அரசியல் உணர்வுகொண்டது என்று அம்பலப்படுத்துங்க. நீங்க அஞ்சு பேருக்கு ஒருத்தரைச் சந்தியுங்க... அமைப்பாக்குங்க.

வட்டாரப் பிரச்னைகளைக் கையில எடுங்க. ஒவ்வொரு மாவட்டமும், தனித்தனியா 15 நாள்களுக்கு ஒருமுறை எனக்கு ரிப்போர்ட் கொடுங்க. இது, நம்மளை உள்ளாட்சி அமைப்புகள்ல பலம்பொருந்திய கட்சியா மாத்தும். கிளைகள்ல எந்த அளவுக்குக் கட்சி வலு பெறுதோ, அந்த அளவுக்கு அது நம்மளை அதிகாரத்துல அமர்த்தும். நமக்கு ஆரியமும் வேணாம்... திராவிடமும் வேணாம். தமிழியம் போதும். தமிழ்நாட்டை ஒரு தமிழர்தான் ஆளணும்' என விரிவா பாடம் எடுத்திருக்கார் அய்யா ராமதாஸ். இந்த ஆலோசனை முடிவுகள், தவறாம அன்புமணிகிட்ட பகிர்ந்துக்கொள்ளப்பட்டது. அவர்கிட்ட இருந்தும் ஆலோசனைங்கப் பெறப்படுது'' என்றனர் விரிவாக. மகன் அன்புமணியை முதல்வர் அரியணையில் அமரவைக்க, 'தைலாபுரம்' தீட்டிய  'தமிழ் அரசியல் அடையாளம்' கைகொடுக்குமா?  எல்லா இலக்குகளும் வெற்றிகரமாக வீழ்த்தப்பட்ட வரலாறு இல்லை.


டிரெண்டிங் @ விகடன்