வெளியிடப்பட்ட நேரம்: 10:54 (28/04/2017)

கடைசி தொடர்பு:10:54 (28/04/2017)

விடாமல் புகையும் புகை... ஊட்டியில் எரிமலையா? உண்மை என்ன? #SpotVisit #VikatanExclusive

புகை

"ஊட்டி அருகே பூமியில் இருந்து புகை-எரிமலையாக இருக்கலாம் என மக்கள் அச்சம்" இப்படி ஒரு செய்தியை பார்த்தவுடன், "என்னடா இது... நாமளும் அங்கதான இருக்கோம். ஒருத்தனும் நம்ம கிட்ட சொல்லலையே"னு தோனுச்சு... வைகை அணையில தண்ணீர் ஆவியாகமல் தடுக்கவே தெர்மாகோல் பயன்படுத்துன நம்ம அரசியல் விஞ்ஞானிகள் எரிமலை வெடித்தால் அதைச் சமாளிக்க என்ன தொழில்நுட்பங்களையெல்லாம் பயன்படுத்துவார்கள் என யோசிக்கும் போதே பயமாக இருந்தது.

அரசாங்கம் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எரிமலைய அணைக்குறதுக்குள்ள நாமளும் போய் எரிமலைய பாத்துட்டு வந்துருவோம்னு கிளம்பினேன். ஊட்டியில் இருந்து மசினகுடி போகும் வழியில் கூடலூர் நெடுஞ்சாலையில் சுமார் 7 கி.மீ தொலைவில் இருக்கிறது தலைக்குந்தா. கேரளா கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தலைகுந்தாவிற்கு வந்த பின்பே ஊட்டிக்குள் நுழைய முடியும் என்பதால் இதனை ஊட்டியின் நுழைவுவாயில் என்று கூட கூறலாம். அங்கே தோடர்கள் வசிக்கும் முத்தநாடுமந்து எனப்படும் ஊர் இருக்கிறது. அந்த ஊரின் அருகில் தான் பூமியின் அடியில் இருந்து புகை வருவதாக தகவல்.

அங்கே சென்றவுடன் இதைப்பற்றி ஒருவரிடம் விசாரித்தால் அது உண்மைதான் என்றார். அங்கு செல்வதற்கான வழியை கூறினார். அந்த வழியே ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்ற பின் அடர்ந்த காட்டுப்பகுதியின் உள்ளே புகை வரும் பகுதி தென்பட்டது.

 

 

தகவல் தெரிந்து ஊரே அங்குதான் இருக்கும் என எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அந்த இடத்தில் என்னைத்  தவிர யாருமே இல்லை. அந்த இடத்திற்கு அருகில் செல்ல செல்ல வெப்பத்தை உணர முடிந்தது. அருகில் சென்று பார்த்தால் உண்மையாகவே  நிலத்தில் பிளவு ஏற்பட்டு அதில் இருந்து புகை வெளிவந்து கொண்டிருந்தது. மற்ற இடங்களை விட அந்த இடம் சற்று தாழ்ந்து போயிருந்தது. செடிகள் அனைத்தும் கருகியிருந்தன. மரங்கள் அனைத்தும் பிடிமானம் இல்லாமல் சாய்ந்திருந்தன. மண் கூட கருப்பாக மாறியிருந்தது. அந்த இடத்தில் கொஞ்சநேரம் கூட நிற்க முடியாத அளவிற்கு ஒரு நெடி. அதில் இருந்தே இது நிச்சயமாக எரிமலையாக இருக்க வாய்ப்பில்லை என்று தெளிவாகியது.

அந்த அடர்ந்த காட்டிற்குள் இப்படி ஒரு காட்சியை பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாகத்தான் இருந்தது. அந்த இடத்தை விட்டு வெளியே வந்து என்னதான் நடந்தது என அறிவதற்காக தலைக்குந்தாவில் இருக்கும் வனத்துறை அலுவலகத்திற்கு வந்து அங்கே இருந்த வனக்காப்பாளர் ஒருவரிடம் விசாரித்தேன். அந்த இடம் சில காலத்திற்கு முன் வரை சிறிய குட்டையாக காணப்பட்டதாகவும் தாவரங்கள் மக்கிப்போய் மீத்தேன் வாயு உருவாகியிருக்கலாம், தற்போது கடுமையான வறட்சி நிலவுவதால்  வெப்பத்தின் காரணமாக பூமிக்கு அடியில் தீப்பிழம்பு ஏற்பட்டு புகை வருவதாகவும் சொன்னார். அந்த இடம் ஆறடி ஆழம் இருக்கலாம் எனவும் ஐந்து லாரிகள் தண்ணீர் ஊற்றிய பின்பு புகை வருவது சற்று குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதுபோல பத்து வருடங்களுக்கு முன் நடந்தது என்றும் அப்பொழுது ஆராய்ச்சியாளர்கள் வந்து பார்த்துவிட்டு இது நிச்சயமாக எரிமலையாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துவிட்டார்கள் என்பதால் பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என்றும் சொன்னார்.

புகை

இங்கதான் இப்படியா இல்ல உலகத்துல வேற இடத்துல இப்படி இருக்குதானு பாத்தா சீனாவில் நன்ஜிவான் கிராமம் ரொம்ப பாதிக்கப்பட்டுருக்கு. அந்த கிராமத்துல கொஞ்ச வருடத்துக்கு முன்னாடி சிகரெட் பத்த வக்கிறதுல இருந்து சுவிட்ச் போடுற இடம் வரை ஒரு சின்ன தீப்பொறி இருந்தால் கூட எல்லா இடத்துலையும் தீ விபத்து ஏற்பட்டிருக்கு. பக்கத்து ஊர்ல இருந்தவங்க இது தீய சக்திகளின் வேலையாக இருக்கலாம்னு கிளப்பிவிட ஆராய்சியாளர்கள் வந்து பாத்துட்டு  மீத்தேன் வாயுதான் தீவிபத்துக்கு காரணம்னு கண்டுபிடுச்சிருக்காங்க.

அந்த கிராமத்துல எந்த இடத்துல தோண்டுனாலும் மீத்தேன் வாயுதான் வெளிவருதாம். வயல்களில் வேலை பாக்கும்பொழுது மண்வெட்டி கல்லுல பட்டு தீப்பொறி உருவானா கூட அந்த இடம் தீப்பிடிக்க ஆரம்பித்து விடுகிறதாம். இதை எப்படி உபயோகப்படுத்தலாம்னு யோசிச்சவங்க குளிர் காலத்துல தீ மூட்டவும் சமையல் பன்றதுக்கு அடுப்பாகவும் மாத்திட்டாங்களாம். இப்போ அந்த கிராமத்துல எல்லா வீட்டுலயும் மீத்தேன் அடுப்புதானாம் பின்ன சீனாக்காரன்னா சும்மாவா பாஸ்....

ஆனால் நம்ம ஊர் அறிவாளிகள் இன்னும் மேல் ஆயிற்றே. அந்த பயத்தோடவே வீடு திரும்பினேன்.


டிரெண்டிங் @ விகடன்