வெளியிடப்பட்ட நேரம்: 17:14 (28/04/2017)

கடைசி தொடர்பு:18:23 (28/04/2017)

சென்னை மின்வெட்டுக்கு இதுதான் காரணமாம்!

மின்வெட்டு

சென்னையில் கடந்த 26-ம் தேதி இரவு வட சென்னை, மத்திய சென்னை பகுதிகளில் 7 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்பட்டதால் பலரது தூக்கம் தொலைந்தது.  

கேபிள் பழுது காரணமா?

வல்லூரில் உள்ள மத்திய மின் நிலையத்தில் இருந்து ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தமிழக மின்வாரியம் பெறுகிறது. மின்சாரத்துக்குத் தர வேண்டிய 1156 கோடிரூபாயை மின்வாரியம் நிலுவை வைத்துள்ளது. இதனால், தமிழகத்துக்கு தர வேண்டிய மின்சாரத்தை வல்லூர் மின் நிலையம் திடீரென நிறுத்தி விட்டது. இதனால்தான் மின் பற்றாக்குறை ஏற்பட்டது என்று சொல்கிறார்கள். இதன் காரணமாகத்தான் மின் தடை ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.


26-ம் தேதி இரவு மின் தடை ஏற்பட்டபோது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் தங்கமணி, "மணலி- மயிலாப்பூர் இடையே மின் விநியோக கேபிளில் கோளாறு ஏற்பட்டு விட்டது. வல்லூர் அனல் மின் நிலையத்துக்குத் தர வேண்டிய மின் கட்டண பாக்கி காரணமாக மின்சாரம் பற்றாக்குறை ஏற்படவில்லை" என்று கூறினார்.

இயந்திர கோளாறுதான் காரணம்

அமைச்சர் சொன்னதில் எவ்வளவு தூரத்துக்கு உண்மை இருக்கிறது? மின் ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணியனிடம் கேட்டோம்."வடசென்னை அனல் மின் நிலையம் பிரிவு ஒன்றில் மின் உற்பத்தியை மின் விநியோகப்பிரிவுக்கு மாற்றும் evacuation இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால்தான் சென்னையில் மின் வெட்டு ஏற்பட்டது. இதற்கு மின்சாரத்துறையின் நிர்வாகக் கோளாறுதான் காரணம்.  


தமிழக மின் வாரியம் சார்பில் வல்லூர் அனல் மின்நிலையத்தில் ஒரு யூனிட் ரூ.5.19-க்கு  வாங்கியதாகச் சொல்கிறார்கள். இது அதிகமான விலை என்பதால், அங்கு வாங்குவதை நிறுத்தி விட்டு நீண்டகாலம், மத்திம காலம், குறுகியகாலம் என்ற அடிப்படையில் யூனிட் ஒன்றுக்கு ரூ.2.25 முதல் ரூ.3.95 வரை மின்சாரம் வாங்குகிறோம் என்று சொல்கின்றனர்.

அமைச்சர் சொன்னது உண்மையல்ல

மின்வெட்டு வெயில் காலத்தில் மின் வெட்டு ஏற்படாமல் எப்படி சமாளிப்பது? எந்தெந்த வழிகள் மூலம் மின்சாரம் பெறுவது என்பதை முன்கூட்டியே மின்வாரியம் திட்டமிட்டிருக்க வேண்டும். போதிய மின்சாரம்  கிடைக்கவில்லை என்பதால்தான் மின் வெட்டு ஏற்படுகிறது. இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள மறுத்துதான் கேபிள் பழுது என்று பொய்யான காரணத்தைக் கூறுகிறார்கள். அமைச்சர் சொன்னது போல கேபிள் பழுது எல்லாம் ஏற்படவில்லை.  


காற்றாலை, சூரிய மின் சக்தி போன்ற வழிகளில் மின்சாரம் பெற்று சமாளிக்கிறோம் என்று அரசு சொல்கிறது. ஆனால், இவற்றின் மூலம் கிடைக்கும் மின்சாரம் நிலையானது அல்ல. அதீத தேவை இருக்கும் நிலையை முன் கூட்டியே அறிந்து தயாராக இருக்க வேண்டும். இந்த கோடை காலத்தில்தான் வடசென்னையில் ஒரு பிரிவில் மின் உற்பத்தியை நிறுத்துகின்றனர்.

வெளிப்படைத் தன்மை இல்லை

இது வரைக்கும் 3189 மெகாவாட் மின்சாரம் என்னென்ன விலையில் வாங்குகின்றனர் என்று வெளிப்படையாகச் சொல்லவில்லை. மின்சார கொள்முதல் விவகாரம் காரணமாகத்தான் முன்னாள் மின்துறை செயலாளர் ஞானதேசிகன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பின்னர் வந்த அதிகாரிகளும் அதே தவறைத்தான் செய்கின்றனர். அரை மணி நேரத்தில் மின் கொள்முதல் செய்யும் அளவுக்கு சட்டத்தில் மாற்றம் செய்து வைத்திருக்கின்றனர். எது மக்களின் சுமையைக் குறைக்கும் என்பதை மின் வாரியம் நோக்கமாகக் கொள்ள வேண்டும்" என்றார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்