வெளியிடப்பட்ட நேரம்: 11:51 (29/04/2017)

கடைசி தொடர்பு:11:51 (29/04/2017)

ஸ்டாலின்: செயல் தலைவரா? செயல்படாத தலைவரா?

ஸ்டாலின்

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட , சில நாட்களுக்குப் பிறகு 'அவர் பூரண நலம் பெற வேண்டும்' என்று ஒரேயொரு அறிக்கை விட்டார்  மு.கருணாநிதி.  அவர் அறிக்கைக்கு பிறகே,  ஜெயலலிதா சிகிச்சைகள்  குறித்த வலுவான சந்தேகங்கள் எழும்பியது. மருத்துவமனையை சுற்றிய மர்மங்கள் மீதாக மக்களுக்கு  எழும்பிய கேள்விகளுக்கு தொடக்கம் அவரின் அறிக்கை. .ஆளும்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவரின் கடிதங்களும் , அறிக்கைகளும் அதிர்வேட்டுகளாக , அரசியல் அதிர்வுகளை உருவாக்கும். கூர்ந்த சிந்தனை, சாதுர்யமான பேச்சு , அரசியலில் நிரந்தர நண்பனுமில்லை, நிரந்தர எதிரியுமில்லை ' என அரசியல் போக்குகளை கணித்து செயல்படும் ராஜ தந்திரம், இவையே, அவரைக் கடந்த அரை நூற்றாண்டுகளாக தனித்த பெரும் தலைவராக நிறுத்தியுள்ளது.  மேற்கண்ட தகுதிகள் செயல் தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வரும் மு.க ஸ்டாலினிடம் உள்ளதா? 

'அப்பாவைப் போலவே மகன் செயல்படவேண்டும். முந்தைய தலைவரைப்  போலவே அடுத்து வருபவரின் அணுகுமுறைகளும் அமைய வேண்டும் என்பது பொருத்தமில்லாததுதான் ஆனால்  வெற்றிகரமான செயல்பாடுகளை உள்வாங்கி, அதை தமது ஸ்டைலுக்கு ஏற்ப பொருத்திக் கொள்வது சிறந்த தலைமைக்கான பண்பல்லவா?!' என்று கேள்வி கேட்கின்றனர் மொழி போராட்டங்களில் முன்னின்று போராடிய  தி.மு.க-வின் மூத்த உடன்பிறப்புகள்.தொடர்ந்து பேசியவர்கள், 'இதை எங்கள் செயல் தலைவர்  ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டாக முன்  வைக்கவில்லை. அவர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாக நினைவூட்டுகிறோம். தவறுகளில் இருந்து பாடம் படிப்பது எல்லாவற்றிற்கும் நல்லதல்லவா !  ' என்றவாறு மு.க  ஸ்டாலின் தவறியவைகள்  சிலவற்றை சுய விமர்சன கண்ணோட்டத்தில் பகிர்ந்தனர்.

1) . எப்போதும் எங்கள் தலைவர் கருணாநிதி, தமது அறிவை, மக்களின் உணர்வுகளுக்கேற்ப பொருத்துவார். மக்களின் உணர்ச்சிகளை அவரின் செயல்பாடுகள் ஒலிக்கும். அறிக்கை வரும். போராட்ட அறிவிப்பு வரும். அந்த பிரச்சனை உயிர் பெற்று தீர்வை நோக்கி நகரும். ஆனால்  ஸ்டாலின் பொறுத்தவரை மக்களின் உணர்வை , சரியாக நாடி -பிடித்து பயணிப்பதில் மேலும் பயிற்சி தேவை.   ஸ்டாலினை ஒப்பிடும்போது அவரளவுக்கு ஓ.பி.எஸ், அறிவிலோ, கொள்கை பிடிமானத்திலோ , கட்சிக்காக உழைத்த அளவிலோ இணையானவரில்லை. ஆனால் ஓ.பி.எஸ், மக்களின் பல்ஸ் பிடிப்பதில் தெளிவானவராக இருந்தார். தியானம் செய்கிறார், தம் மீது சிம்பத்தியை உருவாக்கினார், எனக்கு நியாயம் கிடைக்கவில்லை எனில் நான் மக்களிடம் செல்வேன், அவர்கள் தான் எஜமானர்கள் ' என்று தம் மீதான கவனத்தை திருப்பியவர், அது சிதறாமலும்  பார்த்துக்கொண்டார்.அதுவே இன்று சில  சர்வேக்களில், மக்கள் செல்வாக்குள்ள தலைவர் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வத்தை முன்னணியில் நிறுத்தியுள்ளது. 'ஜெயலலிதா- ஸ்டாலின்' என்ற போட்டி மறைந்து 'ஓ.பி.எஸ்-ஸ்டாலின்' என்ற போட்டி நிலை உருவானது , ஒருவகையில் பின்னடைவே. 

கருணாநிதியுடன் ஸ்டாலின்

2). கருணாநிதி பேசுகிறார் என்றால் இன்றும் கூட்டம் கூடும். 2016 தேர்தல் நெருங்கும் சில மாதத்திற்கு முன்பு,  கிண்டியில் நடந்த மெட்ரோ ரெயில் திட்டம் குறித்த பொதுக்கூட்டம் நடந்தது. மாலை நேரத்தில் கொளுத்தும் வெயிலில் நடந்த அந்த பொதுக்கூட்டம் தொண்டர்களால் நிரம்பியிருந்தது. அப்போது பேசிக்கொண்டே இருந்த தலைவர் கருணாநிதி , திடீரென அமைதியானார். யாருக்கும் புரியவில்லை. சில நிமிடங்களில் மீண்டும் உரையை தொடர்ந்தார். அப்போதுதான் விளங்கியது, மேலே விமானம் பறந்துகொண்டிருந்ததால், அந்த சத்தம் இடைஞ்சல் ஏற்படுத்தக் கூடாது என்று உரையை நிறுத்தியுள்ளார் கருணாநிதி. இந்தளவுக்கு கூர் மதியும், சூழலை உள்வாங்கிக்கொண்டு பேசும் ஆற்றலும் அவருக்குண்டு. அறிவு சார்ந்த தகவல்களை எளிமைப்படுத்திக்  கொடுப்பார். இந்தி திணிப்பு எதிர்ப்பின்போது 'இது இந்தியாவா? 'இந்தி'-யாவா?' என்று அழுத்தமாக முழங்கினார். இந்த ஒற்றை சொற்றொடர், இந்தி திணிப்புக்கு எதிராக மிகப்பெரிய எழுச்சியை உண்டாக்கியது.  ஸ்டாலினின்  பேச்சு மிக சிறப்பானது என்பதில் மாற்று கருத்தில்லை. பல்வேறு புள்ளி விவரங்கள், ஆதாரங்களை அடுக்குவார். ஆனால்  கடைக்கோடி தொண்டனுக்கு புரிய வேண்டுமே! அறிவுசார்ந்த தொண்டர்களை கடந்து, அனைத்து  தொண்டர்களுக்கும் போய் சேர்வதில்லை. சமீபத்தில் விவசாயிகள் பிரச்சனைகளுக்காக  அனைத்து கட்சியினரும் கூடிய மயிலை பொதுக்கூட்டத்தில் பின் வரிசை இருக்கைகள் நூற்றுக்கணக்கில் காலியாக இருந்தது ஓர் எடுத்துக்காட்டு.   

3) கருணாநிதி இருந்திருந்தால் இந்நேரம் ஆட்சியையே கலைச்சிருப்பார்ன்னு இன்றைக்கு  சாதாரண ஜனங்களே பேசிக்கிறத நீங்க பாக்கலாம். எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பிறகு , அவர் மனைவி ஜானகி அம்மாள் ஆட்சியமைத்தார். நம்பிக்கை வாக்கெடுப்புக்காக ஆர்.எம். வீரப்பன், தொடர்ந்து கருணாநிதியிடம்  பேசி வந்தார். எந்த ஒப்புதலும் கருணாநிதி  கொடுக்கவில்லை. அதே நேரம் பொது சமூகத்தின் பார்வையில் 'ஜானகி அணிக்கு கருணாநிதி  ஆதரவு அளிக்கிறார் ' என்பது போன்ற தோற்றம் உருவானது. இறுதியில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தி.மு.க  பங்கேற்கவில்லை .அதன் பின் நடந்த வரலாறு நீங்கள் அறிந்ததே. 13 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க, ஆட்சியமைத்தது. அதற்கு முதல் முக்கிய காரணம் , தலைவர் கருணாநிதியின்  ராஜ தந்திர செயல்பாடுகள்தான். ஆனால் தற்போது ஜெயலலிதா மறைவுக்கு பின்னான இந்த பரபரப்பான அரசியல் சூழலில் ஸ்டாலின்  என்ன செய்தார்?  தொடக்கத்தில் பன்னீர்செல்வம் ஆதரவு என்றார். அதையொட்டி சுப்புலக்ஷ்மி ஜெகதீசன் பேசியபோது, அதை மறுத்து அறிக்கை வந்தது. பிறகு மீண்டும் ஆதரவு தருவோம் என்றார். கூவாத்தூரில் எம் .எல்.ஏ க்கள் சிறை வைக்கப்பட்டனர் என்றார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு 15 நாள் நேரம் கொடுத்தபோது விரைவாக வாக்கெடுப்பு நடத்துங்கள் என்றார் ஸ்டாலின். மறைமுக வாக்கெடுப்பு கேட்டார். 'ஓ.பி.எஸ் கேட்க வேண்டியது எல்லாம் இவர் கேட்கிறாரே' என்ற கமெண்டுகள் வெளிப்படையாகவே வந்தன. இந்த புதிய சூழலை தன் வயப்படுத்திக்கொள்ளவதில் தோல்வியைச்  சந்தித்தார். 'ஒரு பத்து எம்.எல்.ஏ க்களைக் கூடவா பிரிச்சு கொண்டு வரமுடியல ?' என்ற கமெண்டுகள் பரவலாகவே பேசப்பட்டன. அமைதியாக இருந்த ஓ.பி.எஸ், அ .தி.மு.க  கட்சியை கைப்பற்றும் வேளைகளில் தமது கவனத்தை தீவிரப்படுத்தி காரியத்தை சாதித்து வருகிறார்.  

4) நம்பிக்கை வாக்கெடுப்பின் போது  சட்டசபைக்குள் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தது உள்ளிட்டு  நடந்தவைகளை ,மக்கள்  யாரும் ரசிக்கவில்லை. அதேநேரம் , தலைவர் கருணாநிதி  நள்ளிரவில் கைது செய்யப்பட்டபோது ஏற்பட்ட எழுச்சியை பாருங்கள். மாற்று கட்சியினர் கூட மிகப்பெரியளவில் கண்டித்தனர்.  ஸ்டாலினின்  சட்டை கிழிக்கப்பட்டு அவர் வெளிய வந்தபோது நடந்தது என்ன? பெரியளவில் யாரும் கண்டிக்கவில்லை. மாற்று கட்சிகளுடன் இணக்கமான உறவை பேணுவதில் கூடுதல் பக்குவம் தேவை என்பதையே இது போன்ற சம்பவங்கள் உணர்த்துகிறது.  

5) கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தலைவர், மாற்று கட்சியினருடன் நெருக்கமான  போக்கை கையாளுவார்.  மருத்துவர் ராமதாஸ் பேத்தி திருமணத்தின் போது , ' என்னை முன்னாள் முதலமைச்சர் என்று அழைப்பதை விட தாத்தா என்று அழைத்திருந்தால்  இன்னும் பெருமைப்படுவேன். இந்த விழாவுக்கு நான் வரவேண்டும் என்று ராமதாஸ் அழைத்த போது, நீங்கள் அழைத்தா நான் வரவேண்டும். என் பேத்தி திருமணத்துக்கு நீங்கள் அழைக்க வேண்டுமா? என்று உரிமையுடன் கூறினேன்.' என்று பேசினார். இந்த நெகிழ்ச்சியான சூழல் ,  கூட்டணிக்கு அனுகூலமான திசையை உண்டாக்கியது. அதேநேரத்தில் அருள்நிதி திருமணத்திற்கு வை.கோ வந்தபோது நடந்ததென்ன  ? அவர் வரும்பொழுது அவருக்கு போதிய இருக்கை  வசதி செய்யப்பட்டிருக்கவில்லை. துரைமுருகன் எழுந்து தன்னுடைய நாற்காலியை வி ட்டுக் கொடுத்தார். தமிழிசை சவுந்தர்ராஜன் பேசிய பிறகு வை.கோ வுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இது வை.கோ-வுக்கு  மன வருத்தத்தை உண்டாக்கியது. இறுதியாக, அது  எங்கு கொண்டு சேர்த்தது  தெரியுமா? தி.மு.க  வுடன் ஏறக்குறைய கூட்டணியில் இணையும் முடிவில் இருந்த விஜயகாந்தை பிரித்து, தனி அணியாக்கினார் வை.கோ. பெரும் கூட்டணி அமையாமல் தனித்து விடப்பட்டு, இறுதியில் நூலிழையில் ஆட்சியதிகாரத்தை இழந்தோம். பெருவாரியாக எம்.எல்.ஏ க்களை பெற்று என்ன பயன் ? ஆட்சியதிகாரத்தை இழந்துவிட்டோமே ! தி.மு.க வின் வெற்றி வரலாறு என்பது கூட்டணி கட்சிகளின் அணி சேர்க்கையினால் மட்டுமே அமைந்திருக்கிறது.  இதை எங்கள் செயல் தலைவரிடம் யார் எடுத்து சொல்வது? கருணாநிதி  என்றால் தன்னுடன் பேராசிரியர், துரைமுருகன், நாஞ்சிலார், கோ.சி மணி,வீரபாண்டியார் என கட்சியில் கீழ்மட்டத்தில் இருந்து வந்தவர்களை அருகில் வைத்திருந்தார். அவர்கள் எடுத்துரைப்பார்கள். அதை அவரும் கேட்டுக்கொள்வார். ஆனால் ஸ்டாலின்  பக்கத்தில் இருப்பவர்கள் யார்? அ .தி.மு.க வில் இருந்து வந்த எ.வ.வேலு, சேகர்பாபு போன்றவர்கள் தானே. இல்லையேல் மருமகன் சபரீசன் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். இளம் புதிய ஆட்களின் கருத்துக்கள் அவசியமே. ஆனால் அது அனுபவஸ்தர்களின் கருத்துக்களை புறக்கணித்துவிட்டு வருவதாக இருத்தல் கூடாது.   

ஸ்டாலினின்  நமக்கு நாமே

6) டிவிட்டர் , முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் தி.மு.க வுக்கு செல்வாக்கை உண்டாக்கியதில்  ஸ்டாலினுக்கு முக்கிய பங்குண்டு. மகிழ்ச்சி. வண்ண உடைகளில் நமக்கு நாமே என்று பயணித்ததும் நல்ல விஷயம். ஆனால் விளம்பர ஏஜென்சிஸ் வழிகாட்டலில் பிரச்சாரம் அமைத்துக்கொள்வது, எல்லா காலத்திலும்  சரியாக அமைந்துவிடுவதில்லை. இந்த ஹை-டெக்  பிரச்சாரங்கள் கிராம வாக்குகளை அறுவடை செய்துவிடவில்லை. கிராமங்களில் இன்றும் சுவரொட்டிகள், பேனர்கள் இதைக்கடந்து, தொடர்ந்து தெருமுனை கூட்டங்கள் நடத்துவதே செல்வாக்கை கூட்டும்.  சமீபத்தில் இதெல்லாம்  மிஸ்ஸிங்.  

7) தனக்கு பிடித்தவர், பிடிக்காதவர் அனைவரையுமே தமது பக்கத்தில் வைத்துக்கொள்வார் தலைவர் . அவர்கள் கருத்தையும் ஏற்றுக்கொள்வார். பேசுவதற்கு அனுமதியளிப்பார். இன்று நிலைமை அப்படியா இருக்கிறது? மண்டல அளவில் பொறுப்பில் உள்ள ஒருவர் தனக்கு நெருக்கமான, நேரடி அறிமுகத்தில் இருந்தாலும், மாநகர செயலாளரிடம் தகவல் சொல்லி அவர் மூலமே கட்சி பணிகள், மண்டல தலைவரிடமிருந்து பெறப்படும். ஒரு பிரச்சனை என்றால் அங்குள்ள கிளை கழக செயலாளரிடம் கேட்டும் அவர் கருத்தையும் பரிசீலித்துதான் மாநில அளவு முடிவுகளை கூட தலைவர்  எடுப்பார். கட்சி அலகுகளை  மதிப்பார். ஆனால் இன்று நிலைமை எப்படி இருக்கிறது? தனக்கு வேண்டப்பட்டவருடன் ஸ்டாலின்  நேரடியாக பேசுவது , அது மாவட்ட செயலாளருக்கு தெரிய வரும்போது அங்கு ஈகோ போட்டி வருகிறது. சேலம், தஞ்சாவூர்,திருவாரூர், தூத்துக்குடி  உதாரணங்கள் ஏராளம். கோஷ்டி அரசியல் பெருகிவிட்டன. கீழ் மட்டளவில் உழைத்து வருபவருக்கு பொறுப்பு கிடைப்பதில்லை.  பஸ் ஓனர்ஸ் , மில் ஓனர்ஸ் என பெரும் பணக்காரர்களுக்கு பொறுப்பு கொடுத்தால், சிறைக்கு செல்லுமளவுக்கான போராட்டங்களில் அவர்கள் எப்படி ஈடுபடுவார்கள்? முன்பெல்லாம்  கட்சிக்கு எப்படி உழைச்சுருக்கன்னு கேட்டு எம்.எல்.ஏ , எம்.பி சீட் கொடுத்தாங்க. இப்போ , எவ்வளவு பணம் வச்சுருக்க? எவ்வளவு செலவு பண்ணுவ ?ன்னு தான் கேட்கிறாங்க.(நொந்து கொள்கின்றனர்)

ஸ்டாலினை  வாழ்த்தும் கருணாநிதி

8) ஒருமுறை ஒரு பிரச்சனையின் போது 'மாவட்ட செயலாளர் என்றால் பெரிய ஆளோ !?' என்று கோபமாக அதிகாரிகள் கேட்ட போது , 'ஆமாம், உங்களுக்கு எப்படி ஒரு கலெக்டரோ, அப்படி கட்சிக்கு கலெக்டர்- 'மாவட்ட செயலாளர் ' என்று அன்பில் தர்மலிங்கம்  கம்பீரமா சொன்னார்.  சேலம் ரெயில்வே கோட்டம் பிரச்சனை வந்தபோது, அப்போது வேளாண்மை துறை மந்திரியாக இருந்த வீரபாண்டியார் ரெயில் மறியல் செய்தார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்த நேரம். 'ஒரு மந்திரியே ரயில் மறியல் செய்கிறாரே' என்று அப்போதைய மத்திய மந்திரி லல்லு பிரசாத் யாதவ் , கருணாநிதியிடம்  கேட்டார். 'இந்த போராட்டங்கள் என் கையில் இல்லை, என் தம்பி கையில் உள்ளது ' என்றார் தலைவர் கருணாநிதி . அதன்பிறகே பாலக்காடுக்கு செல்ல இருந்த ரெயில்வே கோட்டம், சேலத்திற்கு இடம் மாறியது. இப்படி எக்கு கோட்டையாக மாவட்டங்களை வைத்திருந்த தலைவர்கள், அதே நேரம் கொள்கை உணர்வோடு தலைமைக்கு கட்டுப்பட்டும் இருந்தார்கள்.  மாற்று கருத்துக்களை தலைவர்  அங்கீகரித்தார். ஆனால் இன்று அப்படி ஒரு மாவட்ட செயலாளரை பார்க்க முடிவதில்லை. நெளிவு, சுளிவுடன் கூடிய ஜனநாயகத்துவம் தான் தி.மு.க வின்  இயல்பு. ஆனால் ஸ்டாலினோ , ஜெயலலிதா போல 'தமது பேச்சை மீறக்கூடாது' எனும் சர்வாதிகார  பாணியைக்  கடைபிடிக்கிறாரோ என்று அவர் செயல்பாடுகள் மூலம் சந்தேகத்திற்குள்ளாகிறோம்.

9) என்னதான் சொந்த கட்சியில் பேச்சாளர்கள் நிறைந்து காணப்பட்டாலும்,  கடந்த கால சாதனைகளை கூட்டணி கட்சி தலைவர்கள் எடுத்துரைக்கும் போது மட்டுமே மக்களின்  நம்பிக்கையை பெரும். ஆதரவு பெருகும். முன்பெல்லாம்  தி.மு.க கூட்டணி என்றால் திருமாவளவன், வை.கோ , இடதுசாரி தலைவர்கள் என்று பேசுவார்கள். ஆனால் இந்த முறை என்ன ஆனது ? நமது நோக்கங்கள், சாதனைகளை எடுத்துரைக்கவே ஆளில்லாமல் போனது. கொள்கை சார்ந்து பேச, விளக்க  ஒரு சு.ப வீ  மட்டுமே  போதுமா? 

ஸ்டாலின்

10)தலைவர் கருணாநிதி ,  தனக்கு பிடித்தவர், பிடிக்காதவர், வேண்டியவர், வேண்டாதவர் என யாரிடமும் முகம் கோணியதில்லை. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சேலம் ரெயில்வே கோட்டம் போன்றவைகள் வருவதற்கு நாங்களே காரணம் என பா.ம.க உரிமை கொண்டாடிய நேரம். அப்படிப்பட்ட சூழலில், சேலத்தின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழாவில் , அப்போது முதல்வராக இருந்து கருணாநிதி உரையாற்றியபோது , வேண்டுமென்றே பா.ம.க வினர் விசில் அடித்து, சத்தம் போட்டு இடையூறு ஏற்படுத்திக் கொண்டு இருந்தனர். அத்தனையும் சின்ன புன்னகையுடன் பொறுத்துக்கொண்டு உரையை தொடர்ந்து முடித்தார். அதேபோல் ஒருமுறை ராம கோபாலன் தலைவர்  இல்லத்திற்கு வந்து 'பகவத் கீதை' நூலை கொடுத்தார். அதை சிரித்தபடியே வாங்கிக்கொண்டு கன  நேரத்தில் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய 'கீதையின் மறுபக்கம்' நூலை கருணாநிதி  வழங்கினார். இப்படி எதையும் சமயோகித செயல்பாடுகளால் அந்த சூழலையே அற்புதமாக மாற்றுவார். ஸ்டாலின் , சமீபத்தில் அனைத்து  கட்சி கூட்டத்திற்கு வந்தபோது , படம் எடுத்த புகைப்பட கலைஞர்கள், 'சார் ஒன்  மோர் க்ளிக் ப்ளீஸ்' என்றபோது 'எவ்ளோ நேரம் போஸ் கொடுக்கிறது' என்று முகத்தை காட்டினார் என்பது ஒரு உதாரணம். இது பல தருணங்களில் கட்சி தொண்டர்களிடமும் தொடர்கிறது. உடன்பிறப்புகளிடம் நெருங்கி பழகுதல் அவர்களை எப்போதும் உற்சாகமாக கட்சிப் பணியாற்ற வைக்கும். இதை ஸ்டாலின் பழகிக்கொள்ள வேண்டும்  ' என்றனர் விரிவாக. தொடர்ந்து பேசியவர்கள் 'தனிப்பட்டளவில் ஸ்டாலின் கடுமையாக உழைக்கிறார். சந்தேகமேயில்லை. ஆனால் கட்சியின் அடுத்தகட்ட பயணத்திற்கு எல்லோரின் கூட்டு உழைப்பும் அவசியம். அதை அவர்களிடமிருந்து  பெறுவதற்கான பக்குவமும் அவசியம். அதுவே எதிர்காலத்தில் தி.மு.க வை தனி பெரும் சக்தியாக உயிர்ப்போடு வைத்திருக்கும். ஏனெனில்  நாங்கள்  ஸ்டாலினை , 'தி .மு.க' வின் முகமாகவே பார்க்கிறோம்.' என்றனர் உருக்கமாக.

போர்க்களத்தில் தளபதிகள் தேவை. ஆனால் போர்கள் என்னவோ ராஜாக்களை கொண்டே வழிநடத்தப்படுகிறது. மு.க ஸ்டாலின் இப்போது தளபதியில்லை, செயல் தலைவர். உணர்ந்திருப்பார்!


டிரெண்டிங் @ விகடன்