வெளியிடப்பட்ட நேரம்: 16:27 (29/04/2017)

கடைசி தொடர்பு:16:27 (29/04/2017)

வருங்கால முதல்வர் நடராஜன்! சசிகலா,ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம்-40

சசிகலா, ஜெயலலிதா

போயஸ் கார்டன் விருந்து!

ராஜீவ் காந்தி, ஜெயலலிதா1990 காலகட்டத்தில், ஜெயலலிதா தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தாலும், முழுமையான ஓய்விலேயே இருந்தார். 5 மாதங்கள் அஞ்ஞாத வாசம் போனதுபோல், போயஸ் கார்டனுக்குள்ளேயே இருந்தார். அ.தி.மு.க-வில் இருந்து கே.கே.எஸ்.எஸ்.ஆர், திருநாவுக்கரசை நீக்கி கட்சிக்குள் மீண்டும் சிறு பிளவை உருவாக்கினார். கட்சி அலுவலகம், கொடி, சின்னத்தைக் காப்பாற்ற இரண்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். ராஜீவ் காந்தியை அழைத்து வந்து எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்தார். அதன்பிறகு ஓய்வெடுக்க ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்துக்குச் சென்றுவிட்டார். அரசியலில் அடிக்கடி ‘லீவ்’ எடுத்துக் கொண்ட ஜெயலலிதா மீது டெல்லிக்குப் பரிவு இருந்தது. அரசியலில் சுறுசுறுப்பாக வலம் வந்த கருணாநிதி மீது டெல்லிக்கு விரோதம் இருந்தது. அதனால், தலைநகரில் மாறிய அரசியல் காலநிலை ஜெயலலிதாவுக்கு  சாதகமாக அமைந்தது; கருணாநிதிக்குப் பாதகமாக அமைந்தது. சாதகங்களை ஜெயலலிதா சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். இதற்கிடையில் ஜெயலலிதாவுக்கும் நடராசனுக்கும் கொஞ்சம் மோதல் ஏற்பட்டது. அதனால், நடராசனை கொஞ்சம் விலக்கி வைத்தார். ஆனால், சசிகலாவோடு முன்பைவிட அதிக நெருக்கம் காட்டினார். தமிழகத்தில் உச்சக்கட்ட அரசியல் அனல் அடித்தது. சென்னை அண்ணாசாலையில் இருக்கும் ஸ்பென்சர் பிளாசா எதிரில் அ.தி.மு.க சார்பில் புதிதாக எம்.ஜி.ஆர் சிலை ஒன்று நிறுவப்பட்டது. 1990 அக்டோபர் மாதத்தில் அந்தச் சிலையைத் திறக்கத் தேதி குறிக்கப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்துகொள்ள ராஜீவ் காந்தி தனி விமானத்தில் பறந்து சென்னை வந்தார். ராஜீவ் காந்தியை வரவேற்க ஜெயலலிதா ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே விமான நிலையம் சென்று காத்திருந்தார். ராஜீவ் காந்திக்கு பிற்பகல் விருந்து, போயஸ் கார்டனில் தயாரானது. அந்த விருந்தில் கலந்துகொள்ள வாழப்பாடி ராமமூர்த்தி, ப.சிதம்பரம், ஆர்.எம்.வீரப்பனுக்கும் ஜெயலலிதா அழைப்பு விடுத்திருந்தார். ராஜீவ் காந்திக்கு போயஸ் கார்டனில் கொடுக்கப்பட்ட விருந்தில், 21 வகையான வெஜிடேரியன் உணவுகளோடு, இரண்டு அரசியல் கோரிக்கைகளையும் சேர்த்தே ஜெயலலிதா பரிமாறினார். முதல் கோரிக்கை, ‘சீரணி அரங்கத்தில் நடக்கும் கூட்டத்தில், ‘எம்.ஜி.ஆரின் வாரிசு’ எனத் தன்னை அறிவிக்கவேண்டும். இரண்டாவது கோரிக்கை, ‘எவ்வளவு முடியுமோ... அவ்வளவு வேகமாக தமிழகத்தில் நடக்கும் தி.மு.க ஆட்சியைக் கலைக்க வேண்டும்”. ஜெயலலிதாவின் இந்த இரண்டு கோரிக்கைகளையும் ராஜீவ் காந்தி நிறைவேற்றிக் கொடுத்தார். 

எம்.ஜி.ஆரின் வாரிசு ஜெயலலிதா ஜீ!

அண்ணாசாலையில் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சிலையை ராஜீவ் காந்தி திறந்து வைத்தார். அதையடுத்து, அண்ணாசாலையில் அ.தி.மு.க-காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடந்தது. அதற்குப் பிறகு வழக்கம்போல், மெரீனா கடற்கரையில் இருந்த சீரணி அரங்கத்தில் பொதுக்கூட்டம் தொடர்ந்தது. அதில் பேசிய ராஜீவ் காந்தி, “ஜெயலலிதா ஜீ... நீங்கள்தான் எம்.ஜி.ஆரின் வாரிசு” என்று அறிவித்தார். ராஜீவ் காந்தி முழங்கிய அந்த வார்த்தைகளில் ஜெயலலிதாவின் முதல் கோரிக்கை நிறைவேறியது. ராஜீவ் அந்த வார்த்தைகளை மேடையில் உரக்கச் சொன்னபோது, ஜெயலலிதா அகம் மகிழ்ந்து முகம் பூரித்துக் காட்சி அளித்தார். மேடைக்குப் பின்னால் நின்றிருந்த மணிசங்கர் அய்யர் ஜெயலலிதாவை “பொம்பிளை எம்.ஜி.ஆர்” என்று வர்ணித்துக் கொண்டிருந்தார். அதைக் கேட்டு நடராசன் சிரித்த சிரிப்பில், அங்கிருந்த நிருபர்கள் கவனம் சிதறியது. அவர்கள் அனைவரும் மேடைக்குப் பின்னால் மற்றொரு அரங்கக்கூட்டம் நடப்பதை அப்போதுதான் கவனித்தனர்.

ராஜீவ் காந்தி, ஜெயலலிதா

வி.பி.சிங் போனார்... சந்திரசேகர் வந்தார்...

எம்.ஜி.ஆர் சிலைத் திறப்பு விழா முடிந்ததும், ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் ஓய்வெடுக்கப்போய்விட்டார் ஜெயலலிதா. ராஜீவ் காந்தி ஒரு முடிவோடு டெல்லி நோக்கிப் பறந்து சென்றார். டெல்லியின் அரசியல் தட்ப வெட்பம் ராஜீவ் காந்திக்குச் சாதகமாக நிறம் மாறி இருந்தது. தேசிய முன்னணி சார்பில் பிரதமராக இருந்த வி.பி.சிங் ஆட்சி நாடாளுமன்றத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது. அதையடுத்து 1990 நவம்பர் 7-ம் தேதி, வி.பி.சிங் தலைமையிலான ஆட்சிக்கு அக்னீப் பரிட்சை நடத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வி.பி.சிங் வெற்றி பெறவில்லை. அதோடு அவர் பிரதமர் நாற்காலியை விட்டுவிட்டு ஒதுங்கிக்கொண்டார். ராஜீவ் காந்தி, சமாஜ்வாதி ஜனதா கட்சித் தலைவர் சந்திரசேகரை அந்த நாற்காலியில் அமர வைத்தார். ஆனால், சந்திரசேகருக்கு அந்த நாற்காலியைக் கொடுப்பதற்கு முன் ராஜீவ் காந்தி சில பேரங்களை கறாராகப் பேசிவிட்டார். அவற்றை செய்து கொடுப்பதாக ஒத்துக் கொண்டுதான் சந்திரசேகர் பிரதமர் நாற்காலியைப் பெற்றிருந்தார். 1990 நவம்பர் 10-ம் தேதி சந்திரசேகர் இந்தியாவின் எட்டாவது பிரதமராகப் பொறுப்பேற்றார். இப்படித்தான் நடக்கும் என்பதை, அக்டோபர் மாதமே ஜூனியர் விகடனுக்கு எழுதிய கட்டுரையில் ப.சிதம்பரம் சரியாக கணித்திருந்தார். சந்திரசேகர் பிரதமர் ஆனாதும், தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு இறுதிக் கட்டம் நெருங்கிவிட்டது என்பதையும் டெல்லி மெல்ல உணர்த்தத் தொடங்கியது. போயஸ் கார்டனில் ராஜீவ் காந்திக்கு வைக்கப்பட்ட விருந்து சரியாக வேலை செய்தது.

தி.மு.க ஆட்சியின் இறுதிக்கட்டம் ஆரம்பம்! 

கருணாநிதி, சந்திரசேகர்

புதிய பிரதமர் சந்திரசேகரும், தி.மு.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான நாஞ்சில் மனோகரனும் நெருங்கிய நண்பர்கள். 
நாஞ்சிலார் டெல்லி போனால், ஹோட்டல் மௌரியாவில்தான் தங்குவார். சந்திரசேகர் அந்த ஹோட்டலுக்கே தேடிவந்து நாஞ்சிலாரைச் சந்திப்பார். அந்த அளவுக்கு அவர்களுக்குள் நெருக்கமான நட்பு இருந்தது. அதனால், சந்திரசேகர் பிரதமரானதும், நாஞ்சிலாருக்கு ஏக மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியோடு கருணாநிதியைச் சந்தித்த அவர், “பிரதமருக்கு கடிதம் மூலம் வாழ்த்துத் தெரிவிக்கலாமா? அல்லது நானே நேரில் போய் வாழ்த்துச் சொல்லவா? எனக் கேட்டார். கருணாநிதி, “அவர் உங்கள் நெருங்கிய நண்பராச்சே... அதனால், நேரிலேயே போய் வாழ்த்துச் சொல்லுங்கள்” என்று நாஞ்சிலாருக்கு பச்சைக் கொடி காட்டினார். நாஞ்சிலார் நேரில் சென்றால்தான், “தமிழகத்தின் ஆட்சிக் கலைப்பு பற்றி டெல்லி என்ன நினைக்கிறது என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்” என்பது கருணாநிதியின் கணக்கு. கருணாநிதியின் அனுமதி கிடைத்ததும் நாஞ்சிலார் தொலைபேசியில் பிரதமர் சந்திரசேகரைத் தொடர்பு கொண்டு, “டெல்லி வந்தால் உங்களைச் சந்திக்க நேரம் கிடைக்குமா?” என்று கேட்டார்.  அதற்கு சந்திரசேகர், “விளையாடதீர்கள், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்” என்று சொன்னதும் நாஞ்சிலார் கிளம்பி டெல்லி சென்றார். ஒருவழியாக பிரதமர் சந்திரசேகரைச் சந்தித்த நாஞ்சிலார் நேரடியாகவே, “எங்கள் ஆட்சியைக் கலைக்கும் எண்ணம் இருக்கிறதா?” என்று கேட்டுவிட்டார். பிரதமர் சந்திரசேகரும் அவரிடம் எதையும் மறைக்கவில்லை. நாஞ்சிலாரிடம், “உங்களுக்கு தனிப்பட்ட முறையில் சொல்கிறேன். எனக்கு ஆதரவளித்தபோது ராஜீவ் காந்தி வைத்த பல நிபந்தனைகளில் முக்கியமான நிபந்தனை உடனடியாக தமிழ்நாடு, அஸ்ஸாம் மாநிலங்களில் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்பதுதான். அதனால், ஆட்சியைக் கலைப்பதற்குத் தேவையான காரணங்களை தமிழக ஆளுநரிடம் கேட்டிருக்கிறேன்” என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டார். நாஞ்சிலார் பிரதமர் சொன்ன விஷயங்களைக் கருணாநிதியிடம் தெளிவாகச் சொல்லிவிட்டார். தி.மு.க ஆட்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது என்பதை கருணாநிதியும் புரிந்து கொண்டார். 1989-ல் இருந்தே ஜெயலலிதாவும் நடராசனும் இதைத்தானே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

நடராசன்-ஜெயலலிதா மோதல்!

நடராசன், ஜெயலலிதா

ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் தங்கி இருந்த ஜெயலலிதா அங்கிருந்து அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அறிக்கையைப் பத்திரிகைகளுக்குக் கொடுப்பதற்காக, தலைமைக் கழகத்தையும், ‘நமது எம்.ஜி.ஆர்’ பத்திரிகை அலுவலகத்தையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஆனால், இரண்டு இடங்களிலும் தொலைபேசி இயங்கவில்லை. உடனடியாக தனது போயஸ் தோட்ட வீட்டு தொலைபேசிக்குப் பேசிய ஜெயலலிதா, தலைமைக் கழக நிர்வாகி துரையை பிடித்தார். துரையிடம் “நடராசன் என் குடும்ப நண்பர் இல்லை. அவருக்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று தனது அறிக்கையை வாசித்தார். அத்துடன், “இந்த அறிக்கை நாளை வெளிவரும் நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில் முதல் பக்கத்திலேயே வெளிவர வேண்டும். மற்ற பத்திரிகைகளுக்கும் இந்தச் செய்தி உடனடியாகப் போய்ச்சேர வேண்டும்” என்று துரைக்கு உத்தரவு பிறப்பித்தார். ஜெயலலிதாவின் அறிக்கை மறுநாள் அனைத்துப் பத்திரிகைகளிலும் பிரதானச் செய்தியாக வெளியானது. இதற்குப் பின்னணியில்தான், ‘எதிர்கால முதல்வர் நடராசன்’ என்ற கதை இருக்கிறது. தன்னை எப்போதும் புதிரான மனிதனாக, தன்னுடைய நடவடிக்கைகளை எப்போதும் மர்மமான நடவடிக்கைகளாக வைத்திருக்கும் நடராசன், சில முக்கிய நிகழ்வுகளில் ஜெயலலிதாவுக்கு தவறான தகவல்களைக் கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக அ.தி.மு.க பொருளாளர் மாதவன் பற்றி நடராசன் சொன்ன தகவல்கள். மாதவன் சில நாள்கள் சொந்த வேலையாக சிங்கப்பூர் சென்றிருந்தார். அந்தநேரம் ஜெயலலிதாவைச் சந்தித்த நடராசன் “இனிமேல் மாதவன் வரமாட்டார்; அவர் அரசியலில் இருந்து முழுமையான ஓய்வு பெற்று சிங்கப்பூர் சென்று செட்டில் ஆகிவிட்டார்; அதனால், உடனடியாக அவர் பொறுப்பை வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டும்” என்றார். அதற்கு ஜெயலலிதா என்ன சொன்னாரோ... தெரியாது. ஆனால், பொருளாளர் பொறுப்பை நடராசனை எடுத்துக் கொண்டார். சிங்கப்பூர் சென்றிருந்த மாதவன் அங்கே தன் வேலை முடிந்ததும் தமிழகம் திரும்பிவிட்டார். அவர் ஜெயலலிதாவைச் சந்தித்தபோது, “ ‘நீங்கள் சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்டீர்கள்’ எனக் கேள்விப்பட்டேன்” எனக் கேட்டு மாதவனுக்கு அதிர்ச்சி அளித்தார் ஜெயலலிதா. பதறிப்போன மாதவன், “யார் உங்களிடம் இப்படி எல்லாம் சொல்வது? நான் அப்படி ஒரு முடிவை எடுத்தால் உங்களிடம் தெரிவிக்காமல் எடுப்பேனா?” என்று நொந்து புலம்பினார்.

வருங்கால முதல்வர் நடராசன்!

நடராசன்

அடுத்த சம்பவம், வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்தபோது, நடராசன் டெல்லியில்தான் இருந்தார். ஆனால், டெல்லியில் நடந்த பல விஷயங்களை அவர் ஜெயலலிதாவிடம் முழுமையாகச் சொல்லவில்லை. இதுபற்றி ஒருமுறை எச்.கே.எல்.பகத்திடம் புலம்பிய ஜெயலலிதா, “நடராசனும், டெல்லியில் உள்ள அ.தி.மு.க எம்.பி-களும் என்னை இருட்டிலேயே வைத்துள்ளனர்” என்று வருத்தப்பட்டாராம். “நடராசன் பத்திரிகைகளுக்குப் பல தகவல்களை அவரே கொடுக்கிறார். அதையும் பத்திரிகைகளுக்குத் தகுந்த மாதிரி மாற்றி மாற்றிக் கொடுத்து எல்லோரையும் குழப்புகிறார். உங்களைப் பற்றி தவறான தகவல்களை அவரே பத்திரிகைகளுக்கு கொடுத்துவிட்டு, அந்தப் பழியை அவருக்குப் பிடிக்காதவர்கள் மீது போட்டுவிடுகிறார்” என்று அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் பலர் ஜெயலலிதாவிடம் தொடர்ந்து புகார்களை அடுக்கினர். குறிப்பாக கடந்த காலத்தில், நடராசனால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாவலர் நெடுஞ்செழியன் ஜெயலலிதாவிடம் ஒரு தகவலைக் கொண்டுபோனார். அவர் ஜெயலலிதாவிடம், “நடராசனுக்கு தமிழகத்தின் முதல்வர் ஆகும் ஆசை வந்துவிட்டது. அதற்கான வேலைகளில் அவர் இறங்கி உள்ளார். அதுபற்றி சோதிடர்களிடம் எல்லாம் நடராசன் குறி கேட்கிறாராம். அதோடு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்து ஜெயலலிதா சி.எம். ஆனாலும் தான்தான் ‘டிஃபாக்டோ சி.எம்’. ஜெயலலிதாவால் முழுமையாக சி.எம் வேலைகளைப் பார்க்க முடியாது. அதற்கு அவருடைய உடல்நிலை ஒத்துவராது என்றெல்லாம் சில இடங்களில் பேசி உள்ளார். எனவே, அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள்” என்று சொன்னார். அதுபோல சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு வழக்கில் ஆஜராக வரும் நடராசனை வரவேற்க, அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் பலர் வருகிறார்கள். சிலர் கட்டாயப்படுத்தி வரவழைக்கப்படுகிறார்கள். நடராசன் நீதிமன்றத்துக்கு வரும்போதும்... அங்கிருந்து கிளம்பும்போதும்... ‘வருங்கால முதல்வர் நடராசன்’ என்று கோஷம் எழுப்பப்படுகிறது” என்றெல்லாம் ஜெயலலிதாவிடம் புகார் வாசிக்கப்பட்டன. அதையடுத்துத்தான், ஜெயலலிதா அந்த அறிக்கையை வெளியிட்டார். ஆனால், அதில் ஆச்சரியம் அப்போதுதான் முன்பைவிட சசிகலாவை தனக்கு நெருக்கமானவராக வைத்திருந்தார் ஜெயலலிதாவுக்கு. ஜெயலலிதாவின் நிழலாக சசிகலா இருக்கும்போது, நடராசனை ஒதுக்கி வைத்தால் என்ன... வைக்காவிட்டால் என்ன? என்று நொந்து கொண்டனர் அ.தி.மு.க-வினர்.

கதை தொடரும்...

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

ஜோ.ஸ்டாலின்
படங்கள் - சு.குமரேசன்.   

 


டிரெண்டிங் @ விகடன்