வெளியிடப்பட்ட நேரம்: 08:04 (30/04/2017)

கடைசி தொடர்பு:08:03 (30/04/2017)

இது விவசாய இனப்படுகொலை... கொலையாளி தமிழக அரசு!' - கொதிக்கும் விவசாயிகள்

விவசாயிகள்

மிழகத்தில், விவசாயிகள் தற்கொலைக்கு வறட்சி காரணம் அல்ல. தனிப்பட்ட காரணங்களால் அவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை குறித்து விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். 

வராத காவிரி நீர், பொய்த்துப்போன பருவமழை போன்றவற்றால் தமிழகத்தில் விவசாயம் முற்றிலும் அழிந்துபோனது. இதனால் சுமார் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை, மாரடைப்பால் மரணம் என உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தை வறட்சி மாநிலமாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி நிலவுவதாகச் சூழலியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு வழக்காடு மையம் என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளது.இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "விவசாயிகள் தற்கொலை விவகாரத்தில் தமிழக அரசு மௌனம் காப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும் விவசாயிகளின் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும்'' என்றும் கூறியுள்ளனர்.அவர்கள் தொடர்ந்து, "இரண்டு வாரங்களுக்குள் இந்த மனுவுக்குத் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்'' என்றும் உத்தரவிட்டனர். 

விவசாயிகள் தற்கொலை

இந்தநிலையில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தமிழக அரசுக்கு அறிக்கை அளித்து வருகின்றனர்.அதன்படி வறட்சிக் காரணமாக எந்த ஒரு விவசாயியும் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் உடல் நலக்குறைவு, வயது முதுமை உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களால் மட்டுமே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 82 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாகவும்,அவர்களின் குடும்பங்களுக்குத்  தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பதில் குறித்து அரசியல் தலைவர்களும், விவசாயச் சங்கங்களைச் சேர்ந்தவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக விவசாயச் சங்க பிரதிநிதிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவரும் வேளையில் அவர்களிடம் பேசினோம்.

''வறட்சி மாநிலமாக அறிவித்தது ஏன்?'' 

நல்லசாமிதமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் சே.நல்லசாமி, "தமிழகத்தில் விவசாயிகள் வறட்சி காரணமாகத் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றால்,32 மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங்களாக அரசு அறிவித்தது  ஏன்? 35 ஆயிரத்து 565 கோடி ரூபாய் வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது ஏன்? இதற்கெல்லாம் தமிழக அரசு பதில் சொல்லுமா? இதுவரை வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்தும், மாரடைப்பு ஏற்பட்டும் மரணமடைந்துள்ளனர்.இதனை மத்திய குற்ற ஆவணக் காப்பகமே பதிவுசெய்துள்ளது.உயிரிழந்துபோன விவசாயிகளின் மரணத்தை மறைப்பதால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று இந்த அரசுக்குத் தெரியாதா? அதுவும் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. 'தன்நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்' என்ற வள்ளுவரின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.தமிழக அரசின் அடையாளமாகவும் உறுதிமொழியாகவும் இருக்கும் 'வாய்மையே வெல்லும்' என்ற வார்த்தை, தற்போது 'பொய்மையே வெல்லும்' என்ற சொல்லைத் தாங்கி நிற்பதாக தோன்றுகிறது'' என்றார் கவலையுடன்.

''தமிழக அரசின் பதில் மனு தரம் தாழ்ந்த செயல்!'' 

தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டியக்கத்தின் மாநிலத் தலைவர் தெய்வசிகாமணி, "தமிழகம் முழுவதையும் வறட்சி மாநிலமாக தெய்வசிகாமணி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.மேலும், 39 ஆயிரத்து 565 கோடி ரூபாய் மத்திய அரசிடம்  நிவாரண நிதியையும் கேட்டார். அது மட்டுமின்றி, இறந்துபோன விவசாயிகளுக்கு 3 லட்ச ரூபாய் மாநில அரசு நிவாரணத் தொகையும் கொடுத்துள்ளது.சூழல் அப்படி இருக்கையில், 'விவசாயிகள் வறட்சியால் இறக்கவில்லை' என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது கண்டனத்துக்குரியது.எந்த அளவுக்கு  விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது வெளிப்படையாகத் தெரியும்போது உச்ச நீதிமன்றத்தில் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று பதில் மனுத் தாக்கல் செய்திருக்கும் தமிழக அரசின் செயல்பாடு வெட்கக்கேடானது.இது, மிகவும் தரம் தாழ்ந்த செயல். நாடாளுமன்றத்தில் மிகவும் பகிரங்கமாக வறட்சி நிவாரணம் கொடுக்க முடியாது என்று மத்திய அரசு கூறிவிட்டது.இதனை எதிர்த்துப் பேச திராணியற்ற தமிழக உறுப்பினர்களாகத்தான் அவர்கள் அவையில் அமர்ந்துள்ளனர். இங்கே ஏமாந்தவர்கள் விவசாயிகள் என்பதால் மீண்டும் விவசாயிகளை மாநில அரசு காவுகொடுக்கத் துணிந்துள்ளது'' என்றார். 

''இது ஒரு விவசாய இனப்படுகொலை!''

அரிச்சலூர் செல்வம் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அரிச்சலூர் செல்வம், "விவசாயிகள் விவகாரத்தில் தமிழக அரசு உண்மையை எதிர்கொள்ள அஞ்சுகிறது.விவசாயிகளின் உண்மை நிலையைத் தெரிவித்தால், தமிழக அரசுக்குக் கேவலமாக இருக்கும் என்பதைத்தான் இந்த நடவடிக்கை காட்டுகிறது.கடந்த 10 வருடங்களில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகமே சுட்டிக்காட்டுகிறது.விவசாயிகளின் தற்கொலையைத் தடுப்பதற்கு பதில் ஆவணங்களில் புள்ளிவிபரங்கள் வந்துவிடக்கூடாது என்றுதான் அரசு கவலைப்படுகிறது.இது ஒரு விவசாய இனப்படுகொலை.இதனை மறைத்துப் பொய்யான தகவலைத் தெரிவித்திருப்பது இதைவிடத் தரம் தாழ்ந்த செயல்பாடு வேறு எதுவும் இருக்க முடியாது.எனவே, இங்கே விசாரிக்கப்பட வேண்டியது தமிழக அரசுதான்... " என்றார். 

தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை என்பது வறட்சியால் அல்ல...சொந்த காரணங்களால் அவர்கள் இறந்துள்ளதாகச் சொல்லி வரலாற்றுப் பிழையைச் செய்துள்ளது தமிழக அரசு. ''ஆனால், விவசாயிகளின் தொடர் மரணம் என்பது, ஓர் இனப்படுகொலை'' என்று விவசாய ஆர்வலர்கள் கூறுவது கவனிக்கத்தக்கது. 

 

இங்கே விசாரிக்கப்பட வேண்டியது யார்? 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்