வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (30/04/2017)

கடைசி தொடர்பு:14:54 (30/04/2017)

ஸ்டாலின் சிக்னல்: அமெரிக்கா பறந்த அன்பில் மகேஷ்!

ஸ்டாலினுடன் அன்பில் மகேஷ்

'வேர்ல்டு லேர்னிங் ' என்னும் அமெரிக்க அமைப்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா பறந்துள்ளார் தி.மு.க திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ். 

‘1932-ம் ஆண்டு டாக்டர் டொனால்ட் வாட் என்பவரால் 'வேர்ல்டு லேர்னிங் '(World Learning) எனும் அமெரிக்க அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் கல்வித்திட்டத்தின் மூலம்  அமெரிக்க அரசியல் நிலவரங்கள் போதிக்கப்படுகிறது. ‘தி எக்ஸ்பிரிமெண்ட் இன் இண்டர்நேஷனல் லிவிங்’ (The Experiment in International Living) என்ற பெயரில், அமெரிக்க இளைஞர்கள், எல்லைகளைக் கடந்து  மற்ற நாடுகளுடைய பண்பாடு, பழக்க வழக்கங்கள் , அரசியல் வரலாறு, சமகால அரசியல் போக்குகள் ஆகியவற்றை அறிந்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்துகிறது. அதேபோல் மற்ற நாடுகளில் இருந்து இளம் அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள், பல்துறை நிபுணர்கள் உள்ளிட்டோரை அமெரிக்காவுக்கு அழைத்து , அங்குள்ள பண்பாட்டு பழக்க வழக்கங்கள், அரசியல் வரலாறு, அரசியல் சூழல்கள் குறித்தெல்லாம் பகிர்ந்துக்கொள்ளப்படுகிறது. இது , நாடுகளுக்கிடையேயான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கத்தில் செயல்படுவதாக அந்த அமைப்புக் கூறுகிறது.  இத்திட்டத்தின் ஒருபகுதியாக, மொத்தம் 24 நாடுகளில்  இருந்து பல்துறைகளைச் சார்ந்த இளம் ஆளுமைகளைத் தேர்வு செய்து அழைப்பு கொடுத்துள்ளனர். இந்தாண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த 32 இளம் அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள், பல்துறை நிபுணர்கள் உள்ளிட்டோரை ‘லெஜிஸ்லேடிவ் ஃபெல்லோ ப்ரோகிராம்’ (Legislative Fellow Program) என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளனர். இக்குழுவில் இடம்பெறும் 16 இந்தியர்களில் ஒருவராக தேர்வு பெற்றதையொட்டி அன்பில் மகேஷ் ஏப்ரல் 28-ம் தேதி இரவு அமெரிக்கா பறந்துள்ளார்.

எப்படி தேர்வானார் அன்பில் மகேஷ்?:

‘இதற்கென்று தனியாக ஓர் தேர்வு குழு உள்ளது. அந்தக் குழு, பல நாடுகளில் உள்ள இளம் ஆளுமைகளைப் பட்டியலிட்டுத் தெரிவு செய்து அவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும். சுய விளம்பரத்துக்காகச் செயல்படுகிறார்களா? இல்லை உண்மையிலேயே நல்ல நோக்கத்தில் செயல்படுகிறார்களா? என்று ஆய்வு செய்யும். இணையதள நாளிதழ்களில் வெளியாகும் செய்திகள், அவர்களின் சமூக வலைதளப்  பக்கங்களில் உள்ள  அரசியல் பதிவுகள், கூட்டங்கள் நடத்துவது, அவர்களின் மேடைப் பேச்சு போன்ற அனைத்து டேட்டாக்களையும்  திரட்டி பரிசீலிக்கும். இப்படியான சில அடுக்கு பரிசீலனைகளுக்குப் பிறகு இறுதித் தேர்வு நடக்கும். 1999 தேர்தலில் இருந்தே அன்பில் மகேஷ் அரசியல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டு  வருகிறார். செயல் தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்தநாளின்போது 'இளைஞர் எழுச்சி நாள்' விழாவை டூராக சென்று இளைஞரணியின் பிரசாரங்களை மேற்கொண்டார். சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட பின் தொடர்ந்து தொகுதிக்குள் விசிட் அடிப்பது, பிரச்னைகளுக்காகக் குரல் கொடுப்பது, தன்  எல்லைக்குட்பட்ட தீர்வுகளைக் கொடுத்தது' என்ற அவரின் அரசியல் பணிகளை ஆய்வு செய்தே, இறுதியில் அன்பில் மகேஷை , சிறந்த இந்திய இளம் தலைவர்களில் ஒருவராகத் தேர்வு செய்து அழைத்துள்ளது அமெரிக்கா 'வேர்ல்டு லேர்னிங்' கல்வி அமைப்பு.' என்கின்றனர் தி.மு.க-வினர்.

அன்பில் மகேஷ்

அமெரிக்காவில் பயிற்சி:

அமெரிக்க அரசின் கல்வி மற்றும் பண்பாட்டுத் துறையின் நிதியுதவியுடன், மூன்று முதல் ஆறு வாரக் காலம் நடைபெறும் இந்த முகாமில் அமெரிக்க நாட்டின் கூட்டாட்சி முறை, அரசியல் தலைமை,  இளைஞர் வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் குறித்தும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் (NGO), அரசு அலுவலகங்களின் செயல்பாடு முறை குறித்தும் விளக்கும் கருத்தரங்கங்கள் நடைபெறும். வார இறுதி நாட்களில் சிறப்பு வகுப்புகளும் இருக்கும்.

அமெரிக்காவில் 'திராவிடம்':

இந்த அரசியல் வகுப்புக்காக கடந்த சில மாதங்களாகவே தயாரிப்பில் இருந்தார் அன்பில் மகேஷ். செயல் தலைவர் பிறந்தநாளுக்காக புத்தகங்கள் கொடுக்கப்பட்டு வந்ததையொட்டி , சிறந்த புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினார். குறிப்பாக திராவிட அரசியல் , திராவிடம்-ஆரியம் இடையிலான சமூக நீதி போர், மொழிப் போராட்ட வரலாறு , அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, முரசொலி மாறன் எழுதிய மாநில சுயாட்சி, போன்றவர்கள் எழுதிய புத்தகங்கள் , வரலாற்றை எல்லாம் வாசிக்க தொடங்கினார். அவர் வாசித்ததை எல்லாம் எங்களிடமும் பகிர்ந்தார். அப்படிதான் அறிஞர் அண்ணா குறித்த ஒன்றை பகிர்ந்தார். அண்ணா யேல்  பல்கலைக்கழகம் சென்றபோது அங்கிருந்தோர்,  'ஏ.பி.சி.டி' எனும் நான்கு எழுத்துக்களும் இடம் பெறாத வார்த்தை சொல்லுங்க?' என்று கேட்டபோது உடனடியாக அண்ணா, ' ஒன், டூ , த்ரீ (one, two, three....) என்று தொண்ணூற்றி ஒன்பது வரை எழுதுங்க. இதில் எங்கும் நீங்கள் சொன்ன எழுத்துக்கள் இடம் பெற்று இருக்காது  ' என்றார் அறிஞர் அண்ணா . 'இப்படியெல்லாம் அறிவு கூர்மையோடு நம் இயக்கத்தை வழிநடத்தியிருக்கிறார்கள்' என்று எங்களிடம் சிலாகித்துப் பேசினார் அன்பில் மகேஷ். தொடர்ந்து  'நம்முடைய இயக்கத்தின் வரலாறு , தியாகங்கள், திராவிட கோட்பாடுகளின் அருமை, பெருமைகள் , இன்று செயல் தலைவரின் செயல்பாடுகள் அனைத்தைக் குறித்தும் பேசப்போவதாக எங்களிடம் பகிர்ந்தார். சில ஆண்டுகளுக்கு முன் அன்பில் மகேஷ், குடும்பத்துடன் அமெரிக்கா செல்ல அனுமதி கேட்டபோது விசா மறுக்கபப்ட்டது. ஆனால் இன்று அதே அமெரிக்கா, தேடிவந்து அழைப்பு விடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது.' என்கின்றனர் அறிவாலயத்தை  சார்ந்தவர்கள்.

கருணாநிதி , அன்பழகனுடன் அன்பில் மகேஷ்

ஸ்டாலின் சிக்னல் :

இந்தப் பயணம் உறுதியானபின்,  மு.க ஸ்டாலினை சந்தித்துள்ளார் அன்பில் மகேஷ். 'சிறப்பா பேசு. நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டு வா. அதே நேரம் நம்முடைய இனம், மொழி, பண்பாடு குறித்தும் பேசிவிட்டு வா' என்று, பேராசிரியர் அன்பழகன் எழுதிய புத்தகம் ஒன்றை அன்பளித்து, வாழ்த்தியுள்ளார். பின், கே.என் நேரு உள்ளிட்ட மூத்த தலைவர்களைச் சந்தித்து அவர்களிடமும்  வாழ்த்துக்களைப் பெற்ற நம்பிக்கையோடு  அமெரிக்கா பறந்துள்ளார் அன்பில் மகேஷ். நம்பிக்கைகள் நிஜமாகட்டும்.


டிரெண்டிங் @ விகடன்