வெளியிடப்பட்ட நேரம்: 19:17 (01/05/2017)

கடைசி தொடர்பு:19:16 (01/05/2017)

"அந்நிய முதலாளித்துவத்திற்கு எதிரான குரல் தீவிரமடைய வேண்டும் "- நல்லகண்ணு...!

நல்லகண்ணு

ன்று உலகம் முழுவதும் மே தினம் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. 8 மணி நேரத்தைத் தாண்டிச் செக்குமாடாய் உழைத்த தொழிலாளர்கள் பொறுமையிழந்து போராடி பெற்ற தினம் இன்று. இதுபோன்ற போராட்டக் களத்தில் தொழிலாளர்கள் தவிர, தலித் விவசாயக் கூலிகளும் தங்கள் உரிமைக்காகப் போராடிச் சிறைக்கொட்டகைகளில் சித்ரவதை செய்யப்பட்டும், தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்தனர். அதுபோன்ற போராட்டக் களத்தில் குதித்த ஆயிரக்கணக்கானவர்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணும் ஒருவர்.

எளிமைவாதியும், சமூக நீதிப் போராளியுமான நல்லகண்ணுவிடம் மே தினம் குறித்துச் சில கேள்விகள் முன்வைத்தோம்.  

''உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தொழிலாளர்கள் தினம் பற்றி உங்கள் கருத்து?'' 

''இது, நாடு, மதம், மொழி, இனம் கடந்து உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பேசும் தினமாகக் கொண்டாடப்படுகிறது. காலம் நேரமில்லாமல் விடியவிடிய உழைக்கும் மக்கள் 8 மணி நேர  வேலைக்கான உரிமைகோரி 1886-ம் ஆண்டு அமெரிக்காவில் போராட்டம் நடத்தினர். அதில், சில தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் சிலர், தூக்கு மேடைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்கள், மிகவும் துன்பகரமான நிலையில் வியர்வை மற்றும் ரத்தத்தைச் சிந்தி பெற்ற தினம் இது. மற்ற தினங்கள் அனைத்தும் சாதி, மத அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. இந்தத் தொழிலாளர் தினம் மட்டுமே அனைவருக்கும் பொதுவான தினமாகக் கொண்டாடப்படுகிறது. பொதுவுடைமைவாதியான சிங்காரவேலுதான் 1973-ல் முதன்முறையாகச் சென்னையில் மே தினக் கொடியை ஏற்றிவைத்து இந்தத் தினத்தைக் கொண்டாட வழிவகை செய்தார். அதனைத் தொடர்ந்தே இந்தியா முழுவதும் மே தினம் கொண்டாடப்பட்டது. அதன்பின்னரே, தொழிலாளர் நலச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டு ஓய்வூதிய நடைமுறை பின்பற்றப்பட்டது. அவ்வாறு ரத்தம் சிந்தி போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் தற்போது இழக்கும் நிலை உருவாகிவருகிறது. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடும் விவசாயிகள், தொழிலாளர்கள் எனப் பலரையும் நசுக்கும் வேலைகளை ஆளும் வர்க்கம் மிகச் சாதாரணமாகச் செய்துவருகிறது. எனவே, இழந்த உரிமைகளையும், இழக்கும் உரிமைகளையும் மீட்டெடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இளைஞர்களுக்கு இருக்கிறது.'' 

''இன்றைய காலகட்டத்தில் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் உரிமைகள் கிடைக்கின்றன என்று நம்புகிறீர்களா?'' 

''பொதுத்துறை நிறுவனங்கள் பெரும்பாலும் தனியார் மயமாக்கும் நிலைக்குப் போய்க்கொண்டிருக்கின்றன. தொழிற்சங்க சட்டங்கள் இப்போதும் மறுக்கப்படும் நிலை உள்ளது. ஆனாலும், அதை எதிர்த்துப் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். '20 பேர் இருந்தால் தொழிற்சங்கத்தை உருவாக்கலாம்' என்று சட்டம் சொல்கிறது. ஆனால், அவற்றை நசுக்கிவிட்டு 100 பேர் இருந்தால்தான் தொழிற்சங்கத்தை உருவாக்க முடியும் என்று சொல்கின்றனர். இவற்றையெல்லாம் பார்க்கும்போது தொழிலாளர்களுக்கு உரிமை மறுப்பு இருக்கிறது என்பதைத்தானே உறுதிபடுத்துகிறது.''

நல்லகண்ணு பேட்டி

''தங்களுடைய உரிமைகளுக்காக மக்கள் போராடுகிறார்களா?''

''அண்மைக்காலமாக மக்கள் தங்களுடைய உரிமைளுக்காகக் குரல்கொடுக்கத் தொடங்கியுள்ளனர். அதுவும் இன்றைய இளைஞர்களை எண்ணிப் பெருமைகொள்கிறேன். ஜல்லிக்கட்டு, விவசாயிகள், நெடுவாசல் எனப் பல்வேறு போராட்டங்களும் மிகப்பெரிய அளவிலான கவனத்தைப் பெற்றுள்ளன. இளைஞர்கள் அவர்களாகவே சாலையில் இறங்கிப் போராடத் துணிந்துவிட்டார்கள். இந்த நிலைப்பாட்டில் மாறாமல் அவர்கள் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால், அவர்களுக்கு என்று 'ஒரு தலைவன்' தேவை என்ற நிலை இருக்காது. அதேநேரத்தில், போராடும் இளைஞர்களைக் கண்டு அதிகாரவர்க்கமும் அச்சம்கொள்ளும்.'' 

"தொழிலாளர்கள் யாரை எதிர்த்துப் போராட வேண்டும்... அவர்களுடைய தற்போதைய தேவை என்ன?'

''இந்தியாவில் அந்நிய முதலாளிகளின் ஆதிக்கம் தலைதூக்கியுள்ளது. அதற்கான வேலைகளை அம்பானிகளும், அதானிகளும் செய்துவருகிறார்கள். நாட்டின் வளத்தைச் சுரண்டும் அந்நிய மூலதனத்தை அனுமதிக்கக்கூடாது. நாட்டின் வளர்ச்சி என்று கூறிக்கொண்டு அந்நிய முதலீடுகளைத் திறந்துவிடும் வேலையை மிகச் சர்வசாதாரணமாக ஆளும் வர்க்கமும் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. எனவே, அதற்குப் பின்னால் உள்ள அரசியலைப் புரிந்துகொண்டு அந்நிய முதலாளிகளை எதிர்க்கவேண்டிய மிகப் பெரிய பொறுப்பு இளைஞர்களுக்கு உள்ளது. அதனை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதே இன்றையத் தொழிலாளர்களுக்கும், இளைஞர்களுக்கும் நான் சொல்லும் செய்தி.''

"அதிகார வர்க்கத்தை எதிர்த்துப் போராடும் இளைஞர்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன?'' 

''அந்நிய மூலதன முதலாளிகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர். அவர்கள் அடித்தட்டு மக்களைத்தான் குறிவைப்பார்கள். அந்த விளிம்புநிலை மக்களின் உரிமைகளைப் பறிக்கவோ, நசுக்கவோ நாம்  அனுமதிக்கக்கூடாது.அதனை மனித உரிமை மீறலாக எண்ணிக் கடுமையாக எதிர்க்க வேண்டும். அப்படி ஒரு போராட்டத்தைக் கையில் எடுக்கும்போது என்ன நெருக்கடிகள் வந்தாலும் பின்வாங்காமல் மனவலிமையோடு நின்று போராட வேண்டும். அதனை அடுத்தகட்டத்துக்கு நகர்த்த வேண்டும். அதே நேரத்தில், நமது நாட்டின் இறையாண்மையையும், ஜனநாயகத்தையும் காக்கவேண்டிய பொறுப்பும்  இந்தப் போராளிகளுக்கு உள்ளது.''

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்