வெளியிடப்பட்ட நேரம்: 13:46 (02/05/2017)

கடைசி தொடர்பு:13:39 (02/05/2017)

’பாகுபலி’ ராஜமாதாவும்... ‘போயஸ் கார்டன்’ ஜெயலலிதாவும்... அப்பப்பா அப்படியே இருக்கிறதே!

இது சினிமா விமர்சனம் அல்ல. சினிமா பார்த்துக் கொண்டு இருந்தபோது தோன்றிய விமர்சனம்!

அந்த மகிழ்மதி தேசத்தைக் காப்பாற்ற ஒரு மகேந்திர பாகுபலி இருந்தான். இந்த மதிகெட்ட தேசத்து மக்களைக் காப்பாற்றப்போகும் மகேந்திர பாகுபலி யார்?

ராஜமாதா சிவகாமி அம்மாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் கொஞ்சம்தான் வித்தியாசம். தான் நினைத்ததே சரி, தான் நினைத்தது உடனே நடந்துவிட வேண்டும் என்று நினைப்பவர் அந்த ராஜமாதா. தனது மகன் பல்வாள் தேவனுக்கு பட்டம் சூட்டாமல், அமரேந்திர பாகுபலிக்கு பட்டம் சூட்ட நினைக்கிறார். தனக்கு பட்டம் சூட்டப்படவில்லை என்று மகன் நினைத்துவிடக்கூடாது என்பதற்காக அவனுக்கு பொன்னும் பொருளும் கொடுத்து மனம் மாற்றம் செய்ய நினைக்கிறார். தனக்கு அடங்கிய பிள்ளையாக பாகுபலி இருக்கும் வரை தான் அவனுக்கும் செல்லம் கொடுக்கிறார். அவன் தனது எண்ணத்துக்கு மாறாக நடந்ததும், பழையபடி தன் மகன் பல்வாள்  தேவனுக்குப் பட்டம் சூட்டுகிறார். தேவன் கைமீறியதும் அவனை எதிர்க்கிறார். தேவசேனாவை தன் மகனுக்கு மனம் முடிக்க துடிக்கிறார். அவள் அதை மறுத்ததும் அவளையே சிறை பிடிக்கிறாள் சிவகாமி. அந்த நாட்டின் மீதும் போர் தொடுக்கிறார்.  கடைசியில் தேவசேனா காலில் விழுந்து மன்னிப்பும் கேட்கிறாள். எந்தக் கொள்கையும் இல்லாமல் தன் மனம்போன போக்கில் யாகம், பூஜைகள் வைத்து ராஜ்யம் செய்கிறார் அந்த ராஜமாதா.

 அதேநேரத்தில் அவளைச் சுற்றி உறவுகள் உட்கார்ந்து  அவளது சம்பாத்தியத்தையே சாப்பிட்டுக் கொண்டு அவளுக்கு எதிராகவே  சதிவேலை பார்த்து அவளையே கொல்கின்றன.  மகனைக் கைது செய்ய அம்மா நினைப்பதும். அம்மாவை மகனே கொல்வதும் .. முடியரசுகளில் மட்டுமல்ல குடியரசுகளிலும் தொடர்கிறது. தன்னை பாதுகாக்க ஒரு ஒரு வலை பின்னி, அந்த வலைக்குள் இருந்து விடுபட முடியாமல் துடித்தது ராஜமாதா மட்டுமல்ல, ஜெயலலிதாவும் தான். சிவகாமி வாழ்க்கை அலையில் முடிந்தது. ஜெயலலிதா வாழ்க்கை அப்போலோவில் முடிந்தது. அம்பு எய்தல் அறிந்தோம். அறை எண் 2008 அறிந்தோம் இல்லை. பிரமாண்ட படங்களை எடுப்பதில் ராஜமெளலிகளை தோற்கடிப்பார்கள் போயஸ் மாந்தர்கள்.

சாகும்போது, 'அம்மா ஜாக்கிரதை' என்கிறான் பாகுபலி. சொந்த அம்மாவை மட்டுமல்ல வெந்த அம்மாவையும் சேர்த்துத்தான்.

தி.மு.க., அ.தி.மு.க. இரண்டிலும் நடப்பது சகோதரச் சண்டைகள் தான். மகிழ்மதி தேசம் மட்டுமல்ல தமிழ்தேசமும் குடும்ப யுத்தங்களால் உருக்குலைகிறது.ஜெயலலிதாவை முன்வைத்து சசிகலா குடும்பத்துக்குள் நடப்பதும், கருணாநிதியை முன் வைத்து கோபாலபுர குடும்பத்துக்குள் நடந்ததும் காட்சிகளாய் விரிகின்றன. தா.கிருஷ்ணன் கொலை முதல் ராஜஜெயம் கொலை வரை அனுஷ்காவின் மாமன் கொலையாகவே இருக்கின்றன. படத்தில் நடந்த கொலைக்கு காரணம் தெரிகிறது. நடப்பு கொலைக்கு காரணம் தெரியவில்லை.

யாரென்றே தெரியாத ஒருவனிடம் 50 கோடி கொடுத்து இரட்டை இலையை வாங்க முயற்சித்தது போல, மகன் விரும்பிவிட்டான் என்பதால் அறிமுகம் இல்லாத ஒரு நாட்டுக்கு கோடிக்கணக்கான பணத்தை நகைகளை வைர வைடூரியங்களை அனுப்புகிறார் ராஜமாதா. ஆனால், சுயமரியாதை சுனாமியாக அதையெல்லாம் மறுத்து எதிர்க்கிறாள் தேவசேனா. அப்படியொரு ஆத்மா இப்போது தமிழக அரசியல் களத்துக்கும் அவசியம் தேவை. 

கட்டப்பாக்களுக்கு ராஜவிசுவாசம் வேண்டும் தான். ஆனால் சுயசிந்தனையை அடமானம் வைத்துவிட்ட விசுவாசம் எங்கும் எந்த இடத்திலும் இருக்கக்கூடாது.அடிமையின் குணம் விசுவாசம். அது அநியாயத்தை எதிர்க்கும் குணம் அல்ல. நாட்டுக்காகச் சாவது தான் வீரம். அநியாயத்துக்கு எதிராக வீழ்வதே வீரம். ஆனால் பங்காளிச் சண்டைக்கும் பகையாளிச் சண்டைக்கும் உயிரைக் கொடுப்பது வீரமும் அல்ல. அதில் அடைவது வெற்றியும் அல்ல. 

இந்தப் படத்தில் நிலப்பிரபுத்துவம் இருக்கிறது. காலனியாதிக்க குணாம்சம் இருக்கிறது. மதவாத, பழைமை வாதமும் சாதியவாதமும் கூச்சமில்லாமல் நியாயப்படுத்தப்படுகின்றன. அதையும் மீறி மன்னராட்சி கால எச்சங்களாக இன்றைய நடப்புகள் இருப்பதை பாகுபலி காட்டுவதால் கவனிக்க வேண்டி இருக்கிறது.

"நடப்பது யாகம். நீ அதில் ஒரு விறகு" என்கிறார் நாசர். பாசிச யாகத்துக்கு மக்கள் விறகாகிவிடக்கூடாது. பாசிசம் விறகாக வேண்டும்.

மறுபடியும் சொல்கிறேன்... இது சினிமா விமர்சனம் அல்ல. சினிமா பார்த்துக் கொண்டு இருந்தபோது தோன்றிய விமர்சனம்


டிரெண்டிங் @ விகடன்