வெளியிடப்பட்ட நேரம்: 17:06 (02/05/2017)

கடைசி தொடர்பு:09:14 (04/05/2017)

சுற்றுலாவாசிகளிடம் தண்ணீருக்கு கையேந்தும் விலங்குகள்... பரிதாப நிலையில் தமிழக சரணாலயம்! #VikatanExclusive

 

கடும் வறட்சியில் குடிநீரின்றி வனவிலங்குகள் செத்து மடிவதை ஒரு சரணாலயம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதுதான் கொடுமையிலும், கொடுமை.  

நாகை மாவட்டம், கோடியக்கரையில் 2500 ஹெக்டேர் பரப்பளவில் பரந்துவிரிந்த வனத்தில் வனவிலங்கு சரணாலயம் அமைந்தள்ளது. இங்கு சுமார் 2000 புள்ளிமான்கள், வெளிமான்கள், ஆயிரக்கணக்கான குரங்குகள், நூற்றுக்கணக்கான மாடுகள், குதிரைகள், காட்டுப்பன்றிகள், நரிகள், முயல்கள் எனப் பலவகை மிருகங்கள் வசிக்கின்றன. இவற்றின் குடிநீர் தேவையை போக்க முனியப்பர் ஏரி, அவுளியாகன்னிக்குளம், சின்னநண்டுக்குளம், பெரியநண்டுக்குளம், ஓணான்குளம், சின்னப்பேரளம், சேர்வராயன்கோயில்குளம் என இயற்கையாய் அமைந்த நீர்நிலைகள் உண்டு. இவை அத்தனையும் பாலமாய் வெடித்து வறண்டு கிடக்கின்றன. செயற்கையாய் அமைக்கப்பட்ட சிமெண்ட் தொட்டிகளில் முன்பேல்லாம் தினந்தோறும் டேங்கர்லாரி மூலம் தண்ணீர் நிரப்புவார்கள். அதனை விலங்குகள் பயன்படுத்தும். இப்போதெல்லாம் எப்போதாவது ஒருதடவைதான் தண்ணீர்காட்டுகிறார்கள். எனவே, விலங்குகள் குடிநீருக்குத் தவியாய்த் தவித்து அலைகின்றன. அதுகிடைக்காமல் செத்து மடிகின்றன.  

 

அமேசான் காட்டிலும், கோடியக்கரை காட்டிலும் மட்டுமே அரிதாக காணப்படும் உமரிச்செடி (சூடாமோனிகா) மான்களின் தாகத்தை தணிக்கிறது. இச்செடியின் நுணியை கடித்துவிட்டு உறிஞ்சினால் நீர்வரும். இதனை மான்கள் பயன்படுத்துவதால் தாகத்தின் கொடுமையிலிருந்து தப்பிவிடுகின்றன. ஆனால் மற்ற மிருகங்கள்?

குரங்கு  உமரிச்செடி

கோடியக்காட்டைச் சேர்ந்த ராசு, “காணாமல்போன மாட்டைத்தேடி காட்டுக்குள் போனேன், குளத்துப்பக்கம் ஒரே பிணவாடை, பசுமாடுகளும், குதிரைகளும் செத்து சிதறல்கலாக கிடந்தன. வாயில்லா ஜீவன்கள் நீரில்லாம வதைப்படுறத பார்த்து மனசு ரொம்ப கஷ்டமா போச்சு. குரங்குகள் ரோட்டுக்கு வந்து காரை வழிமறிச்சி தண்ணீ கேட்குதுங்க. கார்லபோன ஒருத்தர், கேனில் இருந்த குடிநீரை கீழே ஊற்றினார், அவற்றை குரங்குகள் கூட்டமாய் ஓடிச்சென்று குடிக்குது. வனத்துறையில ரெண்டு கிணறு இருக்கு, ஒண்ணுல தண்ணியில்ல, இன்னொண்ணு கொஞ்சமாதான் ஊறும். இவ்வளவு மிருகங்களுக்கு வாரத்துக்கு ஒரு லாரி தண்ணி போதுமா? பசுவை தெய்வமா வணங்குற நாட்டுல அது குடிக்க நீரில்லாம சாகவிடுறது நல்லதா?” என்றார் வேதனையாக.  

தொட்டிக்கு நீர்நிரப்பிக் கொண்டிருந்த வனத்துறை ஊழியரிடம் பேச்சுகொடுத்தபோது, “கிணத்துல தண்ணியில்ல, வேதாரண்யத்திலிருந்து கொண்டுவந்து ஊத்துறோம், இதுக்கு மேல என்ன பன்றது?” என்று அலுத்துக்கொண்டார்.  

ராசு  தண்ணீர் தொட்டி

இறுதியாக வனச்சரகர் அயுப்கான், “மிருகங்களுக்கு போதுமான தண்ணி கிடைக்கலன்றது உண்மைதான்.  தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தால் நல்லது” என்றார்.  

இந்தியா முழுவதுமே விலங்குகள் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றன. வாய் உள்ள மனிதர்களும் நீரின்றித் தவிக்கிறார்கள். வாயில்லா ஜீவன்கள் நீரின்றி மடிகின்றன. இது அரசுக்கு அவமானம்.  

 

 

உலகம் முழுவதுமே காடுகள் வறட்சியால் பாதிக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீர் மேலாண்மையில்  சிறந்து விளங்கும் நாடுகள் ஓரளவுக்கு நிலைமையை சமாளிக்கின்றன. மற்ற நாடுகள் விலங்குகளை காவு கொடுக்க வேண்டியிருக்கிறது. தென்னிந்தியாவில் கேரளா மாநிலம் இதில் சிறந்து விளங்குகிறது. தமிழகமும், கர்நாடகமும் மோசமான நிலையிலே இருக்கிறது. ஆனால், நீர் மேலாண்மையும் நிரந்தரத் தீர்வு கிடையாது. உடனடியாக தண்ணீர் பயன்பாட்டைக் குறைப்பதும், மரங்களை நடுவதும், காடுகளை அதிகமாக வளர்ப்பதுமே தீர்வாக முடியும். உடனே விழித்துக் கொள்ளாவிட்டால், உலகம் சந்திக்கப் போகும் பிரச்னைகள் மோசமானதாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

 

 

 


டிரெண்டிங் @ விகடன்