100 கிராம் தயிர் 972 ரூபாய்; ரயில்வே கேன்டீன் கொள்முதல் ஆச்சர்யம் ....!

ரயில்

யில் பயணத்தின் போது ரயில் கேன்டீனில் விற்கப்படும் உணவுகள் பெரும்பாலும் தரமற்றவைகளாகத்தான் இருக்கின்றன. விலை அதிகமாகவும் இருக்கின்றன. பயணிகளுக்கு தரமான உணவு பொருட்களை வழங்க ரயில்வே அக்கறை காட்டுவதில்லை. இது ஒருபுறம் இருக்க ரயில்வே கேன்டீனுக்காக தயிர், சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணை ஆகியவற்றை சந்தை விலையை விட பல மடங்கு அதிகம் விலை கொடுத்து கொள்முதல் செய்யப்பட்ட விவரம் தெரிய வந்துள்ளது.

தகவல் அளிக்க உத்தரவு

மும்பையைச் சேர்ந்த அஜய் போஸ் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய ரயில்வேயில் கேன்டீனுக்காக கொள்முதல் செய்யபடும் உணவுப் பொருட்கள் விலை பட்டியலை கேட்டுள்ளார். ஆனால், மத்திய ரயில்வேயின் பொதுத்தகவல் அலுவலர் அவரது மனுவின் மீது பதில் அளிக்கவில்லை. இதையடுத்து மத்திய ரயில்வேயின் முறையீட்டு அதிகாரிக்கு அஜய் போஸ் மனு அனுப்பினார். இதையடுத்து முறையீட்டு அலுவலர் சார்பில் பொதுத்தகவல் அலுவலருக்கு, "அஜய் போஸூக்கு உரிய தகவல்கள் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிடப்பட்டது.

ஆச்சர்யத் தகவல்கள்

இதையடுத்து மத்திய ரயில்வே சார்பில் கேன்டீனுக்காக கொள்முதல் செய்யும் பொருட்கள் மற்றும் விலை பட்டியல் வழங்கப்பட்டது. கொள்முதல் விலைப் பட்டியலைப் பார்த்த அஜய் போஸ் ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைந்தார். ஆச்சர்யப்படும் அளவுக்குத்தான் அந்த விலைப்பட்டியல் இருந்தது. ஆம், கேன்டீன் பிரிவு சார்பாக ஒரு சில மாதங்கள் கொள்முதல் செய்ய்யப்பட்ட உணவு பொருட்கள் பட்டியலில் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணைய், தயிர், பாசிப்பருப்பு ஆகியவற்றின் விலை விவரங்கள் இருந்தன.
100 கிராம் எடையுள்ள அமுல் தயிர் ஒன்றுக்கு 972 ரூபாய்க்கு வாங்கி இருக்கின்றனர். ஒரு கிலோ தயிர் 9720 ரூபாய்க்கு வாங்கி உள்ளனர். 100 கிராம் தயிரின் சந்தைவிலை என்பது 45 ரூபாய்தான். தயிர் வாங்குவதற்காக 1.49 கோடி  ரூபாய் செலவழித்திருக்கின்றனர்.  ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணைய் 1,253 ரூபாய்க்கு கொள்முதல் செய்திருக்கின்றனர். மொத்தம் 53 லிட்டர் சமையல் எண்ணையை 66410 ரூபாய்க்கு கொள்முதல் செய்திருக்கின்றனர். சந்தையில் ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணைய் 85 ரூபாய்தான் விற்கப்படுகிறது. அதே போல பாசிப்பருப்பு விலை கிலோ ஒன்றுக்கு 157 ரூபாய் வீதம் 148.5 கிலோ வாங்கி இருக்கின்றனர். சந்தைகளில் பாசிப்பருப்பு விலை கிலோவுக்கு 110 ரூபாயாக இருக்கிறது. பாசிப்பருப்பு விலை சந்தை விலையை விட ஒரளவு விலை அதிகமாக வாங்கி இருக்கின்றனர்.  

வாங்கியது கொஞ்சம், சமைத்தது அதிகம்

10 பாட்டில்கள் கொண்ட குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் 178 பெட்டிகள் வாங்குவதற்கு 1.06 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கின்றனர். உணவுப் பொருட்கள் கொள்முதல் செய்ததற்கும், இருப்பு இருக்கும் உணவுப் பொருட்களுக்கும் இடையே அதிக வித்தியாசங்கள் இருக்கின்றன. அதே போல கொள்முதல் செய்யப்பட்ட அளவை விட, பயன்படுத்திய பொருட்களின் எடை அதிகமாக இருக்கிறது. 25 கிலோ மைதா மட்டும் வாங்கியிருப்பதாக சொல்லி இருக்கின்றனர். ஆனால், 35 கிலோ மைதா சமையலுக்குப் பயன்படுத்தியதாகச் சொல்லி இருக்கிறார்கள். ரயில்களில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாக புகார் இருக்கும் நிலையில் கேன்டீல் கொள்முதலில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!