சத்யஜித் ரேயின் வாழ்வை மாற்றிய இத்தாலித் திரைப்படம்! #SatyajitRay

இந்திய திரைத் துறையின் பெருமிதம்மிக்க அடையாளம் சத்யஜித் ரே. இவரின்  96-வது பிறந்த நாள் இன்று. இயக்குநர், எழுத்தாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் எனப் பன்முகம்கொண்ட ரே, தன் திரை சாதனைக்காக ஆஸ்கர், மகசேசே போன்ற உலகளாவிய அங்கீகாரங்களைப்  பெற்றவர்.

சத்யஜித் ரே

1921-ம் ஆண்டு, மே 2-ம் தேதி  கொல்கத்தாவில் பிறந்தார் சத்யஜித் ரே. இவரின் தந்தை சுகுமார் ரே, சிறு வியாபாரி;  சிறந்த எழுத்தாளரும்கூட. நடமாடும் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த சத்யஜித் ரேவின் தாத்தா கிஷோர் ரே, ஓவியம், கவிதை, இசை  போன்ற நுண்கலைகளில் வல்லுநர்.
ரே-க்கு மூன்று வயதானபோது தந்தை இறந்துவிட்டார். மாமாவின் அரவணைப்பில் வளர்ந்தார்.  1930-ம் ஆண்டில் அப்போது இருந்த `கல்கத்தா மாநிலக் கல்லூரி'யில் பட்டப்படிப்பை முடித்த ரே,  ரவீந்திரநாத் தாகூரின் கல்விக்கூடமான சாந்தி நிகேதனில் மூன்று ஆண்டுகள் ஓவியக்கலை பயின்றார்.  சாந்தி நிகேதன்தான் ரே-யின் மனதில் திரைப்படம் பற்றியக் கனவுகளை விதைத்தது. 

1943-ம் ஆண்டில் ஆங்கில விளம்பர நிறுவனம் ஒன்றில் ஓவியராகப் பணியில் சேர்ந்தார் ரே. இவரின் ஆர்வத்தையும் உழைப்பையும் கவனித்த அந்த நிறுவனம், பதவி உயர்வு அளித்து லண்டனில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அனுப்பியது.  லண்டனில் சுமார் ஆறு மாதங்கள் பணியாற்றினார். இத்தாலி நாட்டுத் தயாரிப்பான ‘சைக்கிள் திருடன்’ என்ற திரைப்படம்தான், ரேயின் வாழ்க்கையையே மாற்றியது. ` `சைக்கிள் திருடன்'போல வாழ்க்கையில் ஒரு திரைப்படமாவது எடுத்துவிட வேண்டும்' என்ற இலக்கோடு இந்தியா திரும்பினார் ரே. 

பிரபல வங்க எழுத்தாளர் விபுதி பூஷண் பந்தியோபதெயே எழுதிய ‘பதேர் பாஞ்சாலி’ என்ற கதையை விலைக்கு வாங்கினார். அதைப் படமாக்குவதற்காக ரே பட்டபாடு கொஞ்சநஞ்சம் அல்ல. எந்தத் தயாரிப்பாளரும் அவரது முயற்சிக்கு ஆதரவு தரவில்லை; பலர் கேலிசெய்தர். மனம் தளராத ரே, தன் நண்பர்களிடம் 15,000 ரூபாய் கடன் வாங்கி கனு பானர்ஜி, கருணா பானர்ஜி, சுபிர் பானர்ஜி, உமா தாஸ்குப்தா, சன்னிபாலா தேவி, ரேபா தேவி போன்ற கவனம் பெறாத நடிகர்களைக்கொண்டு படப்பிடிப்பைத் தொடங்கினார். 

அரைகுறையாகத் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தைப் பார்த்த பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜான் ஹஸ்டன், `இந்தப் படம் நிச்சயம் வரலாற்றில் இடம்பிடிக்கும்' எனக் கூறி, நிதி உதவி செய்தார். வங்க அமைச்சர் பி.சி.ராய், படத்தின் உரிமையைப் பெற்றுக்கொள்வதாகக் கூறி,  ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கினார்.

 
1952-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘பதேர் பாஞ்சாலி’, 1955-ம் ஆண்டில் பல்வேறு இன்னல்களுக்கிடையே முடிவடைந்தது. ஆனால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆயினும், திரைத் துறை, எழுத்துத் துறை சார்ந்த பல ஆளுமைகள் ரேயின் முயற்சியைப் பாராட்டினர் . ஹாலிவுட் இயக்குநர் ஜான் ஹஸ்டன் ஏற்பாட்டில் அமெரிக்காவில் உள்ள ‘இந்தியப் பொருட்காட்சிச் சாலை' -யில் படம் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த அமெரிக்கர்கள், ரே-யைக் கொண்டாடினர்.  கேன்ஸ் திரைப்பட விழா, சான்ஃப்ரான்சிஸ்கோ திரைப்பட விழா உள்ளிட்ட பல உலகப் பட விழாக்களில் `பதேர் பாஞ்சாலி' திரையிடப்பட்டு விருதுகளைக் குவித்தது. குறிப்பாக, கேன்ஸ் திரைப்பட விழாவில் `மனித வாழ்வின் நிறங்களை ஆவணப்படுத்தியுள்ள சிறந்த படைப்பு' என அறிவித்து விருது வழங்கப்பட்டது. இந்தப் படம் நியூயார்க் நகரில் உள்ள ஒரு திரையரங்கில் ஒன்பது மாதங்கள் தொடர்ந்து ஓடி, புதிய சாதனையைப் பதிவுசெய்தது. 

பதேர் பாஞ்சாலி


‘பதேர் பாஞ்சாலி’ சாதாரண கதைதான். ஆயினும், மனித வாழ்வில் ஏற்படக்கூடிய சோகம், மகிழ்ச்சி, விரக்தி, வெறுப்பு, ஜீவ-மரணப் போராட்டம் முதலியவற்றை உணர்ச்சிபூர்வமாகச் சித்திரித்திருந்தார் ரே . அப்பு என்கிற மனிதனின் பால்யம், வாலிபப் பருவம், முதுமை ஆகிய மூன்று பருவங்களையும் அழகுறக் காட்சிப்படுத்தியிருந்தார். 
`பதேர் பாஞ்சாலி'க்குப் பிறகு, உலக கவனம் பெற்ற ரே, தொடர்ந்து சிறந்த படங்களை இயக்கினார்.  `அகந்துக்', `ஷகா புரொஷகா', `ஞானஷத்ரு', `சுகுமார் ராய்', `காரே பைரே', `பிக்கூர் டைரி', `கிலாடி', `பாலா', `கூப்பி கைன் பாகா பைன்', `ரவீந்திரநாத் தாகூர்', `பரஷ் பதர்', `அபராஜிதோ' உள்பட 29  திரைப்படங்களும் எட்டு ஆவணப்படங்களும் எடுத்துள்ள ரே, ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். உயிருடன் இருந்த காலத்திலேயே இவரைப் பற்றி 15-க்கும் மேற்பட்ட ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டன. 

பிரான்ஸ் நாட்டின் லிஜியன் டி விருது, பிலிப்பைன்ஸ் நாட்டின் மகசேசே விருது, இந்தியாவின் மிக உயரிய விருதான பாரதரத்னா விருது உள்ளிட்ட பல கௌரவங்களைப் பெற்றிருக்கிறார். 
1991-ம் ஆண்டில் சிறந்த திரைப்பட இயக்குநருக்கான `ஆஸ்கர்' விருது ரே-க்கு அறிவிக்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் ரேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். ஆஸ்கர் பரிசை அவரிடம் ஒப்படைக்க, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து ஒரு குழு கொல்கத்தாவுக்கு வந்தது. குடும்பத்தினர் மற்றும்  சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முன்னிலையில் அந்த விருதை கண்ணீர் மல்கப் பெற்றுக்கொண்டார் ரே. 

 மூன்று மாதகாலம் தீவிர சிகிச்சைப் பிரிவில்  இருந்த அவர், 23.4.1992 மாலை 5:45 மணிக்கு காலமானார்.  
இந்திய திரைத் துறை வரலாற்றை, சத்யஜித் ரே-வுக்கு முன்னர், சத்யஜித் ரே-வுக்குப் பின்னர் என இரண்டாகப் பிரிக்கலாம். அவர் காலத்துக்குப் பிறகான அத்தனை திரையுலகக் கலைஞர்களுக்கும் அவர்தான் ஆதர்சம். அவரது படைப்புகள் நல்ல சினிமாவுக்கு இன்றளவும் உதாரணமாகக் காட்டப்படுகின்றன. சமூகத்தின்பால் அக்கறையுள்ள படைப்பாளியும் , கலையம்சம் குலையாமல் உருவாக்கப்படும் படைப்புகளும் காலம் கடந்தும் நிற்கும் என்பதற்கு ரேயும் அவரின் திரைப்படங்களுமே உதாரணம்.

- வெ.நீலகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!