வெளியிடப்பட்ட நேரம்: 11:39 (05/05/2017)

கடைசி தொடர்பு:13:21 (05/05/2017)

“ட்ரம்பின் வெற்றிக்கும் தருமபுரிக்கும் உள்ள தொடர்பு!” காவிரி கடந்த பாதை இப்போது எப்படி இருக்கிறது? பகுதி-4 #Cauvery #NagavathyRiver

நாகாவதி ஆறு - காவிரி

மெரிக்கச் சூழலியல்வாதி எட்வர்டு அபேய், ''வளர்ச்சிக்கான வளர்ச்சி என்பது ஒரு புற்றுநோய்'' என்பார். இந்த நவீன வளர்ச்சியை இவ்வாறாக இல்லாமல் வேறு எவ்வாறாகவும் வர்ணிக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. நிரந்தர வைப்புத்தொகை ஏதுமற்ற வங்கி, கடன்களை மட்டும் கொடுத்துக்கொண்டே இருந்தால் என்ன ஆகும்..? விரைவில் திவாலாகும்தானே. அதுபோலத்தான் இந்தப் புவியும் என்பதை மறந்து, இந்தப் பூவுலகுக்கு நல்லது எதையும் கொடுக்காமல், எடுத்துக்கொண்டே இருக்கிறோம். முடிவற்ற வளர்ச்சி அல்லது இலக்கற்ற வளர்ச்சியை நோக்கிய நமது இந்தப் பயணம் நாளை நம் பிள்ளைகளை நடுத்தெருவில்தான் கொண்டுவந்து நிறுத்தும். 

சரி... தண்ணீர் குறித்துத்தானே உரையாடிக்கொண்டிருந்தோம், மீண்டும் அந்தப் புள்ளியிலிருந்தே தொடங்குகிறேன். பாலைநிலமான ராஜஸ்தானில் மரணித்த பல நதிகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்த ராஜேந்திர சிங் குறித்து நாம் அறிந்திருக்கிறோம்தானே... இங்கே இரண்டு பெண்கள் தண்ணீர் குறித்த அவரது அனுபவங்களை அப்படியே உள்வாங்கி, வறண்ட நிலமான தர்மபுரியில் மனிதர்களின் நினைவில் மட்டும் வாழும் ஒரு நதிக்கு உயிர்கொடுக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். 

வாருங்கள் மீனாட்சியையும், கீதாவையும் சந்திப்போம். ஹூம்... ஒரு நிமிடம், அவர்களைச் சந்திக்கும் முன் அந்த நாகாவதி நதியின் வாசனையைக் கொஞ்சம் நுகர்ந்துவிட்டு வருவோம்.

“நாகாவதி நதியும்... ட்ரம்பின் வெற்றியும்!”

டொனால்ட்தீவிர இனவாதியான ட்ரம்பின் வெற்றிக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து லண்டன் வெளியேறியதற்கும், தர்மபுரியில் ஜனித்து காவிரியில் கலக்கும் உள்ளூர்நதியான நாகாவதி நதிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா...? ஆம். மிகமிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நீங்கள் ட்ரம்பின் வெற்றியைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நாகாவதி நதியைப் புரிந்துகொள்ள வேண்டும். 

நாகாவதி, தர்மபுரியில் பென்னாகரம் வட்டத்தில் உள்ள சிறுமலைத் தொடர், குன்றுகளில் ஊற்றெடுத்து, ஏறத்தாழ 20 கிலோமீட்டர் பயணித்து நாகாவதி அணையில் கலக்கும் ஓர் உள்ளூர் நதி. தமிழகத்தின் எல்லா நதிகளையும்போல, ஒரு காலத்தில் இந்தச் சிறுநதியும் செழிப்பாக இருந்தது. தன்னை நம்பி இருந்தவர்களின் வாழ்க்கையையும் செழிப்பாகவைத்திருந்தது. ஆனால், கெடுவாய்ப்பாக அரசின் தவறான நீர் மேலாண்மைக் கொள்கைகள், கட்டற்ற நுகர்வு எல்லாம் சேர்ந்து அந்தச் செழிப்பை இறந்தகாலமாக்கியது. மக்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த நிலத்தைவிட்டு, பெருநகரங்களுக்குக் கட்டடக் கூலிகளாகப் புலம்பெயர்ந்தார்கள்; தினம்தினம் புலம்பெயர்ந்துகொண்டும் இருக்கிறார்கள். 

இந்தப் புலம்பெயர்வின் பின்னணியில் ட்ரம்பின் வெற்றியையும், பிரீக்ஸிட் ஒப்பந்தத்தையும் புரிந்துகொள்ளுங்கள். ஆம், ட்ரம்ப் என்ன சொன்னார்... 'அமெரிக்கா அமெரிக்கர்களுக்கு மட்டும்தான்... உள்ளூர் மக்களுக்கு மட்டும்தான் வேலை, வெளிநாடுகளிலிருந்து இங்கு புலம்பெயர்வதை அனுமதிக்க முடியாது' என்றார்தானே... இதேவாதம்தானே, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கும் காரணமானது. அதாவது, ஒரு நதி மரணித்தால் புலம்பெயர்வு நடக்கும். அதிக அளவில் நடக்கும்போது இனவாத, தேசியவாதக் கொள்கைகள் இறுக்கமாகும். தேசிய ஒருமைப்பாட்டைக் காப்பது என்பது ஓர் உள்ளூர் நதியைக் காப்பதில் இருக்கிறது. 

சரி... உலக அரசியல் பேசி அதிக நேரம் எடுத்துக்கொண்டேன் என்று நினைக்கிறேன். வாருங்கள்... இந்த இரண்டு தண்ணீர் மனுஷிகளையும் சந்திப்போம்... அவர்கள், ஓர் உள்ளூர் நதியைக் காக்க என்னென்ன செய்கிறார்கள் என உள்வாங்குவோம். 

 

 

 

“நதியை நினைவுப்படுத்திக்கொண்டே இருங்கள்!” 

மீனாட்சிமீனாட்சி, உத்தரப்பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். கட்டடப் பொறியாளர். காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கிராம மக்களுக்காகத்தான் நம் அறிவு பயன்படவேண்டும் என்பதற்காகப் பல தசாப்தங்களுக்கு முன்னே தர்மபுரியில் நாகர்கூடல் என்ற பகுதிக்குக் குடியேறியவர். கிராம மக்களின் பிள்ளைகளுக்காகப் புவிதம் என்ற பெயரில் இலவசப் பள்ளியை நடத்திக்கொண்டிருப்பவர்.  இவருடன் கரம்கோத்திருக்கும் கீதா, மென்பொறியாளர்... இவரும் கிராமப் பொருளாதாரம், சூழலியல் மீது பெருங்காதல் கொண்டு வேலையைவிட்டு நதிகளை மீடெடுக்கும் பணியில் இறங்கியிருக்கிறார். 

மீனாட்சி சொல்கிறார், “நதிகளை மீட்டெடுத்தல் என்பதன் முதல் படி, அந்த நதி குறித்து மக்களுடன் உரையாடிக்கொண்டே இருப்பதுதான். அதற்கு, முதலில் அந்த நதியின் நினைவுகளை மீட்டெடுக்க வேண்டும். முதலில் நாங்கள் இதைத்தான் செய்தோம்... கடந்த இரண்டு வருடங்களாக மக்களிடம் உரையாடிக்கொண்டே இருந்தோம். அதன்பின், கொஞ்சம் கொஞ்சமாக மக்களை இணைத்துக் களத்தில் இறங்கினோம். நாகாவதி நதிக்கு உயிர்கொடுத்தல், அந்த நதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதிலும், நதியின் உள்ளே மண்டியிருக்கும் களைகளை அகற்றுவதில் மட்டும் இல்லை. இந்தப் பகுதியில் உள்ளது எல்லாம் சிறுகுன்றுகள். வறட்சியாலும், மனிதத் தவறுகளாலும் அவை மரங்களை இழந்து மொட்டையாகிவிட்டன. அதனால், ஒரு சிறுமழை பெய்தாலே, மண்ணை அரித்துக்கொண்டு நீர் ஓடிவிடும். மேல் மண் இல்லாததால் இங்கு எந்த நிலத்திலும் நீர் ஊராது. நீர் ஊராதது மட்டுமல்ல, மண்தானே விவசாயத்துக்கு ஆதாரம். அதனால், விவசாயமும் பொய்க்கும். நீரைக் காக்க வேண்டுமானால், நதிக்கு உயிர்கொடுக்க வேண்டுமானால், மண்ணைக் காக்க வேண்டும் என்று உணர்ந்தோம்.” 

கீதாஇங்கிருந்து கீதா தொடர்கிறார், “இந்தச் சமயத்தில்தான் ராஜஸ்தான் சென்று ராஜேந்திர சிங்கைச் சந்தித்தோம். அந்தப் பாலைநிலத்திலேயே பல அற்புதங்களை நிகழ்த்திக்காட்டியிருந்தார். அவரது அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்தார். அதை நம் நிலத்துக்கு ஏற்றவாறு, இங்கே கொஞ்சம் மாற்றிச் செயல்படுத்தினோம். முதலில் நாங்கள் செய்ததெல்லாம் சின்ன விஷயம்தான். அந்த நிலத்தில் விழும் நீரை அந்த நிலத்திலேயே தக்கவைக்க வேண்டும். மண் அரிப்பைத் தடுக்க வேண்டும். மேல் மண் இருந்தால்தான் தண்ணீர் ஊறும். இதையெல்லாம் மக்களிடம் பேசி, அவர்கள் இடத்திலேயே பள்ளம் மற்றும் கரைகளை (Trench and Bunds) உண்டாக்கினோம். இதனால் நீரும் மண்ணும் அடித்துச் செல்லப்படுவது தவிர்க்கப்பட்டு, அந்தப் பகுதியின் நீர்மட்டம் உயரும். நீர்மட்டம் உயரும்போது, நாகாவதிக்குத் தண்ணீர் தந்த ஊற்றுகள் உயிர்பெறும். இப்போது தனியார் விவசாய நிலங்களில், இந்தப் பள்ளம் மற்றும் கரைகளை உண்டாக்கும் பணியில்தான் இருக்கிறோம்” என்கிறார்.

“இது ஒரு நீண்டகாலச் செயல்பாடு. எளிய கிராம மக்களையும் இதில் இணைத்துச் செல்ல வேண்டும். மக்களின் அன்றாட வாழ்வாதாரமே கேள்விக்குறியாக இருக்கும்போது, இதில் அவர்களையும் இணைத்துச்செல்வது பெரும்பணி. ஆனால், அவர்களையும் கண்டிப்பாக இணைத்துச் சென்றால்தான், இது நம் நதி, நம்மால் உயிர்பெற்ற நதி என்ற பெருமிதம் அவர்களுக்கு வரும். அந்தப் பெருமிதம் வந்துவிட்டால்... நிச்சயம் மீண்டும் நதியைத் தொலைக்காமல்... மரணிக்கவிடாமல் பார்த்துக்கொள்வார்கள். மக்கள் இயக்கத்தைக் கட்டி எழுப்பாமல், வெளியிலிருந்து ஒரு வேலையைச் செய்துகொடுப்பது, எந்தப் பயனும் தராது” என்கிறார் மீனாட்சி மிகத்தெளிவாக. 

ஆம்... அரசுகளிடம் இல்லாத தெளிவு எப்போதும் தனி மனிதர்களிடம் இருக்கிறது. எப்போதும் இந்த எளிய மனிதர்களால்தான், இந்தப் புவி இன்னும் சுழன்றுகொண்டிருக்கிறது.

(உரையாடுவோம்)

 

 

இந்தத் தொடரின் முந்தையப் பகுதியைப் படிக்க 

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்