ஆளை முடித்துவிட்டால் ஆர்.டி.ஐ முடிந்து விடுமா?

ஆர்டிஐ

ரசு அலுவலகங்களுக்குத் தகவல்கள் கேட்டு மனு செய்யும் ஆர்டிஐ ஆர்வலர், பதில்கள் வருவதற்கு முன்பு மரணம் அடைந்து விட்டால், அந்த மனுவுக்கு பதில் அனுப்பப் படமாட்டாது. இதுதான் மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் ஆர்.டி.ஐ விதிமுறைகளில் செய்யப்பட உள்ள மாற்றமாகும். இந்த மாற்றம் குறித்த வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்படுகின்றன.

தொடரும் தாக்குதல்கள்

ஆர்.டி.ஐ சட்டத்தின் படி இந்தியா முழுவதும் ஆண்டு தோறும் 40 முதல் 60 லட்சம் மனுக்கள் பல்வேறு துறைகளுக்கு வருவதாக கூறப்படுகிறது. ஆர்டிஐ தகவல்களால் பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள், அநியாயங்கள், நேர்மைக்கு மாறான செயல்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. முறைகேடுகள், ஊழல்கள், அதிகாரிகளின் தவறுகளை வெளிக் கொண்டு வரும் ஆர்டிஐ கேள்விகளை அனுப்பும் ஆர்வலர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆர்.டி.ஐ ஆர்வலர்களுக்குப் பாதுகாப்புத் தர வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்த விதியின் காரணமாக ஆர்டிஐ ஆர்வலர்கள் எளிதாகத் தாக்குதலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகக் கூடும். கொலை செய்யப்படவும் கூடும். ஆர்டிஐ மூலம் சிக்கலான கேள்விகள் கேட்பவர்களை இனிமேல் கொலை செய்து விட்டால் போதும், அந்த கேள்விகளுக்கு பதில்கள் வெளிவருவதற்கான வாய்ப்பில்லை என்ற சூழல் ஏற்படும். இதனால்தான் இந்த விதியை மத்திய அரசு அமல்படுத்தக்கூடாது என்று இந்தியா முழுவதும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.


கடந்த 2005-ம் ஆண்டில் இருந்து இதுவரை ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் மீது 400 தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆர்.டி.ஐ ஆர்வலர்களை பாதுகாக்கும் Whistleblower சட்டம் அமலில் இருந்தாலும். அதனால் பயன் ஏதும் ஏற்படவில்லை. மனித உரிமை மீறலுக்கான காமன்வெல்த் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி இதுவரை ஆர்.டி.ஐ மனு செய்தவர்களில் 65 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.ஆர்.டி.ஐ மனு செய்ததன் காரணமாகவே அவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

எப்படி பெயர் வெளியாகிறது?

ஆர்.டி.ஐ மனு செய்தவர்களின் தகவல்களை வெளியிடக்கூடாது என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபரில் உத்தரவிட்டது. அதன்படி மத்திய அரசில் பல்வேறு துறைகளில் இணையதளம் வழியாக கேட்கப்படும் ஆர்.டி.ஐ மனுக்களை அனுப்பியவர்களின் பெயர்களை வெளியிடக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தபால் மூலம் மட்டுமே  ஆர்.டி.ஐ மனுக்கள் அனுப்பப்படுகின்றன. யாரால் அந்தத் தகவல்கள் கேட்கப்படுகிறது என்பதை துறையில் உள்ள அலுவலர்கள் துணையுடன் சம்பந்தப்பட்ட நபர்களுக்குச் சென்று விடுகிறது. சென்னையில் பாரஸ்மால் என்பவர், விதிமுறை மீறல் கட்டடங்கள் குறித்து தகவல் கேட்டதற்காக கொல்லப்பட்டார். பாரஸ் மால் அனுப்பிய விண்ணப்பம் குறித்த தகவல்கள் எப்படி கட்டட உரிமையாளர்களுக்கு கிடைத்தது என்பதற்கு இதுவரை விடை கண்டுபிடிக்கப்படவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்கக் கூடாது என்பதற்காகத்தான் மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள ஆர்.டி.ஐ விதிமுறைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பதில் அளித்த மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் அதிகாரி ஒருவர், "ஆர்.டி.ஐ விதி 12 குறித்த வரைவு அறிக்கைக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கைகள் விடுத்துள்ளனர். விதி 12 குறித்து இறுதி முடிவு எடுக்கும் முன்பு அனைத்து கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும்" என்றார்

ஆளை முடித்து விட்டால் ஆர்டிஐ முடிந்து விடுமா?

சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகத்திடம் இது குறித்து கருத்துக் கேட்டோம். "அடிப்படையில் இந்த அணுமுறை தவறானது. இயற்கை வளங்களை சூறையாடுவது தொடர்பாக, கிரானைட் கொள்ளை, மணல் கொள்ளை தொடர்பாக ஆர்.டி.ஐ தகவல்கள் கேட்கும்போது, மனு போட்டவர்கள் மிரட்டப்பட்டனர் அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சிலர் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

அப்படி இருக்கும் போது இந்தத் திருத்தம் தேவையற்றது. ஆர்.டி.ஐ ஆர்வலரைக் கொன்றுவிட்டால் போதும் தகவல் வெளிவராது என்று நினைப்பார்கள். இந்த விதியானது மறைமுகமாக ஆர்.டி.ஐ ஆர்வலர்களை முடிவு கட்டுவதற்கான முயற்சி மட்டுமல்ல.  ஆர்டிஐ-யை நீர்த்துப்போவதற்கான செயலாகும். ஊழலை அம்பலப்படுத்தும் கருவியாக ஆர்டிஐ இருக்கிறது. ஆளை முடித்து விட்டால் ஆர்டிஐ முடிந்து விட்டது என்ற சூழலை ஏற்படுத்தும். எனவே இந்த விதியை ஏற்றுக்கொள்ளமுடியாது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!