வெளியிடப்பட்ட நேரம்: 19:51 (05/05/2017)

கடைசி தொடர்பு:19:51 (05/05/2017)

“சில நீதிபதிகளின் ஊழலைப் பேசுவதால், என்னை மிரட்டுகிறார்கள்...!” நீதிபதி கர்ணன்

கர்ணன்

நீதிபதி கர்ணனுக்கும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் இடையே நிகழ்ந்துவரும் மோதல் உச்சக்கட்டத்தை எட்டுகிறது.இதுதொடர்பாக அவரைத் தொடர்புகொண்டபோது, "ஊழல் புகார் அனுப்பியதில் இருந்து பலவகையான அழுத்தங்களுக்கு ஆளாகி இருக்கிறேன்'' என்கிறார் கர்ணன்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றி வந்தவர் சின்னசாமி சுவாமிநாதன் கர்ணன். இவரை, கடந்த ஆண்டு கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இந்த உத்தரவுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்ததோடு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்த புகார்க்கடிதம் ஒன்றையும் பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு அனுப்பிவைத்தார் கர்ணன். அந்தக் கடிதத்தில் நீதிபதிகளின் ஊழல் குறித்து எழுதியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கான ஆதாரங்கள் எதுவும் அவர் சமர்ப்பிக்கவில்லை. அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ள நபர்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.  

உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குப் பதிலடியா? 

கர்ணனின் இந்த நடவடிக்கையை அவமதிப்பாகக் கருதிய உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. அதுமட்டுமன்றி, இந்த வழக்கில் கர்ணனை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படியும் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த மார்ச் 31-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் கர்ணன். அப்போது உச்ச நீதிமன்றம் அவருடைய விளக்கத்துக்கு 4 வார  காலம் அவகாசம் கொடுத்ததோடு, 'நீதிமன்றப் பணிகளில் கர்ணன் ஈடுபடக் கூடாது' என்று ஏற்கெனவே விதித்த உத்தரவையும் திரும்பப் பெற மறுத்துவிட்டது. 

மேலும், நீதிபதி கர்ணனுக்கு (4.5.2017) மனநலப் பரிசோதனை நடத்தி, அந்த அறிக்கையை வரும் 8-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதிகள் அளித்த இந்த உத்தரவைக் கண்டு அஞ்சாத கர்ணன், ''அதைப் பிறப்பித்த நீதிபதிகளுக்குத்தான் மனநல மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும்'' என பதில் உத்தரவு பிறப்பித்தார். மேலும், 'இந்தப் பரிசோதனையை எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்ட குழு செய்யவேண்டும்' என்றும் அந்த உத்தரவில் கூறியிருந்தார். அதோடு நிறுத்தாமல், 'ஜே.எஸ்.கெஹர் உள்ளிட்ட 7 நீதிபதிகளும் எனக்கு முன்னால் ஆஜராக வேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து 7 நீதிபதிகளும் ஆஜராகாத நிலையில, அந்த் 7 பேருக்கும் பிடிவாரன்ட் பிறப்பித்து மற்றோர் அதிரடி உத்தரவைப் போட்டு அதிரவைத்தார். 

உச்சநீதிமன்றம்

மருத்துவப் பரிசோதனையை ஏற்க மறுப்பு!

இந்த நிலையில் கர்ணனுக்கு மனநலப் பரிசோதனை நடத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று (4.5.2017 ) மருத்துவர்கள் கர்ணனுக்குப் பரிசோதனை செய்ய அவருடைய வீட்டுக்குச் சென்றனர்.அவர்களை வரவேற்ற கர்ணன், தாம் நலமுடன் இருப்பதாகக் கூறி அவர்களைத் திருப்பி அனுப்பியுள்ளார். இதுதொடர்பாகக் கொல்கத்தாவில் உள்ள நீதிபதி கர்ணனைத் தொடர்புகொண்டு பேசியபோது, "உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் எந்த வலிமையும் இல்லை. சில உத்தரவுகளில் தவறுகள் நிறைந்துள்ளன. பிறப்பித்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தவில்லை என்றால், அந்த உத்தரவுகள் தவறாக உள்ளன என்பது உறுதியாகிவிடும் என்பதால்,அதனைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.அந்த அடிப்படையில்தான் எனக்கு மனநலப் பரிசோதனை செய்ய  வேண்டும் என்று கூறி மருத்துவர்கள் என் வீட்டுக்கு வந்தனர். அவர்களைத் தமிழர் பண்பாட்டோடு வரவேற்று டீ,காபி கொடுத்து, 'நான் நலமாக இருக்கிறேன்..எனவே, எனக்கு எந்தப் பரிசோதனையும் தேவையில்லை' என்று கூறினேன்.அதனை மருத்துவர்களும் ஏற்று, 'நீங்கள் நலமாகத்தான் இருக்கிறீர்கள்' என்று சொல்லிவிட்டுச் சென்றனர்.என்னுடைய குடும்ப உறுப்பினர்களோ அல்லது நெருங்கியவர்களோ எனக்கு மனநலம் சரியில்லை என்று கூறியிருந்தால்,அதனை ஏற்று உத்தரவிடலாம்.அவர்களாகவே எனக்கு மனநலம் சரியில்லை என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? இதுபோன்ற அரைகுறையான உத்தரவைப் பிறப்பிக்கிறார்கள் என்றால், அவர்கள்தான் மனநிலை சரியில்லாதவர்கள் என்பது அவர்களுடைய நடவடிக்கையின் வாயிலாக உறுதியாகிறது. அதன் காரணமாகவே 7 நீதிபதிகளுக்கும் மனநலப் பரிசோதனை நடத்த வேண்டும் என்று பதில் உத்தரவு பிறப்பித்தேன்.ஆரம்பத்தில் இருந்து ஊழல் செய்யும் நீதிபதிகள் குறித்த புகாரைத் தொடர்ந்து அனுப்பி வருகிறேன்'' என்றவரிடம்,

''இந்த விவகாரத்தில் உங்களுக்கு மிரட்டல் ஏதாவது இருக்கிறதா'' என்று கேட்டோம்.அதற்கு அவர், ''நீதிபதிகள் மீது புகார் அனுப்பிய நாட்களில் இருந்து பலவகையிலும் மிரட்டலுக்கு உள்ளாகி இருக்கிறேன்.நேரடியாக மிரட்டுவதில்லை. மறைமுகமாக எந்த மாதிரியான அழுத்தங்களைத் தரவேண்டுமோ அந்த வகையிலான அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். அண்மைக்காலமாகத் தனி நீதிபதியாக வழக்குகளை விசாரிக்க அனுமதிக்க மறுப்பு;கமிட்டி உறுப்பினராக இருக்க அனுமதி மறுப்பு; நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருமாறு அழைப்பு கொடுப்பவர்களைத் தொடர்புகொண்டு கர்ணனுக்கு அழைப்பு கொடுக்கக்கூடாது என்று அழுத்தம்.... என இப்படியான அழுத்தங்களும், மிரட்டல்களும் இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. 

இவை எல்லாம் எனக்கு வெளிப்படையாகத் தெரிந்த மிரட்டல்கள்.. தெரியாத மிரட்டல்கள் இன்னும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் சட்டப்படி அனைத்தையும் எதிர்கொள்வேன்" என்கிறார்.

 கே.புவனேஸ்வரி 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்