வெளியிடப்பட்ட நேரம்: 12:04 (06/05/2017)

கடைசி தொடர்பு:16:37 (06/05/2017)

“கமல் நல்லவர்தான்... ஆனாலும் அவரை தண்டிக்கணும்!” - அர்ஜுன் சம்பத்

கமல்

லக நாயகனாக விஸ்வரூபம் எடுப்பதற்கு முன் உள்ளூர் நாயகனாக மின்னிய காலம்... தனது ரசிகர் மன்றத்தை இயக்கமாக மாற்றி, சமூகப் பணிகளில் கவனம் குவித்த நேரம்; அவ்வப்போது தமது ரசிகர்களை சந்திப்பது கமல்ஹாசனின் வழக்கம். அப்படியொரு சந்திப்பின்போது, 'மிஸ்டர் கமல்' என்று ஒருவர் விளித்துவிட்டார். அருகில் இருந்த வேறு மாவட்ட ரசிகருக்கு வந்ததே கோபம்... 'எப்படி மிஸ்டர்ன்னு கூப்பிடலாம்? கமல் சார்ன்னு கூப்பிடுங்க' என்றார்.

இதைக் கண்டு கமலுக்கு வந்த கோபம், விஸ்வரூபம் பார்ட் -டூ சினம். 'என் பேரை சொல்லித்தானே கூப்பிடுகிறார். அதில் என்ன தவறு உள்ளது? இன்னும் சொல்லப்போனால் மிஸ்டர் என்பதன் தமிழாக்கம் 'திரு'. அப்படியென்றால், திரு. கமல் என்று மரியாதையாகத்தானே கூப்பிட்டிருக்காரு' எனக் கண்டித்தார் கமல். முன்னொரு காலத்தில், செய்தி திரட்டுவதற்காக கமல் ரசிகர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவத்தை பகிர்ந்தார் அவரின் தீவிர ரசிகர். இந்த சம்பவத்தை இப்போது நினைவுபடுத்துவதற்கு அவசியம் இல்லாமல் இல்லை. கருத்துரிமைக்காகவும், பேச்சுரிமைக்காகவும் எப்போதும் குரல் கொடுக்கும் கமலின் கருத்துகளே, தற்போது சர்ச்சைக்குள்ளாகி, அவரை நீதிமன்றம் நோக்கி நடைபோட வைத்துள்ளது. (கமல் மாதிரியே சுற்றி வளைத்து  விஷயத்துக்கு வந்தாச்சு...!)

கமல் மீது வழக்கு :

அண்மையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில்  கமலின்  சிறப்பு நேர்காணல்  ஒளிபரப்பானது. கமல், மனம் திறந்து பேசிய இந்தப் பேட்டியில், தங்கள் மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாக இந்து அமைப்புகள் சில, போராட்டங்களில் இறங்கின. நெல்லை மாவட்டம் பழவூரைச் சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர், 'கடந்த மார்ச்  12-ம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் கமல்ஹாசன் பேட்டியளித்தார். அப்போது அவர் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் மகாபாரதத்தை இழிவுப்படுத்தி அவதூறாகப் பேசியுள்ளார். எனவே நடிகர் கமல்ஹாசன்மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று  வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி செந்தில்குமார் முன்பு  ஒரு மனுத் தாக்கல் செய்தார். மனுவை ஏற்றுக்கொண்டதையொட்டி  'மகாபாரதத்தை இழிவுபடுத்தியதாக'  கமல் மீது வழக்கு தொடரப்பட்டது. கமல் மீதான புகாரை விசாரித்து, இது தொடர்பாக பழவூர் காவல்நிலைய அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார் நீதிபதி. மேலும் இந்த வழக்கையொட்டி மே -5 ம் தேதி கமல்ஹாசன் நேரில் ஆஜராக வேண்டும் என்றும்  உத்தரவிடப்பட்டது.

கமல் விளக்கம் :

இதையொட்டி வழக்கறிஞர் ஜி.ஆர்.சுவாமிநாதன் மூலம் கடந்த 3- ம் தேதி மதுரை உயர்நீதிமன்றதில் ஒரு மனுதாக்கல் செய்தார் கமல்.கமல் அதில், 'பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக நெறியாளர் கேட்ட கேள்விக்கு, என் மனதில் பட்டதை பேசினேன். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் கருத்து  தெரிவிக்கவில்லை. வள்ளியூர் நீதிமன்றம் அனுப்பிய சம்மனிலும் என் மேல் என்ன குற்றச்சாட்டு கூறப்பட்டிருக்கிறது, எந்தப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவல் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதனால், வள்ளியூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்யவேண்டும். அதுவரை வள்ளியூர் நீதிமன்ற விசாரணைக்குத் தடை விதித்தும், விசாரணைக்கு ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட  வேண்டும்' என்றும் குறிப்பிட்டுள்ளார். 

நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

நீதிபதி என். ஆதிநாதன் முன், கமல் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஜி.ஆர் சுவாமிநாதன், ''ஒருத்தர் தெரிவிக்கின்ற கருத்து பிடிக்காமல் போனால், அதற்கு மாற்றாக கருத்து தெரிவிக்கலாமே தவிர குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முடியாது. இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தின்படி கருத்து சுதந்திரம் உள்ளது. எம்.எஃப்.உசேன், பெருமாள்முருகன் ஆகியோரது வழக்குகளில் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வழக்கின் தன்மையைப் பார்க்காமல், வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருக்கிறதா என்று ஆராயாமல் முதல் விசாரணையிலேயே நீதித்துறை நடுவர் சம்மன் அனுப்பியுள்ளார்'' என்று வாதங்களை முன்வைத்தார். இதன்பிறகு கமல் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதித்தும், கமல் மே -5 ம் தேதி ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும் நீதிபதி என். ஆதிநாதன் உத்தரவிட்டார். 

கமல் ஒரு சந்தர்ப்பவாதி!

மகாபாரத விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே கமலுக்குக் குடைச்சல் கொடுத்து வந்தது இந்து மக்கள் கட்சி. நான், அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்திடம் இதுகுறித்துப் பேசினேன். அப்போது,

அர்ஜுன் சம்பத்

''கமலுக்கு இதுவே வேலையாகப் போய்விட்டது. தான் ஒரு பெரிய நடிகர், தான் பேசும் கருத்துகள் சமுதாயத்தில் தாக்கம் ஏற்படுத்தும் என்பது கூடவா அவருக்குத் தெரியாது? தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராகவே பேசிவருகிறாரே... 'மன்மதன் அம்பு' படத்தில் ரங்கநாதர் படுத்துக்கொண்டிருக்கிறார் என ஆபாச அர்த்தம் பொதியும் வகையில் பாடல் எழுதினார். வெளியில் பார்த்தால்  தசாவதாரம், பாபநாசம், விஸ்வரூபம் என்று இந்து தலைப்புகளாக  வைத்துக்கொள்வார். ஆனால், உள்ளே இந்துக்களை, இந்து ஆன்மிகக் கடவுள்களை கேலி செய்வது, கிண்டல் செய்வது போன்ற வேலைகளில் ஈடுபடுவார். திடீரென சில சமயம் இந்துக்களுக்கு ஆதரவாக செயல்படுவார்.

கமல் நல்லவரா இருப்பார். 'மகாநதி' படத்தில் கூட 'ஸ்ரீ ரங்கநாதனின் பாதம்...' என்று புகழப்படும் பாடல் இருக்கும். இப்படி இந்து மதத்தை காப்பாத்துற வேலையையும் அப்பப்போ செய்வார். மோடி அரசாங்கத்தின் கலாசார தூதராகவும் இருக்கிறார். ஆனால், மீண்டும் இந்து மதத்தை கேலி செய்வார். அவர் அடிக்கடி மாறும் சந்தர்ப்பவாதி.  விஸ்வரூபம் படத்தில் ஆப்கான் தீவிரவாதம் பற்றியெல்லாம் எடுத்தார். அந்தப் படத்துக்கு நாங்களும் ஆதரவு தந்தோம்.  ஆனால், கமல் என்ன செய்தார்? 'நாட்டை விட்டே ஓடிப்போகிறேன்' என்றார். மன்னிப்பு கேட்டார். காட்சிகளை மாற்றினார். முஸ்லிம்கள் போராடினால் மன்னிப்பு கேட்கிறார். ஆனால், இந்துக்களை மட்டும் புண்படுத்துவாரா? தசாவதாரத்தில் பத்துக் கதாபாத்திரத்தில் ஒருவர் முஸ்லிம். அந்த ஒரு முஸ்லிம், சுனாமியின்போது எல்லோரையும் மசூதியில் கொண்டு போய் வைத்துக் காப்பாற்றுவதாகக் காட்டினார். அதே கமல், இந்துக்கள் என்றால் வில்லனாகக் காட்டுவதைத்தான் வழக்கமாக வைத்திருக்கிறார். 'அன்பே சிவம்' படத்தில், சிவனடியாரை வில்லனாகக் காட்டினார். இந்த முற்போக்கு முகமூடியெல்லாம் முஸ்லிம்களிடம் எடுபடுமா? ஏன் இந்துக்களிடம் காட்டுகிறார்? அவர் ஒரு பிராமணர். அதனால் திராவிட ஆட்சியில் தன்னுடைய நலனுக்காக வலிந்து கறுப்புச் சட்டை போடுறாரு. உண்மையில் அவர் பயப்படுபவர். துணிச்சல்காரரில்லை. அவர் ஒரு சந்தர்ப்பவாதி. பெண் வைத்து சூதாடியது தவறு என்று சொல்வதுதான் மகாபாரத நீதி. அது இந்துக்களின் ஐந்தாம் வேதம். பெண்ணின் மானம் காப்பதுதான் மகாபாரதம். தற்போது அவர் வழக்கில் இருந்து இடைக்கால விலக்கு பெற்றுள்ளார். நாங்கள் இதையொட்டி சட்டப்போராட்டம் நடத்துவோம். இந்து மத உணர்வுகளைக் காயப்படுத்தும் கமலுக்கு ஒருமுறையாவது தண்டனை வாங்கித்தராமல் விடமாட்டோம்'' என்றார் உணர்ச்சிபூர்வமாக.

அப்படி என்னதான்  பேசினார் கமல்?

'மகாபாரதத்தைத் தவறாகப் பேசிவிட்டார். இந்துக்கள் மனதைப் புண்படுத்துவதே கமல்ஹாசனின் வேலையாகப் போய்விட்டது' என்று இந்து அமைப்பினர் இந்த வழக்கையொட்டி மீண்டும் மீண்டும்  கொந்தளிக்க, தொலைக்காட்சிப் பேட்டியில், மகாபாரதத்தைப் பற்றி அப்படி என்னதான் பேசினார் கமல்? இதோ அந்த நேர்காணலின் சர்ச்சைக்குரிய பகுதி...

நிருபர் : ''சமூக நீதிக் கொள்கை குறித்துப் பேசினீர்கள். ஆனால், இன்றும் ஆணவப் படுகொலைகள் அரங்கேறும் சூழல் தமிழகத்தில் நிலவுகிறதே?''

கமல்ஹாசன் : ''கூடவே கூடாது. செல்போன்ல பேசுறோம்ன்னு பெருமையா சொல்லிக்கிறோம். ஆனால், ஆணவப் படுகொலை நடப்பதென்பது கேவலமல்லவா? பெண்ணை ஆதிக்கம் செய்யுறதை பெருமையா நினைத்துக்கொள்கின்றனர். இன்னும் மகாபாரத சூதாட்டப் படலத்தை  விட்டு மீண்டதாகவே தெரியவில்லை. அது மட்டுமே படிச்சுக்கிட்டு இருக்குற மாதிரி இருக்கு. நீங்க  மகாபாரதப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தால்கூட அந்த ஒரு அத்தியாயத்தை விட்டு நீங்கவேயில்லை என்பது போலவே தெரிகிறது'' 

நிருபர் : ''சமீபத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்... குறிப்பாக திரையுலகத்தில் உள்ள பெண்களுக்கு வன்முறை அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இதையெல்லாம் எப்படிப் பார்க்கிறீர்கள்? இதையெல்லாம் ஏன் கூடுதலா இருக்குன்னு பார்க்கவேண்டியிருக்கு?''

கமல்ஹாசன் : ''ஊடகங்கள் பெருகிவிட்டன. அதனால பெருசா தெரியுது. தெரியணும். இதெல்லாம் இப்போ பெருசுபடுத்தாதீங்கன்னு நான் சொல்லல. ஆனா  எங்கிருந்து வந்தது இந்த வன்முறை? மகாபாரதத்துல ஒரு பொம்பளைய  வச்சு சூதாடியதை புத்தகமா படிச்சுக்கிட்டு இருக்கிற ஊரு இது. பெரிய புத்தகமா வைத்து பாராட்டிக்கொண்டு இருக்குற இந்த ஊருல இந்த நிகழ்வுகள் ஆச்சரியமில்லை.''

இந்தக் கட்டுரையை எப்படி முடிப்பது? என்று யோசித்துக்கொண்டிருந்தேன். 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்காக கமல், வெளிப்படுத்திய கருத்து நினைவுக்கு வர, அது கொண்டே முடிக்கிறேன்.

''என் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டுதான் வருகிறது. தற்போது, எதிர்மறையாக நான் மற்றவர்களின் அசைவுகளைக் கண்காணிக்கப் போகிறேன்.''


டிரெண்டிங் @ விகடன்