நம் பிள்ளைகளின் முகத்தில் நாமே அமிலம் வீசுவோமா...? : காவிரி கடந்த பாதை இப்போது எப்படி இருக்கிறது? நிறைவுப்பகுதி #Cauvery | Would we pour acid on our daughter's face..? Travel Along the bank of river cauvery - Episode 5 #Cauvery

வெளியிடப்பட்ட நேரம்: 13:51 (06/05/2017)

கடைசி தொடர்பு:15:10 (06/05/2017)

நம் பிள்ளைகளின் முகத்தில் நாமே அமிலம் வீசுவோமா...? : காவிரி கடந்த பாதை இப்போது எப்படி இருக்கிறது? நிறைவுப்பகுதி #Cauvery

காவிரி

“தண்ணீரை நாம் ஒட்டுமொத்தமாகத் துஷ்பிரயோகம் செய்வதுதான் காலநிலை மாற்றத்துக்கு முக்கியக் காரணம். வரும் காலங்களில் நமது நடத்தை, நீரியல் சுழற்சியையே அழித்துவிடும். நீரியல் சுழற்சியைக் காக்க, காலநிலை மாற்றத்திலிருந்து தப்பிக்க ஒரேவழி பெருமளவில் நீர்நிலைகளை மீட்டெடுப்பதுதான்.”  - மிச்சல் க்ராவிக், ஸ்லோவேகியா விஞ்ஞானி. 

கடந்த நான்கு அத்தியாயங்களில் நாம் பார்த்த இந்த எளிய மனிதர்கள் யாரும் விஞ்ஞானிகள் அல்ல... பெரிய அமைப்புகளின் பலம்கொண்டவர்களும் அல்ல. ஆனால், தாம் வாழும் சமூகத்தின் மீது பெருங்காதல் கொண்டவர்கள். நம் சமூகத்தின் பிள்ளைகளை நாளை ஒரு சொட்டுத்தண்ணீருக்காக நடுவீதியில் விட்டுவிடுவோமோ என்று பதறுபவர்கள். அதனால்தான், தங்களை அர்ப்பணித்துக்கொண்டு நீர்நிலைகளை மீட்டெடுக்க வேண்டும், ஆற்றுக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று தங்களுக்குத் தாங்களே அசாத்திய இலக்குகளை முன்வைத்துச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

“செயலற்ற அரசுகள்!”

தமிழ்க அரசுகாந்தி சொல்வார், “அமைப்புகளும் அரசுகளும் செயலற்றுப் போகும்போதுதான் தனி மனிதர்கள் அரசுகள் ஆகின்றனர்.” இங்கு அரசுக்கு அதிகார மோதல் புற்றுவைத்து இருப்போமா, பிழைப்போமா என்று தெரியாமல் கோமா நிலையில் கிடைக்கிறது. சேலத்திலும், தர்மபுரியிலும் நூற்றுக்கணக்கில் கால்நடைகள் சாகும்போது... அப்படியெல்லாம் சாகவில்லை என்று பொய்க்கணக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறது. “அரசுகள் எங்களைக் கைவிட்டுவிட்டன. நாங்கள் வளர்த்த கால்நடைகளை நாங்களே கைவிடுவதைத் தவிர, எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை” என்று கண்கலங்குகிறார் சாந்தாம்மா. இதுமாதிரியான தமிழகத்தின் எதிர்காலத்தை இருள்கவ்விய சூழ்நிலையில், தனிமனிதர்கள் அரசுகளாக மாறிச் செயலாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களே நம்பிக்கைகளாவும் இருக்கிறார்கள்.

“கலகத்தை எதிர்நோக்கி!”

உங்களை அச்சுறுத்தவெல்லாம் சொல்லவில்லை... காவிரிக் கரையில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக வாழ்ந்தவன் என்பதால் சொல்கிறேன். காவிரியில் இப்படியான வறட்சியை எப்போதும் பார்த்ததில்லை. எல்லாச் சொற்களும் பொருள் குறித்தனவைதான்... ஆனால், ‘வரலாறு காணாத வறட்சி’ என்ற சொற்களுக்கான முழுமையான பொருளுக்கான சாட்சி இந்தக் கோடைதான். இது வரலாறு காணாத வறட்சி மட்டுமல்ல.. இனி எப்போதும் எதிர்காலம் காணக்கூடாத வறட்சியும்கூடத்தான். ஆம், இந்த வறட்சி தொடர்ந்தால், இங்கு மாபெரும் கலகம் வெடிக்கும். தமிழகத்தில், இல்லை... இல்லை... உலகம் முழுவதும் நீரைச் சார்ந்துதான் வாழ்க்கையும் எதிர்காலமும் இருக்கின்றன. நீர் இல்லாமல் போவதென்பது எதிர்காலம் இல்லாமல்போவது; வாழ்க்கை வற்றிப்போவது. பொருளாதாரம் சிதைந்து, எதிர்காலம் குறித்த நம்பிக்கை எல்லாம் வற்றியபின் என்ன நிகழும்...? நிச்சயம் கலகம்தான்; கலகம் மட்டும்தான். உலகெங்கும் இதுதான் நிகழ்ந்திருக்கிறது. 

ஒருபக்கம், சாமான்யன் ஒரு சொட்டுத் தண்ணீருக்காகத் தவித்துக்கொண்டிருக்கிறான் என்றால்... இன்னொருபக்கம் பெரும் கோலா நிறுவனங்களுக்கு நம் அரசுகள் தங்குதடையில்லாமல் நீர் வழங்கிக்கொண்டிருக்கிறது. இதை எதிர்த்துக் கேள்விகேட்டால், நம் செல்லூர் ராஜுக்கள் சொல்கிறார்கள், “நம்மை நம்பித் தொழில் செய்ய வந்துவிட்டார்கள். அவர்களுக்கு அப்படித்தான் தண்ணீர் கொடுப்போம்” என்று மமதையில் கொக்கரிக்கிறார்கள். பொலிவியா அரசாங்கத்தின் வீழ்ச்சி, தண்ணீருக்கான கொசபம்பா போராட்டத்தில்தான் தொடங்கியது என்று யாராவது அவர்களுக்குச் சொல்ல வேண்டும். தண்ணீருக்காக ஓர் எழுச்சி வந்தால், கசடுகள் காணாமல்போகும் என்பதைப் புரியவைக்க வேண்டும். 

காவிரி

“பிள்ளைகளின் முகத்தில் அமிலம் வீசுகிறோம்!”

நீங்கள், இந்தக் கோடைக்கு நிச்சயம் ஏதேனும் ஒரு சுற்றுலாவுக்குத் திட்டம் தீட்டி இருப்பீர்கள்; அதனுடன் தண்ணீர் சுற்றுலாவையும் சேர்த்துக்கொள்ளுங்கள்; இயன்றால், இந்தத் தொடர்களில் குறிப்பிட்டிருக்கும் செயற்பாட்டாளர்களைச் சந்தியுங்கள்... உரையாடுங்கள்... என்ன செய்யலாம் எனத் திட்டமிடுங்கள். நான் வறட்சி குறித்த ஆய்வுக்காகத் தர்மபுரிப் பகுதியை எடுத்துக்கொண்டதால், இவர்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். தமிழகமெங்கும் இதுபோன்ற செயற்பாட்டாளர்கள் நம்பிக்கையுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் கரம் கோத்து நில்லுங்கள். 

இறுதியாக, நான் சந்தித்த செயற்பாட்டாளர்கள் சொன்ன விஷயத்துடன் இத்தொடரை முடிக்கிறேன். அவர்கள் சொன்னார்கள், “காவிரி நம் உரிமைதான். ஆனால், அதற்கு நாம் என்ன செய்திருக்கிறோம்....? மேட்டூரில் ரசாயனக் கழிவுகள், ஈரோட்டில் சாயப்பட்டறைக் கழிவுகள் என அதன்மேல் ரசாயனம் அல்லவா அடித்துக்கொண்டிருக்கிறோம். நம் பிள்ளைகள்மீது நமக்கு உரிமை இருக்கிறது என்பதற்காக அவர்கள் முகத்தில் ரசாயனம் அடிப்போமா என்ன...?” என்றார்கள். சத்தியமான கேள்விதானே...? காவிரி நம் உரிமைதான்... ஒருபக்கம், அதற்கான உரிமைப் போராட்டம் நடத்துவோம்... இன்னொருபக்கம் அதைக் கழிவுகளிலிருந்து மீட்போம். காவிரியை மட்டுமல்ல... ஒவ்வொரு நீர்நிலையையும் மீட்போம். அந்த மீட்சியில்தான் நம் எதிர்காலம் இருக்கிறது. 

முற்றும்

இந்தத் தொடரின் முந்தையப் பகுதிகளைப் படிக்க
பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்