வெளியிடப்பட்ட நேரம்: 20:51 (06/05/2017)

கடைசி தொடர்பு:20:51 (06/05/2017)

செல்லாத சான்றிதழ்கள்...?! அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பில் குளறுபடியா?

அண்ணா பல்கலைக்கழகம்

யர் கல்வியில் உலக அளவில் சிறந்து விளங்கும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தரப்படப்போகும் சான்றிதழ் செல்லாது  என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

ஒரு ஆண்டாக துணைவேந்தர் இல்லை

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ராஜாராம் கடந்த 2016-ம் ஆண்டு மே 26-ம் தேதியுடன் ஓய்வு பெற்று விட்டார். அவருக்குப் பதில், காளிராஜ் என்ற மூத்த பேராசிரியர் பொறுப்பு துணைவேந்தராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரை நியமிக்கக் கூடாது என்று ராஜாராமே தடுத்து விட்டதாகச் சொல்கிறார்கள். ராஜாராம் துணைவேந்தராக நியமிக்கப்படும் முன்பு பொறுப்பு துணைவேந்தராக காளிராஜ் இருந்திருக்கிறார். மூத்த பேராசிரியர் ஒருவரை துணைவேந்தர் பொறுப்புக்கு நியமிக்கலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழக விதியில் கூறப்பட்டிருக்கிறது.
ஏறக்குறைய ஒரு ஆண்டு ஆன நிலையில் இன்னும் அண்ணா பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. இப்போது பல்கலைக்கழக நிர்வாகத்தை மூன்று பேர் கொண்ட கவுன்சில்தான் கவனித்துக் கொள்கிறது. இந்த கவுன்சிலில் உயர் கல்வித்துறைச் செயலாளர், அண்ணாப் பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோர் இருக்கின்றனர். புதிய துணைவேந்தரை நியமிப்பதற்காக தேர்வுக்குழு ஒன்றும் கடந்த ஆண்டு நவம்பர் 11-ம் தேதி நியமிக்கப்பட்டது. ஏறக்குறைய 6 மாதமாக துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான பணிகளில் இந்தக் குழு ஈடுபட்டுள்ளது.

பேரம் பேசப்படுகிறதா?

துணைவேந்தர் பதவிக்கு வருபவர்கள், 10 ஆண்டுகள் பேராசிரியராக இருந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தவிர சர்வதேச அளவிலான கருத்தரங்கம் ஒன்றை நடத்திய அனுபவம் கொண்டவராக இருக்கவேண்டும். புதிய துணைவேந்தர் பதவிக்கு இதுவரை 40 பேர் விண்ணப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களில் 20 பேர் கூட மேலே குறிப்பிட்ட தகுதிகளுடன் இல்லை என்று சொல்கின்றனர். துணைவேந்தர் நியமிப்பதற்காக கோடிக்கணக்கான ரூபாய் பேரம் பேசப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. பேரம் படியாததால்தான் நியமனம் தள்ளிப்போகிறது என்றும் சொல்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க கடந்த ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு இன்னும் பட்டமளிப்பு விழா நடத்தி சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. ஆண்டு தோறும் டிசம்பர் அல்லது ஜனவரியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்துவது வழக்கம். 37-வது பட்டமளிப்பு விழா நடத்துவது குறித்து கடந்த மார்ச் 23-ம் தேதி நடந்த பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழாவை வரும் மே 19-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறைச் செயலாளர் பட்ட சான்றிதழில் கையெழுத்து இடுவார் என்றும் சொல்கின்றனர்.

பட்டம் செல்லுமா?

மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டத்தில் துணைவேந்தர் கையெழுத்து மட்டுமே இருக்க வேண்டும் என்று பல்கலைக்கழக விதிகளில் கூறப்பட்டுள்ளது. வேறு ஒருவர் போடும் கையெழுத்து செல்லாது என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த சூழலில்தான் செல்லாத சான்றிதழ் தருவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் ஏன் பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும் என்று கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் கல்வியாளருமான அனந்தகிருஷ்ணனிடம் பேசினோம். "துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடத்தக் கூடாது. வேறு யாரும் கையெழுத்துப் போட உரிமை இல்லை என்று அண்ணா பல்கலைக்கழக விதிமுறையில் உள்ளது. வேறு யாராவது கையெழுத்துப் போட்டால் அந்தப் பட்டம் எங்குமே செல்லாது. வெளிநாட்டிலும் செல்லாது. துணைவேந்தர் நியமனத்தில் என்ன தாமதம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அது குறித்து நான் வெளிப்படையாகப் பேச விரும்பவில்லை. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இனியும் தாமதிக்காமல் உடனடியாகத் துணைவேந்தரை நியமிக்கவேண்டும்" என்றார்.

பணம் ஒரு தகுதியா?

இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலாவிடம் கேட்டோம். "தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. அதை நிர்வாகம் செய்வது அண்ணா பல்கலைக்கழகம்தான். லட்சகணக்கான மாணவர்கள் படிக்கும் கல்லூரிகளை நிர்வகிக்கும் பல்கலைக்கழகத்தில் ஒரு வருடமாகத் துணைவேந்தர் பதவியில் யாரும் இல்லாமல் காலியாக இருப்பது, இந்த அரசு செயல்படாத நிலையில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. தமிழகக் கல்வி சூழலின் அவலத்தை இது  வெளிக்காட்டுகிறது. பல்கலைக்கழகத்தில் பல திட்டங்களை அமலாக்குவதற்கு துணைவேந்தர் பதவி முக்கியம். விண்ணப்பம் செய்தவர்களில் தகுதியான துணைவேந்தரை தேர்வு செய்வதில் அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது? என்ன தகுதியை எதிர்பார்க்கின்றனர். பணத்தை ஏதும் தகுதியாக வைக்கிறார்களா? என்ற கேள்விகள் இருக்கிறது. எனவே உடனடியாக துணைவேந்தர் நியமிக்கப்பட வேண்டும். பொறுப்பற்ற தன்மையோடு இருக்கக் கூடாது." என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்