தீ விபத்து அபாயத்தில் சென்னை கட்டடங்கள், வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு! #Alert #MustRead

தீ விபத்து


சென்னையில் திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, வடபழனி, மாம்பலம் உள்ளிட்ட  பல பகுதிகளில் வசிப்பவர்கள் புறாக்கூண்டு போல சிறிய இடங்களில்தான் தங்கி இருக்கின்றனர். 4 பேர் கொண்ட குடும்பத்தினர் ஒரு சிறிய அறையில் வசிக்கின்றனர்.
வடபழனியில் தீ விபத்து நேரிட்ட அடுக்குமாடி கட்டடமும் பல புறா கூண்டு அறைகளைக் கொண்டதுதான். அதிகாலை ஏற்பட்ட  தீவிபத்தில் குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

புறாக் கூண்டு கட்டடங்கள்

சென்னையில் உள்ள பல கட்டடங்கள் அவசரத்துக்கு வெளியே வரமுடியாத வகையில் கட்டப்பட்டுள்ளன. புறாக் கூண்டுகள் போல ஒரு கட்டடத்தில் சின்னச் சின்ன அறைகளாக இருக்கின்றன. காற்றுக்கூட புகாத அளவுக்கு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதே போல பல்வேறு தெருக்கள் தீயணைப்பு வண்டிகள் போவதற்கு குறுகலாக இருக்கின்றன.


இந்த சம்பவம் காரணமாக கட்டடங்களில் தீவிபத்தை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பலரும் பேச ஆரம்பித்திருக்கின்றனர். கடந்த 1997 ஜூன் 13-ம் தேதி டெல்லியில் உப்ஹார் திரையரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பினர். இந்தியாவில் ஏற்பட்ட விபத்துக்களில் அதிகம் பேர் உயிரிழந்தவர்கள் பட்டியலில் இந்த விபத்தும் இடம் பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாகத்தான் அனைத்து மாநிலங்களிலும்  உள்ள வணிகக் கட்டடங்கள், வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களுக்கு கூடுதலாக தீ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்று மத்திய அரசு கூறியது.

வணிகக் கட்டடங்கள்

சென்னையில் வணிகக் கட்டடங்கள், குடியிருப்புகளில் தீ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தியாகராய நகர் குடியிருப்போர் நல சங்கத்தைச் சேர்ந்த கண்ணன் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். அவரிடம் பேசினோம்.


"விதிமீறல் கட்டடங்கள் காலம் காலமாக இருந்து வருகிறது. தி.நகரில் உள்ள ஒரு பிரபலமான ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டபோது ஒருவர் உயிரிழந்தார். அந்த சம்பவத்தைத் தொடர்ந்துதான் அனைத்து வகையான கட்டடங்களிலும் தீயணைப்பு கருவிகள் இருக்க வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் மக்கள் வெளியேறும் வகையில் இட வசதி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டோம்.  வழக்கு நிலுவையில் இருக்கிறது. விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று நினைக்கிறோம்.
2013-க்கு பின்னர் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களில் தீ தடுப்பு கருவிகள் அமைக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

500 ரூபாய் அபராதம்

தீபிடித்தால் வெளியேசெல்லும் வழி, தீயணைப்பு வீரர்கள் உள்ளே வரும் வழி என இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருக்கும் விதிமுறைகளைக் கடுமையாக அமல்படுத்தவேண்டும் சென்னையில் வணிகக் கட்டடங்கள், வீடுகளில்  தீத் தடுப்பு வசதிகள் உள்ளதா என்பதை  மாநகராட்சி, சி.எம்.டி.ஏ நிர்வாகம் ஆகியவைதான் கண்காணிக்க வேண்டும். இரண்டு அமைப்புகளும் முறைகேடுகள் நிறைந்தவைகளாக உள்ளன. நகரமைப்புத் திட்டத்தில் முதலில் முக்கியமாகக் கூறப்படுவது  தீ தடுப்பு நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்பதுதான். வணிகக் கட்டடங்களில் தீ தடுப்பு நடவடிக்கைகள் செய்யப்படா விட்டால், 500 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். ஒரு உயிரின் விலை 500 ரூபாய்தானா என்ற கேள்வி எழுகிறது" என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!