Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சட்டை கிழிப்பு ... துப்பட்டா மறுப்பு..! நீட் தேர்வில் நடந்ததைச் சொல்கிறார்கள் மாணவர்கள்!


நீட் பரிசோதனை

'மாணவர்களுக்கு கற்பித்தல்' என்ற கர்வமொழியை மறுத்து, 'மாணவர்களோடு உரையாடல்' என்ற சுமுக மொழியை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் லியோ டால்ஸ்டாய். "கல்வியின் அடித்தளம் என்பது அனுபவம்; கற்பதற்கான வழி சுதந்திரம்" என்றார் அவர். 
"நாளைய சமூகத்தை மலரச் செய்யும் செல்வங்கள் மாணவ சமுதாயத்தினர். அப்படிப்பட்ட மாணவ சமூகத்திற்கு மோசமான அனுபவத்தை வழங்கியதும், அவர்கள் சுதந்திரத்தின் மீது கொடூர வன்முறையை நிகழ்த்தியதுமே 'நீட்' தகுதித் தேர்வு செய்த சாதனையாக இருக்கிறது" என வேதனையோடு தெரிவிக்கின்றனர் நாடெங்கும் உள்ள கல்வியாளர்கள். மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான தேசிய அளவிலான தகுதி தேர்வு 'நீட்' என்பதாகும்.


நாடுமுழுவதும் 2017-18-ம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு 56 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தகுதித்தேர்வு மே 7-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தின் சென்னை உள்பட 104 நகரங்களில் 2,200 மையங்களில், தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பத்து மொழிகளில் நடைபெற்ற இத்தேர்வை 11.35 லட்சம் பேர் எழுதினர். தமிழ்நாட்டில் சென்னை தவிர கோவை, மதுரை, திருச்சி, சேலம், நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய நகரங்களிலும் தேர்வு நடைபெற்றது. சென்னையில் 13 மையங்களிலும், புதுவையில் 60 மையங்களிலும் நீட் தேர்வு நடந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை விண்ணப்பித்த 88 ஆயிரம் பேரில் சுமார் 96% பேர் தேர்வு எழுத வந்தனர். தேர்வு மையங்களில் அவர்கள் சந்தித்தத் துயரங்கள், பிள்ளைகளைப் பெற்ற ஒவ்வொரு பெற்றோர் இதயத்தின் மீது அரசு நிகழ்த்திய தாக்குதலாகவே உணரப்படுகிறது. அதையே நாம் இதில் எழுதுகிறோம். 

அச்சில் ஏற்ற முடியாத துயரம்:

"சிறைச்சாலைகளுக்குச் செல்லும் கைதிகளைப் பரிசோதிப்பதற்கும், நீட் தகுதித் தேர்வுக்குச் சென்ற மாணவ, மாணவிகளைப் பரிசோதித்ததற்கும் எந்தவித வேறுபாடுமில்லை" எனக்  குமுறினார் சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த கனிமொழி. "என்னுடைய மகன் தேர்வு எழுதப் போகும்போது புத்துணர்ச்சியோடும், நம்பிக்கையோடும் இருக்கணும்; தேர்வில் வெல்லணும் என்று ஆசை ஆசையாக புது சட்டை வாங்கிக்கொடுத்து தேர்வு மையத்தில் இறக்கி விட்டேன். 'உன்னை செக் பண்ணனும்' என்று கூறிய பரிசோதகர்கள், 'முழுக்கை சட்டை போடக்கூடாது' என்றார்கள். 'இதுக்குமேல எங்க போயி சட்டைய மாத்துறது' என்றோம். 'அதெல்லாம் முடியாது' என்றவர்கள், அங்கேயே கத்தரிக்கோல் கொண்டு முழுக்கை சட்டையை வெட்டினார்கள். கிழிந்த சட்டையோடு மகன் தேர்வுக்கு போனதைப் பார்த்தபோது, எங்களால தாங்க முடியல" என்றார். மாணவர்களின் துயரம் இதுவென்றால், மாணவிகள் சந்தித்தத் துயரங்கள் கொடூரத்தின் உச்சம். "பரிசோதனை என்ற பெயரில தோடு, மூக்குத்தி முதற்கொண்டு எல்லாத்தையும் கழட்டினாங்க. கொரட்டூரில் ஒரு மாணவியோட இடுப்புப் பட்டையை அவிழ்த்தபோது, அவர் கண்ணீர்விட்டு கதறியது அங்கிருந்த அனைவரையும் உலுக்கியது. இஸ்லாமிய மாணவிகள் அணிந்து வந்த 'பர்தா' நீக்கப்பட்டது. கைக்கடிகாரம் முதற்கொண்டு சிறிய ஹேர்பின் வரை எதையும் விட்டுவைக்கவில்லை. அனைத்தையுமே நீக்கினார்கள். ஜடைபோட்டு வந்த மாணவிகளோட தலைமுடியை கலைச்சாங்க. பொண்ணுங்க போட்டுவந்த துப்பட்டாவை நீக்கினாங்க. இது எல்லாமே பெத்தவங்க கண்ணு முன்னாடியே நடந்ததுதான், எங்க மனசை சிதறடிச்சுடுச்சு" என்று தெரிவித்து கலங்கினர் பெற்றோர்.

நீட் தேர்வுக்காக மாணவிகள் பரிசோதிக்கப்படுகின்றனர்

"மகாபாரதத்துல திரெளபதிக்கு அரச சபையிலேயே கொடுமை நடந்தப்போ, கிருஷ்ணர் வந்து காப்பாத்துவாரு. இப்போ எங்களைக் காப்பாத்த கிருஷ்ணர் வர மாட்டாரான்னு தவிச்சோம். அந்தளவுக்கு, இந்த பரிசோதனைகள் எங்க மனசைக் காயப்படுத்திடுச்சு. சோதனைன்ற பேருல, எல்லாத்தையும் பொது இடத்திலேயே செஞ்சாங்க. மானத்தோடு வாழணும்னு நினைக்கிறவங்களுக்கு இவங்க கொடுத்த பரிசா இது?" விருகம்பாக்கத்தில் இருந்து வந்திருந்த மாணவியின் கதறல் இது. தமிழ்நாடு மட்டுமல்ல நாடுமுழுவதும் இதுபோன்ற பரிசோதனைகள் நடந்தாலும், குறிப்பாக தமிழகம், கேரளம், ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களில் இத்தகைய கொடூரத்தை மாணவ, மாணவிகள் சற்று அதிகளவில் சந்தித்தனர். கேரளாவில் மாணவிகளின் உள்ளாடைகளைக் கலைத்து, அதன்பின் நடந்த பரிசோதனை என்பது  அச்சில் ஏற்றமுடியாத அசிங்கம். பெண்களை மதிக்க வேண்டும் என்ற பண்பாட்டு அரசியலை தொடர்ந்து முழங்கிவரும் அரசு, பரிசோதனை என்ற பெயரில் நிகழ்த்தியவை. அவர்களின் பண்பாட்டை வெளிப்படுத்துவதாகவும், அவர்கள் வலியுறுத்திய பண்பாட்டு அரசியலை கேள்விக்கு உட்படுத்துவதாகவும் அமைந்தன. 

விசாரணை வேண்டும்:
மாணவ, மாணவிகள் சந்தித்தத் துயரங்கள் குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பேசினோம். "18 வயதுக்குட்பட்டவர்கள் குழந்தை என்கிற வகையைச் சேர்ந்தவர்கள். இந்த வயதினர் மற்றும் அதற்கு மேற்பட்ட இளம் பருவத்தினரை, கிளர்ச்சி பருவத்தினர் என்கிறோம். எதையும் கேள்விகேட்கும், கண்ணியத்தை எதிர்பார்க்கும் பருவம் அது. அவர்களுக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தி இருக்கிறது இந்த அரசு. பரிசோதனை என்ற பெயரில் அவமானத்தைச் சந்தித்த மாணவ-மாணவிகளின் மனம் இறுகிப் போகாதா? இளம் பிரின்ஸ் கஜேந்திரபாபு பருவத்தினரை, மாணவ-மாணவிகளை சமூகத்தில் அந்தஸ்து கொண்ட மனிதராக வளர்த்தெடுப்பதே ஓர் அரசின் கடமையாக இருக்க வேண்டும். மாறாக, மாணவர்கள் மீது இப்படி அவமானங்களை நிகழ்த்துவது ஓர் அரசுக்கு அசிங்கம். 'குழந்தைகளை, காவல்துறையினர் சீருடையுடன் விசாரிக்கக்கூடாது' என்று குழந்தைகள் உரிமைகள் சட்டம் சொல்கிறது. ஆனால் நீட் தகுதி தேர்வுக்குச் சென்ற மாணவ, மாணவிகளை எப்படி நடத்தினர்? லத்திகளுடனும், துப்பாக்கியுடனும் சீருடை அணிந்த காக்கிகள் பரிசோதனை செய்தார்கள். காதில் டார்ச் அடித்தும், சட்டையை கிழித்தும் மோசமாக நடத்தினர். கடலூரில் ஒரு மாணவியின் உள்ளாடைகளை கலைக்கச் சொல்லி பரிசோதனை நடத்திய கொடூரமும் நிகழ்ந்தது. ஹாலில் உள்ள சூப்பர்வைசரை மீறி, ஒருவர் பிட் அடித்து விடுவார் என்பதெல்லாம் ஏற்க முடியாதது. யாரோ ஒருவர் தவறு செய்கிறார் என்பதற்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றவாளிகள் போல அணுகுவது கொடூரத்தின் உச்சம். பரிசோதனைக்கு உள்ளான மாணவச் செல்வங்களுக்கு, அந்தநேரத்தில் ரத்த அழுத்தம் சோதிக்கப்பட்டிருந்தால் தெரிந்திருக்கும். அவர்கள் எந்தளவுக்கு பதற்றமும், பீதியும் அடைந்தார்கள் என்று. நல்ல மருத்துவராக வேண்டும் என்ற கனவில் வந்தவர்களை நோயாளியாக மாற்றுகிறது அரசாங்கம். இத்தனைக் கொடுமைகளைச் சந்தித்து விட்டு, உள்ளே செல்லும் மாணவச் செல்வங்களால் எப்படி தேர்வை தெளிந்த மனநிலையோடு எழுத இயலும்? அவர்கள் மீது உளவியல் யுத்தத்தை நிகழ்த்தியுள்ளது அரசு. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21-ன் படி 'வாழ்வதற்கான சுதந்திரத்தை ஒரு அரசு வழங்கவேண்டும்'. 'கண்ணியமிக்க வாழ்க்கை வாழ்வதற்கான உத்தரவாதத்தை வழங்கவேண்டும்' என்று பல உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வலியுறுத்தியுள்ளன. ஆனால், எதையும் இந்த அரசாங்கம் பொருட்படுத்தவில்லை என்பதையே இந்த சம்பவங்கள் காட்டுகின்றன. பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில், தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மாநில மனித உரிமை ஆணையம், தானாக முன்வந்து இடைநிலை கல்வி வாரியத்தை (CBSE) விசாரணைக்கு உட்படுத்தவேண்டும்" என்றார் அழுத்தம், திருத்தமாகவும், அக்கறையோடும்.
'குறைவான புத்தகம், சிறந்த கல்வி' என்பது அண்ணல் காந்தியின் கோட்பாடாகும். 'மிரட்டியும், தண்டித்தும் உருவாக்கும் வகுப்பறை ஒழுங்கு, எப்போதும் சிறந்த கல்வியாளர்களை உருவாக்காது' என்பதில் உறுதியான கருத்து கொண்டவர் காந்தி. அது வகுப்புக்கு மட்டும் பொருந்துவதல்ல, இந்த தேசத்திற்கும்தான் என்பதை மத்திய, மாநில அரசுகள்  புரிந்து கொள்ளுமா ? 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ

Advertisement