'வில்லங்கம் இருப்பது விஷால் அணிக்குத் தெரியும்?' - நடிகர் சங்க புது சர்ச்சை

'நடிகர் சங்கம் கட்ட தற்காலிகத் தடை', 'விஷாலுக்கு எதிராக திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி' என அடுத்தடுத்து இரண்டு வேகத்தடைகள் விஷாலின் வெற்றி வேகத்தை குறைத்திருக்கிறது. 

விஷால்

நடிகர் சங்கத்தின் தலைவர், செயலாளர் பொறுப்புகளில் இருந்த சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் நடிகர் சங்க இடத்தை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டதாகக் கூறி பொங்கி எழுந்தனர் நடிகர் விஷால் தரப்பினர். தொடர்ச்சியாக இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடத்தியும், சக நடிகர்களிடையே விழிப்பு உணர்வு பிரச்சாரமும் செய்துவந்தனர். இந்த நிலையில், நடிகர் சங்க தேர்தலில், சரத்குமார் அணியை எதிர்த்து விஷால் தரப்பில், நடிகர் நாசர், பொன்வண்ணன், கருணாஸ், கார்த்தி உள்ளிட்டோர் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று பொறுப்புக்கும் வந்தனர். 

இதையடுத்து, நடிகர் சங்க கட்டடம் கட்டுவது தொடர்பாக தனியார் நிறுவனத்துடன் சரத்குமார் தரப்பு செய்திருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. கடந்த மார்ச் 31-ந்தேதி புதிதாக நடிகர் சங்க கட்டடப் பணிகளை ஆரம்பிப்பதற்காக பூஜையும் செய்யப்பட்டது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் என தமிழ்த் திரையுலகின் உச்ச நடிகர்கள் இருவரும் செங்கல்களை எடுத்துக்கொடுத்து பணிகளை ஆரம்பித்து வைத்தனர். இந்த நிலையில், 'நடிகர் சங்க கட்டடப் பணிகளை உடனடியாக நிறுத்தவேண்டும்' என்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்து ஒட்டுமொத்த கோடம்பாக்கத்துக்கும் அதிர்ச்சி அளித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

விஷால் 1

பொது சாலையை ஆக்கிரமிப்பு செய்து நடிகர் சங்க கட்டட வேலைகள் நடைபெறுவதாக தொடரப்பட்ட வழக்கில்தான் இப்படியொரு அதிரடி தீர்ப்பை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கை தொடுத்துள்ள வித்யோதயா காலனி குடியிருப்புவாசிகளிடம் பேசியபோது, ''எங்கள் காலனியில் இருந்து மெயின் ரோட்டுக்கு சென்றுவர வசதியாக இருந்த (அப்துல் முத்தலிப்)சாலையை நடிகர் சங்கத்தினர் கேட் போட்டு மறித்து அவர்களுக்கு சொந்தமாக்கிக்கொண்டனர். இதை எதிர்த்து 2013-ம் ஆண்டே நாங்கள் வழக்கு தொடர்ந்துவிட்டோம். ஏற்கெனவே, நடிகர் சங்க இடத்தை தனியாருக்கு ஒப்பந்தம் செய்துகொடுத்துவிட்டதாக சரத்குமார் அணிக்கும் விஷால் அணிக்கும் பிரச்னை எழுந்தபோதே, இந்த இடத்திலும் வில்லங்கம் இருக்கிறது என்பது இரு தரப்புக்கும் தெரியும். ஆனாலும், வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்துவிட்டபிறகு விஷால் அணியினர் தெரிந்தே நடிகர் சங்க கட்டட அடிக்கல் நாட்டு விழாவை நடத்தினர். ஆனாலும் நியாயம் எங்கள் பக்கம் இருக்கிறது என்பது இப்போது நீதிமன்றத் தீர்ப்பின் மூலமாக வெளிப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அட்வகேட் கமிஷ்னர் தலைமையில் விசாரணை செய்யவிருக்கிறார்கள். அப்போது எங்கள் தரப்பில் உள்ள ஆதாரங்கள் அனைத்தையும் நாங்கள் கொடுத்து எங்கள் சாலையை மீட்டெடுப்போம்'' என்கிறார்கள் உறுதியாக.

நடிகர் சங்க மூத்த நிர்வாகிகள் சிலர் இந்த வில்லங்கம் குறித்துப் பேசும்போது, ''எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திலேயே வாங்கப்பட்ட நிலம் இது. அப்போது மாலை நேரங்களில் ஓய்வாக காரில் அமர்ந்து பேசிக்கொள்ள வசதியாக பெரிய நடிகர்கள் எல்லோருமே வந்துபோவார்கள். அப்போது அவர்களது பாதுகாப்புக்காக போலீசாரும் இந்த சாலையின் இரு பக்கமும் தடுப்புகளை வைத்திருப்பார்கள். நாளடைவில் இந்த தடுப்புகள் நிரந்தரமாக்கப்பட்டு, நடிகர் சங்கம் சார்பில் 'கேட்' போட்டு அடைத்தேவிட்டார்கள். ஆனாலும் பொதுமக்கள் இதுகுறித்துப் பெரிதாக எந்த எதிர்ப்பும் காட்டாததால், சங்க இடம் 14 கிரவுண்ட்டோடு சாலையின் மொத்தப் பரப்பான 4 கிரவுண்ட்டும் சேர்ந்துபோனது. இப்போதும் நிலத்தின் பட்டாவில் மொத்தம் 18 கிரவுண்ட்டாகத்தான் காட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டா இருக்கும் தைரியத்தில்தான் விஷால் தரப்பினரும் துணிச்சலாக கட்டடம் கட்டும் பணிகளை ஆரம்பித்துவிட்டனர். ஆனாலும், பிரிட்டிஷ் காலத்தில் போடப்பட்ட லேஅவுட்டில், பிரச்னைக்குரிய இந்த சாலையைப் பற்றிய தெளிவான வரைபடம் இப்போதும் எதிர்த் தரப்புக்கு ஆதாரமாக இருக்கிறது. இந்த விஷயங்களைத் தெரிந்துகொண்டுதான் மூத்த நிர்வாகிகளான நாங்களும், சங்க இடத்தில் உள்ள வில்லங்கத்தை முதலில் சரிசெய்துவிட்டு கட்டடப் பணிகளை ஆரம்பிக்கலாம் என்று விஷால் அணியினரிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். ஆனாலும், விடாப்பிடியாக 'எல்லா பிரச்னைகளையும் சரிக்கட்டியாகிவிட்டது. இனி எந்தப் பிரச்னையும் வராது' என்று சொல்லி மளமளவென்று கட்டடப் பணிகளில் இறங்கிவிட்டார்கள். 'சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும்; அதற்கிடையில் என்ன எதிர்ப்பு வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்' என்ற அசட்டுத் துணிச்சலோடே விஷால் தரப்பினர் செயல்படுகின்றனர். இதோ இப்போது நீதிமன்றத் தடை வந்து எல்லாப் பணிகளும் அப்படியே நின்றுவிட்டன... இனி என்ன செய்யப்போகிறார்கள்?'' என்று ஆதங்கப்படுகின்றனர்.

விஷால் 2

இந்த நிலையில், நடிகர் சங்க இடம் குறித்த வில்லங்கம் பற்றி முன்கூட்டியே தெரியுமா? என்ற கேள்வியுடன் விஷால் தரப்பினரிடம் பேசினோம்... ''வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் எல்லா விளக்கத்தையும் புள்ளிவிவரமாக தெரிவிக்க முடியாது. ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் செய்துவரும் ஒவ்வொரு முயற்சிக்குமே எதிர்ப்புகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. எல்லாவற்றையும் பொறுமையாக சட்டப்படி சந்தித்தே வருகிறோம். இப்போது எழுந்துள்ள இந்தப் பிரச்னையிலும் எங்கள் தரப்பில், நியாயத்தை நிலைநாட்டுவதற்கான ஆவணங்கள் எங்கள் கைவசம் உள்ளன. முறைப்படி நீதிமன்றம் மூலமாகவே பிரச்னைகளை சரிசெய்து சொன்னபடி நடிகர் சங்க கட்டடப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை'' என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
எது எப்படியோ, திரைப்படங்களில் இல்லாத திருப்பங்களும்-மர்மங்களும் நடிகர் சங்க விவகாரத்தில் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன!


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!